கண.குறிஞ்சி: உங்களது தாய்வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் மற்றும் உங்கள் தந்தையும் திராவிட இயக்க எழுத்தாளருமான எம். எஸ். சண்முகம் ஆகியோர் குறித்த உங்களது நினைவுகளைப் பதிவு செய்யவும்.

தமிழ்ச்செல்வன்: தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களை நான் பார்த்ததில்லை. நான் பிறந்தது 1954 இல். அவர் மறைந்தது 1952 இல். அம்மா வீட்டில் சுழன்றுகொண்டிருந்த அவரைப்பற்றிய நினைவலைகளின் மூலமாகவும், அவர் பயன்படுத்திவிட்டுச் சென்ற புத்தகங்கள், ரேடியோ அறை, அவர் அணிந்திருந்த விதவிதமான கோட்டுகள், அவர் விட்டுச்சென்ற டைரிகள் இவற்றின் வழியாகவே அவரை நான் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். பிற்காலத்தில் என் கடைசித் தம்பி முருகபூபதி அவருடைய டைரிகளையெல்லாம் தேடித் திரட்டி “பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்” என்கிற நூலைத் தொகுத்து வெளியிட்டார். தாத்தாவின் படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடிச் சேகரித்ததும் தம்பிதான். தாத்தாவின் உண்மையான வாரிசு அவன்தான் என்று சொல்லவேண்டும்.

s tamilselvan 324தாத்தாவின் மூத்த மகளான எங்கள் அம்மா சரஸ்வதி, தாத்தாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். பாஸ்கரதாசின் இணையர், எங்கள் அம்மாச்சி ஒண்டியம்மாள் என் திருமணம் வரைக்கும் எங்களோடு வாழ்ந்தார். அவரும் பகிர்ந்து கொள்வார். ஒரு பெரிய கலைவாழ்வை அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை இவற்றின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலேயரை எதிர்த்துப் பாடல்கள் எழுதி, நாடகம் போட்டு 26 முறை கைதாகியிருக்கிறார். பிச்சைக்காரர்கள் தெருவில் பாடிச்செல்லும் பாடல்களாக அவரது பாடல்கள் புகழ்பெற்றிருந்ததால் “பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்” என்கிற அடைமொழி அவருக்கு உண்டு. அவருக்கு இரண்டு மனைவிகள். ஒன்று எங்கள் பாட்டி ஒண்டியம்மாள். இன்னொருவர் முஷ்டக்குறிச்சியில் வாழ்ந்து மறைந்த அமிர்தம் பாட்டி. அவர் வழியிலும் தாத்தாவுக்கு வாரிசுகள் உண்டு. அமிர்தம் பாட்டியின் உடன்பிறந்த சகோதரர்தான் “தினகரன்” பத்திரிகையை நடத்திய நாராயணசாமி. அவரும் காங்கிரஸ்காரர்தான். அலிப்பூர் சிறையில் நேதாஜியோடு சிறைவாசம் அனுபவித்தவர். முத்துராமலிங்கத்தேவருக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிவந்ததால் கொலை செய்யப்பட்டவர்.

தாத்தாவுக்குக் கவிதையில் கடிதங்கள் எழுதி அவர் மனதில் இடம்பிடித்து அவர் மகளைப் பெண்கேட்டவர் எங்கள் அப்பா எம். எஸ். சண்முகம். பள்ளிப்பருவத்தில் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திராவிட இயக்க இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கியவர். கதை, கவிதை, நாடகம் என இளம்பருவத்தில் எழுத்தில் தீவிரமாக இயங்கிய அப்பா பின்னர் குடும்ப வாழ்வில் நீண்டகாலம் தன்னைத் தொலைத்துவிட்டு மீண்டும் 60 வயதுக்குப் பிறகு எழுத ஆரம்பித்தார். இரண்டு நாவல்கள், இரு சிறுகதைத் தொகுப்புகள், சில கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என சுமார் 15 நூல்களைக் கொண்டுவந்துள்ளார். பொருட்படுத்தி வாசிக்கத்தக்க படைப்புகள்தாம் அவை. 96 வயது வரை வாழ்ந்து 2025 இில்தான் காலமானார். கடைசி 8 ஆண்டுகளில் ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு புத்தகம் வெளியிட்டு விடுவார். நாங்கள் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து நவம்பர் 13 அன்று அவரது பிறந்த நாளை நூல் வெளியீட்டுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

மார்க்சியத்தின் மீதான ஈர்ப்பு உங்களுக்கு எப்பொழுது / எப்படி ஏற்பட்டது?

