இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் - மேதகு வே.பிரபாகரன்
 
தோழர் தியாகுவின் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம், அதை ஒட்டி நடந்த நிகழ்வுகள் குறித்து மே 17 இயக்கத்தின் குமுறலாகப் பதிவு செய்யப்பட்ட கட்டுரை "ட்ரோஜான் குதிரையும், தமிழர்களும்".
 
அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான். "காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கை ஒரு ஏமாற்று கோரிக்கை. கோரிக்கைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு, தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் தி.மு.க, இந்தியா கூட்டணியிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. தி.மு.க-இந்தியா என்ற 'ட்ரோஜான்' குதிரையைத் தமிழீழ ஆதரவு போராட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி, தமிழகத்தில் நடக்கும் ஈழ ஆதரவு போராட்டங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டார்கள். இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றிருக்கும் தோழர்கள் சார்ந்த அமைப்புகள்/கட்சிகள் தான் இதற்குப் பொறுப்பு. இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் தோழர்கள் தோழர் தியாகுவை ஏமாற்றிவிட்டார்கள். இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு பெற்றிருக்கும் பிற தோழர்கள் குறித்து மே 17 இயக்கம் எச்சரித்து இருந்தும் தமிழ்த் தேசிய தலைவர்கள் முட்டாள்களாக இருந்து தமிழ்ச் சமூகத்தை அழிவுப் பாதையில் போக அனுமதித்து விட்டார்கள். தமிழகத்தில் நடக்கும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் சரியான திசை வழியைக் காட்டும், எதையும் சமரசம் செய்துகொள்ளாத ஒரே இயக்கம் மே 17 இயக்கம் மட்டுமே. அதனாலேயே, 'ட்ரோஜான்' குதிரை குறித்து எச்சரிக்கை செய்த "Laocoon- லகூன்" எப்படி பலியிடப்பட்டாரோ அதுபோல் மே 17 இயக்கம் புறக்கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது."

இந்த குமுறல்களின் பின்னணி பற்றி சற்று பார்ப்போம்.
 
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட்டு, அதற்கு இனக்கொலையாளி இராஜபக்சே தலைவராக முடிசூட்டப்பட்டால், அது அங்கு நடத்தப்பட்ட இனக்கொலைக்கு ஒரு வகையில் சர்வதேச அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடும். நடந்த இனப்படுகொலைக்காக இலங்கை அரசுமீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதை சாத்தியப்படுத்துவதற்கு இலங்கையைச் சர்வதேச சமூகம் புறக்கணிக்க வேண்டும். அதன் ஒரு கூறாக, இலங்கையைக் காமன்வெல்திலிருந்து நீக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது, ஒருவேளை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் அதில் இந்தியா பங்கு கொள்ள கூடாது ஆகிய கோரிக்கைகள் பெரும்பான்மையான ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகளால் முன் வைக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், ”இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது; இலங்கையில் நடைபெற்றால் அதில் இந்தியா பங்கு கொள்ள கூடாது” உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் திலீபனின் நினைவு நாளான செப்டம்பர் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணா நிலை என்ற போராட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். மேலும், தனது உண்ணா நிலைப் போராட்டத்திற்கு உதவியாக இருக்க 'இலங்கையில் காமன் வெல்த் எதிர்ப்பியக்கம்' என்ற பெயரிலொரு போராட்டக் குழுவையும் உருவாக்கினார். பல்வேறு காரணங்களால் தோழரின் போராட்டம் அக்டோபர் 1 அன்று தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு கோரிக்கை அடிப்படையில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோருவது என்பது தோழர் தியாகுவின் செயலுத்தி. பெரும்பான்மையான இயக்கங்கள்/கட்சிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவு என்ற அடிப்படையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. போராட்டம் அதன் போக்கில் மெல்ல விரிவடைந்து சென்றது. ஆனால், நாட்கள் கடந்து செல்லச் செல்ல‌, தோழரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து இயக்கங்கள்/கட்சிகள், உண்ணா நிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தின.
 
