(1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்) 

வட மாநிலங்களைவிட தமிழ்நாடு விழிப்புணர்வும், வளர்ச்சியும் பெற்றிருக்கிறது என்பதும், கல்வி, நிர்வாக அமைப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் வடமாநிலங்களிடமிருந்து தமிழகம் எவ்வளவோ முன்னேறி நிற்கிறது என்பதும், இப்போது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள உண்மை நிலை. ஆனால், பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இந்த நிலைதான் இருந்ததா? இல்லை. இதற்கு நேர்மாறான நிலை இருந்ததாகவே சமூக வரலாறுகள் கூறுகின்றன. ‘ரிவோல்ட்’ இது குறித்து பல வரலாற்றுச் செய்திகளை பதிவு செய்துள்ளது. 

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், காங்கிரஸ் மாநாடுகளுடன் இணைந்து இந்து மகாசபை மாநாடுகளும், வர்ணாஸ்ரம ஆதரவு மாநாடுகளும் நடைபெறுவது வழக்கம். தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் மாநாட்டோடு, ‘வர்ணாஸ்ரம மாநாடு’ நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ‘குடிஅரசு’ பத்திரிகையும் தலையங்கம் தீட்டியிருக்கிறது. (30.10.1927) 

அதே காலத்தில் லாகூரில் ஜாட்பட் தோரக் என்ற சாதி ஒழிப்புக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வந்தது. சென்னை காங்கிரஸ்  மாநாட்டோடு இணைந்து வர்ணாஸ்ரம மாநாடு நடந்தது என்றால், வடக்கே லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டோடு இணைந்து அதே பந்தலில் சாதி ஒழிப்புக் கழக மாநாடு (ஜட்பட்தோரக்) நடந்தது. இதை வரவேற்று ‘ரிவோல்ட்’ தலையங்கம் தீட்டியது. அதில் சென்னையில காங்கிரஸ் கட்சி வர்ணாஸ்ரமம் பேசுவதையும் வடக்கே லாகூரில் காங்கிரஸ் - அதற்கு நேர் மாறாக சாதி எதிர்ப்பு பேசுவதையும் சுட்டிக்காட்டியது. அதற்கான காரணத்தையும் அத்தலையங்கம் விளக்கியது.

 “தென்னாட்டின் சமூக நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வடநாட்டில் உள்ள நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். (This event will give some idea to our North Indian Comrades, of the Social condition in the South and of the way in which the wind is blowing in South India) என்று சுட்டிக்காட்டியதோடு, கவிக்குயில் சரோஜினி நாயுடு “தென்னாட்டுப் பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்களுக்கு இணையாக தற்பெருமையும் ஆணவமும் கொண்டவர்கள்” என்று கூறியதையும் சுட்டிக்காட்டியது. ‘தென்னாட்டில் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தால் இங்கே காங்கிரசே இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கே சாதி ஒழிப்பை ஏற்காவிட்டால், அங்கே காங்கிரசே இல்லாமல் போய்விடும்’ என்று ‘ரிவோல்ட்’ படம் பிடித்துக் காட்டியது. 

இதுதான் பெரியார் இயக்கம் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தின் நிலை. அதற்கு பிறகு, பெரியாருடைய இயக்கத்தின் தாக்கம் தான். தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒடுக்கி வடமாநிலங்களைவிட தமிழகம், சமூக தளத்தில் முன்னேறிய நிலைக்குக் கொண்டு வந்ததோடு, சமூக நீதியிலும், வழிகாட்டும் மாநிலமாக உயர்த்தியது. இந்தியாவில் சமூகநீதியின் தலைநகர் தமிழ்நாடுதான் என்று மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கூறியதை இங்கு  நினைவு கூர வேண்டும்.                          

Pin It