நீதிமன்றங்களும், அவற்றின் தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்னும் கருத்து இப்போது வலுவடைந்து வருகிறது. முன் பெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் பற்றிப் பேசுவதும், கருத்துச் சொல்வதும் தவறானது, ஒரு விதமான நீதிமன்ற அவமதிப்பு என்கிற எண்ணம் இருந்தது. எனவே சரியானவை போன்ற தோற்றத்துடன் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான்; தவறுகள் செய்யக்கூடும் என்ற பொதுவான மனித இயல்புகளின் அடிப்படையில், நீதிமன்றங்களையும், அவற்றின் தீர்ப்புகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகும் மாற்றம் உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம். நீதித்துறையின் உள்ளிருந்தே அதன் மீது, விமர்சனங்களும், அதன் நம்பகத்தன்மை மீதான சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்னாள் சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூ­ன், "இந்தியாவின் கடைசி தலைமை நீதிபதிகள் 16 பேரில், எட்டு பேர் லஞ்ச ஊழல் கறை படிந்தவர்கள். 6 பேர் நேர்மையான வர்கள். மீதம் இருக்கின்ற 2 பேரைப் பற்றி எந்தவித முடிவுக்கும் வர முடியவில்லை" (eight of the last 16 Chief Justices were definitely corrupt, six were definitely honest and about the remaining two, a definite opinion cannot be expressed whether they were honest or corrupt) என்று கூறியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ போகிற போக்கில் இதை அவர் சொல்லிவிடவில்லை. 2010 செப்டம்பரில், தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவிற்கு அனுப்பிய மனுவில், அந்த 16 நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே இதே கருத்தை சாந்தி பூ­னின் மகனும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூ­னும் தெஹல்கா (செப்.05, 2009) இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'நம்முடைய நீதித்துறையில் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முடியும்' என்று குஜராத் தலைமை நீதிபதி தெரிவித்ததாக நாளேடுகளில் செய்தி வெளியிடப்பட்டது.(டைம்ஸ் ஆப் இந்தியா, 6 மார்ச் 2010).

ஒரு நாட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளும், தண்டனைகளும் ஆட்சியாளர்களின் விருப்பு, வெறுப்பு சார்ந்தவையாக அமைகின்றன என்கின்றனர் மனித உரிமையாளர்கள். அதை மெய்ப்பிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன் அவர்களின் கூற்று. இந்திராகாந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட, கேஹர்சிங்கின் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட் ராமன்தான் நிராகரித்தார். அவர் தன்னுடைய சுயசரிதையில் இப்படிக் கூறியிருக்கிறார்?

" கேஹர் சிங்கின் வழக்கு, எனக்குள் சில கேள்விகளை எழுப்பியது. முதலாவதாக, குற்றத்தின் தீவிரத் தன்மையைக் குறைக்கின்ற சூழ்நிலையை பரிசீலிக்கவும், மரணதண்டனையை மாற்றவும், அரசின் அறிவுரை இல்லாமலே, முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டாமா? வேண்டாம் என்றால்  முன்முடிவுடன் அல்லது ஒருதலைப்பட்ட நிலையில் வழங்கப்படும் தீர்ப்புகளை எப்படித் தடுப்பது?.........................................................

இரண்டாவதாக, குற்றவியல் வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகளை மறுஆய்வு செய்யக்கூடிய முழுமையான அதிகாரத்தைக் கொண்டுள்ள மத்திய அரசு, எவ்வித ஐயப்பாடு களுக்கும் ஏன் ஆளாவதே இல்லை என்பது! " ("Khar singh's case raised a few queries in my mind. First, should not the president have discretion to examine any extenuating circumstance and alter the death sentence without the advice of the government? How else can prejudice or partisanship be prevented? ..............Secondly, that the President (i.e., the Central Government) has plenary powers to review sentences in criminal cases at any time, has never been in doubt" - My Presidential Years, pages 249 - 250)