நான் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சில நக்சல்பாரி இயக்கத் தோழர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக மார்க்சியத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் இராணுவத்தை விட்டு ஊர் திரும்பி அஞ்சல் துறையில் சேர்ந்து, தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியபோது அப்பிடிப்பு என் வாழ்க்கைக் கண்ணோட்டமாக மாறியது.

இராணுவத்தில் பணியாற்றிய நீங்கள் இடையில் அதிலிருந்து வெளியேறக் காரணம் என்ன?

மார்க்சியக் கருத்துகள் எனக்குள் நுழைந்ததுதான் காரணம். யாருடைய சொத்துகளைப் பாதுகாப்பதற்காக நாம் இந்தப் பனிமலையில் நிற்கிறோம்? நம்முடைய மக்களுக்குத்தான் சொத்தே இல்லியே? அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டாலே தீ வைத்துக் கொளுத்துகிறார்களே. யாருடைய சொத்தையோ பாதுகாப்பதற்காக நாம் ஏன் இங்கே கிடந்து சாக வேண்டும் என்கிற கேள்வி மனதில் எழுந்தபோதே மூட்டையைக் கட்ட ஆரம்பித்து விட்டேன். ஆரம்ப சூரத்தனமாகச் சில சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பிடிபட்டு இராணுவத்தில் நீடிப்பதும் சிக்கலானபோது ஒரு தமிழ் அதிகாரியின் உதவியால் சேதாரமில்லாமல் இராணுவத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டேன்.

“அறிவொளிக் கலாச்சாரம்” என அடிக்கடி பேசுகிறீர்கள். உங்களது பயணத்தையே அறிவொளி இயக்கத்திற்கு முன் / அறிவொளி இயக்கத்திற்குப் பின் என்பதாகப் பிரிக்கலாம் எனவும் குறிப்பிடுகிறீர்கள். எனவே விரிவாக அது பற்றி விளக்கவும். கூடவே அறிவொளி இயக்கம் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் பதிவிடுக!

இந்தியப் பெருமுதலாளிகள் பன்னாட்டு நிதி அமைப்புகளிடமிருந்து தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றிட, தங்கள் நாடு வளமிக்க நாடாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தேவை எழுந்தது. வளர்ச்சியின் குறியீடுகளில் ஒன்று கல்வி. ஆகவே மத்திய அரசு தேசிய அளவில் எழுத்தறிவு இயக்கத்தை அறிவித்தது. ஒரு மாவட்டத்தை அடிப்படை அலகாகக்கொண்டு மாவட்ட அறிவொளி இயக்கம் முதலில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. மக்களுக்குக் கல்வி புகட்டுவது ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கை என்பதாகப் புரிந்து கொண்டு கேரள மார்க்சிஸ்ட்டுகள் முழுமையாக அந்த அறிவொளிப் பணிகளில் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள். எர்ணாகுளம் இந்தியாவின் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியிலும் தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களிலும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழக மார்க்சிஸ்ட்டுகள் உடனடியாக அதில் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம்.

நேரடியாகக் கிராமப்புற எளிய மக்களைத் தொட்டுப் பேசும் இயக்கமாக அது மலர்ந்தது. அதிகபட்சம் தெருமுனைக்கூட்டம் வரை சென்றிருந்த நாங்கள் அறிவொளி இயக்கத்தில்தான் உழைப்பாளி மக்களின் மூச்சுக்காற்று எங்கள் மீது படும் அளவுக்கு நெருக்கத்தில் நின்றோம். குறிப்பாகப் பெண்கள் இலட்சம் இலட்சமாக அறிவொளி வகுப்புகளில் பங்கேற்று எங்களோடு பேசினார்கள். அவர்களின் மொழியை, கண்ணோட்டத்தை, கருத்துகளை நேரடியாகக் கேட்கும் மாபெரும் அனுபவம் எங்களுக்குக் கிட்டியது. அதுவரை நாங்கள் புரிந்துகொண்டிருந்த இந்தியா இந்தியாவே அல்ல என்கிற தன்னுணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.

மக்கள் காட்சி ரூபமாகச் சிந்திக்கிறார்கள். முற்போக்கு இயக்கங்கள் எல்லாமே கருத்துரீதியாக மக்களிடம் பேசிச்சொண்டிருக்கிறோம். ஆகவே நாம் மக்களிடம் போய் சேரவே இல்லை என்பதை மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். இலக்கியம் பற்றிய என்னுடைய பார்வை மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய என் அடிப்படைக் கண்ணோட்டமே மாறியது. மக்களுடன் மாபெரும் உரையாடலைத் தொடங்க வேண்டியுள்ளது. எழுத்தும் கலையும் எல்லாம் அதற்காகவே வேலை செய்ய வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது.

