சமகாலச் சிந்தனை மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் நோம் சாம்ஸ்கி. மொழியியல், அரசியல் அறிவியல் (Political Science) மற்றும் மெய்யியல் போன்ற பல துறைகளில் அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 98 வயதை நெருங்கும் சாம்ஸ்கி, பல பத்தாண்டுகளாக ஒரு முக்கிய அறிவுஜீவியாக இருந்து வருகிறார். போர், ஏகாதிபத்தியம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராக வன்மையான கருத்துகளை முன்வைத்து வருகிறார். அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் அவருடைய துணிவும், சமூகத்தின் மீதான தீவிர விமர்சனத்தை வெளிப்படுத்தும் அவருடைய திறனும் அவரைச் சக்திவாய்ந்த நபராகவும் அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நபராகவும் மாற்றியுள்ளது.

Noam Chomsky 4001970களின் தொடக்கத்தில் நான் கல்லூரி மாணவனாக இருந்த போது மொழியியல் பாடத்தின் மூலம் சாம்ஸ்கி பற்றி அறிய நேர்ந்தது. இவருடைய T.G (Transformational Generative) இலக்கணக் கோட்பாடுகள் எனக்குள் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியவை. லெனர்ட் ப்ளூம்ஃபீல்ட், எட்வர்ட் சேப்பிர் போன்ற மொழியிலாளர்களைக் காட்டிலும் சாம்ஸ்கி என்னுடைய அபிமானத்திற்குகந்தவராய்த் தோன்றினார். பின்னாட்களில், இவருடைய அரசியல் பார்வைகள் எனக்கு இவர் மீதிருந்த அபிமானத்தைப் பெரிதும் கூட்டின. இவருடைய எழுத்துகளின் பால் நான் கொண்டிருக்கும் மோகம் அலாதியானது.

மாணவப் பருவத்துக்குப் பிறகு சாம்ஸ்கியைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒரு சில துணுக்குச் செய்திகளையும் சிறு கட்டுரைகளையும் நான் பார்த்திருந்தேன். ஆசிரியப்பணி நிறைவுக் காலத்திற்குப் பிறகு, தற்செயலாக, மார்ச் 2013 காலச்சுவடு இதழில் சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பத் தன்னாதிக்க சக்திகளும் அரசியல் தன்னாதிக்க சக்திகளும் எனும் தலைப்பில் சாம்ஸ்கியின் நேர்காணல் ஒன்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுள் அடங்கிக்கிடந்த அவர் மீதான அளவற்ற ஆர்வத்தை இது மீண்டும் கிளறி விட்டது.

 சாம்ஸ்கி பற்றித் தமிழில் நல்ல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இவை பெரும்பாலும் அவர் மொழிக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை விரிவாகப் பேசுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தகுந்தது பேரா. சு.ராசாராம் எழுதியுள்ள நோம் சாம்ஸ்கி எனும் விரிவான நூல். இவர் சாம்ஸ்கியின் துறையிலேயே மாணவராகவும் சிலகாலம் பயின்றிருக்கிறார். தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் மிக அரிய கொடைகளுள் ஒன்றாக இந்த நூலைப் பார்க்கிறேன்.

 சாம்ஸ்கியின் அரசியல் பார்வைகள் பரந்து விரிந்தவை. இடதுசாரிக் கண்ணோட்டம் கொண்டவை. இவற்றைப் பற்றி விரித்தெழுத ஆசைப்பட்டாலும் முறையான வாசிப்பின்றி இதைச் செய்வது இயலாது என்பதால் சாம்ஸ்கியின் மொழியியல் சிந்தனைகளைப் பற்றியும் அவை இன்று பல்வேறு துறைகளிலும் செலுத்தும் தாக்கம் பற்றிய குறிப்புகளை இக்கட்டுரையில் கொடுக்க முனைகிறேன்.

 உருமாற்ற உருவாக்க இலக்கணம் என்றும், உருமாற்ற இலக்கணம் என்றும் கூறப்படும் Transformational Generative Grammar குறித்து 1957 ஆம் ஆண்டில் சாம்ஸ்கி எழுதிய தொடரியல் கட்டமைப்புகள் (Syntactic Structures) எனும் சிறு நூலே இவருடைய மொழிக் கோட்பாடுகளை உலகறியச் செய்தது. இவருக்கு முன்பிருந்த முக்கிய மொழிக்கோட்பாட்டாளர்கள் எட்வர்ட் சேப்பிரும், லியோனார்ட் ப்ளூம்ஃபீல்டும். இவர்கள் மொழியியல் துறையில் கட்டமைப்பியல் (structuralism) அணுகுமுறையை உருவாக்கிய முக்கிய முன்னோடிகள். மற்றொரு முக்கிய ஆளுமை பி.எப். ஸ்கின்னர்.

 மொழி என்பது பண்பாட்டின் பிரதிபலிப்பு என்றும், உளவியல் மற்றும் சமூக அம்சங்களுடன் இணைந்தது என்றும் எட்வர்ட் சேப்பிர் வலிற்றுத்தினார். ஒலி அமைப்புகள், இலக்கணக் கட்டமைப்புகள், மற்றும் மொழியின் பண்பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றை இவர் ஆய்வு செய்தார். மானுடர்களின் உலகப் பார்வையை உருவாக்கும் கருவியே மொழி எனக் கருதினார். கட்டமைப்பியலின் ஒரு பகுதியாக, மொழியின் கூறுகளை வகைப்படுத்தும் முயற்சியில் சேப்பிர் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட மொழி எனும் நூல் மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும்.