தமிழக அளவில் போராட்டம் விரிவடைய வேண்டும் அல்லது இந்திய அரசிடம் இருந்து ஏதேனுமொரு பதில் வர வேண்டும் என்பதுதான் தனது உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர குறைந்த பட்ச தேவையாக தோழர் தியாகு முன்வைத்தவை. போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்திய அரசிடம் இருந்து பதிலும் வந்தது. உண்ணா நிலைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. மேலும் மேதா பட்கரின் அமைப்பு இதை இந்தியாவெங்கும் எடுத்துச் செல்வதாகவும் தோழரிடம் வாக்களித்தார்கள். போராட்டம் முடிந்தபோது தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் மணியரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தோழர் ஜவஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தோழர் தெஹலான் பாகவி உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். பிரதமரின் கடிதம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதப்பட்டிருந்ததும், முடிக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. தரப்பில் இருந்து ஒருவர் பங்கு பெற்றிருந்ததும் திறனாய்வுகளின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிட்டன. எனினும் இலங்கையைத் தனிமைப்படுத்துவதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் இது ஒரு சிறுபகுதி தான். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்க்கும் போராட்டமும் சரி, ஈழ விடுதலைக்கான தமிழகத்தின் போராட்டமும் சரி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.
 
தி.மு.க.-இந்தியா என்ற ட்ரோஜான் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தி ,தமிழ்த் தேசிய அரசியலைக் குழி தோண்டி புதைத்து விட்டார்கள் என்று இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றவர்களைப் பார்த்து அம்புகளை வீசி, அரசியல் ஆதாயம் தேட நினைப்பது ஈழப் போராட்டத்திற்கு எந்த வகையிலும் துணை செய்யாது. மேலும் இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையையும், இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாகக் கருதி, இதை ஒரு பரப்புரை பொருளாக கையிலெடுத்து, உணர்வாளர்களிடையே நிலவிக் கொண்டிருக்கும் தி.மு.க. எதிர்ப்புணர்வை ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில்’ பங்கேற்றிருக்கும் தோழர்கள் மீதும், தோழர் தியாகுவின் மீதும் திருப்பிவிடும் முயற்சியே ‘ட்ரோஜான் குதிரை’ கட்டுரை.
 
ஈழப்போரில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்ய துணை நின்றது இந்தியா. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. "இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன்" என்றார் மகிந்த இராஜபக்சே. இராஜபக்சேவுடன் கொழும்புவில் விருந்து, புத்தகயாவில் இரத்தின கம்பள வரவேற்ப்பு என இயல்பாக சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கூட்டணி சேர்ந்தது பாரதிய ஜனதா கட்சி.
 
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொல்லி பின்பு "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வாக்கு கேட்டு தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது ஈழத்திற்கு ஆதரவான சட்டமன்றத்தில் "வெற்றுத்" தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டிருப்பவர் தமிழக முதல் அமைச்சரும் அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா.
 
ஈழப்போரின் இறுதி நாட்களின் போது 3 மணி நேரம் மட்டும் உண்ணா விரதம் இருந்து போரை முடித்ததாக சொல்லி, "மழை விட்டாலும் தூவானம் விடவில்லை" என்றவர் இனப்படுகொலையின் கூட்டாளி தி.மு.க தலைவர், அன்றைய முதல் அமைச்சர் மு.கருணாநிதி. இதனாலேயே அதிகார நாற்காலியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டதால், இப்போது ஈழ ஆதரவு அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் டெசோ வை நடத்தி வருகின்றார் அவர்.
 
இப்படி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, மாநில கட்சிகளான தி.மு.க. அ.தி.மு.க ஆகிய அனைத்துமே ஆளும் வர்க்கத்தின் அங்கம்தான். இவர்களின் கூட்டணிகள் மாறலாம், கொள்கைகள் மாறாது. சில நேரங்களில் இவர்கள் எடுக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாடு கூட வாக்கு வங்கி அரசியல் நலன்களால் இயக்கப்படுவதே தவிர‌ கொள்கைகளால் அல்ல. இந்த உண்மைகளைத் தோழர் தியாகுவும் அறிவார். காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றிருந்த பிற தோழர்களும் அறிவர்.
 
