இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் பயணிக்கும் இன்றைய தலைமுறையினருக்குப் பெண்கல்வி குறித்தான புரிதல் என்பது எந்த வகையில் இருக்கும்? சமூகத்தில் தங்களைச் சுற்றிலும் வாழும் பெண்கள் பள்ளிக்குச் செல்வது, கல்லூரிக்குச் செல்வது, பிறகு உயர்கல்வி பெறுவது அல்லது வேலைவாய்ப்புகளை நோக்கி நகர்வது என்ற அளவில் மட்டும்தான் அந்தப் புரிதல் இருக்கும். அதே போல, பெண் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது எனில், அது வறுமையின் காரணமாக அல்லது குடும்பச் சூழல் காரணமாக என்ற அளவில் மட்டுமே அந்தப் புரிதல் விரிந்திருக்கும். காலம் காலமாக பெண்களுக்குக் கிடைத்த கல்வி இத்தனை எளிதாக இப்படியேதான் இருந்ததா அல்லது சிக்கல்கள் நிறைந்ததாக இருந்ததா என்பதை அறிந்துகொள்ள, காலச்சக்கரத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சுழற்றிப் பார்க்க வேண்டும்.

மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து தாய்வழிச் சமூகமாக உருவாகி வளர்ந்து வந்த இந்தச் சமூகத்தின் நிலை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதைமாறி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் தந்தை வழிச் சமூகமாக மாறியது. பெண்களிடமிருந்து கல்வி கற்கும் உரிமையைப் பறித்துக் கொண்டதுதான் அவர்களை அடிமைப்படுத்த மிக வசதியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

சங்க காலத்தில் பெண்கல்வி

தமிழர் மரபில் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினர் என்பதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஔவையார், பொன்முடியார், ஆதிமந்தியார், காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார், இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், காவற்பெண்டு, நப்பசலையார் எனச் சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்ப் பட்டியல் நீள்கிறது. 42 பெண்பாற் புலவர்களின் பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பண்டைத் தமிழக மகளிர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர். பெண் கல்வியில் சிறந்த நாடாகச் சங்ககாலத் தமிழகம் விளங்கியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடின்றி கல்வி பயிலும் வாய்ப்பு சிறந்திருந்திருக்கின்றது. சோழர்கள் காலத்திலும் கூட பெண்கள் கல்வியறிவு பெறுவது சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. அதன் பிறகு இடைக்காலத்தில்தான் பெண்கள் கல்வி பெறுவதில் குடும்ப, சமுதாயச் சிக்கல்கள் உருவாகி முற்றிலும் கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகளால் பெண்கல்வி இங்கே மீட்டெடுக்கப்பட்டு வளர்ந்தது.

savitribai phuleபெண்கல்விக்காகக் குரல் தந்தவர்கள்

சமூகத்தில் பெண் விடுதலைக்கான முதன்மைப் பேராயுதம் கல்வி ஒன்றே. பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான், அவர்களது அடிமைத்தளையை வெட்டி எறியமுடியும். ஆகவே, பெண்கள் கல்வி கற்க வேண்டும், அப்போதுதான் இந்தச் சமூகத்தில் உயர்வு பெற முடியும் என்று பெண்கல்விக்காகப் போராடி, தங்கள் வாழ்க்கையைப் பெண்கல்விக்காகவே அர்ப்பணித்த பலரையும் நமது கடந்த கால வரலாற்றில் நினைவுகூரலாம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வந்த போது உருவான கிறித்தவ மிஷனரிகளால் பெண்களுக்கான கல்வி பரவலாக வளர்ந்த வரலாற்றை அறிவோம். பெண்கள் கல்வி பெற்று வந்ததில் கிறித்தவ மிஷனரிகள் மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வங்காளத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மகாராஷ்டிராவில் ஜோதிராவ் - சாவித்திரிபாய் பூலே தம்பதி, பாத்திமா ஷேக், தென்னிந்தியாவில் தருமாம்பாள், கமலாதேவி சட்டோபாத்யாயா, பாரதியார், பெரியார் ஈ.வெ.ரா உள்ளிட்ட பலரும் பிற்காலத்தில் பெண்கல்விக்காகக் குரல் கொடுத்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெண்கள் கல்வி கற்பது என்பது அத்தனை சுலபமல்ல என்பதுதான் யதார்த்தம்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்" என்றான் பாரதி ஒரு நூற்றாண்டுக்கு முன்பே. அதேபோல் பெண்களின் கல்விக்காகக் கவிதைகளால் உரக்கக் குரல் கொடுத்தவர் நமது பாவேந்தர் பாரதிதாசன். அண்மைக் காலத்தில் இந்தக் கால் நூற்றாண்டில், தற்போது வாழ்ந்து வரும் மலாலா யூசுப்சாய், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதற்கான தடைகளை உடைக்கும் பணியைச் செய்து வருவதையும் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான முதல் பள்ளி

