நாகை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஜூலை 5, 6 தேதிகளில் கடற்கரை நகரமாம் பூம்புகாரில் பயிற்சி முகாம் எழுச்சியுடன் நடைபெற்றது. 60 தோழர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். பூம்புகார் சுற்றுலாத்துறை அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது. ஜூலை 5 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சிற்பிராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகள் நடத்தி, மூடநம்பிக்கைகளை விளக்கிப் பேசினார். 11.30 மணியளவில் தோழர் தமிழகன் ‘பாகுபாடு’ எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்.

வேறுபாடு - பாகுபாடு - முரண்பாடுகளை விளக்கிக் கூறிய தமிழகன், புராதன சமூகத்தில் பாகுபாடு இல்லை. பிறகு சமூகம் உடைமைச் சுமூகமானபோது பாகுபாடுகள் உருவாயின. பாகுபாடுகள் முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றன. தீர்க்க முடியாத நிலையில் முரண்பாடுகள் உருவாகிறது. தமிழர் - சிங்களர் பிரச்சினை முரண்பாடுகளாக மாறியுள்ளது. தாய்வழிச் சமூகம் உடைமைகள் உருவான பிறகு தந்தை வழிச் சமூகமாக மாறியது. அப்போது ஆண், பெண் பாகுபாடுகள் தோன்றின. பாகுபாடுகளை நியாயப்படுத்த பார்ப்பனியம் புனிதங்களைக் கட்டமைத்தது.

அந்தப் புனிதங்கள் சமூகத்தின் பொதுப் புத்தியில் திணிக்கப்பட்டதால்தான் பார்ப்பனியம் செல்வாக்கு பெற்றது. சிவப்பு நிறமும், பூணூலும், பசுவும், தாலியும், வேதமும், புனிதங்களாக்கப்பட்டு, கருப்பும் உழைப்பும் புனிதமற்றவையாக்கப்பட்டன. ஒரு காலத்தில் அடிமைகள் வாங்கப்பட்டனர்; விற்கப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் இருப்பதற்கு சங்கிலியால் பிணைத்து வைத்தனர். இப்போது சங்கிலி தேவையில்லை. மனப்பூர்வமாகவே விரும்பி அடிமைத்தனத்தை ஏற்க வைத்துவிட்டனர். இதற்குத்தான் பார்ப்பனர் கட்டமைத்த புனிதக் கோட்பாடுகள் பயன்பட்டன என்று விரிவாக விளக்கங்களை முன் வைத்தார். மதிய உணவுக்குப் பிறகு வழக்கறிஞர் சுந்தர்ராசன் ‘உலக மயமாக்கல்’ எனும் தலைப்பில் விரிவாகப் பயிற்சி அளித்தார்.

உலக மயமாக்கல் என்ற கொள்கை வந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதை விரிவாக எடுத்துரைத்தார். அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்படுவதால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிபோகின்றன. நாட்டில் நர்சுகள் பற்றாக்குறை இருந்தாலும், நர்சுகளுக்கான பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க முதலாளிகள் முன்வருவதில்லை. மாறாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவே முன்வருகிறார்கள். காரணம் சமூகப் பார்வையைவிட கொள்ளை லாபம் அடிப்பதே இவர்களின் நோக்கம்.

‘நோவேட்டிங்’ எனும் மருந்து தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம் ரத்தப் புற்று நோய்க்கான ‘கிளிவேக்’ எனும் மருந்துக்கு காப்புரிமை கோரி, அதன் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளையடித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மருந்து நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போது வாதாடியவர், இப்போது நிதியமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தான். இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், நிதியமைச்சரானால், அவர்களின் நிதிக் கொள்கைகள் எப்படி மக்களுக்கு சாதகமாக இருக்க முடியும்?