அறிவொளி இயக்க அனுபவங்களையும் படிப்பினைகளையும் எந்த அரசியல் இயக்கமும் உள்வாங்கிக்கொள்ளவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.

உங்களது சிறுகதைகள், இயக்குநர் சசி அவர்களால் "பூ" எனும் பெயரில் திரைப்படமாக உருவானதன் பின்னணியையும், உங்களது திரை அனுபவத்தையும் விளக்கவும்.

என்னுடைய வெயிலோடு போய், அசோக வனங்கள் ஆகிய இரு சிறுகதைகளையும் இணைத்து பூ திரைப்படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் சசி எழுதினார். அக்கதைகள் மீது அவர் கொண்டிருந்த உளப்பூர்வமான ஈடுபாடு என்னை வியப்பிலாழ்த்தியது. அவர் கேட்டதும் சரி என்று சொன்னேன். கதையைச் சிதைக்காமல், நான் சொன்ன சில அடிப்படையான மாற்றங்களையும் சேர்த்துப் படமாக எடுத்தார். அது வெற்றிப்படமாகவும் அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அப்படத்துக்காக 2008 இல் தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது எனக்கு அன்றைய முதல்வர் திரு. கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. மற்றபடி அப்படத்தில் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஒரே ஒருநாள் படப்பிடிப்பைப் பார்க்கச் சென்றேன். எல்லாம் சசியின் வேலைதான்.

வ. உ. சி. அவர்கள் குறித்து இரண்டு நூல்கள் எழுதியுள்ளீர்கள். வ. உ. சி. அவர்களின் தொழிற்சங்க முயற்சிகள் குறித்த உங்களது கண்ணோட்டம் என்ன?

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்துக்கே முன்னோடி வ. உ. சி. தான். 1908 தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் அவர் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. கூலி உயர்வு, வேலை நேரம் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்ட வெற்றிகரமான போராட்டம் அது. ஆனால் அந்தப் பலன்களை அத்தொழிலாளிகள் அனுபவிக்கும் முன்பே வ. உ. சி. கைதாகியதால் தொழிலாளிகள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தார்கள். அது முற்றிலும் அரசியல் வேலைநிறுத்தமாகும். பெற்ற பலன்கள் அத்தனையும் பறிபோனது அந்த அரசியல் வேலைநிறுத்தத்தால்.

தொழிற்சங்கப் போராட்டத்தை தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மாற்றிய மாபெரும் திருப்புமுனையை வ. உ. சி. தான் ஏற்படுத்தினார். இன்றைக்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது. அடுத்தகட்டத் தலைமையை உருவாக்காமல் போனது அவ்வியக்கத்தின் பலவீனம்.

வ. உ. சி. போல ஒரு தலைவரை, தியாகசீலரை, தன்னலமற்ற போராளியை இந்திய வரலாற்றில் காண முடியாது. கப்பல், செக்கு என்கிற இரண்டு குறியீடுகளுக்குள் அவரை அடைக்க முடியாது. ஆ. இரா. வேங்கடாசலபதியின் வ. உ. சி. குறித்த நூல்களைத் தமிழ்ச் சமூகம் விரிவாக வாசிக்க வேண்டும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் நீங்கள் இணைந்த தருணம் மற்றும் அதில் உங்களது பணிகளைத் தொகுத்துக் கூற இயலுமா?

இராணுவத்தில் இருந்தபோதே விடியல், செம்மலர் போன்ற இதழ்களைச் சந்தா கட்டி வருவித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

1978 இல் ஊர் திரும்பி அஞ்சல் துறையில் கோவில்பட்டியில் பணிக்குச் சேர்கையில் அங்கே தொழிற்சங்க இயக்கம் துடிப்பாகத் தடதடத்துக் கொண்டிருந்தது. அதில் என்னை மனப்பூர்வமாகவும் முழுமையாகவும் இணைத்துக்கொண்டேன். அதன் வழியாக மார்க்சிஸ்ட் கட்சியுடன் முதலில் தொடர்பு ஏற்பட்டு அதன் பிறகு கட்சியின் வழிகாட்டலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைத்துக் கொண்டேன். விரைவில் நான் கோவில்பட்டி கிளைச் செயலாளராகவும் பின்னர் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது.