இந்தியாவிலேயே நமது தமிழ்நாட்டில்தான் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளி தொடங்கப்பட்டது. ஆம், சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங்க் மேல்நிலைப் பள்ளிதான் (Bentinck HSS) 21 மாணவிகளுடன் முதன்முதலில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான பள்ளி. இதை லண்டன் மிஷனரி சொசைட்டியைச் சேர்ந்த அன்னா ட்ரூயூ (Mrs. Anna Drew) 189 வருடங்களுக்கு முன்பு, 1837 ஆம் ஆண்டு தொடங்கினார். இன்று வரை பெண்கள் கல்வி கற்பதற்கான சிறந்த பள்ளிகளுள் ஒன்றாகச் சென்னையில் இயங்கி வருகிறது. தற்போது இங்கு 2000 பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர். அதே போல் 1864-இல் சென்னை ஃபோர்ட் மிஷன் பள்ளியில் அகஸ்டா பிளான்ட்ஃபோர்ட் (Augusta Blandford) என்பவர் பெண்கள் கல்வி பயிலத் தனிப்பள்ளியைத் தொடங்கினார். சுமார் 162 ஆண்டுகளாகக் கல்விச் சேவையைச் செய்து வருகிறது இந்தத் துறைமுகப் பள்ளி.

அதே காலகட்டத்தில், வங்காளத்தில் பெண்கல்விக்காகக் கிராமம் கிராமமாகச் சென்று பள்ளிகளை உருவாக்கியவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலேவும் சாவித்திரிபாய் பூலேவும் தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக முதல் பள்ளியை 1848-இல் துவங்கிய வரலாற்றையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்குக் கல்வி தர முன்வந்ததால் கற்பித்தல் பணிக்காகச் சாலையில் நடந்து செல்லும்போது, சாவித்திரிபாய் பூலே மீது சேற்றையும் மண்ணையும் மலத்தையும் வீசிய இந்தச் சமூகத்தின் பார்வையிலிருந்து பெண்கல்வியின் போதாமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சமூகப் போராட்டங்களின் விளைவாகத்தான் பெண்கள் கல்வி பெறுவது சாத்தியமானது என்பதை வரலாற்றின் வழியே நாம் அறியலாம்.

மேலும் 1894-இல் தமிழ்நாட்டில் கோவையில் வணிகர் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து பெண்களுக்கான பள்ளியை கோவை இராஜ வீதியில் உருவாக்கினர். இரண்டாயிரம் மாணவிகளுடன் இன்றும் மிகச்சிறப்பாக நடந்து வரும் இப்பள்ளி நூற்று முப்பது வருடங்களைக் கடந்து பெண் குழந்தைகளுக்காகச் சேவை செய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் என்ற பெண்கள் பள்ளியை 1942-இல் குஜராத்தைச் சேர்ந்த டி. ஓ. ஆஷர் தனது மனைவி ஜெய்வாபாயின் நினைவாக நிறுவினார். இன்று 7000-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி பயிலும் மிகப்பெரிய பள்ளியாகத் திகழ்கிறது.

தபிதா பாபு, இவர் பெண்கள் வீட்டிலிருந்தே கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்கள் அறிவை வளர்க்கும் ஆர்வத்திலும் 1865-இல் 'ஜெனானா கற்பித்தல்' என்ற கல்வி பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். தானே நேரடியாகப் பெண் குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று கல்வி போதித்தார். அதற்கென ஒரு குழு அமைத்துச் செயல்பட்டார். சென்னையில் ஜெனானா முறைக் கல்வியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இவரே. ஆறு பள்ளிகள் தபிதா பாபுவின் மேற்பார்வையில் இயங்கின. அதனைப் பரவலாக்கி, பெண்கள் கல்வி பயில்வதில் இருந்த தடைகளை நீக்க முயற்சித்தார். பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களையே நியமித்தார். அதற்காகப் பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்க, 'மெட்ராஸ் கிறிஸ்தவப் பெண் பயிற்சிப் பள்ளி'யை 1871-இல் தொடங்கினார். அதன் மூலம் பயிற்சி பெற்றவர்களைப் பல்வேறு மிஷன்களின் ஜெனானா நிறுவனத்தில் போதிப்பதற்காக அனுப்பினார்.