இந்த நான்காண்டுகளில், இனப்படுகொலையைத் தடுக்கமுடியாமல் போன கையறு நிலையில் இருந்து இன அழிப்புக்கான நீதிகேட்டு நடத்திய மக்கள் இயக்கங்களின் தொடர் போராட்டங்களாலும், மக்கள் எழுச்சியை ஏற்படுத்த தன்னுயிரை ஈந்த முத்துகுமார், செங்கொடி போன்ற ஈகியர்களாலும், இது வரை வெளிவந்துள்ள இனப்படுகொலை ஆதாரங்களாலும், அதன் விளைவாக எழுந்த மாணவர் எழுச்சியாலும் தமிழகத்தின் ஈழ ஆதரவுப் போராட்டம் வேறொரு தளத்திற்கு நகர்ந்துள்ளது.. இவை ஒருபுறம்.
 
2009 போரில் 1.5 லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளான பின்னும்,தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இராணுவரீதியான பெருந்தோல்வி ஏற்பட்ட பின்னும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களை நடத்துகிறோம்?
 
தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்காக, 1980களிலேயே தங்கள் உழைப்பையும், உடைமைகளையும் ஆயிரக்கணக்கான தோழர்கள் அர்ப்பணித்துள்ளார்கள். தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை இராமகிருஷ்ணன், தோழர் பொழிலன், ஐயா பழ.நெடுமாறன், போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர்; 2009 ஆம் ஆண்டு போர்க் காலத்தில் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்கள் தங்களைத் தீக்கிரையாக்கி தமிழ்ச் சமூகத்தை விழிப்படைய வைத்தனர்; பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராய் போராட்டக் களம் கண்டன. இப்படி நீதிக்கானப் போராட்டத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தயாராய் இருக்கும் சாதாரண மக்களின் பலத்தை நம்பித்தான் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
2008-09க்குப் பிறகு தோன்றிய நம் போன்ற இயக்கங்கள் எல்லாம் இந்த வரலாற்றின் தொடர்ச்சியே அன்றி ஏதோ வானத்தில் இருந்து குதித்த மாவீரர்கள் அல்ல. எந்தப் போராட்டமும் நம்மிலிருந்து தொடங்கவும் இல்லை; நம்மோடு முடிந்து போகப்போவதும் இல்லை என்ற பகத்சிங்கின் கூற்றை நாம் எப்பொழுதும் மனதில் கொள்ள‌ வேண்டும்.
 
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியை மறந்தோ அல்லது மறுத்தோ, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை மீட்பராய் ஓர் இயக்கம் தன்னைக் காட்டிக் கொள்ளுமாயின் அது அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்திக் கொள்கின்றது.

"ட்ரோஜான் குதிரையையும், அதில் இருந்து வெளிப்படும் நயவஞ்சக வீரர்களையும் எதிர்த்து களமாட அனைத்து ‘ட்ராய்’ நகர மக்களையும் அழைக்கிறோம்" .....மக்களை ஆட்டு மந்தைகளாக கருதுவதும், மக்களை முட்டாளாக சித்தரிப்பதுமான ’அதிமேதாவித்தன’ அரசியல் தான் இவ்வகையான அழைப்புகளுக்கான அடிப்படையாக இருக்கின்றன.
 
’மக்களைப் படியுங்கள்’ என்பதுதான் உலகப் புரட்சியாளர்கள் சொல்வது. ’ஈழத்து மக்கள் வடக்கு மாகாணத் தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும்?’ என்று தமிழகத்திலிருந்து கொண்டு அரசியல் ஆணை பிறப்பிப்பது மக்களின் எஜமானர்களாக தம்மை கருதிக் கொள்வதன் வெளிப்பாடன்றி வேறென்ன? ஈழ மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நோக்கினார்கள் என்ற அறியாமையும், உலகின் புரட்சிகரப் போராட்டங்களில் ஏற்படும் பின்னடைவுகளிலிருந்து மக்கள் மீண்டெழும் பாதையில் இருக்கும் நெளிவு சுளிவுகளையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ள முடியாத தத்துவார்த்த பின்புலமின்மையும் கூட இந்த அதிமேதாவித்தனத்திற்கு இட்டுச் செல்கின்றது.
 
நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட அமைப்புகள் இந்த அதிமேதாவித்தனத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அதிக கவனம் தேவைப்படுகின்றது என்பதோடு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதிலும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளும் போது தான், தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி, முதலாளித்துவ நகர்ப்புற வாழ்க்கைமுறை அதன் இயல்பில் போட்டி மனப்பான்மை, அவசர குடுக்கைத்தனம், பரபரப்பு ஓட்டம், எப்போதும் ஒருவித பதற்றம் உள்ளிட்டவற்றை அன்றாட வாழ்க்கையில் புகுத்துகின்றது. அரசியலில் இந்த அவசரக் குடுக்கைத்தனம் என்பது கடந்த காலத்தை மறுத்து, செறிவான வரலாற்றுப் படிப்பினைகளைப் புறந்தள்ளி, ‘திடீர்’ என்று எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்க வைக்கும். அது இயலாமல் போகும் பொழுது தம்மைச் சுற்றியுள்ளவர்களை துரோகிகளாகவும், எதிரிகளாகவும் சித்தரித்து ஆறுதல் அடைவதற்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, கடந்த காலத்தைப் புரிந்து கொண்டு நிகழ்காலத்தில் ஊன்றி நின்று, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் அரசியல் முதிர்ச்சி, பொறுப்புணர்வு, மக்கள் மீதான பற்று போன்றவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையே அரசியல் இயக்கங்களுக்குத் தேவை.
 
எந்த ஒரு இயக்கமும் தங்கள் இயக்கத்தின் பலத்திலிருந்து அல்லது மற்ற தோழமை சக்திகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு போராட்டங்களை அறிவிக்கின்றது. ஆனால், இந்த அதிமேதாவித்தன அரசியல், தங்களைத் தவிர யாரையும் ஆட்டு மந்தைகளாக நினைக்கும் போக்கு, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை மீட்பராக தங்களை நினைத்துக்கொண்டு, தங்கள் அமைப்பு நடத்தும் போராட்டங்களுக்கு இயக்கங்களைக் கடந்து, கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றது. மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி களைந்து சென்று விட வேண்டும், அவர்கள் எந்த விதத்திலும் அமைப்பாகி விடக்கூடாது என்பதை விரும்புகின்றது. இப்படியாக ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதில்தான் போய் முடிகின்றது.

அரசியல் கோரிக்கைகளில் குறைந்தபட்சம், அதிகபட்சம் எனத் தீர்மானிப்பது, அதற்கான போராட்ட வடிவங்களை முன்வைப்பது, அதில் முன்னேறுவது, தற்காலிகமாக பின்வாங்குவது என்பதெல்லாம் அரசியல் இயக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒரு தொடர் நடவடிக்கை. அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் நாம் நேர்மையாக அரசியலைக் கற்றுக் கொள்ள உதவும்.
 
இறுதியாக, எதிரியைத் தனிமைப்படுத்தி நட்பு சக்திகளை அணி திரட்டிக் கொள்வதே அரசியல் நடைமுறை. ஆனால் இதற்கு நேரெதிராக நட்பு சக்திகளை துரோகிகளாகக் காட்டி எதிரியோடு அவர்களை அணி சேர்த்துக் காட்டி, அதன் மூலம் தன்னை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை முறை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை செய்யப் போகின்றதா? அல்லது எதிரிக்கு துணை செய்யப் போகின்றதா? என்று சிந்திக்கக் கோருகின்றோம். ஈழ ஆதரவு சக்திகளை பிளவுபடுத்தி அதில் குளிர்காய்வதற்கான நகர்வாக மே 17 இயக்கத்தின் ’ட்ரோஜான்’ கட்டுரை அமைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கோரிக்கை நலன், அரசியல் நலன், மக்களின் நலன் என்பதே நம்மை இயக்குவதாக இருக்க வேண்டுமே அன்றி குறுகிய நலன்கள், காழ்ப்புணர்ச்சி, அடையாளச் சிக்கல் முதலியவை அல்ல.
 
மக்கள் மட்டும் தான் வரலாற்றைப் படைப்பதில் உந்து சக்தியாக இருக்கின்றனர் - மாவோ
 
- பரிமளா, செயற்குழு உறுப்பினர், சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Comments

15 comments

15
ஹரி ஹரன்
//இறுதியாக, எதிரியைத் தனிமைப்படுத்தி நட்பு சக்திகளை அணி திரட்டிக் கொள்வதே அரசியல் நடைமுறை. /// இப்படி நட்பு சக்திகளை அணி திரட்டிய விதத்தை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்..