நெல்லை மாவட்டத்தில் பல சோதனை முயற்சிகளைச் செய்தோம். அதில் முக்கியமானது உலகத் திரைப்படங்களைத் தெருக்களில் திரையிடுவது. பெங்களூர் திரைப்பட ஆவணக்காப்பகத்திலிருந்து படப்பெட்டிகளைத் தருவித்து ஊர் ஊராகப் புரொஜெக்டரைத் தூக்கிக் கொண்டு போய் திரையிடுவோம். தோழர் நாறும்பூநாதன், கிருஷி போன்றவர்கள் இதில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தனர். அப்போது அமெரிக்க சோவியத் மோதல் முற்றி வந்த காலம். அணு ஆயுதங்களுக்கு எதிரான கண்காட்சி ஒன்றை நெல்லை மாவட்டக்குழு சார்பாகத் தயாரித்து மாவட்டம் மாவட்டமாகத் தூக்கிக்கொண்டு போய் வைத்துக் காட்சிப்படுத்தினோம். நான்கு நாள் திரைப்பட இரசனை முகாம் நடத்தினோம். சக்கரவர்த்தி, சிவக்குமார், கல்யாணராமன் உள்ளிட்ட சென்னை பிலிம் சொசைட்டி தோழர்களைக்கொண்டு திரை வகுப்புகள் நடத்தினோம். வீதி நாடகக்குழுக்களை உருவாக்கி மாவட்டம் முழுதும் நாடகங்கள் போட்டோம். காந்தி கிராமத்திலிருந்து நாடகப் பேராசிரியர் எஸ். பி. சீனிவாசன், அஸ்வகோஷ் போன்றவர்களை அழைத்து நாடகப் பயிலரங்குகள் நடத்தினோம்.

2005 ஆம் ஆண்டு மாநிலப் பொதுச்செயலாளராக என்னை இயக்கம் தேர்வு செய்தது. தமுஎகச ஒரு சனநாயக இயக்கம். கூட்டுத்தலைமையால் வழிநடத்தப்படும் இயக்கம். பொதுச்செயலாளர் என்கிற தனி மனிதருக்குப் புதிய திட்டங்களை முன்மொழியும் வாய்ப்பு இருக்கும். எடுத்து நடத்துவது ஒட்டுமொத்த இயக்கம்தான். பொதுச்செயலாளராகச் சிலவற்றை முன்வைக்க முடியும். அப்படி நான் முன்வைத்தவை எனச் சிலவற்றைச் சொல்லிக்கொள்ளலாம்:

(1) ஆறு ஆண்டுகளுக்கு மேல் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் பொறுப்பில் யாரும் நீடிக்கக்கூடாது என்கிற அமைப்பு விதி திருத்தம்.

(2) நாட்டுப்புற ஆய்வுகளின் மீது அமைப்பின் கவனத்தைக் குவித்தது.

(3) அம்பேத்கரை அறிவோம் என்கிற ஐந்துநாள் பயிலரங்கினை நெல்லையில் நடத்தியது. பெரியார் 125 விழாவை தமிழகமெங்கும் அமைப்பின் சார்பாகக் கொண்டாடியது.

(4) திரை இயக்கத்தை விடாப்பிடியாக அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்தது. அது இன்று திரைப்பள்ளி நடத்தும் இடத்துக்கு மேலும் சென்றுள்ளது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறித்த உங்களது மதிப்பீட்டை அறிய விழைகிறோம். பொதுவாகப் பாரதியைப் போல், பாரதிதாசனை இடதுசாரிகள் கொண்டாடவில்லை என்றொரு விமர்சனம் உள்ளது. அது குறித்த உங்களது நிலைப்பாடு?

மார்க்சிய இயக்கத்துக்கும் பெரியாருக்கும் இருந்த இடைவெளியிலிருந்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். பெரியார் சாகும்வரை கம்யூனிஸ்ட்டுகளை வன்முறையாளர்கள் என்றுதான் பார்த்தார். வெண்மணி குறித்த பெரியாரின் விடுதலை இதழ்க் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. ஆள்பவர்களின் வன்முறையால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் ஓர் இயக்கத்தை வன்முறைப்பாதையில் செல்பவர்கள் என்று பெரியார் பார்த்ததை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள்? பாரதிதாசன் முற்றிலும் பெரியார் வழியில் சென்றவர் என்பதால் ஓர் இடைவெளி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 1980 களிலிருந்து எங்கள் பார்வை மாறிவிட்டதே. பாரதி & பாரதிதாசன் & பட்டுக்கோட்டை ஆகிய முப்பெரும் கவிஞர்களை எங்கள் முன்னோடிகள் என்றே எங்கள் பதாகைகளில் பொறிக்க ஆரம்பித்து விட்டோமே? 2021 முதல் அம்மூவரோடு தமிழ் ஒளியையும் பாலசரஸ்வதியையும் சேர்த்து ஐம்பெரும் முன்னோடிகள் என்று அறிவித்துக்கொண்டு ஆடிவருகிறோம். இப்போது அந்த விமர்சனத்தை வைக்க முடியாது. பாரதிதாசன் நூற்றாண்டையும் பரவலாகக் கொண்டாடினோம்.