திருநெல்வேலிப் பகுதியில் பெண்களுக்கான பள்ளியை உருவாக்கி, பிறகு அது கல்லூரியாக வளர்ந்து இன்றும் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனமாக இருப்பது சாரா டக்கர் பெண்கள் கல்லூரி ஆகும். தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி இதுவே. 1895-இல் இங்கிலாந்து நாட்டின் சாரா டக்கர், தனது நண்பர்கள் மற்றும் தனது நகைகளை விற்று இங்குள்ள பெண்கள் கல்வி பயிலப் பள்ளி, கல்லூரிகளைக் கட்ட உதவியவர். வரலாறு நெடுகிலும் பெண்கல்வியின் வளர்ச்சி இப்படிப் பல உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட மனிதர்களாலேயே சாத்தியப்பட்டு வந்தது.

19-ஆம் நூற்றாண்டில் பெண்கல்வி

கடந்த இருநூறு ஆண்டுகளில் நமது சமூகத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்று வந்ததை, கல்வியறிவு பெற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில் பாலின வேறுபாடு மிக அதிகமாக இருப்பதைக் காணலாம். பெண்கள் மிகக் குறைந்த சதவீதத்திலேயே கல்வியறிவு பெற்றதற்கான தரவுகள், பிரிட்டிஷார் ஆட்சி செய்த பொழுது எடுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

தாமஸ் மன்றோ 1822-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, வருவாய்த்துறையினர் வழியாக ஒவ்வொரு மாவட்டக் கலெக்டரிடமிருந்தும் கல்வி பற்றிய விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டன. அதில் மாவட்டத்தின் மக்கள் தொகை, பெண்கள் எண்ணிக்கை, ஆண்கள் எண்ணிக்கை, பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை, உயர்கல்வி வாய்ப்புகள், அங்கு பயின்ற ஆண்-பெண் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பக் கோரப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வி குறித்த தகவல்களைக் கடிதங்கள் மற்றும் விவரப் பட்டியலாக அனுப்பியுள்ளனர். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும்போது நமக்குப் பெண்கல்வி குறித்த விபரக்குறிப்புகள் கிடைக்கின்றன.

மலபார், விசாகப்பட்டினத்தில் ஜெய்ப்பூர் பகுதிகள் நீங்கலாக பிராமண, செட்டியார், வைசியர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் யாருமே பள்ளிகளில் கல்வி கற்றதாகத் தெரியவில்லை. பாரசீகப் பள்ளிகளில் கணிசமான பெண் குழந்தைகள் கல்வி கற்றதாகத் தெரிகிறது. பிராமண மற்றும் இந்துப் பெண்களுக்குப் பொதுவாகக் கல்வி தரப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் கல்வி தரப்பட்டால் அவர்களின் ஒழுக்கம் கெடுவிடும் என்று சொல்லிப் பொதுவாக நடன மங்கைகளுக்கு மட்டுமே கல்வி தரப்பட்டிருக்கிறது.

திருச்சியில் 56, சேலத்தில் 27 முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி பெற்றுள்ளனர். இந்துக் குழந்தைகளின் எண்ணிக்கையும் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை. நடனப் பெண்கள் அல்லது கோயில்களில் தேவதாசிகளாக இருந்த பெண்கள் கல்வி பெற்றதாக மசூலிப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளின் கலெக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண்களில் நடனமகளிருக்கு மட்டுமே கல்வி தரப்பட்டிருக்கிறது. அவர்கள் பொதுவாக நெசவுத் தொழில் செய்யும் கைக்கோளர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்றாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவே. இதை முதன்மை கலெக்டர் ஜே. சல்லிவன் 23/11/1822 அன்று வருவாய்த் துறைத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதராஸ் பிரசிடென்சியின் பொதுக் கல்வி இயக்குநரின் 1879-1880 ஆம் ஆண்டுக்கான அறிக்கையைப் பார்த்தால் கல்லூரிகள், மேல்நிலை, இடைநிலை, ஆரம்பப்பள்ளிகள், விசேஷப் பள்ளிகள், தொழிற்கல்வி மையம் உட்பட மதராஸ் பிரசிடென்சியில் அனைத்து வகைப் பள்ளிகளின் எண்ணிக்கை 10,553. ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 10,106. அங்கு படித்தவர்களில் பெண்கள் 29,419 பேர்; ஆனால் ஆண்களின் எண்ணிக்கையோ 2,38,960 பேர். ஆண்களுடன் ஒப்பிடும்போது வெறும் 12% தான் பெண்கள் கல்வி பயின்றுள்ளனர்.