நாட்டின் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் பலவும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நிதிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல் நிறுவனங்கள் உணவுப்பொருள் தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன. மரபு அணு மாற்றம் என்ற பெயரில் விவசாயத்தில் நடைபெறுகிற ஆராய்ச்சிகள் நமது பாரம்பர்ய விவசாய முறையை ஒழித்து, மக்களுக்கு நோய்களையும், கேடுகளையும் விளைவிக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. தோல் கருத்துப் போகாத வாழைப் பழங்களும், கீழே போட்டால் உடையாத தக்காளியும், மரபணு மாற்றத்தினால் உருவாக்கப்பட்டவை.

ஆனால் உடலுக்கு பெரும் கேடுகளை உருவாக்கக்கூடியவை. இப்படி மரபணு மாற்றப்பட்ட பொருள்களை விற்கும் போது, அவை மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை அறிவிக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் சட்டம் இருக்கிறது. நமது நாட்டில் அத்தகைய சட்டங்களே கிடையாது. மக்கள் மீது மரபணு மாற்றத்தில் உருவாக்கப்பட்ட பொருள்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக திணிக்கப்படுகின்றன.

‘மான் சாண்டோ’ எனும் பன்னாட்டு நிறுவனம் - இப்படி மரபணு மாற்ற பருத்திகளை தயாரிப்பதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பருத்தி விதைகளை பூச்சிகள் அழிக்காமல் இருக்க, சில உயிரிகளையே விதையுடன் சேர்த்து பி.டி. காட்டன் பருத்தி விதைகளை உருவாக்கினார்கள். இந்த பி.டி. காட்டன் பருத்தி விதைகளை நம்பி, பயிரிடும் விவசாயிகள், ஏமாந்து போனார்கள்.

பருத்திகளை அழிக்கும் வீரிய மிக்க வேறு வகை பூச்சிகள் உருவாயின. கடும் விலை கொடுத்து பி.டி. காட்டன் பருத்திப் பயிர் செய்த விவசாயிகள், விளைச்சல் பாதிக்கப்பட்டு, கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கோவை விவசாயப் பல்கலைக்கழக துணைவேந்தர் மான்சாண்டோ நிறுவன உற்பத்திப் பொருள்கள் உருவாக்கும் ஆபத்துகள் பற்றி, தங்களுக்கு கவலை இல்லை என்றும், உற்பத்தி தான் முக்கியம் என்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட ஒரு விவசாயிக்கு பதில் கூறியுள்ளார் என்று பல்வேறு தகவல்களை வழக்கறிஞர் சுந்தரராசன் விளக்கி உரையாற்றினார்.

இரவு 7 மணியளவில் மீண்டும் சிற்பிராசன், தோழர்களிடம் மூடநம்பிக்கைகளை விளக்கி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் காலை 11 மணியளவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், உலகம் தோன்றியது எப்படி? உயிர் தோன்றியது எப்படி? என்ற தலைப்புகளில் பேசினார். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், பெருகி வரும் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை விரித்தாடுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியும் பேசினார். உலகமயமாக்கல் கொள்கை மண்டல் குழு பரிந்துரை அமுலானவுடன் மிகத் தீவிரமாக பார்ப்பன அதிகாரவர்க்கம் அமுல்படுத்தத் தொடங்கியது. அரசு வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஆணையை செயலிழக்கச் செய்வதற்கு, அரசுத்துறைகள் பொதுத் துறைகளில் தனியார் மயமாக்கம் நுழைக்கப்பட்டது.

