தி.மு.க. ஆட்சி என்ன செய்யப் போகிறது? 

தமிழ்நாட்டில் நடைபாதைக் கோயில்கள் புற்றீசல்போல் பெருகி வருகின்றன. அரசு வளாகங்களிலேயே - கோயில்கள், அரசு ஆணைகளுக்கு எதிராக கட்டப்படுகின்றன. கழக சார்பில் இதை எதிர்த்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடர்ந்துதான் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வந்துள்ளது. அண்ணா முதலமைச்சரானவுடன், அரசு அலுவலகங்கள் மதச்சார்பற்றவையாக தோற்றமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடவுள் படங்களை அகற்ற nண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இப்போது அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும், பஜனை மடங்கள் போல் காட்சி அளிக்கின்றன. அண்ணாவின் வழி வந்த ஆட்சியாக உரிமை கோரிவரும் தி.மு.க. ஆட்சி, இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கோயில்களுக்கு வீட்டு வசதி வாரியம் ஏற்பும் வழங்கி வருகிறது. நடைபாதைக் கோயில்கள் என்பவை முதலீடு இல்லாத வர்த்தகமாகவே நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியின் உள்ளூர் நபர்கள், கூட்டணி அமைத்துக் கொண்டு கோயில்களைக் கட்டி, விழாக்களை நடத்தி, அதன் வழியாக பொருளீட்டி வருவது ஒன்றும் ரகசியமல்ல. பொது மக்களுக்கே நன்றாகத் தெரியும். சென்னை நகரில் இதுவே, பலருக்கு முழு நேர  தொழிலாகவும் மாறிவிட்டது. அதன் காரணமாகத்தான், இந்தியாவிலேயே, சட்ட விரோதமாக பொதுவிடங்களை ஆக்கிரமித்து, கோயில்கள் கட்டுவதில், தமிழ்நாடு முதலிடம் பெற்று நிற்கிறது. தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் சட்டவிரோதமாக, பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இரண்டாவதாக இராஜஸ்தான் மாநிலத்திலும், மூன்றாவதாக குஜராத்தில் 15,000 கோயில்களும் இதுபோல் கட்டப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசுகளும், யூனியன் ஆட்சி நிர்வாகங்களும், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாரக்களை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீன் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற அமர்வு கடுமையான எச்சரிக்கை செய்துள்ளது. 

பலமுறை வலியுறுத்திய பிறகும், இந்த வழக்கில், தங்கள் மாநிலத்திலுள்ள சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்காததை நீதிமன்றம், ஆத்திரத்துடன் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது. சட்டவிரோத வழிபாட்டு இடங்களை அகற்றம் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளாவிட்டால், மாநில தலைமைச் செயலர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படுவார்கள் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். 

இரண்டு வாரங்களுக்குள் மாநில அரசுகள், தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் இந்து மதவெறி பார்ப்பன சக்திகள் சட்ட விரோத கோயில்களை இடிக்கக் கூடாது என்று மிரட்டி வருகின்றன. காவல்துறையும், அரசும் இதற்கு பணிந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றமே, இப்போது இடித்துரைத்துள்ளபோது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? சட்ட விரோத நடைபாதைக் கோயில்களில் தமிழகம் முதலிடத்தில் நிற்பது தமிழகத்துக்கே தலைகுனிவாகும்! 

சாதிவாரிக் கணக்கெடுப்பை தனியாக நடத்துக! 

சாதிவாரிக் கணக்கெடுப்பை சமூகநீதி கோரும் அமைப்புகள் கோருவது, சாதிகளின் தலைகளை எண்ணி சாதிச் சங்கங்களுக்கு உரம் ஊட்டுவதற்கு அல்ல. மாறாக, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளின், சமூக பொருளாதார, வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள் வழங்கப்படாவிடில், அதை வழங்குவதற்கும்தான், இந்த நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும், சமூக, பொருளாதார நிலைகளோடு சாதிக் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டால்தான், அதன் நோக்கம் நிறைவேறும். ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பை மட்டும் தனியாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பிரித்து எடுப்பதும், அதற்கு ரூ.2000 கோடி பணத்தை செலவிடுவதும், வீண்விரயமாகவே இருக்கும். 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் என்.என். ராவ், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எம்.எஸ்.ஜனார்த்தனம், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ரவி வர்மகுமார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையக் குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ள இந்தக் கருத்தை பிரதமரிடமும் சோனியாவிடமும் விளக்கி வற்புறுத்துவது அவசியமாகும். 

சுரேஷ் கல்மாடி பின்னணி என்ன? 

காமன்வெல்த் விளையாட்டுக் குழுவின் தலைவராக உள்ள சுரேஷ் கல்மாடி என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர். இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலம். உடுப்பி மாவட்டத்திலுள்ள பிரபல மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ள மால்பி எனும் கடற்கரைப் பிரதேசம். இவரது மூதாதையர்கள் பெரும் வசதி படைத்த பார்ப்பனர்கள். அவர்களில் பலரும் மும்பை, சென்னை, புனேவுக்கு குடியேறிவிட்டார்கள். கல்மாடியின் தந்தை, 60 ஆண்டுகளுக்கு முன்பே பூனேயில் குடியேறினார். அவர் ஒரு டாக்டர். சுரேஷ் கல்மாடியும் புனேயில்தான் பிறந்தார். உடுப்பியில் இருந்த இவர்களின் அரண்மனை கல்மாடி ஷிவாள ‘பிராமண’ அரண்மனை என்றே அழைக்கப்படும். 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொழில் அதிபர் ஒருவர் அதை விலைக்கு வாங்கி விட்டார். கல்மாடி பார்ப்பன குடும்பம் நவராத்தியின்போது பார்ப்பனர்களுக்கு தடபுடலான விருந்துகள் நடத்துவதை, அக் கிராம மக்கள் இப்போதும் நினைவு கூர்கிறார்கள். 

கல்மாடி மராட்டிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும், பச்சை வர்ணாஸ்ரமப் பின்னணி கொண்ட ஒரு பார்ப்பனர் என்பதையும், உண்மையை ஏடுகள் வெளியிடுவதில்லை.

Pin It