 ப்ளூம்ஃபீல்ட் அமெரிக்க மொழியியல் சங்கத்தின் (Linguistic Society of America) நிறுவனர்களில் ஒருவர். இவர் மொழியியலை ஓர் அறிவியல் துறையாக நிறுவ முயன்றார். பார்வையிடக்கூடிய தரவுகள் மற்றும் ஒலி அமைப்புகள் ஆகியவற்றின் பகுப்பாய்வை இவர் வலிற்றுத்தினார். நடத்தையியல் அல்லது நடத்தை உளவியல் என்றழைக்கப்படும் Behaviorism கோட்பாட்டைப் பின்பற்றி, வெளிப்படையாகப் புலனாகும் மொழி நடத்தை மீது இவர் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு மொழியின் அமைப்பையும், அதன் வழக்குப் பயன்பாட்டையும் முறையாக வகைப்படுத்த முயன்றார். எட்வர்ட் சேப்பிர் 1921 ஆம் ஆண்டில் வெளியிட்ட மொழி எனும் நூல் வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு 1931 ஆம் ஆண்டில் ப்ளூம்ஃபீல்ட் அதே தலைப்பில் வெளியிட்ட நூலும் மிகப் பரவலான கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றது.

 பி.எப். ஸ்கின்னர், மொழியை ஒரு நடத்தை (behavior) எனக் கருதி, அதைச் சூழ்நிலைத் தூண்டுதல்கள் (environmental stimuli) மற்றும் ஊக்குவிப்புகள் (reinforcements) மூலம் உருவாகும் ஒரு செயலாகப் பார்த்தார். மொழி என்பது பழக்கப்படுத்தப்பட்ட நடத்தை என்று வாதிட்ட ஸ்கின்னர், குழந்தைகள் ஒரு சொல் அல்லது வாக்கியத்தைப் பேசுவதற்கு முன்பாக, அவர்கள் அதைப் பார்வையிடுகிறார்கள், பின்பற்றுகிறார்கள், பின்னர் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். உதாரணமாக, ஒரு குழந்தை 'தண்ணீர்' என்று சொன்னால், பெற்றோர் தண்ணீரைக் கொடுக்கிறார்கள். இது positive reinforcement அந்தச் சொல் மீண்டும் பயன்படுத்தப்படும் என்று விளக்கினார். தேவையை வெளிப்படுத்தும் சொல், சூழ்நிலையை விவரிக்கும் சொல், கேட்டதை மீண்டும் சொல்வது, பதிலளிக்கும் சொல் என மொழி நடத்தையை இவர் பல வகைகளாகப் பிரித்தார்.

 சாம்ஸ்கியின் தொடரியல் கட்டமைப்புகள் நூல் மொழியியல் துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மொழி என்பது வெறும் கற்றுக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்களின் தொகுப்பு அல்ல, மாறாக, அது உள்ளார்ந்த, உலகளாவிய விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது என்று சாம்ஸ்கி இந்நூலில் தன் அனுமானத்தை முன்வைக்கிறார். குறிப்பிட்ட சில விதிகளைக் கொண்டு, எண்ணற்ற வாக்கியங்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை விளக்கும் உருமாற்ற-உருவாக்க இலக்கண மாதிரியை (transformational & generative grammar) அவர் முன்மொழிந்தார். இதன் மூலம், நடத்தை சார்ந்த அறிவியலில் இருந்து அறிவாற்றல் சார்ந்த அறிவியலை நோக்கி மொழிப்புல ஆய்வு நகர்ந்தது.

 1957 ஆம் ஆண்டில் வெளியானதொடரியல் கட்டமைப்புகள் நூலைத் தொடர்ந்து, 1965 ஆம் ஆண்டில் தான் வெளியிட்ட தொடரியல் கோட்பாட்டின் அம்சங்கள் (Aspects of the Theory of Syntax) எனும் நூலில், தனது கோட்பாட்டின் மிகவும் விரிவான மற்றும் செம்மையான பதிப்பை சாம்ஸ்கி வழங்கினார். இதில் அவர் ஆழமான அமைப்பு (deep structure) மற்றும் மேற்பரப்பு அமைப்பு (surface structure) எனும் கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். ஆழமான அமைப்பு என்பது ஒரு வாக்கியத்தின் அடிப்படைப் பொருளைக் குறிக்கிறது. அதேசமயம், மேற்பரப்பு அமைப்பு என்பது நாம் பேசும் அல்லது எழுதும் உண்மையான வார்த்தைகளின் வரிசையைக் குறிக்கிறது. வெவ்வேறு மேற்பரப்பு அமைப்புகளைக் கொண்ட வாக்கியங்கள் எப்படி ஒரே பொருளைக் கொண்டிருக்க முடியும், அல்லது ஒரே மேற்பரப்பு அமைப்பை கொண்ட வாக்கியங்கள் எப்படி வெவ்வேறு பொருள்களைக் கொண்டிருக்க முடியும் என்பதை விளக்குவதற்கு இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

