வ.உ.சிதம்பரனார் ( 1872 -- 1936 ) அவர்களின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கப்பலோட்டிய தமிழரைச் சிறப்பிக்கும் வண்ணம் இடது (21) இதழ் வ. உ. சி. அவர்களின் சிறப்பிதழாக மலர்கிறது.

விடுதலைப் போராட்டத்தியாகி, தமிழறிஞர், தொழிற்சங்கச் செயல்பாட்டாளர், மக்கள் வழக்குரைஞர், பெண்ணுரிமைப் போராளி, எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சமநீதிக் காவலர் எனும் பன்முக ஆளுமைகள் கொண்ட வ. உ. சி. அவர்களின் தகுதிக்கேற்ற அங்கீகாரத்தை இதுவரை இந்திய ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒருமுறை அவருக்காக அஞ்சல்தலை வெளியிட்டதோடு சரி.

இதுவரை காட்டிய அலட்சியத்திற்கு ஈடுசெய்யும் வகையில் அன்னாரது 150-ஆம் ஆண்டு பிறந்தநாளை மிகச் சிறப்பாக ஒன்றிய அரசு கொண்டாட வேண்டும். அவருக்கு மீண்டும் ஓர் அஞ்சல்தலை மற்றும் சிறப்பு நாணயமும் வெளியிட வேண்டும்.

சென்னையிலுள்ள கடல்சார் பல்கலைக் கழகத்திற்கு வஉசி அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அவரது முழு உருவப் படம் நிரந்தரமாக வைக்கப்பட்டு, முறைப்படி அஞ்சலி செலுத்த வேண்டும்.

தமிழக அரசைப் பொறுத்த வரை தமிழகத்திலுள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களில் வஉசி பெயரால் தனி இருக்கை நிறுவி, அவற்றின் வழி வ. உ. சி. அவர்கள் குறித்த ஆய்வுக் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்திட வேண்டும். ஆய்வு நூல்களையும் வெளியிட வேண்டும்.

வ. உ. சி. அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாற்றையும், அவரது படைப்புகளையும் ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும்.

வஉசி அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளை "வழக்கறிஞர் நாள்"  என அறிவித்து, சிறந்த வழக்கறிஞர்களுக்கு வ. உ. சி. அவர்கள் பெயரால் விருது வழங்க வேண்டும். சென்னை உத்தண்டியில் இயங்கிவரும் மத்திய கடல்சார் பல்கலைக்கழகத்தினை வஉசி அவர்கள் பெயரால் மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல், வ.உ.சி அவர்கள் சென்னையில் வாழ்ந்த இடங்களான பரிபூர்ண விநாயகர் கோவில் தெரு, சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் வீதி மற்றும் பெரம்பூர் கந்தபிள்ளை தெரு ஆகிய இடங்களில் வஉசி வாழ்ந்த நாள்களைக் குறிக்கும்படியான நினைவுப்பலகை வைக்கப்பட வேண்டும். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த இலண்டன் தெருவில் இப்படிப்பட்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் சென்னை வால்டாக்ஸ் சாலையை வ. உ. சி. சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பாக வஉசி அவர்களின் நாட்டுப்பற்று மற்றும் மொழிப்பற்று ஆகியவற்றை இளைஞர்களிடையேயும், மாணாக்கர்களிடையேயும் கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியமான கடமையாகும்.

வ. உ. சி அவர்கள் முதலில் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டும். அதன் மூலம் இந்தியத் துணை கண்டம் முழுவதும் அவரது புகழ் பரவ வழி பிறக்கும்.

அரசுகளும் மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணியாகும் இது.

இவை தவிர, வ. உ. சி. அவர்களது காலத்திலிருந்து இன்று வரை தொடரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் சிலவற்றைக் களைவதும் மிகவும் முக்கியமானது.

ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் (124 - A) நாடுகடத்தலுடன் கூடிய ஆயுள் தண்டனை வஉசி அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. இந்தக் கருப்புச் சட்டத்தின் கீழ் பகத்சிங் முதல் காந்தியார் வரை எண்ணற்ற விடுதலைப் போராட்டத் தியாகிகள் சிறையில் அடைக்கப் பட்டார்கள். எனவே இந்தியா விடுதலை அடைந்தவுடன், இந்தக் கருப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்படும் எனச் சவகர்லால் நேரு உட்படப் பலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் விடுதலை பெற்ற பிறகும் இக்கருப்புச்சட்டம் நீக்கப்படவில்லை. மாறாக, எண்ணற்ற சமூகச்செயல் பாட்டாளர்கள், சனநாயகப் போராளிகள் இக்கொடிய சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டனர். இச்சட்டத்தை இயற்றிய இங்கிலாந்திலேயே இச்சட்டம் முற்றிலும் நீக்கப்பட்ட விட்டது. ஆனால், இந்தியாவில் இது இன்னும் இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து நீடித்து வருவது மிகப் பெரும் அவலம்.

இச்சட்டம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அவர்கள் குறிப்பிட்டது கருதத் தக்கதாகும்.

"ஒரு மரத்துண்டிலிருந்து நாற்காலி செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ரம்பத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தக் காட்டையே அழிப்பதற்கு இணையாக 124 - A சட்டப் பிரிவு உள்ளது. இதனால் உண்மையிலேயே தண்டிக்கப் படுபவர்கள் மிகவும்.குறைவு. இதன் விசாரணையே ஒரு தண்டனை போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்குப் பொறுப்பேற்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காகக் கிராமத்தில் உள்ள ஒருவரை ஒரு காவல்துறை அதிகாரி தண்டிக்க விரும்பினால், அவர் இந்தப் பிரிவை பயன்படுத்த முடியும். எனவே மக்கள் இதுகுறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்தச் சட்டத்தை ஏன் தொடர வேண்டும்?” எனும் நீதிபதி அவர்களின் கேள்வி மிகவும் பொருத்தமடையதாகும்.

விடுதலைப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டதை வரவேற்று, வ. உ. சி. அவர்கள் தூத்துக்குடியில் பேசக்கூடாது என ஆங்கில அரசு தடை போட்டது. ஆனால், அதை மீறிக் கருத்துரிமையை நிலைநாட்டும் வண்ணம், வ. உ. சி அவர்களும் சுப்பிரமணிய சிவா அவர்களும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வீரவுரை ஆற்றினர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வ. உ. சி. அவர்கள் காலத்திலிருந்த அதே சூழல் இன்றும் நிலவுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act - UAPA) எனும் சட்டத்தைப் பயன்படுத்தி கருத்துரிமைப் போராளிகள் சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டுள்ளனர்.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் "தீவிரவாதிகள்" என முத்திரை குத்தப்பட்டு, அவர்களுக்குப் பிணை மறுக்கப் படுகிறது. சிறையில் இருக்கும் அவர்களே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற கொடுமையான சட்டப்பிரிவுகள் இதில் அடங்கியுள்ளன.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஸ்டேன்சாமி அவர்கள் பிணை கிடைக்காமல் சிறையிலேயே மடிந்து விட்டார்.

2014-ல் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு, இந்தியாவில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஊபாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பான்மையோர் ஏழை எளிய அப்பாவி மக்களே ஆவர். இதைத் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளே குறிப்பிட்டுள்ளனர்.

