மத்திய அரசிடமிருந்து ஈழத் தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக - ஏதேனும் ஒரு கருத்து வெளிவராதா என்று வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது, தமிழகத்தை ஆளும் கலைஞர் ஆட்சி. ஆனால், சிறு துரும்பையும் அசைக்க டில்லி தயாராகவே இல்லை.

மத்திய அரசுக்கு ‘கெடு’ விதித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறியும் எல்லைக்குப் போய் தீர்மானங்களைப் போட்ட தி.மு.க., இப்போது - கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்பது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்துப் பேசுவதைக்கூட அனுமதிக்க மறுக்கிறது. ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசி விட்டார்கள் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமானை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது.

எத்தனையோ முறை வேண்டுகோள்; சட்டமன்ற தீர்மானம்; நேரில் வலியுறுத்தல் எல்லாம் நடந்து முடிந்த பிறகும், கொழும்புக்கு போக மறுத்த வெளிநாட்டுத் துறை அமைச்சரான பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி, சிறீலங்கா அழைப்பை ஏற்று, கொழும்பு போனபோது, ஏதோ தங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக - தி.மு.க. கொண்டாடியது. கொழும்பு போன பிரணாப் முகர்ஜி, சிங்கள ராணுவத்தின் வெற்றிகளைப் பாராட்டினாரே தவிர, போரை நிறுத்து என்று சொல்லவில்லை. ஒவ்வொரு நாளும் சராசரியாக 75 முதல் 100 அப்பாவித் தமிழர்கள் - ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக - ராக்கெட் வீச்சு, செல் வீச்சு, விமானக் குண்டுவீச்சுக்கு பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஜனவரிக்குப் பிறகு 2000 தமிழர்கள் பலியாகி விட்டனர். 700 குழந்தைகள் கொல்லப்பட்டுவிட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகாயத்துக்கு உள்ளாகி, மருத்துவ சிகிச்சையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் போய் வந்த பிறகும் இந்தப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் அரசு விழா ஒன்றில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி வந்தபோது, அவருக்கு எதிராக வை.கோ. தலைமையில் தமிழின உணர்வாளர்கள் கருப்புக்கொடி காட்டியபோது தி.மு.க. ஆட்சி கைது செய்து சிறையிலடைத்துவிட்டது. ‘பிரணாப் முகர்ஜி’ உருவppppப் பொம்மையை எரித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்கிறார் கலைஞர்.

தூத்துக்குடியில் பேசிய பிரணாப் முகர்ஜி, முதல்முறையாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, “பரவாயில்லை, தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கத் தொடங்கியிருக்கிறதே” என்ற நம்பிக்கை துளிர் விட்டது. மத்திய அரசைப் பாராட்டுவதற்காக காத்துக் கொண்டே இருந்த கலைஞர், உடனே பிரணாப் முகர்ஜிக்கு ‘தூயவர்’ என்ற புகழாரம் சூட்டி அறிக்கை விடுத்தார். “பிரணாப் பேச்சு நம் நெஞ்சத்து அணலைத் தணித்து, ஆறுதல் பூங்காற்றால் வீசச் செய்திருக்கிறது” என்று எழுதியதோடு, பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியவர்களை, “வக்கிர மூளையினர்; நாகரிகக் கேடர்கள்” என்றெல்லாம் கடும் வார்த்தைகளால் ‘அர்ச்சனை’ செய்தார்.

அது மட்டுமல்ல, பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசுக்கு விடுத்த வேண்டுகோளில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தியின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? என்று அவர்களையும் இணைத்துக் கொண்டார்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையும் அவசரமாகக் கூடி, கலைஞர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று தீர்மானம் போட்டு, பிரணாப் முகர்ஜிக்கு பாராட்டு மாலைகளை சூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மின்னல் வேகத்தில் இவ்வளவு பாராட்டுகளைக் குவித்து, வெற்றி மாலைகளைத் தாங்களே கழுத்தில் போட்டுக் கொண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழ்நாடு மக்களிடம் நற்சான்றிதழைப் பெற்றுத் தந்து, அதன் வழியாக தங்களது ‘அரசியல் சந்தர்ப்பவாத’ங்களை மறைத்துக்கொள்ளத் துடித்தார்கள். ஆனால் என்ன நடந்தது?

“போரை நிறுத்துமாறு, இந்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற முறையிலோ எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை” என்று இலங்கையின் வெளியுறவுத் துறை செயலாளர் பாலித கோகனா அறிவித்து விட்டார். சிங்களர்களின் அதிகாரபூர்வ ஏடாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும், இலங்கையின் வெளிநாட்டுத் துறை செயலாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியைப் பாராட்டுவதற்கு பேனாவை உதறிக் கொண்டு, மாலைகளைக் கரங்களில் ஏந்திக் கொண்டு காத்திருப்பவர்கள், தூத்துக்குடியில் பேசிய கருத்தை பிரணாப் - ஏன் இலங்கைக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்று கேட்டிருக்க வேண்டாமா? அப்படியானால், தூத்துக்குடியில் பிரணாப் வெளியிட்ட கருத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவா? சோனியா - மன்மோகன்சிங் எல்லாம் கலந்து ஆலோசிக்காமலா, பிரணாப் பேசியிருப்பார் என்று எழுதிய கலைஞர், சோனியா - மன்மோகன்சிங் ஆலோசனையோடுதான்இப்படி ஒரு ஏமாற்று நாடகம் நடந்திருக்கிறது என்று இப்போது எழுதுவாரா? இவை தமிழர்களிடம் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்கள்!

ஞாயிறு தோறும் ‘முரசொலி’ நாளேடு, முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூலின் பகுதிகளை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த மார்ச் முதல் தேதி முரசொலி மாறனின் கட்டுரைக்கான தலைப்பு, ‘கட்டளையிடுகிற எஜமானன் மத்திய அரசு’ என்பதாகும். ஆனால், கட்டளையிடாமலே மத்திய அரசை எஜமானனாக ஏற்றுக் கொள்கிற நிலைக்கு, தி.மு.க. அரசு இப்போது வந்து நிற்கிறது, என்பதே உண்மை.

இப்படி - மத்திய அரசின் எஜமானத்துவத்தை வலியுறுத்தும் முரசொலி மாறன் கருத்தைப் பேசினால்கூட இறையாண்மைக்கு எதிரானது என்று, தேசியப் பாதுகாப்புச் சட்டம் கலைஞர் ஆட்சியில் பாய்ந்தாலும் வியப்பதற்கில்லை.

Pin It