தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள்: வாய்ப்புகளும், எதிர்கொள்ளும் சவால்களும்
இந்தியத் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிப் பாதை சுதந்திரத்திற்குப் பின்னர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) துறைக்குக் கொடுக்கப்பட்ட கவனத்தின் காரணமாக, ஐ.ஐ.டி உள்பட அரசால் தொடங்கப்பட்ட கல்லூரிகள் மூலம் உருவான திறன்மிக்க மனிதவளம், கணிப்பொறி இறக்குமதியைத் தாராளமயமாக்கி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மென்பொருள் ஏற்றுமதிக்கு ஆதரவாக இருந்த 1980-களில் உருவாக்கப்பட்ட கணிப்பொறிக்கான கொள்கை, அமைக்கப்பட்ட மென்பொருள் பூங்காக்கள், முன்னோடியாகக் களத்தில் இறங்கிய டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு எனத் தொடங்குகிறது.
Y2K (Year 2000 Problem) பிரச்சினையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையில் மென்பொருள் வல்லுநர்கள் தேவைப்பட்டனர். அது இந்தியாவின் திறன் வாய்ந்த தொழிலாளர்களைக் கண்டுகொண்டது. 1990-க்குப் பின்னர் தாராளமய பொருளாதாரக் கொள்கையும் இந்தியா தொழில்நுட்பத்துறையில் வேகமான வளர்ச்சியைக் காண வழிவகுத்தது. அயல்நாட்டுப் பணிகளுக்கான (Outsourcing) ஓர் இடமாக இருந்து இன்று இந்திய ஐடி துறை ஆராய்ச்சி, புதிய கண்டுபிப்புகள் என நகர்ந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்ட, திறன்மிக்க மனிதவளத்தைக் கொண்ட தென் இந்திய மாநிலங்கள் இந்தத் துறையின் வளர்ச்சியால் பலன் அடைந்துள்ளன. இந்திய அளவில் அதிக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள நகரங்களாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளன.
குறிப்பாகத் தமிழ்நாடு இத்தகைய மனித வளத்தில் முன்னணியில் உள்ளது. இதற்குத் தமிழ்நாட்டின் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சூழல், கல்வியைத் தங்களின் வாழ்வின் ஏற்றத்திற்கான ஒரு கருவியாகப் பார்க்கும் சமூகச் சூழல், அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.
பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 2024-25 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையில் நேரிடையாகப் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கை ஏறக்குறைய 58 லட்சம்! மறைமுகமாகச் சுமாராக மூன்று மடங்கு வேலைவாய்ப்புகளை இந்தத் துறை உருவாக்குகிறது. இதில் பெண் ஊழியர்கள் பங்கேற்பு விகிதம் 34% முதல் 36% வரை! அதாவது மூன்றில் ஒரு பங்கு பெண் ஊழியர்கள்! ஏறக்குறைய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் ஒரு துறையாகத் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளது. 2025-2026 நிதியாண்டிற்குள் $300 பில்லியன் வருமானத்தையும் உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்புச் செலுத்தும் ஒரு துறையாகக் கணிக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் ஆறில் ஒரு பங்கு (2022 ஆண்டு தகவல்படி) ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் பணியாளர்கள்!
தமிழ்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களில் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்! அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தொழில்நுட்பத்துறை ஊழியர்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக உள்ளார். ஆண்டுதோறும் திறன் மிக்க ஊழியர்களுக்கான அமெரிக்க அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு விசாவான H-1B-ஐ 70-74% இந்தியர்கள் பெறுகின்றனர்.
பணி நிலைமைகள் மேம்பட்ட ஒரு துறை ஒப்பீட்டளவில் மற்ற துறைகளைக் காட்டிலும் அதிக அளவில் உபரி/இலாபம்/ஊதியம் உள்ளிட்ட பிற பணப்பலன்களைத் தருகின்ற ஒரு துறையாகத் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளது. குறிப்பாகக் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கட்டிடங்கள், உணவுக்கூடங்கள், ஓய்வு அறைகள், மேலாளர், குழு உறுப்பினர், சக பணியாளர், ஆண், பெண் உறவுகளில் பணியிடங்களில் மேற்கத்தியப் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் இடங்களாக உள்ளன. ஒரு நிறுவனத்தின் தலைவர் உள்பட யாரையும் 'மிஸ்டர்' எனப் பெயர் சொல்லி அழைக்கும், அதிகாரமட்டத்தில் யாருடனும் கலந்துரையாடும் வாய்ப்பு என இன்றும் நிலவுடமைப் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் இந்தியச் சூழலில் இந்தப் பணியிடப் பண்பாட்டு மாற்றம் ஒரு நேர்மறையான தாக்கமாகும்.
