‘தூக்கு மேடையை சந்திக்கத் தயார்’ என்று கரவொலிகளுக்காக மேடைகளில் முழக்க மிடுவதைத் தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். எவ்வித சலனமு மின்றி - உறுதியோடும் துணிவோடும், உண்மையில் தூக்கு மேடை ஏறி தண்டனையை சந்தித்த உண்மையான ஒரு வீரனை தொலைக் காட்சி வழியாக, உலகமே கண்டது! அமெரிக்க ஏகாதி பத்தியத்துக்கு எதிராக - சிங்கமென, சிலிர்த்து நின்ற ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன், வரலாற்று நாயகராகிவிட்டார். 2006 ஆம் ஆண்டின் இறுதி நாளில் (டிசம்.30) அவசர அவசரமாக - அவரது கழுத்துக்கு சுருக்கிட்டு விட்டது, ஈராக்கின் அமெரிக்க எடுபிடி அரசு.

உலகம் முழுதும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளாகிவிடக் கூடாதே என்ற பெரும் கவலையில் வெண்டைக் காயை விளக்கெண்ணை யில் தோய்த்து, மென்மையான வார்த்தைகளில் - பெயரளவுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா!

சதாம் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் மூன்று பேர் மாற்றப் பட்டனர். கடைசியாக - ஒரு சிறந்த கைக்கூலி நீதிபதியாக்கப்பட்டார். சதாமுக்காக வாதாட வந்த வழக் கறிஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். “எப்படியோ என்னைக் கொல்லப் போகிறீர்கள்; முதலில் என்னைக் கொலை செய்துவிட்டு, பிறகு வழக்கை நடத்துங்கள்” என்று சதாம் நீதி மன்றத்திலேயே சொன்னார்.

சதாமைத் தூக்குப் போடும் காட்சியை தொலைக்காட்சியில் பதிவு செய்து, உலகம் முழுதும் ஒளிபரப்பச் செய்து, தன்னை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் ‘பரிசு’ என்று மிரட்டியிருக் கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்!

ஈரான் மீது போர் தொடுத்தும், குவைத் நாட்டை ஆக்கிரமித்தும், ‘குர்து’ தேசிய இனத்தின் போராட்டத்தை நசுக்கியதும் சதாம் உசேன் தான். இதில் பெரும்பாலான குற்றங்களை அவர் செய்தபோது, அவருக்கு ஆதரவாக நின்றது, இப்போது ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது.

சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உலகையே உலுக்கியிருக்கிறது. மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அய்ரோப்பிய ஒன்றியம், வாயை மூடிக் கொண்டு விட்டது.

மக்கள் சக்தியை ஆட்டிப் படைக்கும் அதிகார மய்யங்களாக, சர்வதேச ‘எஜமானனாக’ அமெரிக்கா திகழுகிறது. அதே நிலை தான் இந்தியாவிலும்! நாடாளுமன்றங்களையும், சட்ட மன்றங்களையும், பெரும்பாலான பார்ப்பனரல்லாத மக்களின் பிரதிநிதிகள் கைப்பற்றினாலும், அவர்களை ஆட்டுவிக்கும் அதிகார மய்யங்களாக பார்ப்பனர்களே செயல்படுகிறார்கள்.

இந்த அதிகார மய்யங்களை நோக்கியே மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்.

சதாம் உசேன் உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டார். சதாம் உசேனுக்கு உண்மையான இரங்கலையும் - வீர வணக்கத்தையும் இந்தியா தெரிவிக்க விரும்பினால், மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து முழுதுமாக நீக்கி விடலாம்; இதுவே, சதாமுக்கான உண்மையான ‘அஞ்சலி’ யாக இருக்கும்; இந்தியா செய்யுமா?

Pin It