 தொடர்ந்து அடுத்த ஆண்டில் இவர் வெளியிட்ட கார்த்தீஸிய மொழியியல் எனும் நூல், சாம்ஸ்கியக் கோட்பாடுகளின் தத்துவார்த்த வேர்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவருடைய மொழியியல் கோட்பாடுகளுக்கு ஒரு பரந்த அறிவார்ந்த பின்னணியை இந்நூல் வழங்குகிறது. இந்த நூலில், அவர் தனது கருத்துக்களை ரெனே தேகார்த் போன்ற பகுத்தறிவுவாத சிந்தனையாளர்களுடன் இணைக்கிறார். உள்ளார்ந்த மொழித் திறன் எனும் கருத்து வரலாற்றுக்கு முந்தையது என்று அவர் வாதிடுகிறார். ஒரு மொழியின் 'ஆழமான' மற்றும் 'மேற்பரப்பு' அமைப்பு போன்ற பல கருத்துக்கள் 17 ஆம் நூற்றாண்டின் பகுத்தறிவுவாத தத்துவவாதிகளின் படைப்புகளில் சில வடிவங்களில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். கார்த்தீஸிய மொழியியலானது மனத்தை ஒரு சிந்தனைப் பொருளாகக் கருதுகிறது. இது மொழியின் உலகளாவிய கொள்கைகளை நாடுகிறது. மொழியியல் படைப்பாற்றலிலும், வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை எல்லையற்ற முறையில் பயன்படுத்துவதிலும், தனித்துவமான திறன் கொண்டவன் மானுடன் என்று இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

 இதற்கப்புறம் முப்பதாண்டுகள் கழித்து சாம்ஸ்கி வெளியிட்ட அதிசிக்கன நிரல் (The Minimalist Program) எனும் நூல் சாம்ஸ்கியின் இதுவரையிலான கோட்பாடுகளை" சீராக்கி, மிகவும் எளிமையானதாக வழங்க முனைகிறது. உருமாற்ற உருவாக் க இலக் கணத்தின் கோட்பாடுகளை மேலும் நேர்த்தியானதாகவும், திறமையானதாகவும் மாற்ற சாம்ஸ்கி இதில் முயன்றிருக்கிறார். அதிசிக்கன நிரல் என்பது, மிக அடிப்படையான மற்றும் அடிப்படை கொள்கைகளை மட்டும் நம்பி மொழியை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறைந்தபட்ச முயற்சியில், ஒலியையும் பொருளையும் இணைக்கும் வகையில், மனித மொழித் திறன் ஒரு சரியான அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சாம்ஸ்கி இதில் முன்மொழிகிறார். இந்த அணுகுமுறையானது மொழியியலில் நிகழும் சமகால ஆய்வுகளின் மீது தொடர்ந்த தாக்கம் செலுத்தி வருகிறது.

 இந்த நூல்களோடு மட்டுமின்றி, அவர் எழுதியிருக்கும் எண்ணற்ற கட்டுரைகளும் விரிவுரைகளுமாக இணைந்து மொழியியலில் அவரது பங்களிப்புக்கு அடித்தளம் இட்டிருக்கின்றன. எண்ணற்ற விவாதங்களைத் தூண்டி, மொழியியலில் மட்டுமின்றி அறிவாற்றல் அறிவியல், தத்துவம் மற்றும் உளவியல் ஆகிய துறைகளிலும் இவை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

 அனைத்து மனித மொழிகளுக்கும் அடிப்படையாக ஒரு 'உலகளாவிய இலக்கணம்' இருக்கிறது என்றும், குழந்தைகள் இந்த கோட்பாடுகளுடன் பிறக்கிறார்கள் என்றும் சாம்ஸ்கி அனுமானித்தார். ஒரு குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் கேட்கும் மொழித் தரவு மிகவும் குறைவானது, குறைபாடுள்ளது, முழுமையற்றது. ஆனால், அந்தக் குழந்தை எந்தவிதமான இலக்கணப் பிழைகளும் இல்லாமல், சிக்கலான வாக்கியங்களை உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறது. குழந்தை கேட்காத, அதற்கு அறிமுகமில்லாத வாக்கிய அமைப்புகளையும் அது உருவாக்குகிறது. இதற்கு வெளிப்புறத் தூண்டுதல்கள் இருந்தால் மட்டும் போதாது. மனித மூளையில் மொழி கற்பதற்கான உள்ளார்ந்த, பிறப்பிலேயே அமைந்த ஒரு அமைப்பு (innate mechanism) இருக்க வேண்டும் என்று சாம்ஸ்கி கருதினார். ஸ்கின்னரின் 'பேச்சு நடத்தை' (Verbal Behavior) என்ற நூலை விமர்சித்து தான் முன்வைத்த கருத்துகளை 'தூண்டுதலின் வறுமை' (Poverty of the Stimulus) என்று அவர் அழைத்தார். இந்தக் கருத்தாக்கம், மொழியியல் மற்றும் அறிவாற்றல் அறிவியல் துறைகளில் பெரும் விவாதங்களை உருவாக்கியது.

 குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், அவர்களின் சமூகச் சூழல் மற்றும் உயிரியல் காரணிகள் ஆகிய இரண்டையும் ஆராயச் சாம்ஸ்கியின் கோட்பாடுகள் உதவின. ஒரு குழந்தை, மொழிக்கு உள்ளாகும் சூழல் குறைவாக இருந்தாலும், அது மொழியை மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறது எனும் செயல், மொழி ஒரு உள்ளார்ந்த திறன் என்பதற்கான சான்றாகப் பார்க்கப்பட்டது. மேலும் இலக்கணம் என்பது தனித்துவமான அமைப்பாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட, அர்த்தமற்றதுதான் என்ற போதிலும், இலக்கண ரீதியாகப் பிழையற்ற வாக்கியமொன்றை அவர் கட்டமைத்தார். அது மிகவும் பிரபலமான ஒன்று: நிறமற்ற பசுங்கருத்துகள் உக்கிரமாய் உறங்குகின்றன (Colorless green ideas sleep furiously) என்பதே அது.

 பல மொழியியல் அறிஞர்கள், சாம்ஸ்கியின் 'உலகளாவிய இலக்கணம்' (Universal Grammar) என்ற கருத்தை ஏற்றுக் கொண்டனர். சாம்ஸ்கியின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மொழி மற்றும் மனோதத்துவம், மூளை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட கென் ராம்ஷோ க்ரிஸ்ட்டன்சன், இரண்டாம் மொழி கற்றல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த லிடியா வைட், மொழி கற்றல் என்பது இயல்பானது என்று இயம்பும் கோட்பாட்டை விளக்கிய வி. குக் மற்றும் எம். நியூசன், சாம்ஸ்கியின் கோட்பாட்டை ஆதரித்து, இரண்டாம் மொழி கற்றலில் மொழியியல் கோட்பாடுகளை ஆய்வு செய்த ஸுசன் ஃபிளின்ன் மற்றும் வேன் ஓ'நீல் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 எந்த மொழியாக இருந்தாலும் ஒரு குழந்தை அதை விரைவாகக் கற்றுக்கொள்வதற்கான காரணம், இந்த உள்ளார்ந்த இலக்கண விதிகள்தான் என்று அவர்கள் கருதினர். இது உலக மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் புரிந்துகொள்ள உதவியது. உலக மொழிகளில் காணப்படும் சில பொதுவான இலக்கண விதிகளும், அமைப்பு முறைகளும் இந்தக் கருத்தை வலுப்படுத்துவதாகப் பார்க்கப்பட்டன.

சாம்ஸ்கியின் கருத்துக்கள், மொழி எப்படித் தோன்றியது, அது மனித மூளையின் வளர்ச்சிடேன் எப்படி இணைந்து பரிணாமம் அடைந்தது என்பதைப் பற்றி அறிவியலாளர்களை ஆராயத் தூண்டின. மொழி ஓர் உயிரியல் அமைப்பு என்றால், அது மனிதர்களின் மூளையில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நரம்பியல், மரபியல் துறைகள் மானிடவியலுடன் இணைந்தன. பாரம்பரிய மானிடவியலில், மொழிகள் தனித்தனி கலாசோரங்களின் பிரதிபலிப்பாகக் கருதப்பட்டன. ஆனால், சாம்ஸ்கியின் உலகளாவிய இலக்கணக் கோட்பாடு , அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு அடிப்படை அமைப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டியது. இது, வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களிடையே கூட, அறிவாற்றல் மட்டத்தில் ஒற்றுமைகள் இருக்கக்கூடும் என்ற புதிய கண்ணோட்டத்தை உருவாக்கியது. இவ்வகை ஆய்வுகளை மேற்கொண்டவர்களுள், மூளை hierarchical constituents எனும் அமைப்பில் மொழியைப் புரிந்து கொள்கிறது எனக் கூறிய நரம்பியல் நிபுணர் டேவிட் போப்பல், சாம்ஸ்கியின் கோட்பாட்டை அறிவியல் மற்றும் மனோதத்துவ அடிப்படையில் விளக்கிய டெட் பிரிஸ்கோ, சாம்ஸ்கியின் கோட்பாட்டை வரலாற்று மற்றும் கலாசார சூழலில் ஆய்வு செய்த மானுடவியலாளர் க்ரிஸ் நைட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 ஆதி மனிதர்களின் பேச்சுவழக்கு அல்லது எழுத்து வடிவமற்ற மொழிகள் குறித்து சாம்ஸ்கி நேரடியாக விரிவாகப் பேசவில்லை. எழுத்து வடிவம் இல்லாதது என்பது ஒரு மொழி முழுமையற்றது என்பதற்கான அடையாளம் அல்ல. மனித மனதின் அடிப்படை மொழித் திறன், அனைத்து மொழிகளையும் (எழுத்து வடிவம் இல்லாத மொழிகளையும் சேர்த்து) உருவாக்குகிறது. இந்த மொழிகள், பேசும் மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடியவையாகவே இருக்கும். மனித இனத்தின் பரிணாமத்தில், ஒரே இரவில் ஒரு திடீர் மாற்றத்தின் மூலம் மொழி பேசும் திறன் தோன்றியிருக்கலாம் என்று சாம்ஸ்கி கருதினார். எனவே, எழுத்து வடிவமற்ற ஆதி மொழிகளும், இன்றைய சிக்கலான மொழிகளைப் போன்றே, முழுமையான உள்ளார்ந்த இலக்கண அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது அவரது கோட்பாட்டின் உள்ளார்ந்த கருத்தாக உள்ளது.