1823-இல், மலபாரில் தனிப்பட்ட முறையில் உயர்கல்வி பெற்றவர்களில் 1,545 ஆண்கள் எனில் 41 பேர் மட்டுமே பெண்கள். ஆனால் மொத்தமாக வாழும் எண்ணிக்கையில் ஆண்கள் எண்ணிக்கையும் பெண்கள் எண்ணிக்கையும் சமமாக இருந்திருக்கின்றனர். இரு தரப்பிலும் ஏறக்குறைய நாலரை லட்சம் (4,58,364 ஆண்கள் & 4,49,207 பெண்கள்) என்று இருந்தாலும் கல்வி பெறுவதில் எவ்வளவு இடைவெளி என்பதனை நாம் கவனிக்க வேண்டும்.

மதராஸ் பிரசிடென்சி அரசால் 1826-இல் பரிசீலிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்களில், கவர்னரான தாமஸ் மன்றோவின் கூற்றுப்படி பள்ளிக்கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதே. அதேபோல மதராசில் வீடுகளில் இருந்து கல்வி பெற்றவர்களை எடுத்துக் கொண்டால், ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண் குழந்தைகளில் 517 பேர் (0.20%) மட்டுமே கல்வி பெற்று இருக்கின்றனர். ஆனால் அதே இரண்டரை லட்சம் ஆண்களில் 26,446 (10.58%) பேர் கல்வி பெற்று இருக்கின்றனர் என்கிறது ஆவணம்.

1854-இல் வெளிவந்த சார்லஸ் உட் அறிக்கை (Wood's Despatch) பெண்கல்வியால் சமூகத்தில் ஏற்படும் சிறப்பான மாற்றங்கள் பற்றிப் பேசுகிறது. 1882-இன் சர் வில்லியம் ஹண்டர் அறிக்கையும் பெண்கல்விக்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால் சமூகத்தின் யதார்த்தம் என்னவோ பெண்களைக் கல்வி கற்க அனுமதிக்காத சூழ்நிலையுடன்தான் தொடர்ந்தது என்பது வரலாறு. 1901-இல் சென்னை மாகாணத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் 0.9% மட்டுமே. ஆனாலும் நாடு விடுதலை அடைந்தபோது கல்வி பெற்றவர் மொத்தம் 12 சதவீதம் பேர் தான். 2011-இல் எழுத்தறிவு பெற்றவர்களான 74 சதவீதத்தில் பெண்களின் சதவிகிதம் 65.46. தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் 73.86 சதவீதம். இதை 1826 கணக்கீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது மொத்த கல்வி பெற்றவர்கள் 10.78%. அதில் பெண்கள் 0.20% மட்டுமே.

இன்று சூழ்நிலை மாறி உள்ளது. உயர்கல்வியில் பெண்கள் இன்று நல்ல உயரத்தை எட்டி உள்ளனர். இன்று நாம் பெண்கல்வியில் வளர்ச்சி நிலையில் பயணிக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதனை நம்மால் காண முடிகிறது.

இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி வங்கத்தில் உருவான பெதுன் கல்லூரி (Bethune College). தமிழகத்தில் 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராணி மேரி கல்லூரிதான் (Queen Mary's College) முதல் பெண்கள் கல்லூரி. அப்போது இந்தியாவில் இருந்த மூன்று பெண்கள் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மும்பையில் உள்ள ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) பல்கலைக்கழகம், மகரிஷி டாக்டர் தோண்டோ கேசவ் கார்வே என்பவரால் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பெண்களுக்காக 1916-இல் தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். இதன் உருவாக்கம்தான் இந்தியப் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்குப் போடப்பட்ட முதல் விதை. 1921-இல் இந்தியாவில் முதல் ஐந்து பெண் பட்டதாரிகள் இங்கிருந்துதான் உருவானார்கள் என்கிறது வரலாறு.