கவிஞர் தமிழ் ஒளியைத் தற்பொழுது கொண்டாட வேண்டியதன் தேவையை விவரிக்கவும்.

இந்துத்துவ அரசியல் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய நாட்களில்தான் தமிழ் ஒளி நமக்கு மிகவும் தேவைப்படுகிறார். பாரதிதாசனிடம் பாடம் கேட்டு வளர்ந்த அவர் பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். இறுதிவரை மார்க்சியப் பார்வையையே பற்றி நின்றவர். அவருடைய கவிதைகளும் கதைகளும் மட்டுமின்றி அவரது ஆய்வு நூல்கள் ஐந்துமே சமகால அரசியல் போராட்டத்தில் நமக்குக் கைவாளாகத் திகழும் சக்திமிக்கவை.

1948 இல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் பொதுச்செயலாளராக இயங்கியவர் என்கிற ஒன்றே போதாதா?

"பிற மணிக்கொடி எழுத்துக்காரர்களைப் போல உரத்த குரலைத் தவிர்த்து உள்ளடங்கிய மொழியில் அகத்தின் போக்கைக் கதையாக்கும் லட்சியம் அண்ணாவுக்கு இல்லை" என்பதான ஒரு மதிப்பீடும், "அண்ணாவின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுப் பிற இந்திய மொழிகளுக்குச் சென்றால் மிக முக்கியமான சமூக சீர்திருத்தக் கதைகளாக வரவேற்பு பெறும் எனத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூக வாழ்வின் கொந்தளிப்பான காலகட்டத்தின் பிரச்சினைகளை எந்தவித மூடாக்கும் இல்லாமல் பேசும் கதைகள் இவை" என்பதான ஒரு மதிப்பீடும் அண்ணாவைப் பற்றி உங்களது பார்வையில் காணக்கிடக்கிறது. இவற்றை முரணற்ற இரு பார்வைகளாக எடுத்துக்கொள்ளலாமா?

மணிக்கொடிக்காரர்களுக்கு இலட்சியம் கலையும், கலை நேர்த்தியும், கலை அமைதியும் மட்டும்தான். அதற்கு மேல் அவர்களுக்கு ஒரு இலட்சியமும் கிடையாது. ஆனால் அண்ணாவுக்கு சமூகமும் சமூக மாற்றமும் முற்போக்கான திசைவழியும் முக்கியம். அதற்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர். அப்படிப்பட்ட தலைவர் சிறுகதை எழுத வரும்போது கலை அமைதியை மட்டும் நோக்கமாகக் கொள்ள முடியாது. அது யாரை நோக்கி எப்படிச் சென்று சேர வேண்டும் என்பதே அவருக்கு முக்கியமாக இருந்திருக்கும். அது இயல்பானதே. என் பார்வையில் முரண் இல்லை.

கொங்கு மண்டலப் படைப்பாளிகளில் அதிகம் பேசப்படுபவரான பெரியசாமித் தூரன் கதைகள் பற்றித் "தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" நூலில் காணக் கிடைக்கவில்லை. அவரது பங்களிப்பு குறித்த உங்களது கண்ணோட்டம்?

படைப்பாளிகளின் ஒட்டுமொத்தக் கதைகளையும் வாசித்த பிறகுதான் அப்படைப்பாளிகள் பற்றி எழுதுவது என்கிற அடிப்படையை நான் வகுத்துக்கொண்டேன். பெ. தூரன் மட்டுமல்ல, இன்னும் பல படைப்பாளிகளின் எல்லாப் படைப்புகளையும் நான் வாசித்து முடிக்காத நிலையில் அவர்களைப்பற்றி எழுதுவதை அடுத்த தொகுதிக்காகத் தள்ளிவைத்துள்ளேன்.

"பிரச்சனைகளைப் பேசும்போது அதற்கான தீர்வையும் தேட வேண்டியது, ஒரு எழுத்தாளனுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பாயிடறதுன்னு நெனச்சேன். அந்த மாதிரியான என் கதைகள்ல அதற்கான தேடல் இருக்கும். வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீர்வு அந்தப் படைப்புக்குள்ள இருக்கும். தீர்வைப் பத்திப் பேசும்பொழுது அது பிரச்சாரமாகப் பார்க்கப்படுதுன்னு நெனைக்கறேன். என் கதைகளில் வெளிப்படையான பிரச்சாரத் தன்மை இருந்ததற்குக்காரணம், பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் பற்றிப் பேசியதுதான்" எனப் பா. செயப்பிரகாசம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதை அவரைப்பற்றிய உங்களது கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். இதே போல் உங்களது சிறுகதைகளும் பிரச்சாரத் தன்மை கொண்டதாக ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். இந்தச் சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது?