 ஸ்டீவன் பிங்க்கர் சாம்ஸ்கியின் கோட்பாடுகளின் ஒரு முக்கிய வாரிசு. இவர் சாம்ஸ்கியின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மொழியியலாளர் மற்றும் அறிவாற்றல் உளவியலாளர். பிங்க்கர் ஓர் அறிவாற்றல் உளவியலாளர் என்பதால், மொழி மற்றும் மனித மனம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை அவர் மிகவும் ஆழமாக ஆராய்கிறார். மொழியை அறிவாற்றல் அறிவியலின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கிறார். அதேசமயம், சாம்ஸ்கி மொழியை ஒரு தனிப்பட்ட, சுயமான அமைப்பாகக் கருதுகிறார். இவருடைய 'மொழி உள்ளுணர்வு' (Language Instinct) எனும் நூல் இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 பிங்க்கர் சாம்ஸ்கியின் அடிப்படைக் கருத்துகளை ஏற்றுக்கொண்டாலும், மொழி எப்படிப் பரிணாமம் அடைந்தது என்பதில் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார். மொழித்திறன் என்பது ஒரு பெரிய, திடீர் மாற்றத்தின் விளைவாக (catastrophic mutation) மனித இனத்தில் தோன்றியிருக்கலாம் என்று சாம்ஸ்கி கருதுகிறார். மொழி மிகவும் சிக்கலான ஒரு அமைப்பு என்பதால், அது படிப்படியாக, சிறிய மாற்றங்கள் மூலம் பரிணாமம் அடைந்திருக்காது என்பது அவரது அனுமானம். பிங்க்கர் இதற்கு உடன்படவில்லை. மொழித்திறன் என்பது படிப்படியாக, இயல்பான தேர்வின் மூலமே பரிணாமம் அடைந்திருக்கக் கூடும் என்று அவர் வாதிடுகிறார். மனித மூளையின் பிற செயல்பாடுகளைப் போலவே மொழியும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்பது பிங்க்கரின் நிலைப்பாடு.

 சமீபத்திய ஆண்டுகளில், நரம்பியல் அறிவியலாளர்கள் மற்றும் மரபியலாளர்கள் நடத்திய ஆய்வுகள், மொழியியல் திறன்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மரபணுக்களுடன் தொடர்புடையவை என்பதைக் கண்டறிந்துள்ளன. இந்த ஆய்வுகள் சாம்ஸ்கியின் 'மொழி ஒரு உயிரியல் அமைப்பு' என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாகப் பார்க்கப்படுகின்றன. நரம்பியல் அறிவியலில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மொழிக்கு என மூளையில் சில குறிப்பிட்ட பகுதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டின. இதுவும், மொழி ஒரு உயிரியல் சார்ந்த செயல்பாடு என்ற சாம்ஸ்கியின் கருத்தை ஆதரிப்பதாகவே அமைந்தது.

 உதாரணத்துக்கு, Broca’s Area எனும் முன்பக்க மூளைப் பகுதியானது சொற்கள் உருவாக்கம், இலக்கண அமைப்பு ஆகியவற்றுக்கானது என்றும் Wernicke’s Area எனப்படும் இடப்பக்க மூளைப் பகுதியே மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் பெற்றது என்றும், குதிரை லாடம் போன்ற வடிவில், மூளையின் இடப்பக்கப் பின்புறத்தில் இருக்கும் Angular Gyrus எனும் பகுதி, எழுத்து மொழி மற்றும் சிந்தனைக் கருத்துகளை அலசும் பகுதியென்றும், Auditory Cortex எனும் பகுதி ஒலியைப் புரிந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் கொண்டது என்றும், Motor Cortex எனும் மூளையின் முன்புறப் பகுதி, பேச்சு தொடர்பான தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி எனவும் நரம்பியல் ஆய்வுகள் கூறுகின்றன.

 அதே போன்று, FOXP2 எனும் மரபணு மொழி வளர்ச்சி மற்றும் பேச்சு இயக்கம் ஆகியவற்றுக்கான காரணி எனவும் SRPX2 எனும் மரபணு, பேச்சு சிக்கல்களுக்கான காரணி எனவும், CNTNAP2 எனும் மரபணுவே ஆட்டிசம் மற்றும் மொழிச் சிக்கல்களுக்கான காரணி எனவும், ASPM & Microcephalin எனும் மரபணுக்கள் மொழியின் இசைத் தன்மை மற்றும் மூளை வளர்ச்சி தொடர்புடையவை என்றும், சிவிமிறி மற்றும் ATP2C2 மரபணுக்கள் ஒலியியல் நினைவாற்றலோடு (phonological memory) தொடர்புடையவை எனவும், இவையே மொழி கற்றல் திறன்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் இந்நாளைய மரபணுவியல் ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.