நான் கேட்பது சேவ் தமிழ்ஸ் என்ற பெயரிலோ, தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற பெயரிலோ என்றாவது ஒரு போராட்டத்திற்காவது அனைத்து நட்பு சக்திகளையும் அழைத்து போராடி இருக்கிறீர்களா. இலலது நட்பு சக்திகளின் போராட்டத்தில் சென்று கலந்து கொண்டு இருக்கிறீர்களா.. பெயரே போராடாத பொழுதும்..
Karthik
தங்களின் எழுதுாற்றல் (எழுத்தாற்றல்) வியக்க வைக்கிறது. எந்த இயக்கமும் யாரையும் கேள்வி கேட்கக் கூடாது. ஈழ ஆதரவு எனும் பெயரில் வரும் அனைவரையும் அரவணைக்க வேண்டும் என சொல்கிறீர்கள். தங்களுக்கு ஈழப் போராட்ட வரலாறு தெரியுமா தெரியாதா என்பதல்ல கேள்வி. ஈழ விடுதலையை மறுக்கும் முயற்சியாக அங்கே காமன் வெழ்த் மாநாடு நடப்பதை தீவிரமாகக் கண்டிக்காமல், நடந்தால் போகக் கூடாது, போனால் மிக்ஸர் சாப்பிடக்கூடாது என கோரிக்கைகளை மாற்றுவது ஏன்? பகத் சிங் கேட்டதும் விடுதலை தான், நேதாஜி கேட்டதும் விடுதலை தான், ஆனால் அவர்கள் இருவரும் செத்தாலும் பரவா இல்லை வெள்ளையனுடன் உறவு வைத்து விடுதலை பெறுவோம் எனச் சொன்ன காந்தி வேண்டியதும் விடுதலை தான். ஆக, இப்போது புரிகிறதா கேள்வி? விடுதலை தான் நோக்கம் ஆனால் யாருடன் இணைத்து செயல்படுகிறீர்கல்? கோரிக்கையை சமரசம் செய்து உங்களின் இலக்கு விடுதலை தானா? இல்லை துரோக சக்திகளுடன் விரும்பும் உறவா? அங்கே மாநாடு நடந்துவிட்டால் இலங்கை இனப் படுகொலை செயியவில்லை என பாதி சர்வதேசம் அங்கீகரித்த மாதிரி. இந்தியன் ரோபோ போனால் என்ன போக வில்லை என்றால் என்ன? ஒரு செயல் நடக்கும் போது சர்வதேசம் எவ்வாறு அதை பார்க்கிறது என்பதையும், மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும், எதிரி எவ்வாறு பார்க்கிறான் என்பதையும் ஆராய வேண்டும். இந்தியா வந்தாலும் வராவிட்டாலும் ராசாபாக்சே ஒரு சர்வதேசத் தலைவானவான். தீர்வு மாதிரி ஒன்றைக் காட்டி மக்களை ஏமாற்றாதீர்கள். மே17 யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. தீர்வு மாதிரி ஒன்றைக் கண்டு ஏமாரா வேண்டாம் எனச் சொல்கிறோம்.
நற்றமிழன்.ப‌
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி இருக்கின்றது என்பதையும், செப் 7ல் நடந்த பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் நாங்கள் தோழமை அமைப்புகளையும், கட்சிகளையும் அழைத்து ஒன்றாக செயல்பட்டதையும், இஸ்லாமியர் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நடத்திய கருத்தரங்கு என நாங்கள் நடத்திய எல்லா கருத்தரங்குகளிலும், போராட்டங்களிலும் தோழமை அமைப்புகளுடன் இணைந்தே செயல்பட்டு வருகின்றோம்... நீங்கள் மறந்திருப்பின் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன் ஹரிஹரன்...ஒரு வேளை உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவாக இருக்கக்கூடும் என்பதால் சீக்கிரம் அதை உங்கள் நலனை கருத்தில் கொண்டு சரி செய்யவும்..
நற்றமிழன்.ப‌
கோரிக்கைகளை யாரும் மாற்றவில்லை நண்பர்.கார்த்திக். தயவு செய்து கட்டுரையை முழுமையாக படிக்கவும். அப்படி உங்களால் இயலாது என்றால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்...