பா. செயப்பிரகாசத்தின் சில கதைகளில் காணப்படும் பிரச்சாரத் தொனி கூட என்னுடைய கதைகளில் கிடையாது. நான் எழுதி வெளியிட்டதே 32 கதைகள்தாம். அதில் எந்தக் கதை பிரச்சாரமாக உள்ளது என யாருமே இன்றுவரை குறிப்பிட்டுப் பேசவில்லை. சுந்தரராமசாமியே என் கதைகள் கலை அமைதி கொண்டவை என்றுதான் காலச்சுவடு இதழில் எழுதினார். என் கதைகளில் இதெல்லாம் பிரச்சாரம் என்று யாரேனும் வந்து சொல்லுங்களேன் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன். பொதுவாக இடதுசாரிகளின் படைப்புகளைப் பொருட்படுத்தி வாசிக்காமலேயே நாட்டாமைத் தீர்ப்புகளைத் தடாலடியாகச் சொல்வது நவீன இலக்கிய உலகில் க. நா. சு. காலந்தொட்டு தொடர்கின்ற ஒரு பாரம்பரியமாகும். உள்நோக்கம் கொண்ட இத்தகைய அவதூறுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

படைப்புகளில் பின்நவீனத்துவம் பற்றி இன்று அதிகம் பேசப்படுகிறது. அது குறித்த உங்கள் பார்வை என்ன?

பின்நவீனத்துவம் குறித்த உரையாடல்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் பேசி ஓய்ந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். 90களில் பேசினார்கள். சில சலசலப்புகள் தோன்றி அப்போதே மறைந்துவிட்டதாகவும் நினைக்கிறேன்.

காட்சி ஊடகங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் வணிகநோக்கமற்ற அச்சிதழ்களுக்கான தேவை உள்ளதா?

சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள்தாம் இலக்கிய உலகின் மனச்சாட்சியாக இயங்குபவை. தமிழில் அவை ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த இதழ்களுக்கிடையில் கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு தேவை நம் சமூகத்தில் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

தலித் அழகியலை நாமே உருவாக்க வேண்டும் எனவும், பச்சாதாபம் கோரும் தொனியைப் புறக்கணித்துத் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் குரலைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகிறீர்கள். இதன் தேவையைத் தெளிவுபடுத்தவும்.

நவீன இலக்கியத்தின் விதிகள் மேனாட்டாரால் உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தமிழுக்குப் பதிவிறக்கம் செய்தவர்கள் 1920 களில் வாசிப்பு வாய்ப்பைப் பெற்ற உயர்சாதியினர். அவர்களுக்கு வாழ்வியல் முக்கியமில்லை. கலையின் சாஸ்திரம் கெட்டுப்போகக்கூடாது என்பதுதான் முக்கியம். அவர்கள் உருவாக்கிய செவ்வியல் கலைகள், செவ்வியல் இலக்கிய சாஸ்திரங்கள் நம்முடைய கதைகளைச் சொல்ல உதவாது என்பது என் கருத்து. நமக்கான அழகியலை நாம் நமது நாட்டுப்புற இலக்கிய மரபிலிருந்து நாமே உருவாக்க வேண்டும். தலித் படைப்பாளிகளில் சிலரே அதை முயன்றும் பார்த்துள்ளனர். அத்திசையில் வீச்சாக வலுவாகக் காலெடுத்து வைப்போமே என்கிறேன் நான். ஒரு கட்டத்தில் பின்நவீனத்துவமே தலித் படைப்பாளிகளுக்கான பாதை எனத் தோழர் ராஜ்கௌதமன் குறிப்பிட்டதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். யதார்த்தவாதம் தனக்குப் போதுமானதாக இல்லை என அவர் உணர்ந்திருந்தார்.

தலித் மக்கள் எழுச்சி பெற்றுத் தங்களுக்கு உரிய இடத்தை உரிமையுடன் கேட்கின்ற காலம் இது. இலக்கியத்திலும் அது அத்தகைய அழுத்தமான தொனியில் பதிவாக வேண்டும். கெஞ்சும் காலம் மலையேறிவிட்டது.

தலித் எழுத்தாளர் என இன்று ஒரு படைப்பாளியை அடையாளப்படுத்த வேண்டுமா? பூமணி போன்றோர், கரிசல் எழுத்தாளர் என்றோ, தலித் எழுத்தாளர் என்றோ தன்னை அடையாளப்படுத்துவதைத் தான் விரும்பவில்லை எனவும், அதே சமயம் சாதியை மறைப்பதற்கான தேவை தனக்கு இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்துகிறார். எனவே இத்தகைய பின்னணியில்தான் இந்த வினாவை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது?

அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருமே தமிழ் எழுத்தாளர்கள்தான். சாதியை மறைக்க வேண்டியதும் இல்லை. சாதிய சமூகத்தில்தானே பிறந்திருக்கிறோம். சாதி அபிமானமோ சாதித் துவேஷமோ இல்லாமல் இருப்பதுதான் முக்கியம். ஒரு படைப்பாளியை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர் என்ன சாதிக்காரர் என்பதும் தெரிந்தால் நல்லதுதான் என்று சமீப காலமாக நான் நினைக்க ஆரம்பித்துள்ளேன்.

இன்றைய பெண் எழுத்துக்களில், பாலின ஒடுக்குமுறை குறித்துப் பெரிதும் பேசப்படுவதை அறிவோம். அதே அளவு சாதி குறித்துப் பெண் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை என்பதுபோன்ற கருத்து குறித்து உங்கள் கணிப்பு என்ன?

பெண் படைப்பாளிகள் பாலின ஒடுக்குமுறை பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள் என்பது பழைய விமர்சனம். அதையெல்லாம் பெண்கள் தாண்டி வந்துவிட்டார்கள். ஜெயராணி, குட்டிரேவதி, அமுதாசெல்வி, கவின்மலர் என்று பெண் படைப்பாளிகள் முழு உலகத்தையும் கேள்விக்குள்ளாக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறார் இலக்கியங்கள் குறித்து மிகுந்த கரிசனம் கொண்டவர் நீங்கள். இன்றைய நிலையில் சிறார் இலக்கியங்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?

அழ. வள்ளியப்பா, பெ. தூரன், வாண்டுமாமா போன்ற முன்னோடிகளின் காலம் மீண்டெழுந்து வந்துகொண்டிருப்பதாக நான் நம்பிக்கையுடன் பார்க்கிறேன். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் கணிசமான எண்ணிக்கையில் சிறார் இலக்கியப் படைப்பாளிகள் வந்துவிட்டார்கள். பல பரிமாணங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய ஆன்லைன் கதைசொல்லிகளும் வந்துவிட்டார்கள். வெள்ளம் வரும்போது குப்பை கூளமும் வருவதுபோல தரமற்ற எழுத்துகளும் கூட்டத்தோடு கூட்டமாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. சரியான விமர்சன மரபை உருவாக்கும்போது சிறார் இலக்கியம் இன்னும் புதிய உயரங்களைத் தொடும்.

கிராம்சி போன்ற மார்க்சிய அறிஞர்கள், மேல் கட்டுமானம் மற்றும் பண்பாட்டு அரசியல் குறித்து உரத்துப் பேசுகின்றனர். சனாதனம் நோக்கிச் சில தமிழ் எழுத்தாளர்கள் சாய்ந்து வரும் சூழலில், ஒரு கலாச்சாரப் புரட்சி இன்றைய காலகட்டத்தில் தேவை என நாம் பாவிக்கலாமா?

ஒரு கலாச்சாரப் புரட்சிக்கான தேவை கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. சங்க காலத் தமிழர் வாழ்வியல் முன்னெடுத்த முற்போக்குப் பண்பாட்டுக் கூறுகளை நாம் அடையாளம் கண்டு முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்த சமண, பௌத்த மரபுகள், சித்தர் மரபு, பாரதி, வள்ளலார் போன்றோர் முன்னெடுத்த பண்பாட்டு அம்சங்கள் மதங்களுக்கு உள்ளேயும் மதங்களை மறுத்த எதிர் மரபிலும் என ஊடாடிய அத்தனை பண்பாட்டு அசைவுகளையும் நாம் உள்வாங்க வேண்டும். தமிழர் பண்பாட்டுப் பெருமிதம் குறித்த வெட்டிப்புல்லரிப்புகளைப் பெருக்கித் தள்ளிவிட்டு, அறிவியல்பூர்வமான நமது மொழிக்கே உரிய பெருமிதங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மொழிவழித் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த்தேசிய இனமாகிய நாம் எப்பக்கமும் சாய்ந்துவிடாமல் நம் பண்பாட்டு வரலாற்றை நிதானமாக உள்வாங்கி இன்றைய காலத்துக்கான பண்பாட்டுப் போர் முழக்கங்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தை உலுக்கிய போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் தமிழ் இலக்கியத்தில் அது குறித்துப் பெரிதும் பேசப்படவில்லை என்பது பெரும் அவலம். இது பற்றி உங்களது கருத்து என்ன?