 சாம்ஸ்கியின் கருத்துகளை ஏற்காதோரும் உண்டு. 'தூண்டுதலின் வறுமை' என்ற வாதம், குழந்தைகளுக்குக் கிடைக்கும் மொழித் தரவு மிகவும் குறைவு என்று கூறுகிறது. ஆனால், இந்தக் கருத்தை ஆதரிக்கதத்தக்க தரவுகள் போதிய அளவில் இல்லை என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு குழந்தை கேட்கும் மொழித் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், இந்த முடிவுக்கு வர முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். குழந்தை முதலில் சிந்திக்க கற்றுக்கொள்கிறது. 'மொழி அதற்கப்புறமாகத்தான் வருகிறது. மொழி என்பது அறிவாற்றலின் ஒரு வெளிப்பாடு,' என்று வாதிட்ட ழான் பியாஷி (Jean Piaget), மற்றவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு, உரையாடல்களில் பங்கு கொண்டு, தனக்கான மொழியைக் குழந்தை கட்டமைக்கிறது. உலகளாவிய இலக்கணம் இன்றியே இச்செயல் நிகழ்கிறது என்று எடுத்துக்காட்டிய மைக்கேல் டொமசெல்லோ (Michael Tomasello), "பாடுகிறேன்" என்ற சொல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் படுத்தப்படும்போதுதான் அதன் வடிவம், இலக்கணம் ஆகியவை உருவாகின்றன. இயற்கையான வார்ப்புருவால் அல்ல என்று வாதிட்ட ழான் பைபீ (Joan Bybee), பரிணாம அடிப்படையில் மொழி திடீரென உருவாக சாத்தியமில்லை. மொழி படிப்படியாகவே வளர்ச்சி கண்டிருக்க வேண்டும் என்று கருதிய ஃப்ரெட்ரிக் கூலிட்ஜ் (Frederick L. Coolidge) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 சாம்ஸ்கியின் கோட்பாடுகள் மொழியின் அமைப்பிற்கு (structure) அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், ஆனால் மொழி எவ்வாறு சமூகத்தில் பயன்படுத்தப்படுகிறது (social use) என்பதைக் கவனிக்கத் தவறியதாகவும் சில அறிஞர்கள் வாதிட்டனர். மனிதர்கள் மொழியை வெறும் இலக்கண விதிகளின்படி மட்டுமே பயன்படுத்துவதில்லை. மாறாக சூழ்நிலை, பண்பாடு மற்றும் சமூக உறவுகளின் அடிப்படையிலும் மொழி புழங்குகிறது என்பது அவர்களின் வாதம். ஒரு குழந்தை, தனது பெற்றோருடனும், சுற்றியுள்ள மக்களுடனும் கொள்ளும் ஊடாடல்கள் (interactions) மூலம் மொழியைக் கற்றுக்கொள்கிறது. மொழி என்பது வெறும் இலக்கண அமைப்பு மட்டுமல்ல, சமூகப் பயன்பாடு மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது என்று அவர்கள் வாதிட்டனர்.

 மனிதர்கள் பொதுவாகவே சிக்கலான விதிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மொழி கற்பதற்கும் இந்தத் திறனே போதுமானது, அதற்குத் தனியான 'உலகளாவிய இலக்கணம்' தேவை இல்லை என்பது இவர்களின் வாதம். 'உலகளாவிய இலக்கணம்' என்ற கோட்பாடு ஒரு தர்க்கரீதியான வாதமாக இருந்தாலும், அதை நேரடியாக அறிவியல் ரீதியாக நிரூபிப்பது கடினம் எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஒரு குழந்தைக்கு இயல்பாக ஒரு குறிப்பிட்ட இலக்கண அமைப்பு உள்ளது என்பதை எப்படிப் பரிசோதனை மூலம் நிரூபிப்பது என்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. பரிணாம உளவியலாளர்கள் (Evolutionary psychologists) மொழியைக் கற்பது படிப்படியான ஒரு பரிணாம வளர்ச்சியின் விளைவு என்று கூறினர். எந்தவொரு தனிப்பட்ட உள்ளார்ந்த அமைப்பும் இல்லாமல், மூளையின் பொதுவான கற்றல் திறன்களே மொழி கற்பதற்குப் போதுமானது எனும் வாதத்துக்கு இவர்களுடைய ஆய்வுகள் தோதானவையாக இருந்தன.

 ஒரு மொழியில் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் உருவாகும்போது, தேவையற்ற அல்லது சிக்கலான படிநிலைகளைத் தவிர்த்து, மிகவும் சிக்கனமான வழியை மொழி தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்பதை சாம்ஸ்கியின் அதிசிக்கன நிரல் விளக்குகிறது. உதாரணமாக, ஒரு வாக்கியம் எப்படி உருவாகிறது என்பதை விளக்குவதற்குப் பல வழிகள் இருக்கலாம். ஆனால், மொழி அமைப்பு மிகவும் எளிமையான, குறைந்தபட்ச முயற்சியில் வாக்கியத்தை உருவாக்கும் வழியையே தேர்ந்தெடுக்கும். இது சிக்கனக் கோட்பாடு (Principle of Economy) என்று குறிப்பிடப்படுகின்றது.

கவிதை மற்றும் மறைநூல்களின் ஈர்ப்புக்கு இந்தச் சிக்கனக் கோட்பாடு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். ஆனால், இது மட்டுமே முழுமையான காரணமாக இருக்க இயலாது. ஒரு கவிஞர், சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி, ஆழமான உணர்வுகளையும், சிக்கலான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். உதாரணமாக, "மழை" என்ற ஒரு சொல்லுக்கு, மழையின் சப்தம், மண் வாசனை, மனதின் அமைதி எனப் பல அர்த்தங்களை ஒரு கவிஞரால் உணர்த்த முடியும். இது சாம்ஸ்கியின் சிக்கனக் கோட்பாட்டைப் போன்றது. அதாவது, அதிகபட்ச பொருள் மற்றும் உணர்வுகளைக் குறைந்தபட்ச வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இந்தச் செயல், மனதிற்கு ஒருவித ஈர்ப்பைத் தருகிறது.