//இந்நிலையில், ”இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது; இலங்கையில் நடைபெற்றால் அதில் இந்தியா பங்கு கொள்ள கூடாது” உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் திலீபனின் நினைவு நாளான செப்டம்பர் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணா நிலை என்ற போராட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.///

//அரசியல் கோரிக்கைகளில் குறைந்தபட்சம், அதிகபட்சம் எனத் தீர்மானிப்பது, அதற்கான போராட்ட வடிவங்களை முன்வைப்பது, அதில் முன்னேறுவது, தற்காலிகமாக பின்வாங்குவது என்பதெல்லாம் அரசியல் இயக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒரு தொடர் நடவடிக்கை. அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் நாம் நேர்மையாக அரசியலைக் கற்றுக் கொள்ள உதவும்.///

//இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையையும், இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாகக் கருதி, இதை ஒரு பரப்புரை பொருளாக கையிலெடுத்து, உணர்வாளர்களிடையே நிலவிக் கொண்டிருக்கும் தி.மு.க. எதிர்ப்புணர்வை ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில்’ பங்கேற்றிருக்கும் தோழர்கள் மீதும், தோழர் தியாகுவின் மீதும் திருப்பிவிடும் முயற்சியே ‘ட்ரோஜான் குதிரை’ கட்டுரை. //
thamizharasan
சேவ்தமிழ்ஸ் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சி ஆகியவை மே 17 அமைப்போடு உண்மையிலேயே சண்டை போடுகிறதா?அல்லது நடிக்கிறதா? மே 17 இயக்கம் யார் என்று திருப்பூர் குணா இதே கீற்று இணையத்தில் எழுதியிருந்தார்.அதை அப்போதும் நீங்கள் ஆதரிக்கவில்லை ,இப்போதும் சுட்டிக்காட்டவில்லை.அரசு ஆதரவு குழுவான மே 17ன் உண்மை முகத்தை தோலுரித்த அந்த கட்டுரை தற்போது கீற்று இணைய தளத்திலும் இல்லை.புலம்பெயர் தமிழர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு இந்திய ஆளும்வர்க்கத்திடமும் பணம் வாங்கிக்கொண்டு ஈழ நாடகம் நடத்துகிற எண்ணற்ற குழுக்கள் தமிழ்வாட்டில் உள்ளன. அதை தெரிந்துக்கொள்ள முடியாமல் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .ஊசிப்போன உங்களது விவாதங்களில் இருந்து எங்களால் உண்மையை கண்டறிய முடியவில்லை .தமிழ்நாட்டில் இருக்கிற யாரானாலும் அவர்களுக்கான ஈழ கடமை என்பது இந்திய ஆளும்வர்க்கதை முரியடிப்பதேயாகும். அதற்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய முழுவதும் பனி செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாடு முழுவதும் கூட வேலை செய்யாத இவர்கள் உலகையே ஆட்டிப்படைப்பதாக கோட்டம் அடிப்பது அயோக்கியத்தனமாகும். இந்த இடத்தில் புரட்சிகர கட்சிகள் செயலற்று கிடப்பதே காரணமாகும். புரட்சிகர கட்சிகள் செயல் பட்டால் மே 17ம் இருக்காது 27ம் இருக்காது.
vinothkumar vp
வடக்கு மாகாண தேர்தலை புற‌க்கணிக்க அழைப்பு விடுத்த ஒரே அமைப்பு தமிழ்நாட்டில் மே17. ஆனால் மக்கள் வாக்களித்தார்கள். அப்படியானால் அவர்கள் மே17 ஐ நிராகரித்துவிட்டார்களா? அல்லது ஈழ கோரிக்கையை விட்டு விட்டார்களா? 13ஆவது சட்ட திருத்தத்தை ஏற்று கொண்டு விட்டார்களா? கண்டிப்பாக இல்லை... சரி தமிழ்நாட்டில் மற்ற அமைப்புகள் ஏன் புறக்கணிப்பு கோர வில்லை... ஏதோ தான் தான் அறிவு ஜீவி போலவும் ஈழத்தின் மீட்பர் போலவும் நினைத்து மக்களையும் தமிழ்தேசிய தலைவர்களையும் முட்டால்க‌ளை போலவும் எண்ணிக்கொண்டு அங்கே கள‌ நிலைமை என்ன வென்றே புரிந்துக்கொள்ளாமல் அழைப்புவிடுத்த தங்கள் அறிவுஜீவிதனத்துக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அடி இது. சிங்கள் பேரினவாத இராணுவ கட்டமைப்பில் சிக்கியுள்ள மக்களால் தேர்தலை புற‌க்கணிக்க முடியுமா? அதற்கான சூழல் உள்ளதா? என எதையும் கருத்தில் கொல்லாமல் தாந்தான் சமரசமற்ற‌ சமர் செய்வதாகவும் நினைத்து அழப்பு விடுத்தீர்கள். அமையப்போவது ஒரு கைபாவை அரசு என தெரிந்தும் மக்கள் வாக்களித்தது, தங்களுக்கு சிறிதளவு உரிமையாவது கிடைக்கும், இராணுவமய‌ம் சிறிதாவது தள‌ர்த்தப்படும் என்பதாலேயன்றி சமரசமல்ல.. இதே போல் தான் ஐநா எதிர்ப்பு, அமெரிக்கா எதிர்ப்பு, பிரிட்டன் எதிர்ப்பு என்பதெல்லாம் கேட்பதற்கு முற்போக்கு போல தெரிந்தாலும் உண்மை நிலையில் இந்திய அரசை காப்பதாகவே அமையும் என்பதை எப்போது புறிந்துக்கொள்வீர்கள்.....
observer
புலிகள் செயல்பட்டுக்கொன்டு இருந்தபோதே, அதிகாரத்தில் இருந்து ஒன்றும் செய்யாதது மட்டுமின்றி, போராடியவர்களை ஒடுக்கிய ஒரு கட்சியோடு, புலிகள் செயல்படாத தற்போதைய காலகட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட கட்சியோடு இணைந்து செயல்படுவதை //அரசியல் இயக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒரு தொடர் நடவடிக்கை.// என்று கூறும் உங்கள் புரிதலைக் கண்டு மெச்சினோம். //கோரிக்கை நலன், அரசியல் நலன், மக்களின் நலன் என்பதே நம்மை இயக்குவதாக இருக்க வேண்டுமே// ஆமாமா. கோரிக்கை நலனில் நீங்கள் கொண்டிருந்த பற்றினைத்தான் உங்களது போராட்டங்களின் வாயிலாக மக்கள் பார்த்தனரே.
observer
//இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையையும், இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாகக் கருதி, //

