சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையை மக்களிடம் தெளிவுபடுத்தி விழிப்புணர்வு ஊட்டும் பரப்புரையை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்தினார்கள். சென்னை தியாகராயர் நகர் பகுதி பெரியார் திராவிடர் கழகம், சூரிய கிரகணம் நிகழ்ந்த நாளன்று இந்த விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தியது. தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் 15.1.2010அன்று சூரிய கிரகணத்தின்போது மாட்டுக்கறி விருந்தை தோழர்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் தபசி குமரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக துணை தலைவர் ஆனூர் ஜெகதீசன், மாவட்ட துணை தலைவர் அன்பு தனசேகர் உள்ளிட்ட தோழர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சூரிய கிரகணம் அன்று சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை சமூகநீதிக்கான மருத்தவர் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் விளக்கிப் பேசினார்.

மதியம் 12 மணி ஆனதும் கழகத்தினர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரொட்டி துண்டு, மாட்டுக்கறி குழம்பு வழங்கினர். இவற்றை அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ரொட்டி துண்டும், ஜாமும் வழங்கப்பட்டது. ஒரு மேஜையில் பெரியதாக இரண்டு இலைகளை போட்டு அதில் சாப்பாடு, மாட்டுக்கறி குழம்பு ஊற்றப்பட்டது. இதை ஏராளமான பேர் போட்டி போட்டு சாப்பிட்டனர். பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை பார்க்கும் வகையில் பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த கண்ணாடியை அணிந்து ஏராளமான பேர் சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

பொதுத் தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல், மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழ வேண்டும். மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக் கூடுமானால் வாழ வேண்டும், அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்குக் கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்?

பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.

சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். – பெரியார்

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

 

Pin It