மறைநூல்கள் நேரடியாக ஒரு கருத்தை விளக்காமல், குறியீடுகள் மற்றும் உருவகங்கள் மூலம் ஆழமான தத்துவங்களை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, "ஒளி" என்ற சொல் ஞானத்தையும், "இருள்" அறியாமையையும் குறிக்கலாம். இவ்வாறு, சில அடிப்படை வார்த்தைகளைக்கொண்டு, பெரும் தத்துவங்களை உருவாக்கும் இந்த முறை, வாசிப்பவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. இதுவும் ஒருவகையான சிக்கன அணுகுமுறைதான்.

 ஆனால், கவிதையின் வடிவம், யாப்பு, சந்தம், உவமைகள் மற்றும் உருவகங்கள் போன்ற படைப்பு அம்சங்கள் கவிதையை ஈர்க்கின்றன. இவை சாம்ஸ்கியின் இலக்கண விதிகளைத் தாண்டி, மனிதனின் கலை உணர்வைக் குறிக்கின்றன. மறைநூல்களின் ஈர்ப்புக்கு முதன்மையான காரணம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை சார்ந்த பின்னணிகள். மக்கள் அந்த நூல்களை வெறும் இலக்கியமாகப் பார்ப்பதில்லை; மாறாக, தங்கள் வாழ்வின் வழிகாட்டியாகவும், புனிதமான பொருளாகவும் கருதுகின்றனர். ஒரே வார்த்தைக்கு வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கும். Polysemy என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்தப் பல்திறப்பட்ட பொருள் கவிதைகளிலும், மறைநூல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வாசிப்பவருக்குப் பலவிதமான விளக்கங்களுக்கு இடமளிக்கிறது. இது மொழியின் சிக்கனத் தன்மையையும் தாண்டி, அதன் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுகிறது. எனவே, மொழியின் உள்ளார்ந்த சிக்கனத்தன்மையானது, கவிதை மற்றும் மறைநூல்களின் ஈர்ப்பிற்கு ஒரு துணைக்காரணியாக இருக்கலாம். ஆனால், கலை, பண்பாடு, மற்றும் நம்பிக்கை சார்ந்த காரணிகளே அவற்றின் முதன்மையான ஈர்ப்பு மையங்களாக இருக்கின்றன.

 ஒரு மொழிபெயர்ப்பாளனாக, சாம்ஸ்கியின் கோட்பாடு மொழிபெயர்ப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பது என்னுடைய விசாரணையாக இருந்தது. சாம்ஸ்கியின் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இரண்டு அடுக்குகள் உள்ளன. முதலாவது, ஆழமான அமைப்பு (Deep Structure). இது ஒரு வாக்கியத்தின் அடிப்படையான, தர்க்கரீதியான பொருளைக் குறிக்கிறது. இது உலகளாவிய இலக்கண விதிகளால் ஆளப்படுவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாக இருக்கும் என்று சாம்ஸ்கி கருதினார். இரண்டாவதாக, மேற்பரப்பு அமைப்பு (Surface Structure). இது நாம் உண்மையில் பேசும் அல்லது எழுதும் வாக்கியத்தின் வடிவம். இது ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமானது. மொழிபெயர்ப்பு என்பது இந்த இரு அடுக்குகளையும் பயன்படுத்திச் செயல்படுகிறது என்பதுதான் சாம்ஸ்கிய கோட்பாட்டின் தாக்கம்.

 அதாவது, ஒரு வாக்கியத்தை மொழிபெயர்க்கும்போது, முதலில், மூல மொழியில் உள்ள வாக்கியத்தின் மேற்பரப்பு அமைப்பிலிருந்து, அதன் ஆழமான அமைப்பு அல்லது அடிப்படைப் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அந்த அடிப்படைப் பொருளை, இலக்கு மொழியின் மேற்பரப்பு அமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

உதாரணமாக, John is easy to please (ஜானை மகிழ்விப்பது எளிது) மற்றும் John is eager to please (ஜான் மகிழ்விக்க ஆர்வமாக இருக்கிறான்) ஆகிய இரு ஆங்கில வாக்கியங்களின் மேற்பரப்பு அமைப்பு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் ஆழமான அமைப்பு வேறுபட்டது. John is easy to please எனும் வாக்கியத்தில், மகிழ்விக்கப்படும் பொருள் ஜான் (ஆழமான அமைப்பு வேறுபட்டது). John is eager to please எனும்போது மகிழ்விக்கும் செயல் ஜானால் மேற்கொள்ளப்படுகிறது (ஆழமான அமைப்பு வேறுபட்டது). ஒரு மொழிபெயர்ப்பாளர் இந்த ஆழமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் மட்டுமே சரியான மொழிபெயர்ப்பைச் செய்ய முடியும்.

 இயந்திர மொழிபெயர்ப்புக் குறித்த சாம்ஸ்கியின் பார்வையும் கவனிக்கத்தக்கது. ஆரம்பகாலத்தில், இயந்திர மொழிபெயர்ப்பு நிரல்களின் சாத்தியக்கூறுகள் குறித்து சாம்ஸ்கி சந்தேகம் கொண்டிருந்தார். மொழி வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல, அது ஒரு பண்பாடு, வரலாறு மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்பு என்று அவரும் கருதினார். கணினிகளால் இந்த ஆழமான கலாசார மற்றும் பொருள் சார்ந்த சிக்கல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்றே அவர் நம்பினார். ஆனால், அவரது கோட்பாடுகள் கணினி மொழியியலுக்கு (Computational Linguistics) ஒரு புதிய வழிமுறையை வழங்கின.