அதானுங்களே! ரெண்டுமே எதிரெதிர் இல்லை அப்படின்னு 'தெரிஞ்ச' நீங்க மறந்தும் கூட 'அந்த' முதல் கோரிக்கையை உங்க போராட்டங்கள்ல வைக்கவே இல்ல பாருங்க. அதுதான் எனக்கும் ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
observer
//இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையையும், இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாகக் கருதி// இவை இரண்டும் ஒன்றிற்கு ஒன்று எதிரானது அல்ல என்பதை கடைசி வரைக்கும் விளக்கவே இல்லியே அம்முணி? அதை விட்டுப்போட்டுட்டு, மே 17 மீது இவ்வளவு நீண்ட புகாரையும் வாசித்து, இலவசமா அறிவுரையும் வழங்கி இவ்வளவு நீள கட்டுரை டைப் செய்து இருக்கின்றீகள். விரல்கள் எல்லாம் வலிக்குமே. போய் அயொடெக்ஸ் தடவிக்கிட்டு ரெஸ்ட் எடுங்க. வலி குறைஞ்சதும், ரெண்டு கோரிக்கையும் ஒரே விளைவைத்தான் கொடுக்கும் என்று ஒரு கட்டுரை எழுதி கீற்றில் போடுங்க. அதையும் படிப்போம்.
Sankar
நீங்கள் ஏற்பாடு செய்த பன்னாட்டு இளைஞர் மாநாட்டிற்கான நிதியைக் கோரி வைகோவை சந்தித்தபோது, 'இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது' என்று கூறி மாநாடு நடத்துவது தவறு; 'காமன்வெல்த் மாநாடே இலங்கையில் நடைபெற்க்கூடாது' என்பதுதான் சரியான கோரிக்கை என்று வைகோ கூறியபோது, பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினீர்களே. அப்பொழுது அவரிடம் இரண்டும் எதிரெதிர் இல்லை என்று கூறியிருக்கவேண்டியதுதானே! பணம் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் கூறிய கருத்துக்களுக்கு தலையாட்டிய நீங்கள், அதன்பிறகு நடந்த உஙகளுடைய போராட்டங்களில் திமுகவின் கோரிக்கையைத்தானே தூக்கிப்பிடித்தீர்கள்? தவறான கோரிக்கையை முன்னெடுத்திருக்கிறீர்கள் என்று மே 17 கூறியதும், உங்களுடைய கோரிக்கை சரியானது எனில், அந்தக் கோரிக்கைகளைப் பற்றி விளக்குவதுதானே முறை? அதை விடுத்து, மே 17 மீது சேற்றை வாரி இறைத்திருக்கின்றீர்களே? அது சரி, சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்!
Parimala
தியாகு தோழரின் உண்ணாவிரதம் கோரிக்கைகள், அதற்காக அவர் ஏற்படுத்திய எதிர்ப்பியக்கம், உண்ணாவிரதத்தின் முடிவு - இவை அனைத்தின் மீதான விமர்ச்சனங்கள் அனைத்திற்க்கு தோழர் தியாகு விளக்கம் அளித்துள்ளார். உங்கள் கேள்வியை, விமர்ச்சனங்களை தோழர் தியாகுவிடம் சேர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். அவருடைய காணொளி காட்சி இதே கீற்று இணைய தளத்தில் உள்ளது.
Parimala
நான் இங்கு தெளிவு படுத்த விரும்புவது - எங்கள் கட்டுரை மீதான உங்கள் விமர்ச்சனத்தை வரவேற்கும் அதே வேளையில்,கோரிக்கைகள்,போராட்டம் முடிந்த விதம் குறித்து உங்களுக்கு இருக்கும் விமர்ச்சனங்களை தோழர் தியாகுவிடமும் சேர்ப்பிக்க வேண்டும் என்பதே.தோழர் தியாகுவின் விமர்ச்சனத்திர்க்கான பதில் என்ற கட்டுரைக்கு யாரும் தங்கள் விமர்ச்சனங்களை பதிவு செய்ததாக தெரியவில்லை.

