புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் தமிழகம் அவரை அவர் தகுதிக்கு ஏற்பக் கொண்டாடவில்லை என்றாலும் அறவே கைவிட்டு விடவில்லை. அவரைத் திராவிட இயக்கம் தூக்கிப் பிடித்ததால்தான் ந.பிச்சமூர்த்தி போன்றவர்களின் சிறப்புகள் பேசப்படாமற் போயிற்று என்று ஆய்வாளர்கள் சிலர் முன்வைத்த கருத்துகளும் உண்டு. ஆயின் திராவிட இயக்கம் பாரதிதாசனைத் தூக்கிப் பிடித்ததாலேயே அவரைத் தொட அஞ்சி விலகியவர்கள் பலர் என்பதே வரலாறு. விலகிய சிறப்புகளும் பல. உலகப் பார்வையோடு எண்ணிலாக் கவிதைகள் எழுதிய அவரை ஓர் உள்ளூர்க் கவிஞர் என்று சுருக்கிவைத்துத் திறனாய்வு செய்தவர்களும் உண்டு. நான் தக்க சான்றுகளோடு நோபல் பரிசு பெற்ற பாப்லோ நெருதாவுடன் அவரை ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியபோது அதை ஒப்ப முடியாமல் உள்ளம் கொதித்தவர்கள் உண்டு. முற்போக்கு இடதுசாரிப் பொதுவுடைமையாளர்களும், பெரியாரியத் தாக்கம் பெரிதாகப் பாரதிதாசனிடம் இருந்ததாலேயே அவரை உரிய இடத்தில் வைத்துப் பார்க்கவோ பாராட்டவோ முன்வரவில்லை.பாரதிதாசன் பாடல்களைத் தொகுத்து நோக்கினால் செம்பாதி தமிழ் உணர்வு முதன்மை கொண்டதாகவும் மற்றொரு செம்பாதி பொதுவுடைமை பற்றியதாகவும் இருக்கும் என்று பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடுகிறார்.
நானா பொதுவுடையமைக்கு விரோதி? என்ற தலைப்பிலேயே பாரதிதாசன் ஒரு கவிதையும் எழுதியுள்ளார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவாவின்பால் பேரன்பு கொண்டவர் பாரதிதாசன்.
ஜீவா இறந்தபோது அவரைப் பாராட்டியும் அவர் மறைவுக்கு மனம் கலங்கியும் பாரதிதாசன் 1963ல் எழுதிய வெண்பாக்களே அவர் எழுதிய கடைசியான கவிதைகள் என்று ஜீவபாரதி உலகப்பண் பாட்டு என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆயின் அதற்குப் பிறகும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். கொங்குநாட்டு மடத்துக்குளத்திலும் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியிலும் நடைபெற்ற கவியரங்குகளில் தலைமையேற்றுக் கவிதைகள் வழங்கியுள்ளார். காஞ்சிக் கவியரங்கில் பாடிய தலைமைக் கவிதை பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் நடத்திய தமிழாலயம் ஏட்டில் வெளிவந்தது. மடத்துக்குளத்துக் கவியரங்கக் கவிதை பழநி இளங்கம்பன் ஏட்டில் வெளியிடப்பட்டது. 1963 நவம்பரில் இராசிபுரம் அரங்கசாமி, தாம் நடத்துகிற மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு ஒப்புதல் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் பாரதிதாசனாருக்கு வந்தபோது நான் சென்னையில் அவர் வீட்டில் இருந்தேன். வருவதற்கில்லை என்ற மறுமொழியை எழுதுமாறு என்னைப் பணித்தார். ஆனால் இராசிபுரத்திற்கு ஒப்பினால் அப்படியே ஈரோட்டுக்கும் அழைத்துக் கொள்ளலாமே என்ற ஆசையில் அவரிடம் நயமாகப் பேசி நான்தான் அதை இசைவுக்கடிதம் ஆக்கினேன்.
ஈரோட்டில் மூன்று நாள்கள் மிகுந்த மகிழச்சியோடு தங்கி யிருந்தார்; பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன் வீட்டை அடைமானம் வைத்துப் பெற்ற பணத்தில் பாண்டியன் பரிசு என்னும் தன்காவியத்தைத் திரைப்படமாக்கச் சென்னை வந்த பாரதிதாசன் ஏமாற்றங்களை அடுக்கடுக்காகப் பெற்று, உடல்நலமும் கெட்டு, சீர்குலைந்து போனார். அச்சூழ்நிலையில் ஒரு நாள் அவரைப் பார்க்க வந்த நடிகவேள் எம்.ஆர்.இராதா “எதுக்கையா உங்களுக்கு இந்த ஆசை? பேசாமல் கவிதை எழுதிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு இங்கு வந்து படம்கிடம்னு மாட்டிக்கிட்டு அழிஞ்சு போறீங்க?" என்று கேட்டார். இராதா சொன்னதே மெய்யாகப் போயிற்று. அவருக்கு வேண்டிய அரசியல் சுற்றமும் அருகில் இல்லை. சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்நிலையிலும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். 14.4.64-ல் எழுதப்பட்ட அக்கடிதம் அவர் எழுதிய கடைசிக் கடிதம் ஆகும். 21.4.64ல் பாரதிதாசன் இறந்து விட்டார்.
புதுவையில் அவர் குடும்பம் தடுமாறித் தவித்தது. தலைமகனான மன்னர் மன்னனுக்குத் தக்க வேலைவாய்ப்பு இல்லை. அடைமானம் வைக்கப்பட்ட வீட்டையும் மீட்க முடியாத நெருக்கடி. இந்நிலையில்தான் மன்னர்மன்னன் புதுவை முதல்வராக அப்போதிருந்த சுப்பையாவைக் காணச் சென்றிருக்கிறார். பொதுவெளியில மன்னர்மன்னனும் சுப்பையாவை குறைகள் சொல்லிக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் மன்னர்மன்னனைக் கண்டதும் நெகிழ்ச்சியோடு சுப்பையா வரவேற்று அன்பு காட்டினார். சுப்பையாவை விட்டுவைப்பது தப்பையா என்றெல்லாம் பாரதிதாசன் குயில் இதழில் எழுதியதை மறந்துவிட்டு அவர் குடும்பத்துக்கு உதவ முதல்வர் சுப்பையா முன்வந்தார். அடைமானத்திலிருந்து வீட்டை மீட்டுக் கொடுத்தார்.
தக்க வேலை இல்லாமல் தவித்த மன்னர்மன்னனுக்கு அப்போது மத்திய அரசில் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த நந்தினி சத்பதியிடம் பரிந்துரைத்து அகில இந்திய வானொலியில் வேலை வாய்ப்புக் கிடைக்கச் செய்தார்.
அப்போது மன்னர்மன்னனிடம் சொல்லியது "கவிஞருக்குச் சோவியத்துக்குச் செல்லும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். அங்கு நடந்த உலக அமைதிப் பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளக் கவிஞரை அனுப்ப வாய்ப்பு இருந்தது. எங்கள் பொதுவுடைமைக் கட்சி காட்டிய தயக்கம், அது நடைபெறாமற் போனது, அதற்கெல்லாம் பரிகாரமாக உனக்கு நான் இதைச் செய்யக் கடமைப் பட்டவன்"
ஆயின் என்ன துயரம்! ஒரு மாபெரும் கவிஞனின் விமானம் ஏற வேண்டும், வெளிநாடு காண வேண்டும் என்னும் ஆசைக்கனவு கானல் படகில் மூழ்கியே போயிற்று, நிறைவேறவில்லை.
- ஈரோடு தமிழன்பன்