தலித் மக்கள் தலைவராக இருக்கக்கூடிய ரிசர்வ் பஞ்சாயத்துகளிலேயே தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது. முடிவெட்ட மறுப்பு, ரேஷன் கடைகளில் பாகுபாடு, பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தத் தடை, இரட்டைக் குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்று பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமையை களஆய்வு நடத்தி, வெளிப்படுத்தியுள்ளது ‘எவிடென்ஸ்’ அமைப்பு. அதன் அறிக்கையிலிருந்து......

தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்த 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 32) 11 பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை உறுதி செய்துள்ளனர். 20 கிராம பஞ்சாயத்துகளில் 09 கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. சாதிய இந்துக்களுக்கு தனிக்குவளை, தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று 13 கிராமங்களில் கோவில், வழிபாடு ரீதியான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவில் என்பது பொது இடம். பொது பங்கேற்புக்கான நிறுவனம் என்கிற உண்மை கூட தெரியாமல் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இக்கோவில்கள் கருதப்படுவது எமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெரும்பாலான கிராமங்களில் உள்ள கோவில்கள் சாதியின் கட்டுமானத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

தலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுப்பு என்கிற பாகுபாடு 6 பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. இழவுச் செய்தி சொல்வதற்கும், இழவு சடங்குகளில் ஈடுபடுவதற்கும், தப்பு அடிப்பதற்கும் 20 பஞ்சாயத்துகளில் தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 02 பஞ்சாயத்துகளில் தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கியப் பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

தலித்துகளை சாதிய ரீதியாக இழிவாகப் பேசுகிற நிலை 13 பஞ்சாயத்துகளில் கடைபிடிக்கப்படுகின்றன. தலித்துகள் மீது தொடர் தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்ச்சி, வன்கொடுமைகளும் சில பஞ்சாயத்துகளில் நடந்து கொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மிகுந்த அளவு காணப்பட்டாலும் அவற்றை வெளியே சொல்லாமல் அல்லது வெளியே கொண்டு வரப்பட்டால் சமரசம் செய்து வைப்பது, மிரட்டலுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நிலைமைகள் இப்பகுதியில் உள்ளன.

20 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல், பொருளாதாரம், அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதி இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வு செய்தாலும், ஒவ்வொரு தீண்டாமையின் கொடூரமும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.

தேனி மாவட்டத்திலுள்ள 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளை ஆய்வு செய்த போது, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகள் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கங்கள் சனநாயக பங்களிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால் ‘இல்லை’ என்கிற ஆய்வு முடிவு தான் ‘கண்டறிந்தவைகளாக’ ஆய்வில் கிடைக்கின்றன. பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பினாமியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சாதி இந்துக்களின் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுகிற நிலையும் இப்பகுதியில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக நரியூத்து பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கும் உட் படுத்தப்பட்டு வருகிறார். கொடுவிலார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சின்னவரதன் இன்னமும் தங்கள் பகுதிகளில் இழவுச் செய்தி சொல்லுவது, பிணத்திற்கு குழிவெட்டுவது போன்ற தோட்டி வேலைகளை செய்து வருவது எமது குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்

தமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமீபகாலமாக தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் பெரிய அளவில் இல்லை என்றும் சிலர் இவற்றை மிகைப்படுத்தி வெளியிடுகிறார்கள் என்றும் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. சில பத்திரிகைகளில் தலித்துகளும் சாதி இந்துக்களும் தேனீர் கடைகளில் சமமாக நாற்காலியில் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய புகைப்படம் கடந்த 3 மாத காலமாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தோடு ஒரு செய்தியும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. சமூக நீதிமற்றும் மனித உரிமை போலீசாரின் செயல்பாடுகளால் இத்தகைய சமத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிற ரீதியில் இவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தீண்டாமை இருப்பதை உறுதி செய்வது? அவற்றை எப்படி ஒழிப்பது? என்பதில் செயல் திட்டம் இருக்க வேண்டுமே தவிர உண்மையை மறுப்பதன் மூலம் மறைப்பதன் மூலம் எவ்வித தீர்வும் கண்டுவிட முடியாது.

தீண்டாமை பாகுபாடுகள் என்பது சனநாயக விரோதப் போக்காகும் - சமூகத்தின் உச்ச கட்ட மனித உரிமை மீறலாகும். மனித சமூகத்தை பாகுபாட்டுடன் வைத்திருக்கக்கூடிய வடிவம்தான் தீண்டாமை. இவற்றை கண்டுபிடிப்பது, அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய காரணிகள் என்ன, அவற்றை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் ஒரு முழுமையான தீண்டாமை ஒழிப்பு பணியினை கொண்டு செல்ல முடியுமே தவிர, தீண்டாமை இல்லை, பாகுபாடுகள் இல்லை என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவதன் மூலம் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. இந்த தீண்டாமை மெல்ல மெல்ல கனன்று பெரிய வன்முறைக்கும் இன மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.

ஆகவே தான் இது போன்ற வன்முறையை தடுக்க வேண்டும், கலவரங்கள் வந்துவிடக் கூடாது என்கிற சமூக அக்கறையின் முன்னெடுப்புதான் இது போன்ற ஆய்வுகளே தவிர, வேறு எந்த நோக்கமும் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு, சனநாயகவாதிகளுக்கு இருக்க முடியாது.

Pin It