பார்ப்பானின் இந்துமத சாதி வன்கொடுமை கிராமங்களிலும், படிப்பறிவு இல்லாதவர்களிடமும் மட்டுமே இருக்கும் என சொல்பவர்கள் உண்டு. ஆனால், சாதிவெறி நகரங்களிலும், உயர் படிப்பு படித்த ஆதிக்கசாதியினரிடமும் உண்டு என நிரூபிக்கும் நிகழ்ச்சி திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் ஜெயா, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., டி.சி.எச். நேர்மையான மருத்துவராகவும், சிறப்பான சிகிச்சையிலும், மனித நேயம் கொண்டவராகவும் இருந்ததனால், மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றவர்.
இதனை பொறுக்க முடியாத ஆதிக்க சாதியைச் சார்ந்த மருத்துவமனை உயர் அதிகாரிகள் டாக்டர் நடராஜன் (ஜே.டி.), டாக்டர் திருமலைச் செல்வன் (ஓய்வு), டாக்டர் தங்கவேல் (ஓய்வு), டாக்டர் மதிவாணன் மற்றும் டாக்டர் பிரியா விசுவாசம் ஆகியோர், டாக்டர் ஜெயா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், சாதியை சொல்லி தொடர்ந்து இழிவுபடுத்தியும் பணி செய்ய இடையூறு செய்தும் வந்தனர். பிறகு ஆதிக்கசாதி வெறிக் கொண்டு பொய்யான குற்றச் சாட்டுகளை சொல்லி,தற்காலிக பணி நீக்கமும் செய்து விட்டனர். முறையற்ற வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடந்த 20 மாத காலமாக பல்வேறு துறைகளை அணுகி மனுக்களை கொடுத்து சோர்ந்து போய் விட்டார் டாக்டர் ஜெயா. மேலும் அரசிட மிருந்து வரவேண்டிய நிலுவை தொகை மற்றும் ஊதியத்தையும் நிறுத்தி வைத்து விட்டனர். தன் உரிமையை மீட்டெடுக்க கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் 11.11.10 அன்று காலை 9 மணிக்கு பறை அடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த டாக்டர் ஜெயா, “என்னை மருத்துவராக பணி செய்ய விடுகிறீர்களா? அல்லது தப்படிக்க போகச் சொல்கிறீர்களா?” என உரிமைப் போராட்டம் நடத்தினார்.
இந்தத் தகவலை கேள்விபட்டவுடன் கழகத் தோழர்கள் முகில்ராசு, அகிலன், பரிமளராசன் மற்றும் தோழர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாக்டர் ஜெயாவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமாவதை கவனித்த மாவட்ட நிர்வாகம் உடனே காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அனுப்பியது. பேச்சு வார்த்தையில் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். அதில் டாக்டர் ஜெயாவுக்கு மீண்டும் ஒரு வாரத்திற்குள் பணி நியமன ஆணையும், நிலுவை தொகைகளையும் வழங்க அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்ததில் மேற்கண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். எனவே போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. கழகத் தோழர்கள் டாக்டர் ஜெயாவுடன் உரிமைப் போராட்டத்திலும், சாதி வன்கொடுமைக்கு எதிரான கலகத்திலும் இறுதி வரை உறுதியுடன் பங்கெடுத்துக் கொண்டனர். இப்போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், பா.ம.க., தி.க., ஆதித் தமிழர் பேரவை, ஆதி தமிழர் சனநாயக பேரவை, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.