""போராட்டத்துக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் இடையே ஒரே ஒரு கோடு அளவுதான் வேறுபாடு உள்ளது. கருத்து வேறுபாடு கொண்டவர்களை அடக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முனைப்பைப் பார்க்கும் பொழுது, அதன் மனதில் இருந்து அந்தக் கோடு மெல்ல மெல்ல மறைந்து வருவதாகவே கருத முடிகிறது. அரசின் இந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கப்பட்டால், அதுதான் சனநாயகத்தின் கருப்பு நாளாகும். சாதாரணக் குற்றங்களுக்கு எல்லாம் ஊபாச் சட்டத்தைப் பயன்படுத்துவது முறையல்ல” எனக் குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பிணை வழங்கிய வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு தெளிவுபடுத்தி உள்ளது. எனவே வஉசி அவர்களுக்கு எதிராகப் போடப்பட்ட அரசு விரோதச் சட்டம் ( 124 -A - இராஜ துரோகச் சட்டம் என இதைக் குறிப்பிடுவது சரியல்ல, இது அரச விரோதச் சட்டம் மட்டுமே ) மற்றும் கருத்துரிமைக்கு எதிரான சட்டங்களைத் திரும்ப பெறுவது இத்தருணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

அடுத்து, வ. உ. சி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடும் துன்பங்களுக்கு உள்ளானார் என்பது வேதனை மிக்க செய்தியாகும். அவரது தலைமழிக்கப்பட்டு, சிவப்புக் குல்லா வழங்கப்பட்டது. முரட்டுத் துணியாலான சட்டை தரப்பட்டது. சணல் இழையைக் கிழிக்கும் பணி தரப்பட்டதால், அவரது கைகளில் இரத்தக் கொப்பளங்கள் உண்டாயின. எனவே இடுப்பில் இரும்புச் சங்கிலியைப் பிணைத்து செக்கின் நுகத்தடியில் அதை இணைத்து, கொதிக்கும் வெயிலில் செருப்புகளின்றிச் செக்கிழுக்க வைக்கப்பட்டார். அவருக்குக் கல்/ மண் கலந்த உணவு வழங்கப்பட்டது. அவர் இருந்த சிறையில் "கம்பளி அடி" எனும் கொடிய தண்டனை சில கைதிகளுக்கு வழங்கப்பட்டது. சிறையில் உள்ள ஒருவரைக் கம்பளியால் இழுத்து மூடி கொலைக் குற்றவாளிகள் சிறை நிர்வாகத்தின் ஆதரவோடு கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கும் இந்தச் சித்திரவதையை எதிர்த்து வ. உ. சி. அவர்கள் போராடினார்.

சிறைச்சாலைகளில் இன்று "கம்பிளி அடி" இல்லை. ஆனால் சிறைக்கைதிகள் அடிக்கடி "வழுக்கி விழுந்து" கைகால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுக் கட்டுக்களுடன் அவதிப்படுவதைக் காண முடிகிறது. எனவே வ. உ. சி. அவர்கள் முன்னெடுத்தது போல், சிறைச்சீர்திருத்தங்களை இன்றைக்கும் மேற்வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில பெரும் பணக்காரர்களை மட்டும் நம்பிக் கப்பல் நிறுவனத்தை அவர் உருவாக்கவில்லை. மாறாக பொதுமக்கள் அனைவருடைய பங்களிப்போடு கூடிய ஒரு பொது நிறுவனமாக அதை வ. உ. சி. அவர்கள் கட்டியமைத்தார்கள். அதன் அடிப்படையிலேயே இந்திய விடுதலைக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசால் பெருமளவு உருவாக்கப்பட்டன. இதனால் எண்ணற்ற மக்கள் பயன்பெற்றனர் வேலை வாய்ப்பு வளர்ந்தது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை என்பதோடு, இந்தக் காலகட்டத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன என்பது மிகப்பெரும் அவலமாகும். பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டது மட்டுமல்லாமல், பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் 2014-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏறக்குறைய 10 இலட்சம் கோடி ரூபாய் வராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது அதிர்ச்சி தரத்தக்க கூடிய செய்தியாகும்.

எனவே வ. உ. சி. அவர்களின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா என்பதை வெறும் மாலை மரியாதை, புகழ் அஞ்சலி என்பதோடு நிறுத்திவிடாமல், அவர் பெரு வீரத்துடன் களமாடி உருவாக்கிய பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதுதான் அவருக்குச் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

Pin It