பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமரானார். இந்திரா காந்தி அம்மையார் படுகொலை பற்றி விசாரிக்க , விசாரணை ஆணையம் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. ஆணையத்தின் தலைவர் தாக்கர்.

தாக்கர் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. நாடாளுமன்ற விதி களின்படி அமைக்கப்படும் விசாரணைக்குழு ஆணையத்தின் அறிக்கை சட்டப்படி நாடாளு மன்றத்திலே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், ராஜீவ்காந்தியோ, தனது தாயார் மரணம் குறித்து, தனது ஆட்சி நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க மறுத்தார்.

ஏன் மறுத்தார்? அந்த விசாரணை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்தது? இது மிக முக்கியமான கேள்வி. விசாரணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காகவே சட்டத்தையே திருத்தினார் ராஜீவ் காந்தி. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டத்திருத்தம் 1988 இல் கொண்டு வரப்பட்டது. தாக்கர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் மூடி மறைக்கப்பட்டது.

ஆனாலும், ஆணையத்தின் பரிந்துரைகளை ஏடுகள் வெளிக்கொண்டு வந்தன. ஆணையத்தின் முக்கிய பரிந்துரை என்ன? இந்திராவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் ஆர்.கே.தவான். அவருக்கு இந்திராவின் கொலைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கும் வாய்ப்புகள் இருந்திருப்பதால், அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே ஆணையத்தின் முக்கிய பரிந்துரை. இதற்கு ராஜீவ் ஏன் தயங்கினார்? ஆணையம் குற்றக்கூண்டில் நிறுத்திய ஒருவரை ஏன் காப்பாற்ற முயற்சித்தார்?

காப்பாற்ற முயற்சித்தது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஆணையத்தால் சந்தேகத்துக்குரிய மனிதராக கூறப்பட்ட அதே ஆர்.கே. தவானை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலும் ராஜீவ்காந்தி நியமித்தார். ஏன்? எதற்காக ஆர்.கே.தவானை ராஜீவ் சரிகட்ட முயற்சித்தார்? விடை தேட வேண்டிய கேள்வி இது!

அதற்குப் பிறகு விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளை மூடி மறைக்க ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்தவர் வி.பி.சிங் தான். வி.பி.சிங் பிரதமராக வந்தபிறகு இதற்காக மீண்டும் சட்டத்தைத் திருத்தினார் என்பது வரலாறு.

ராஜீவ் மரணத்தையே பேசிக் கொண்டு ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைகளைப் பற்றி கவலைப்படாத காங்கிரசாரைக் கேட்கிறோம் - இந்திராவின் மரணத்தில் அடங்கியுள்ள ரகசியங்களை ராஜீவ் காந்தி ஏன் மறைக்க முயன்றார்?

விசாரணை ஆணையம் சந்தேகக் கூண்டில் நிறுத்திய ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்றி, அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியது ஏன்? காங்கிரசார் பதில் சொல்வார்களா?

Pin It