தனியார் துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்கள் புதிதாக தனியார் மயமாகும் நிறுவனங்களையும் ஆக்கிரமித்து கொண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையை காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடிய ஆணையாக மாற்றிவிட்டனர். மத்திய தேர்வாணையமும், உச்சநீதிமன்றமும் உலகமயக் கொள்கைகளையே மறைமுகமாக அமுல்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்துக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் உயர் அதிகாரத்தில் உள்ள சில பார்ப்பன அதிகாரிகள் அமெரிக்காவுடன், அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கிட பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒப்பந்த சரத்துகளையும் உருவாக்கி, இந்திய பார்ப்பன மேலாதிக்கத்தை அமெரிக்காவின் கண்காணிப்புக்குள் கொண்டுச் சென்றுவிட்டனர். உண்மையில் சர்வதேச உடன்பாடுகளை உருவாக்கும் உரிமை இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரவர்க்கத்துக்கு வழங்கப்படவில்லை. இதை பல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும், இந்திய தேசியப் பார்ப்பனிய அமைப்பு இத்தகைய பார்ப்பனர்களின் சட்ட மீறல்களை அனுமதிப்பதாகவே இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சியில் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டு, பார்ப்பனர் நலன் மட்டுமே பேணப்பட்டது. மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்களாட்சி வந்த பிறகு, மக்களுக்கான கல்வி, மருத்துவம், அடிப்படை வாழ்வுரிமை போன்ற மக்களுக்கான திட்டங்களை ஆட்சிகள் நிறைவேற்றி வந்தன. இப்போது உலக வங்கிகளின் உத்தரவுகளை ஏற்று, இத்தகைய மக்கள் சேவை பொறுப்பிலிருந்து மக்களாட்சி விடுவித்துக் கொண்டுவிட்டது.

எனவே, மன்னராட்சியில் நடந்தது போல், மக்கள் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, பார்ப்பனர் நலன் மட்டுமே இப்போது மக்களாட்சி என்ற பெயரில் பாதுகாக்கப்படுகிறது. வேலைவாய்ப்புகள் நிரந்தரம் இல்லாமல் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப்படுவதால், எதிர்காலப் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. சந்தையையும், விற்பனையையும், விளம்பரத்தையும், மூலதனத்தையும், உலகமயமாக்கி வரும் பெரும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் ஊதியத்தை மட்டும் உலகமயமாக்கவில்லை. குறைந்த கூலியில் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவை அனைத்துமே பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படுகிறது என்று குறிப்பிட்டார்.

கொளத்தூர் மணி

மதிய உணவுக்குப் பிறகு பயிற்சியாளர்களின் விரிவான அறிமுகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் பார்வையில் சில முக்கிய கருத்துகளை விளக்கி, தோழர்களிடம் பேசினார். பழந்தமிழ், பழந்தமிழர் பேருமை பேசுவது இன்றைய சமுதாய அறிவியல் வளர்ச்சிக்கு உதவாது என்று பெரியார் அழுத்தமாக வலியுறுத்தி வந்ததை சுட்டிக் காட்டினார். சோழ மன்னன் ராஜேந்திர சோழன், அருண் மொழித்தேவன் எனும் தமிழ்ப் பெயரை வடமொழிக்கு மாற்றிக் கொண்டான். தமிழ்ப் பெயரை பார்ப்பன வடமொழிக்கு மாற்றம் செய்வதை முதலில் தொடங்கி வைத்த மன்னன் அவன் தான்.

எந்தத் தமிழ் மன்னர் ஆட்சி காலத்திலும் சரி; மக்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. மக்கள் அனைவருக்குமான பொதுக் கல்வியை வழங்கியது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தான். மெக்காலேதான், அந்தக் கல்வி முறையைக் கொண்டு வந்தார். அதற்கு முன் பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்வி வழங்கப்பட்டு வந்தது. ‘சதி’ என்று கூறப்பட்ட உடன்கட்டை ஏறும் பழக்கத்தை 1829 இல் வில்லியம் பெண்டிங் ஒழித்ததைத் தொடர்ந்து 1836 இல் மெக்காலே அனைவருக்குமான அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தினார். அறிவியலை சமஸ்கிருதத்திலே தேடுவதை எதிர்த்தார் மெக்காலே.