உயர்கல்வியில் பெண்கள் இன்றைய நிலையை அடைவதற்குப் பின்னால் ஏராளமானவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. 1952-இல் ஏ. லட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் அமையப்பெற்ற கல்விக் குழுவின் முன், ஈ.வெ.ரா பெரியாரும் ஜி.டி. நாயுடுவும் நேரில் சென்று பெண்களுக்காகத் தனியாகக் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-17 அறிக்கையின் படி இந்தியாவில் பெண்களுக்காகத் தனியாக 15 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. தற்போதுள்ள 40,026 கல்லூரிகளில் 9.3% கல்லூரிகள் மட்டுமே பெண்கள் கல்லூரிகள். நமது கல்வி முறையில் பயில்பவர்களில் 46.9% பேர் பெண்கள் என்பதும், இந்த வரலாற்றுப் பார்வையுடன் சேர்த்து பெண் குழந்தைகளுக்காகப் பல பிரிவுகளில் போராடியவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்களுள் பெண் போராளிகள் சிலர்: இஸ்லாமியச் சிறுமிகளின் கல்விக்காகப் பாடுபட்ட பேகம் றோகேயா சக்காவத் உசேன், பெண்கல்விப் பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த சந்திரபிரபா சைகியானி, குழந்தைகள் கல்வி உரிமைக்காகக் குரல் எழுப்பிய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) முதல் பெண் தலைவர் இந்தர்ஜித் கௌர் எனப் பட்டியல் நீளும். இவற்றின் நீட்சியாக அண்மைக் காலமாக 25 ஆண்டுகளுக்குள்ளான பெண்கல்வி குறித்த வளர்ச்சியையும் நாம் ஆய்வுக்கு உட்பட்ட வேண்டியிருக்கிறது.

பெண்கள் கல்வி பெறுவது இங்கு அரசியல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் சார்ந்ததாகவும் இருப்பது பெண்கல்வியை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தமிழக அரசு பெண்கல்விக்கான பல முயற்சிகளை எடுத்து வருவதை மறுக்க முடியாது. இங்குள்ள கல்வி முறையின் அடிப்படையில் மதிப்பெண்கள் சார்ந்த, தேர்ச்சி சதவீதம் சார்ந்த கல்வி முறையில் முன்வரிசையில் நிற்பவர்கள் பெண் குழந்தைகளே.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வரை, முதல் வகுப்பிலிருந்தே தேர்ச்சி பெறாதவர்களை ஒரே வகுப்பில் தேக்கம் செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. கிராமங்களில் பெண் குழந்தைகளை வீட்டு வேலை செய்ய, கை வேலைகளுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், பருவ வயது அடைந்தவுடன் திருமணம் செய்தல் என்று பலவாறு பெண் குழந்தைகள் கல்வி பெறுவதில் கூடுதல் தடைகள் இருந்தன. ஆனால் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கொண்டு வந்ததும், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உருவாகிக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வியில் கொண்டு வந்த திட்டங்களும் பெண்கல்வியைப் பாதுகாப்பதில் குறிப்பிட்டளவில் பங்கு வகித்தவை என்பதை நாம் ஏற்க வேண்டும். மேற்குறிப்பிட்ட SSA திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், பெண்கல்விக்காக அதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பாராட்டத் தகுந்தவை.

பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடிப்பதிலும், உயர்கல்வி பயில முயற்சிகள் செய்வதிலும், அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பல வழிகளில் அரசும் கல்வித் துறையும் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றன. மிகச் சமீபமாக உயர்கல்வி சேர அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் "புதுமைப் பெண் திட்டம்" வரையில் பெண்கல்வியை நேர்மறை வளர்ச்சியாகப் பார்க்கலாம்.

ஆனால் பெண்கல்வியின் மற்றொரு பகுதியை கவனித்தால் மாற்றங்கள் அவசியமானதாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாலியல் ரீதியான பிரச்சினைகள், குழந்தைத் திருமணம், இணைய வழிக் கல்வியின் எதிர்மறை அம்சங்கள், நமது ஆண்மய சமூக அமைப்பு, குடும்ப அமைப்புகள், பெண்கள் மீதான சமூகத்தின் கற்பிதங்கள், பொருளாதார சமத்துவமின்மை, கல்வியில் தனியார்மயப் போக்கின் அதீதத் தாக்கம் ஆகியவற்றாலும் பெண்கள் கல்வி பெறுவதில் பல தடங்கல்களைச் சந்தித்து வருகிறோம். இந்நிலை மாற வேண்டும், அப்போதுதான் பெண்கல்வியின் வளர்ச்சி இன்னும் விரும்பத்தக்க வகையில் வளரும் என்பதில் ஐயமில்லை.

(குறிப்பு: தரவுகள் உதவி - 'அழகிய மரம்' நூல் - தரம்பால் / தமிழில் - பி.ஆர். மகாதேவன்; 'பெண்ணே பேராற்றல்' - ப.திருமலை)

 சு. உமா மகேஸ்வரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.