முக்கியமாக நீண்டகால/குறுகியகால/நிரந்தர வெளிநாட்டுப் பணிவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு துறை. இது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் நல்ல வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட ஓர் உயர் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் அடங்குவர்.
பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
ஊதியம் உள்ளிட்ட மேம்பட்ட பணிநிலைமைகள் இருந்தாலும் பொதுவாக ஐடி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளோடு, பெண்கள் என்ற வகையில் இந்தத் துறையிலும் பாலினப் பாகுபாடு சார்ந்த பிரச்சினைகளைப் பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
காரணிகளாக இருப்பவை:
- பெண்களுக்கு எதிரான தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள சிந்தனை முறை, குறிப்பாகப் பெண்களின் கடமைகளாகப் பார்க்கப்படும் குடும்பப் பொறுப்புகள்.
- உழைப்புச் சக்தி என்ற அளவில் பெண்களுக்குச் சமவாய்ப்புகளை வழங்குகின்ற போதிய நிறுவனக் கொள்கைகள் இல்லாதது.
- பெண்கள் போராடிப் பெற்ற அரசமைப்புச் சட்ட உரிமைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை.
- வேலை & குடும்பப் பொறுப்புகள் என்ற இரட்டைச் சுமை.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட பெண் தொழிலாளர் சமூக உற்பத்தி பங்கேற்பில் குடும்பப் பராமரிப்பு கடமைகள் ஏற்படுத்தும் தாக்கம் (The impact of family care responsibilities on female labour force participation) என்ற அறிக்கை இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 53% வேலைக்குச் செல்லாத பெண்கள் இருப்பதாகக் கூறுகிறது.
சராசரியாகப் பெண்கள் 5 மணி நேரமும் ஆண்கள் 1.30 மணி நேரமும் குடும்ப வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்கிறது இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அறிக்கை (2024). பெண்களின் சம்பளமில்லாத குடும்பப் பராமரிப்பு வேலைகளின் பொருளாதார மதிப்பீடு என்பது தேசிய புள்ளியியல் நிறுவன அறிக்கை (2019)-ன்படி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 15%-17% அதாவது 30-34 இலட்சம் கோடிகள். ஆனால், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பப் பராமரிப்புக் கடமைகளை நிறைவேற்றும் உள்கட்டமைப்புகளில் இந்திய ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.18% மட்டுமே.
இது பெண்களின் சிந்தனையிலும் ஊட்டப்பட்டு அவர்கள் குடும்பப் பொறுப்புகளை முதன்மையாகக் கருதும் நிலைக்குத் தயார்படுத்தப்படுகிறார்கள்.
இரட்டைச் சுமைக்கான காரணிகள்:
- திருமணத்திற்குப் பிறகு இலட்சியத்தைக் காட்டிலும் குடும்பப் பொறுப்புகளைப் பெண்களின் முதன்மையான கடமையாக வரையறுக்கும் சமூக எதிர்பார்ப்புகள், பொறுப்புகளைப் பகிர்வதில் உள்ள சமநிலையின்மை.
- குடும்பப் பராமரிப்புக் கடமைகளை நிறைவேற்றப் போதுமான உதவி அமைப்புகள் இல்லாமை.
- பெண்களின் சமூக, பொருளாதார நிலை போன்றவை.
பெண் ஊழியர்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் தாய்மை நிலை
குழந்தை கருத்தரித்த நாளிலிருந்து முதல் 1000 நாட்களில் குழந்தைக்குக் கொடுக்கப்படும் தாய்ப்பால் உள்ளிட்ட சத்தான உணவே அதன் வாழ்நாள் உடல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவற்றைத் தீர்மானிக்கிறது என மருத்துவத்துறை சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைப்பேறு என்பது எதிர்கால உழைப்புச் சக்தியை உருவாக்குவதில் பெண்கள் செலுத்துகின்ற உழைப்பாகும். அந்த அடிப்படையிலேயே சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. மாநில, ஒன்றிய அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை மகப்பேறு கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.
தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation (NSF)) என்ற நிறுவனம் இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு மகப்பேறு நலச்சட்டத் திருத்தம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரமாக அதிகரித்த பின்னரான பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறைந்த இலாபம் ஈட்டும் / சிறு நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பது 22% குறைந்துவிட்டதாகக் கூறுகிறது.
மகப்பேறு விடுமுறைக் காலத்தில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடாத காரணத்தால் சிறு/நடுத்தர நிறுவனங்கள் இந்தச் செலவை ஏற்கத் தயங்கிப் பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்புவதில்லை அல்லது பணிநீக்கம் செய்கின்றன. இதுவே, மகப்பேறு விடுமுறைச் செலவை வரி விதிப்பு/அரசு திட்டங்கள்/காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஏற்கும் நாடுகளில் விடுமுறை அதிகரிப்பு என்பது எதிர்மறையான பாதிப்பை உருவாக்கவில்லை என்கிறது ஆய்வு.
ஐடி துறை பெண்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் சவாலான பணி நிலைமைகள்:
- நீண்ட வேலை நேரம், இரவு நேரப் பணி நிலைமைகள், வெவ்வேறு நாடுகளின் வேலை நேரத்திற்குப் பணிபுரிவது.
- 24/7 இணைவழிக் கூட்டங்களில்/அழைப்புகளில் பங்கேற்க வேண்டிய பணிச்சூழல்.
- வேறு மாநிலம் / வெளிநாடு செல்ல வேண்டிய பணியின் தேவை.
- வேகமாக மாறும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை.
குழந்தைப்பேறு காலத்தில்:
- பணிநீக்கம் நடைபெறும் காலகட்டத்தில் மகப்பேறு சட்ட நலன்களைப் பெறக்கூடிய பெண்கள் முதன்மையாகப் குறிவைக்கப்படுவது.
- முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை ஒதுக்கீடு செய்வதில், உயர்பதவி/ திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பரிந்துரை செய்வதில் பாகுபாடு.
- வெளிப்படைத்தன்மையற்ற, பாரபட்சமான திறன் மதிப்பீடு முறை (Performance Metric) பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணிநீக்கத்தில் பெண்களுக்கு எதிராகப் பயன்படுகிறது.
- மகப்பேறு சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சலுகை பெற்ற குற்ற உணர்வுக்கு ஆளாவது.
- குழந்தை வளர்ப்பு பெண்ணின் கடமை என்ற சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் குற்றவுணர்வு கொள்ளும் சூழல்.
ஊதிய இடைவெளி
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற சட்ட உரிமை இருந்தபோதிலும் தொழில்நுட்பத் துறையில் ஊதிய இடைவெளி நிலவுகிறது. குறிப்பாக உலகளாவிய திறன் மையங்களில் (Global Capability Centers- GCCs) பெண் ஊழியர்கள் பங்கேற்பை உயர்த்தும் முயற்சிகள் காரணமாக அவர்கள் விகிதம் 38% உயர்ந்துள்ளது. இருப்பினும், பதவி உயர்வு, ஊதியத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறிப்பாகத் தொடக்க நிலையில் 4.4%, இடைநிலையில் 6%, உயர் நிலையில் 16.3%, சராசரியாக 19% என ஊதிய இடைவெளி உள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாமை
ஐடி துறையில் பொதுவாகக் குறிப்பிட்ட பதவிக்கு, குறிப்பிட்ட திறன்களுக்கு (Skills) ஊதிய விவரம் வெளிப்படையாக இருப்பதில்லை. இது பெரும்பாலும் ஊழியரின் பேரம் பேசும் திறனைப் பொறுத்து மட்டுமே. பேரம் பேசும் திறனில் சமூகக் காரணிகள் காரணமாக ஆணுக்கும், பெண்ணுக்கும் இயல்பான வேறுபாடு உள்ளது. மற்ற தொழிலாளர் சட்டங்கள் போல ஐடி துறையில் சம ஊதியச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இலாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள் பாலின ஊதிய இடைவெளியில் அக்கறைகொள்ள மாட்டார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.