பெரியார் கருத்துகளை பெரியார் எழுத்திலும், பேச்சிலும் தேடிப் படிக்க வேண்டும். மூலத்தைத் தேடிப் படிக்கும்போது தான் சரியான புரிதலைப் பெறமுடியும். பிரம்ம சூத்திரத்துக்கு ஆதிசங்கரர். ராமானுஜர், மத்வர் ஆகியோர் உரை எழுதக் கிளம்பினார்கள். மூன்று பேர் எழுதிய உரைகளும் தனித்தனி மதங்களாகவே மாறிவிட்டன. எனவே உரைகளைத் தவிர்த்து, மூலத்தையே படிப்பதுதான் நல்லது.

பெரியார் நடுநிலைப் பார்வையில் சமத்துவத்தைப் பேசவில்லை. பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று, அவர்களுக்கான உரிமைகளை மீட்க வேண்டும் என்று போராடியவர். நீதிக் கட்சியின் கொடியில் ‘தராசு’ சின்னம் நடுநிலையை குறிப்பதாக இடம் பெற்றிருந்தது. அந்தத் ‘தராசு’ சின்னத்தையே பெரியார் எதிர்த்துள்ளார். சமத்துவ மற்ற சமுதாயத்தில் நடுநிலை சமத்துவம் பேசுவது பயன் தராது. சமத்துவம் மறுக்கப்பட்டவர்களின் உரிமை முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே பெரியாரின் பார்வையாக இருந்தது.

புரோகிதத் திருமணங்களை மறுத்து, பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இப்போது சுயமரியாதை திருமணத்துக்கு பதிலாக, தமிழ் உணர்வாளர்கள் தமிழ்த் திருமண முறையை முன் வைக்கிறார்கள். உண்மையில் 1939 இல் பெரியாரின் சுயமரியாதை திருமண முறைக்கு எதிர்ப்பாகத்தான் சைவத் தமிழர்கள் சிலர் தமிழ்த் திருமண முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

வைதீகத் திருமணத்தைவிட மோசமான அறிவுக்குப் பொருந்தாத சடங்குகள் தமிழ்த் திருமணத்தில் இடம் பெற்றுள்ளன. எனக்குத் தெரிந்த ஒரு பெரியாரியலாளர் தமிழ்த் தேசிய அமைப்பில் இடம் பெற்றிருந்தார். அவரது திருமணத்துக்கு நான் சென்ற போது, அவர் சட்டை இல்லாமல், வேட்டியுடன் மணமகன் கோலத்தில் இருந்தார். அது தமிழ்த் திருமணம். என்னை பார்ப்பதற்கே அவர் கூச்சப்பட்டார். சுயமரியாதைத் திருமணத்துக்கு எதிராக எதிர்ப் புரட்சியாளர் அறிமுகப்படுத்தியதுதான் தமிழ்த் திருமணம் என்பதை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்ட பலரும், பாதை தவறி கொள்கைக்கு எதிராக செயல்படத் தொடங்கி விடுகிறார்கள். தோழர் ஜீவானந்தம் பெரியாரை விட்டுப் பிரிந்தவுடன், பெரியார் ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக, அவர் ராமாயண ஆதரவுப் பிரச்சாரம் செய்தார். கம்பன் கவிதையில் பொதுவுடைமையை தேடினார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஜீவா பிரச்சாரம் செய்தார். தா.பாண்டியன் ஜீவாவிடம் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒரு பொதுவுடைமைக்காரன் என்பதால் எதிர்க்கிறேன் என்று ஜீவா பதில் கூறியதாக தோழர் தா.பாண்டியன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

பெரியார் தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய போதுதான், பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற அண்ணா, ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்றார். நம்முடைய தோழர்கள் சிலர் முருகன், தமிழ்க் கடவுள் என்று பேசி வருகிறார்கள். முருகனை தமிழர்கள் வழிபடலாம் என்கிறார்கள். முருகனை தனியாக மீட்டெடுக்க வேண்டும் என்கிறார்கள்.

