மனோடேனியல் அவரது துணைவியார் மீனா டேனியல், இருவருமே கட்டிடக் கலை படித்து, கட்டிடக் கலைஞர்களாக தொழில் நடத்தி வருகிறார்கள். கட்டிடக் கலையில் தற்போது தீவிரமாகப் புகுந்துள்ள ‘வாஸ்து’ மூட நம்பிக்கையைக் கடுமையாக சாடி, மனோ டேனியல், ‘இந்து’ நாளேட்டுக்கு (ஜூலை 30) பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியிலிருந்து -

பாரம்பர்யப் பழக்க வழக்கங்களைக் கலாச்சாரமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடு இந்தியா. ஆனால், சோகம் என்னவென்றால், இந்த பாரம்பர்யமான நம்பிக்கைகள் சாதாரண அடிப்படை அறிவுக்கே எதிரானவைகளாகவே செயல்படுகின்றன. விஞ்ஞானம் படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், தொழிலதிபர்கள் எல்லோருமே, நம்பக் கூடாதவைகளை நம்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். நம்முடைய விண்வெளி விஞ்ஞானிகள் கூட, ‘ராக்கெட்டுகளை’ விண்வெளியில் செலுத்துவதற்கு முன், கோயிலுக்குச் சென்று ‘ராக்கெட்டுக்கு’ ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்.

வாஸ்துக்களைப் பற்றிக் கூறும் மானசாரா, மாயாமதம், மனுஷியாலாயா, சாந்திரிகா போன்ற நூல்களிலிருந்து தான், வாஸ்து பண்டிதர்கள் கட்டிடங்களை அமைக்கிறார்கள். உண்மையில் இந்த நூல்களில், கட்டிட தொழில் நுட்பம் பற்றி மிகமிகக் குறைவாகவே சொல்லப்பட்டுள்ளன. சடங்குகள், பழைய கால பழக்கங்கள், அறிவியலுக்கு மாறான வானவியல் பற்றியே, இந்த நூல்களில் பெரும் பகுதி எழுதப் பட்டிருக்கிறது.

இதைக் கண்மூடித்தனமாகக் கட்டிடக் கலையில் பின்பற்றுவது, வானவியல் விஞ்ஞானிகள் சோதிடத்தைப் பின்பற்று வதைப் போன்றதுதான்! ஒரு வானியல் விஞ்ஞானி சோதிட அடிப்படையில் ஆய்வு நடத்த முடியுமா? இப்படி, மூடநம்பிக்கையை விஞ்ஞானத்தில் பயன்படுத்துகிறவர்கள், தங்களது கருத்தை விவாதிப்பதற்கோ, நிரூபிப்பதற்கோ, முன் வருவதில்லை. அப்படி விஞ்ஞான ரீதியாக, ஆராய்வதற்குத் தயாராக இருந்தால், அவர்களின் ‘பிழைப்பு’ப் போய்விடுமே!

நல்ல கட்டிடக் கலைஞர்கள் - அழகோடு உருவாக்கும் கட்டிடங்களை, வாஸ்து பண்டிதர்கள் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி, கெடுத்து விடுகிறார்கள். ஒரு நோயாளி, மருத்துவரிடம் தனக்கு, பழைய பாரம்பர்ய முறையில் தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினால், நோயாளி பிழைப்பானா? அது போன்றதுதான் இதுவும். வாஸ்து மூடத்தனத்துக்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். சென்னை நகரில் கடல்காற்று - தெற்கு, கிழக்காக வீசுகிறது. எனவே படுக்கை அறை, வரவேற்பு அறைகளை இந்தத் திசை நோக்கி வைத்தால் தான் காற்றோட்டம் இருக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, இந்த திசைகளில் சமையலறையை நிறுவுகிறார்கள்; இது என்ன கேலிக் கூத்து!

‘இந்து’வை ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாக நான் கருதுவதால் கூறுகிறேன். தயவுசெய்து, வாஸ்து சாஸ்திரங்களை வெளியிடாதீர்கள். உங்கள் பத்திரிகை, இயற்கை விஞ்ஞானம்,வேதியல், இயற்பியல் பற்றி எல்லாம் எழுதுகிறது. இதற்கு நேர் மாறான வாஸ்து சாஸ்திரத்தையும் வெளியிடுவது, மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என்று சாடியுள்ளார் மனோடேனியல்.

(‘மெட்ரோ பிளஸ்’ என்ற ‘இந்து’ ஏட்டின் இணைப்பில் வெளிவந்துள்ளது இப்பேட்டி)

Pin It