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25256:2013-10-23-08-30-34&catid=1:articles&Itemid=264
Vikraman
இலங்கையில் காமென்வெல்த் மானாட்டை புறக்கணிக்க இந்தியா முனைந்தால் அது இலங்கைக்கு ஒரு பெரிய அடியே. காமென்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய மற்றும் மிக அதிக செல்வாக்குள்ள நாடு. அதன் புறக்கணிப்பு, காமென்வெல்த் கூட்டமைப்பின் மேல் உள்ள நம்பகத்தன்மையை குலைக்கும். மேலும், 'இலங்கையில் நடக்கும் மானாட்டில் தாம் கலந்து கொள்வது மிகச்சரியே' என்னும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்திற்கு ஒரு மறுப்பாகவும்; இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதனை இந்தியா ஆமோதிப்பதாகவும் அது அமையும்.
இந்தியா, குறைந்தபட்சம் அப்படி ஒரு முடிவையாவது எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை. இந்த வகையில் இந்தியாவிற்குக் கொடுக்கும் அழுத்ததைக் குறைக்கவே அல்லது இந்தியாவைக் காப்பாற்றவே 'மே 17' தொடர்ந்து முயற்சிக்கிறதோ என்னும் சந்தேகம் எவர்க்கும் எழுவது இயற்கை தானே. இந்தியாவையே புறக்கணிக்க வேண்டும் என்னும் மனநிலையில் தமிழர்கள் திரண்டு வரும் தருணத்தில், அவ்வெதிர்ப்பை மடை மாற்றி அமெரிக்கா பக்கம் திருப்பியவர்களிடம் வேறெதனை எதிர்ப்பார்க்க முடியும்?
sivaraj
கருணாவோடு சேர்ந்து நிற்பவர்கள் எல்லாம் தலைவரின் பொன்மொழிகளை உபயோகிப்பதை கண்டு மனம் வெதும்புகிறது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.
நற்றமிழன்.ப‌
தொடக்கத்திலிருந்தே பன்னாட்டு இளைஞர் மாநாட்டின் முதன்மை மூன்று கோரிக்கை பின்வருபவை தான் என்பதை தங்களுக்கு நினைவூட்டுகிறோம்



இலங்கையை காமன்வெல்த்திலிருந்தே வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்!

காமன்வெல்த் மாநாட்டை தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் நடத்தக் கூடாது!

மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.