தோழர் பாட்டாளி எழுதிய “தீராக்களம்” நாவலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் விரிவாகப் பதிவாகியுள்ளது. மற்றபடி வேறு யாரும் எழுதவில்லைதான். இனியேனும் படைப்பாளிகள் முயற்சிக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போரின் தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. மக்களின் எதிர்பார்ப்புகளை அது நிறைவேற்றாததால் இந்தி எதிர்ப்புப் போராட்ட நாயகர்களான பா. செயப்பிரகாசம் போன்றோரே அதை விட்டு வெளியேறினர். அவ்வியக்கத்தைப் பற்றி நினைவுகூரவோ இலக்கியத்தில் பகிரவோ அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை.

இன்று அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ஜெயமோகனின் படைப்புகள் குறித்த உங்களது கணிப்பைப் பதிவிடுக!

முழுமையாக வாசிக்காமல் ஒரு கணிப்பை முன்வைப்பது சரியல்ல. விரைவில் அதையும் செய்வேன். சில நாவல்கள், சில சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள், யானை டாக்டர் போன்றவற்றை முக்கியமான சிறுகதைகள் என்று கருதுகிறேன். அவருடைய எழுத்துகளே மண் மூடிப்போகும் அளவுக்கு அவர் நிறையப் பேசிவைக்கிறார். அதிரடியான கருத்துகளைக் கொட்டித் தீர்க்கிறார். அவற்றையெல்லாம் விலக்கிவிட்டு அவருடைய படைப்புகளை வாசிக்கப் போராட வேண்டும். பாசிசத்தின் இலக்கிய முகம் என்கிற தோழர்களின் 400 பக்க நூல் வேறு குறுக்கே நிற்கிறது. கூடிய விரைவில் அவர் படைப்புகளைக் காய்தல் உவத்தல் இன்றி வாசிப்பேன். அளவிலும் எக்கச்சக்கமாக எழுதி வைத்திருக்கும் படைப்பாளி அவர்.

தொடக்க காலத்தில் கவிதைகள் எழுதிவந்தீர்கள். திடுமென அதை நிறுத்த நேர்ந்ததன் காரணம் என்ன? உங்கள் கவிதைப் பயணம் தொடருமா?

கவிதை என்னைக் கைவிட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி கைவருமா என்று தெரியவில்லை. ஒரு 100 கவிதைகள் எழுதியிருப்பேன். அவை கவிதைகளாக இல்லை என்று எனக்கேபட்டதால் அவற்றைத் தொகுக்கக்கூட இல்லை.

சாதியம் / கார்ப்பரேட்மயம் என்பதாக மாறிவிட்ட இன்றைய வாழ்வில் ஒரு எழுத்தாளனின் கடமை என்னவாக இருக்கும்?

இலக்கியத்தை ஓர் அறிதல் முறையாக நாம் கொள்ள வேண்டும். வாசிப்பு இன்பம் தரும் வஸ்து என்பதற்கு அப்பால் இலக்கியத்துக்கு இன்னும் சில கடமைகள் இருப்பதாக நாம் கொண்டால், சமகால வாசகர்களோடு உரையாட வேண்டிய புள்ளிகளை இலக்கியம் தொட்டுக்காட்ட வேண்டும் எனக் கருதுகிறேன். தமிழ்ச்சமூகத்தின் சிறு பகுதியான நடுத்தர வர்க்கத்தின் புழங்கு பொருளாகத்தான் நவீன இலக்கியம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. அந்த வர்க்கத்தின் தூங்கும் மனசாட்சியை உலுக்கி எழுப்ப வேண்டிய கடமை இலக்கியத்துக்கு உண்டு. கார்ப்பரேட்டீசியமும் இந்துத்துவமும் நாசகார சக்திகள் என்பதை எழுத்தாளர்கள் கூடி உணர வேண்டும். பாசிசம் வளரும்போது கலைஞர்கள், எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர் பாசிசத்தின் கால்களில் போய்வி விழுவார்கள். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் அதைப் பார்த்தோம். அதைத் தமிழ் இலக்கிய உலகில் இன்றைக்கு அப்பட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாசிசத்தின் நட்டுவாங்கத்துக்கு ஆடுகின்ற எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பலரை நாம் இன்று பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இது அபாயகரமான போக்கு. தாக்குப்பிடித்து நிற்பது மனச்சாட்சியுள்ள எழுத்தாளனின் கடமை.

அறிவொளி இயக்கத்தில் இலக்கியத்தை அடுத்த வர்க்கங்களிடம் எடுத்துச் செல்ல முயன்றோம். உழைக்கும் வர்க்கத்திடம் இலக்கியத்தை எடுத்துச்செல்ல இயக்கங்கள் தேவை. மக்கள் வாசிப்பு இயக்கம் போன்றவை தேவை. அவற்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

- ச.தமிழ்ச்செல்வன்

நேர்காணல்: கண.குறிஞ்சி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.