பணியமர்த்தல் செயல்முறை (Hiring Process) மற்றும் பதவி உயர்வு (Promotion)
ஐடி துறையில் பணியமர்த்தல் முறை வெளிப்படைத்தன்மை இல்லாத ஒன்று. சக ஊழியர்களின் பரிந்துரை மூலம் பணியமர்த்தல் என்பதும் ஒரு முறையாக உள்ளது. வேலைக்குப் பரிந்துரை செய்வதில் திருமண நிலை, மகப்பேறு நிலை போன்றவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இந்திய அளவில் உயர்கல்வி முடித்த பெண்கள் 43% இருந்தபோதும் பணியிடங்களில் அவர்களின் பங்கு 27% மட்டுமே உள்ளது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறையில் தொடக்க நிலையில் 30-35% அதாவது மூன்றில் ஒருவர் பெண் ஊழியராக இருந்தபோதிலும், உயர் பதவி, அதிகாரத்தின் உயர் அடுக்குகளுக்குச் செல்லச் செல்ல பெண்களின் பங்கு என்பது 8-11% மட்டுமே உள்ளது.
வரைமுறை இல்லாத பணிநேரம், வெளிநாட்டுப் பயணங்கள்/பணி மாறுதல்கள் என அதிக பொறுப்புகள் நிறைந்த பணிச்சூழல், குடும்பப் பொறுப்புகள் காரணமாகப் பெண்களுக்குப் பொருத்தமற்றவை, அதாவது அதிகாரத்தின் உயர்மட்டத்தில் நிலவும் அழுத்தம் நிறைந்த பணிச்சூழலை ஆண்களால் மட்டுமே சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்ற ஆண் மையச் சிந்தனை நிலவுகிறது.
மேலும் உயர்பதவிகளில் பெரும்பாலும் ஆண்களாக இருக்கும்போது சக ஆண் ஊழியருக்கு கிடைக்கும் நட்பு வட்டம், தகவல் பரிமாற்றம், உயர்பதவி அடைவதற்கான பரிந்துரைக்கும் வாய்ப்பு, புதிய பணிவாய்ப்புப் பரிந்துரைகள் போன்றவை ஆண்களை விடப் பெண்களுக்கு மிகவும் குறைவான ஒன்றாக உள்ளது.
பணியிடப் பாலியல் தொல்லை சார்ந்த நிலைமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை:
பணியிடப் பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டம் ஐடி துறையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பல நிறுவனங்களில் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை; அமைக்கப்பட்டிருந்தாலும் திறனோடு செயல்படுவதில்லை. குறிப்பாகப் புகார் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இது ஊழியர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. ஆனால், தீர்வு காணப்படாமல் உள்ள புகார்கள் ஐடி துறையில் 21% என சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா ஆய்வுக் கட்டுரை சொல்கிறது.
விசாரணை அமைப்பு வலிவின்மை:
புகார்க் குழுவில் பெயரளவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது, போதிய பயிற்சி வழங்கப்படாதது, நிறுவனத்திற்குச் சார்பான நிலை எடுப்பது, புகார்கள் மீதான விரைவான, நேர்மையான விசாரணை மூலம் தீர்வு வழங்காதது, பழிவாங்கப்படுவோம் என்கின்ற பயம், முறையான விசாரணையின்றிப் புகாரைத் தீர்த்து வைப்பது எனப் பல சிக்கல்களைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இது பணியிடப் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது.
பெண் ஊழியர் தக்கவைப்பு சார்ந்த நிறுவனக் கொள்கைகள் பாலினச் சார்பான மகப்பேறு கால விடுப்பு:
இந்தியாவில் பெண்களுக்கு மட்டுமே 26 வார கால மகப்பேறு விடுப்புச் சட்டம் உள்ளது. ஆண்களுக்கான விடுமுறை என்பது ஒன்றிய அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் 15 நாள்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசும் 15 நாள்கள் விடுமுறையை அளிக்கிறது. ஆண்களுக்கான இந்த விடுமுறை தனியார் துறையில் நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடுகிறது. இந்தக் கொள்கையே குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணின் முதன்மைக் கடமை என்பதை உறுதி செய்வதாக உள்ளது. மாறாக, பாலினச் சார்பற்ற மகப்பேறு விடுமுறை என்பதே பெண்ணின் மீதான இந்தச் சுமையைத் தடுக்கும். எடுத்துக்காட்டாக கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) என்ற நிறுவனம் பாலினச் சார்பற்ற 26 வார காலக் குழந்தைப்பேறு விடுமுறை வழங்குகிறது.