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் நம்பிக்கைக் குரிய கடைசி உறுப்பான நீதித்துறையில், தலைமை நீதிபதிகளே லஞ்ச ஊழல் கறை படிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லும்போது, நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மக்கள் நம்புவது எப்படி? தீர்ப்பு எழுதிய நீதிபதி, அந்த எட்டுபேரில் ஒருவரா, இல்லை, அந்த ஆறுபேரில் ஒருவரா அல்லது ரெண்டுங்கெட்டானாக சொல்லப்படும் இரண்டு பேரில் ஒருவரா என்பதைப் பாதிக்கப்பட்டவரா கட்டும், குற்றம் செய்தவராகட்டும் எப்படித் தெரிந்து கொள்வது? இத்தனை பலவீனமான நம்முடைய நீதி அமைப்புகள் வழங்கும் தீர்ப்புகள் சரியானவை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தவறு நடைபெற்றிருக்கும் நிலையில், அதை சரி செய்வது எப்படி? அதிலும், உயிரைப்பறிக்கும் உச்சகட்ட தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும் தீர்ப்பில் மேற்சொன்ன 16 நீதிபதிகளில் எந்த நீதிபதியின் பேனா உடைக்கப்பட்டிருக்குமோ யார் அறிவார்?

மும்பை ஓசிவாரா காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த தமிழரான ஆறுமுகத்தைக் காவல்துறை குற்றவாளியாக்கியது. நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. 1995இல் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2006இல் விடுதலை செய்யப்பட்டார். தண்டனைக் காலத்திற்கு முன்பே திடீரென விடுதலை செய்யப் பட்டது ஏன் என்ற வினாவிற் கான விடை நீதி அமைப்பின் நேர்மையைக் கேள்விக் குள்ளாக்குகிறது. மனச்சாட்சியின் உறுத்தலால் தற் கொலை செய்துகொண்ட, காவல்துறை ஆய்வாளர் காதர் பார்கீர், தன்னுடைய கடிதத்தில், ஆறுமுகம் எந்தக் குற்றமும் செய்யவில்லை. வழக்கை விரைந்து முடிக்கச் சொல்லி மேலதிகாரி கொடுத்த அழுத்தத்தினால் அப்பாவி ஆறுமுகம் குற்றவாளியாக்கப்பட்டார் என்ற உண்மையைச் சொன்னதால் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகிலுள்ள ராச்சமங் கலம்தான் ஆறுமுகத்தின் சொந்ந ஊர். ஏழாண்டு களுக்கு முன்பு நான் அந்த ஊருக்குச் சென்று விசாரித்தபோது, அவருடைய மனைவி வேறொரு துணையைத் தேடிக் கொண்டுவிட, ஒரே மகன் கார்த்தி, பெற்றோரின் அரவணைப்பின்றி, வயதான தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வந்ததாகத் தெரிந்தது.

இங்கே ஒரு வினாவினை எழுப்ப வேண்டியிருக் கிறது. ஒரு வேளை ஆறுமுகத்திற்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தால்...? எத்தனை வழக்குகளில் விசாரணை அதிகாரிகளின் மனச்சாட்சி விழித்துக் கொள்ளும் என்று சொல்ல முடியும்? ' எந்த ஒரு குற்றமும் நியாயமான சந்தேகங்களுக்கு உட்படாத வகையில் நிரூபிக்கப்பட வேண்டும் ' என்பது குற்றவியல் சட்டங்களின் அடிப்படை விதிகளுள் ஒன்றாக இருக்கிறது. அத்தகைய சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நிரூபணங்களுக்கு, ஊழல்  ஊடுருவி விட்ட, நம்முடைய நீதித்துறையில் இடமிருக்கிறதா? இப்படிப்பட்ட அச்சம் தரும் சந்தேகங்களுக்கு, நூறு விழுக்காடு இடம் தரக்கூடிய ஒரு வழக்கு நாடே நன்கறிந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு.