முருகனை மட்டும் எப்படி தனியாக மீட்க முடியும்? முருகனை மீட்கும் போது, முருகனோடு தெய்வானை வருவாள். சுப்ரமணியன் வருவான், விநாயகன் வருவான். இவர்கள் எல்லாம் முருகனோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில் முருகனை மட்டும் தனியே எப்படிப் பிரித்து எடுக்க முடியும்? தமிழில் பெயர் சூட்டுவதிலும் பிரச்சினை இருக்கிறது. வடமொழிப் பெயருக்கு பதிலாக தமிழ்ப் பெயர் சூட்டுவதை நாம் ஆதரிக்கிறோம் என்றாலும், பார்ப்பன எதிர்ப்பை பண்பாட்டுப் புரட்சியை சுட்டி நிற்கும் பெயர்களை அவை தமிழில் இல்லை என்பதற்காக ஒதுக்கிவிட முடியாது.

பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ப் பெயர் இல்லை தான். ஆனால் அந்தப் பெயர் இனத்தின் விடுதலையை, வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை சுட்டி நிற்கிறது. இராவணன் - வடமொழி பெயர் தான். நல்ல தமிழ்ப் பெயர் தரும் உணர்வை விட இராவணன் என்ற பெயர் பார்ப்பன எதிர்ப்பை உணர்த்தி நிற்கிறது. பெரியார் பேசிய இனவுரிமை - இனவாதம் அல்ல. நான் ஹிட்லரைப் போல் இனவாதம் பேசுகிறவன் அல்ல என்று பெரியாரே கூறியிருக்கிறார்.

எனவே தமிழ் மொழிப் பற்று என்பது இனவாதமாக மாறிப் போய்விடக்கூடாது. அண்ணா தமிழன் என்பவன் யார் என்பதற்கு மிக அழகாக விளக்கம் தந்துள்ளார். மொழியால் மட்டும் தமிழனாக இருப்பவன் தமிழன் அல்ல. மொழியால், வழியால், விழியால், தமிழனாக இருக்க வேண்டும் என்கிறார். தமிழைப் பேசுவது மட்டும் தமிழனின் அடையாளமாக இருக்க முடியாது. வாழும் வழியாகிய பண்பாடும், தமிழனின் விழிப் பார்வை போன்ற கண்ணோட்டமும் தமிழனாக இருக்க வேண்டும் என்கிறார். அதுபோல் பெரியார் பேசிய நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பு நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பையும், சாதி எதிர்ப்பையும் உள்ளடக்கிய நாத்திகம் என்பது போன்ற செய்திகளை விரிவாக விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து - கழகப் பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரன் முகாமை நிறைவு செய்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடு - பண்புத் தளம் - அணுகுமுறைகளை விளக்கியதோடு, பெரியாரியலில் பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி மத எதிர்ப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு போன்ற பெரியாரியல் கோட்பாடுகளோடு உலகமயமாக்கம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அடங்கியுள்ள பார்ப்பனிய உள்ளடக்கங்களையும், மனித உரிமைப் பிரச்சனைகளையும் பெரியாரியலில் இணைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார். கடற்கரைக்கு அருகே இயற்கைச் சூழலில் மிகச் சிறப்பாக பயிற்சி முகாமை நாகை மாவட்டத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரு நாட்களும் காலை மதியம் இரவு உணவு மிகச் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.

நட்புரிமையுடன் குழுவாக இணைந்து நின்று சரியான புரிதலில் நாகை மாவட்டக் கழகத் தோழர்கள் ஆற்றிடும் களப்பணியை தோழமை அமைப்பினர் பலரும் பாராட்டினர். இரவு 8 மணியளவில் முகாமை முடித்து, தோழர்கள் பிரியாவிடை பெற்றனர். பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இந்த முகாம் தங்களுக்கு பயன்பட்டதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். பெரியாரை நோக்கி வரும் புதிய இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் பெருமளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Pin It