பெண்களைத் தக்கவைக்கும் கொள்கைகள்:
மகப்பேறு விடுமுறை காலத்திற்குப் பின் பணியைத் தொடரும் பெண்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 90%-க்கு மேல் இருப்பதாகச் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே நிறுவனங்களில் நீண்ட காலத்திற்குப் பெண்களைத் தக்கவைக்கும் விகிதம் 60-70% ஆக இருக்கிறது. இது நிச்சயமாக மகப்பேறு விடுமுறைக்குப் பின் பெண்களால் அதே நிறுவனத்தில் நீண்ட காலத்திற்குத் தொடர முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
இதற்குக் குழந்தைக் காப்பக வசதி, வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி, நெகிழ்வான வேலை நேரம், பணிச்சுமையைச் சமநிலைப்படுத்துவது, சம்பளமில்லாக் கூடுதல் மகப்பேறு விடுமுறை, பகுதி நேர வேலைவாய்ப்புகள் தொடர்பான நிறுவனக் கொள்கைகள் முழுமையாகச் செயல்படவில்லை அல்லது பெயரளவிலேயே உள்ளதையே காட்டுகிறது.
அரசு மற்றும் ஐடி துறைக்கான பெண் ஊழியர்களின் கோரிக்கைகள்
- ஐடி துறையில் 8 மணிநேரப் பணி உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தல்.
- ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைத் திறன் மதிப்பீடு முறைக்கு மாற்றாக அனுபவ அடிப்படையில் நடைமுறைப்படுத்தல். அதில் பெண்களின் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல்.
- பாலினச் சார்பு இல்லாத மகப்பேறு விடுமுறைக் கொள்கை. வரி விதிப்பு உள்ளிட்ட புதிய முயற்சிகளைக் கொண்டு சிறு/நடுத்தர நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் மகப்பேறு விடுமுறை பெறுவதற்கான அரசு தரப்பிலான கொள்கை முடிவு.
- ஊதிய இடைவெளியைத் தொழிலாளர் நலத்துறை மூலம் கண்காணித்தல் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியச் சட்ட உரிமையை உறுதிசெய்தல்.
- குழந்தைக் காப்பகங்கள் & சிறு/நடுத்தர நிறுவனங்கள் எனப் பணிபுரியும் அனைத்துப் பெண்களுக்கும் மகப்பேறு சட்ட நலன்களைக் கண்காணித்தல் & உறுதிசெய்தல்.
- பெண்களின் தேவைகளை உள்ளடக்கி இரவுநேரப் பணியை ஒழுங்குபடுத்தும் கொள்கையைச் சட்டமாக்கல்.
- பணியிடப் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தை முழுமையாக, நியாயமாக, நிறுவனச் சார்பற்று நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்தல்.
- மகப்பேறு விடுமுறை காலத்திற்குப் பின்னரான பெண்களின் தக்கவைப்பு விகிதாசாரத்திற்கு (Retention Rate) குறிப்பாக்க நடுத்தர, பெரு நிறுவனங்களைப் பொறுப்பாக்குதல்.
- மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான சட்டம் கொண்டு வருதல்.
- வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கான சட்டம் கொண்டு வருதல். அதில் பெண்களின் மாதவிடாய் காலம், கர்ப்ப காலம், தாய்ப்பாலூட்டும் காலம் போன்றவற்றை உள்ளடக்குதல்.
- ஊழியர்களுக்குத் தொடர்ச்சியான பாலின உணர்திறன் (Gender Sensitisation) குறித்த விழிப்புணர்வுப் பட்டறைகளை நடத்துவது.
References
https://timesofindia.indiatimes.com/business/india-business/indian-it-industry-to-grow-5-1-per-cent-in-fy25-expected-to-cross-300-billion-in-fy26-nasscom/articleshow/118528513.cms
https://timesofindia.indiatimes.com/city/chennai/one-million-and-counting-tamil-nadu-tech-workforce-rises/articleshow/92947571.cms
https://indianexpress.com/article/business/indian-women-remain-outside-labour-force-international-labour-organization-report-9650392/
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/mar/doc202435319501.pdf?utm_source=chatgpt.com
https://icrier.org/pdf/PB35-Care_Economy.pdf?utm_source=chatgpt.com
https://www.downtoearth.org.in/economy/womens-day-of-unpaid-labour-five-hours-of-domestic-work-employment-of-stress-mental-toll-of-double-burden#google_vignette
https://www.business-standard.com/finance/personal-finance/in-tech-gccs-gender-pay-gap-jumps-from-4-at-entry-to-16-at-senior-level-125043000708_1.html
https://www.forbesindia.com/article/news/rising-backlog-of-sexual-harassm/2987356/1
https://www.business-standard.com/india-news/maternity-penalty-75-mothers-face-career-hurdles-after-leave-report-124081000274_1.html
- பரிமளா