குற்றவியல் சட்டம் அறிவுறுத்துவதற்கு மாறாக, நியாயமான சந்தேகங்கள் முழுமையாக விசாரித்து முடிக்கப்படாமலேயே குற்றம் சுமத்தப்பட்ட வர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இப்போது அத்தண்டனை நிறைவேற்றப்பட நாளும் குறிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு என்பதையும், தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருப்ப வர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்பதையும் அனைவரும் அறிவர்.

இந்நிலையில், ராஜீவோடு உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து, சில காங்கிரசார் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தினர். அந்தக் குடும்பங்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அந்த இழப்புக்கு நீதி கேட்கும் அவர்கள் குடும்பத்தினரின் குரலோடு நம்முடைய குரலையும் மனிதநேயத்தோடு இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு முன், அவர்களிடம் சில வினாக்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் கேட்கின்ற நீதி எது? மூவரையும் தூக்கில் போடுவதுதான் நீங்கள் விரும்புகின்ற நீதி என்றால், அது மனிதத்தன்மைக்குள் அடங்காத (அ)நீதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தூக்கு மேடையில் நிற்கின்ற மூன்று பேரும்கூட பாதிக்கப்பட்டவர்கள்தான். 20 ஆண்டுகளாக, வெளிஉலகையே பார்க்க முடியாத, தொடர்ச்சியான சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படக் காத்திருக்கும் பலி ஆடுகள். உண்மையில் நீங்கள் நீதி கேட்டு, காங்கிரசை நோக்கியல்லவா கையை நீட்டியிருக்க வேண்டும். அதைவிடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை நோக்கிக் கையைக் காட்டுவது சரியானதுதானா? இந்த வழக்கின் நீதி, மறைந்து கிடக்கும், மறைக்கப்படும் உண்மைகளில் அடங்கியிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ' இன்னும் தெளிவாக்கப்பட வேண்டிய பக்கங்கள் மீதம் இருக்கின்றன ' என்று சொன்னது ஜெயின் கமிசன். அதற்காக, அதன் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அமைத்த பல்நோக்கு விசாரணைக் குழு தன்னுடைய விசாரணையை இன்னும் முடிக்காத நிலையில், மூன்று பேரைத் தூக்கிலிடத் துடிக்கும் காங்கிரசின் அரசி யலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ, 20 ஆண்டுகளாக உங்களைப் பற்றிக் கவலைப்படாத காங்கிரசார், திடீரென அக்கறை வந்ததாக நடிப்பது, அவர்களின் அரசியலுக்காகத்தானே தவிர, பாதிக்கப்பட்டவர்களின் மீதான மனிதாபிமானத்தோடு அன்று. பல்நோக்கு விசாரணைக் குழுவின் விசாரணையை விரைந்து முடிக்கவும், ஜெயின் கமிசன் சுட்டிக்காட்டிய வர்களை பாராபட்சமின்றி விசாரிக்கவும் அனைவரும் ஓரணியில் நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான், பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நீதியைப் பெற்றுத்தரும்.

குற்றங்களுக்குத் தண்டனையே கூடாது என்பதன்று. குற்றச் செயல்களுக்குத் தண்டனை கண்டிப்பாக வேண்டும். அந்தத் தண்டனை, குற்றவாளி குற்றத்தை எண்ணி வருந்தி, திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பாக அமைய வேண்டுமே தவிர, வாழ்வையே வலிந்து முடித்து விடுகின்ற வகையில் இருக்கக் கூடாது. மரண தண்டனை அதைத்தான் செய்கிறது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்குப் பதிலாகக் கொல்லப்படுகிறார். அப்படியா னால் தண்டனை யாருக்கு? அப்பாவி குடும்பத்தினருக்கு.

மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிவிட்டால், அச்சம் அற்றுப் போய்விடும்; குற்றங்கள் பெருகிவிடும் என்பது மரண தண்டனை வேண்டும் என்போர் முன்வைக்கும் வாதம். 1971இல் 16 நாடுகள் மட்டுமே மரணதண்டனையை நீக்கியிருந்தன. 2010இல் மரண தண்டனையை நீக்கிய நாடுகளின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட 16 நாடுகளில் குற்றச் செயல்கள் பெருகியிருக்கு மேயானால், மேலும் 80 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க எப்படி முன்வந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மரண தண்டனையை வைத்துள்ள நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்துவிடவும் இல்லை, மரண தண்டனை நீக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் பெருகிவிடவும் இல்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாகத் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்; உயிர்வாழத் தகுதியற்றவர்கள்; அவர்கள் கொலை வெறியுடனே இருப்பார்கள்; அவர்களை வெளியில் விட்டால், சமூகத்திற்கு கேடுவிளைவித்து விடுவார்கள் ‡ இதுபோன்ற சிந்தனையற்ற காரணங்களைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். எந்தக் குற்றச் செயலானாலும், சூழலையும், அப்போதிருந்த மனநிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சட்டம். அப்படி சூழலின் காரணமாகவோ, உணர்ச்சிவயப்பட்ட நிலையிலோ குற்றம் செய்யும் ஒருவர், தவற்றை நினைத்து வருந்தி, திருந்தவே மாட்டார் என்று சொல்வது மனிதப் பண்புக்கு மாறானது.

மதுரையைச் சேர்ந்த ஜெயப்பிரகாசை யாரும் மறந்திருக்க முடியாது. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர். கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நன்னடத்தையின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து, நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், அன்றைய தமிழக அரசு, அண்ணா பிறந்தநாளில் அவரையும் விடுதலை செய்தது. வெளியில் வந்த ஜெயப்பிரகாசை இந்த சமூகம்தான் புறக்கணித்து, வாழவிடாமல் வேதனைப்படுத்தியது. பொறுமையோடு அதனைத் தாங்கிக் கொண்டு, நேர்மையாக வாழ முயன்றாரே தவிர, சிறு தவற்றுக்கும் இடம் கொடுக்கவில்லை. பொதுத் தொலைபேசி நிலையம் வைத்து, போதுமான வருமானத்தோடு, தன்னை காதலித்து மணந்த அழகான மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் நிறைவான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜெயப்பிரகாஷ்.

இதே போல், மரண தண்டனையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், சமூகத்திற்குப் பயனுள்ள வகையிலேயே பொருள்பட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்றை மட்டும் பார்ப்போம்.

தொடக்கத்தில் காங்கிரஸ்காரராகவும், பிறகு இறுதி மூச்சு வரை பொதுவுடைமைக் கொள்கையாளராகவும் வாழ்ந்த, தூக்கு மேடைத் தியாகி, சி.ஏ.பாலனை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அவருக்கு, மரண தண்டனை வழங்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், 1952 ஜுலை 2ஆம் நாள், கவர்னர், பாலனின் மரண தண்டனையை நீக்கி, ஆயுள் தண்டனையாக மாற்றினார். 1963இல் விடுதலையான அவர், 30 ஆண்டுகள் மக்கள் பணியிலும், இலக்கியப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். காளிதாசனின் சாகுந்தலத்தைத் தமிழில் தந்தார். தமிழின் இலக்கியப் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என இலக்கிய உலகில் மறக்கப்பட முடியாதவராக வாழ்ந்தார்.

குற்றம் செய்தவர்களைக் கடைசி வரை குற்றவாளிகளாகவே இருக்க வைப்பது, மானுடத்தை மறுக்கும் செயல். மாறாக அவர்களுக்கு வழங்கப்படும் நியாயமான தண்டனைகளும், தக்க தருணத்தில் காட்டப்படும் கருணையும் நல்ல மனிதர்களை உருவாக்கித் தரும்.

Pin It