 சாம்ஸ்கியின் கோட்பாடுகள் ஒரு மொழியின் வெளிப்படையான வடிவத்தை மட்டும் பார்க்காமல், அதன் உள்ளார்ந்த தர்க்கத்தையும், பொருளையும் புரிந்து கொண்டு மொழிபெயர்க்க உதவுவதால் அவை கணினி மொழியியலுக்கு ஒரு புரட்சிகரமான வழியைக் காட்டின. அவர் நேரடியாகக் கணினிகளைப் பயன்படுத்தி மொழிப் பகுப்பாய்வு செய்யவில்லை என்றாலும், அவரது சிந்தனைகள் கணினி மொழியியலின் அடித்தளமாக அமைந்தன.

 சாம்ஸ்கி தனது கோட்பாடுகளின் மூலம் இரண்டு முக்கியக் கருத்துகளை முன்வைத்தார். ஒரு கணினி புரிந்து கொள்ளும் வகையில், துல்லியமான கணித விதிகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியின் இலக்கண விதிகளை விளக்க முடியும் என்று சாம்ஸ்கியின் உருமாற்ற- உருவாக்க இலக்கணக் கோட்பாடு காட்டியது. இதுவரையிலும், மொழியியலாளர்கள் மொழியை ஒரு கலை அல்லது சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகி வந்தனர். சாம்ஸ்கி, மொழியின் அமைப்பை ஒரு கணிதப் பிரச்சினையாக அணுகுவதற்கான வழியைக் காட்டினார்.

சாம்ஸ்கி, மொழியின் அமைப்பைப் பல்வேறு படிநிலைகளாகப் பிரித்தார். இது, கணினிகள் ஒரு மொழியின் சிக்கலான வாக்கியங்களைச் சிறிய, எளிமையான பகுதிகளாகப் பிரித்து ஆராய உதவியது. இந்த அணுகுமுறை, இயல் மொழிப் பகுப்பாய்வு (Natural Language Processing & NLP) என்று அழைக்கப்படும் துறைக்கு அடிப்படையாக அமைந்தது.

 ஒரு வாக்கியத்தின் இலக்கண அமைப்பை ஆராய்ந்து, அதன் உள் கட்டமைப்பைப் பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு சொற்றொடர் பகுப்பாய்வு (Parsing) என்று பெயர். ஒரு வாக்கியத்தின் சொற்கள் எப்படி ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்ள சாம்ஸ்கியின் இலக்கண விதிகள் கணினிக்கு உதவின. உதாரணமாக, ஒரு வாக்கியத்தில் எது பெயர்ச்சொல், எது வினைச்சொல், எது செயப்படுபொருள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய இந்தப் பகுப்பாய்வு பயன்படுகிறது.

 கணினி மொழியியலில், நாம் பயன்படுத்தும் எழுத்துப் பிழை திருத்திகள், இலக்கணப் பிழை திருத்திகள் போன்ற மென்பொருள்கள், சாம்ஸ்கியின் முறையான இலக்கணக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவைதான். ஒரு வாக்கியம் இலக்கணப்படி சரியானதா என்பதை இந்த விதிகள் கொண்டு இவை சரிபார்க்கின்றன.

ஆரம்பத்தில், இயந்திர மொழிபெயர்ப்பின் சாத்தியக்கூறுகள் குறித்து சாம்ஸ்கி சந்தேகம் கொண்டிருந்தாலும், அவரது ஆழமான அமைப்பு (Deep Structure) மற்றும் மேற்பரப்பு அமைப்பு (Surface Structure) ஆகிய கோட்பாடுகள், இயந்திர மொழிபெயர்ப்புக்கான ஒரு புதிய அணுகுமுறையை வழங்கின. கணினிகள் ஒரு மூல மொழியின் ஆழமான அமைப்பைப் புரிந்து கொண்டு, அதை இலக்கு மொழியின் மேற்பரப்பு அமைப்பாக மாற்றுவதற்கான வழிமுறைகள் சாம்ஸ்கியின் சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை. கணினி மொழியியல் துறையில் இன்றும் சாம்ஸ்கியின் சிந்தனைகள் ஒரு முக்கியமான அடித்தளமாகவே கருதப்படுகின்றன.

நிறைவாக, நோம் சாம்ஸ்கியின் முக்கியத்துவம் இரு வேறு நிலைகளில் உணரப்படுகிறது. ஒரு புறத்தில், மொழி மற்றும் உளவியல் ஆய்வு அணுகுமுறைகளில் பெரும் மாற்றத்தைக் கிளர்த்திய அறிவியலாலராக அவர் திகழ்கிறார். இன்னொருபுறத்தில், நியாயமான, சுதந்திரமான உலகிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அறிஞராகவும், அதிகாரத்தின் மீதான அஞ்சாத மற்றும் அசைக்க முடியாத விமர்சகராகவும் இருக்கிறார். அவரது சிந்தனைகள் இன்றும் பலதுறைகளின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வித்திடுவனவாகவும், எண்ணற்ற விவாதங்களுக்கான அடிப்படைகளாகவும் விளங்குகின்றன. இவையே அவரை நமது காலத்தின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக ஆக்குகின்றன.

- எத்திராஜ் அகிலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.