சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹரிஜன் பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும்போது "இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால், அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு, அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், பாரதியார் மானுட விடுதலைக் கருத்தியலுக்கு முற்றமுழுக்க எதிரானவர் என்று பெரும்பான்மை மக்கள் உணராத நிலையிலும், அவருடைய மானுட விடுதலை எதிர்ப்புச் சிந்தனையை மறைத்து அவரை உத்தமபுத்திராகச் சித்தரிப்பதில் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களும் பெருமளவு இணைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது.
 
          பாரதியார் தமிழ் மொழியில் புலமை மிக்கவர். வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் இன்னும் பல வடிவங்களில் செய்யுட்களை இயற்றுவதில் வல்லவர். அதைவிட முக்கியமான விஷயம் பண்டிதர்களிடையே சிறைபட்டுக் கிடந்த தமிழ் மொழியை அவர்களிடம் இருந்து விடுவித்து, எளிய, பாமர மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேர்த்தியாகச் செய்தார். இதை நிச்சயமாகப் பாராட்டித் தான் ஆக வேண்டும். ஆகவே புலமையிலும் எளிமையிலும் அவரை ஒரு மகாகவி என்று கூறுவது பொருத்தமே ஆகும். ஆனால் அவர் பெண் விடுதலைக்காகவும், சாதிய விடுதலைக்காகவும் போராடியவர் என்றும் பொதுவுடைமைக் கொள்கையைத் தூக்கிப் பிடித்தவர் என்றும் கூறுவது பொருத்தமற்றது மட்டுமல்ல; உண்மைக்கு நேர் எதிரானதும் ஆகும்.
 
          முதலில் பெண் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 'மாதர்' என்ற கட்டுரையில் "பெண்ணை ஸம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக் கூடாது. அவளுக்குப் பிதுரார்ஜிதத்தில் பாகம் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, பின் பற்பல கற்பனாவாதங்களை, அவை கற்பனாவாதங்கள் என்று நன்கு புரிந்து கொண்டே அடுக்கிக் கொண்டே போகிறார். இவற்றைக் காணும் ஒருவர் எப்படி எப்படி முயன்றாலும் அவர் ஒரு பெண் விடுதலைவாதி என்று நினைக்கவே முடியாது. பெண்கள் பொருளாதார சுதந்திரம்  அடையாத வரையில் அவர்களுக்கு உண்மை விடுதலை இல்லை. 'பெண்ணைப் பொன் போல் போற்ற வேண்டும்' 'பெண்கள் வீட்டின் கண்கள்' 'பெண்களைக் கண்டால் ஆண்கள் வணங்க வேண்டும்' என்ற பித்தலாட்டஙகள் எல்லாம் புராணக் குப்பைகளிலேயே கூட உள்ளன. இவற்றை மீண்டும் கூறுவதினால் ஒருவர் எப்படி பெண் விடுதலையை முன்னெடுப்பவராகக் கொள்ள முடியும்? அதுவும் ஐரோப்பியப் பெண்கள் வேலைக்குப் போய்ப் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்று போராடுகிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகும் "ஐரோப்பிய ஸ்திரி ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது" என்று கூறியிருக்கிறார் என்றால் பெண் விடுதலை பற்றிய ஞானம் இல்லை என்றோ பெண் விடுதலை கூடாது என்பதற்காகக் குழப்புகிறார் என்றோ தான் நினைக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும் பெண் விடுதலை உணர்வாளர் என்று கூறவே முடியாது.
 
          'பெண்மை வாழ்க' என்று கூறப் புறப்பட்ட பாரதியார் "பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை" என்றும் 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் "சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்" என்றும் கூறி, பெண்களின் பாதுகாப்பு ஆண்கள் கையில் தான் என்பதையும், ஆண்களைச் சமையல் வேலை செய்ய வைத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வையும் வெட்டவெளிச்சமாகவே காட்டி இருக்கும் பாரதியாரைப் பெண் விடுதலைப் போராளியாக .. வேண்டாம்.. பெண் விடுதலை விரும்பியாகவாவது எப்படி நினைக்க முடியும்? அவருடைய விருப்பம் எல்லாம், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதன் மூலம் ஆண்கள் அதிக சுகத்தை அனுபவிக்க முடியுமே என்ற ஏக்கத்தில் நிலைத்து இருந்ததே ஒழிய, பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் துளியும் இருந்ததில்லை.
 
          சரி! இப்பொழுது பாரதியாரின் சாதிய விடுதலை உணர்வையும் பொதுவுடைமைக் கருத்தின் மீதான காதலையும் அலசிப் பார்ப்போம். "ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி" என்ற சொற்களை வைத்துக் கொண்டு பாரதியாரின் பொதுவுடைமைக் காதலைப் பலவாறாகப் பாராட்ட வேண்டும் என்று பாரதி புகழ்பாடிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்பாடல் ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் அரசைக் கைப்பற்றியதில் மகிழ்ந்து எழுதினாரா அல்லது நவம்பர் மாதத்தில் லெனின் ஆட்சியைக் கைப்பற்றியபோது எழுதினாரா என்பது பற்றிய தெளிவில்லை. இப்பாடலில் லெனின் பற்றியோ பொதுவுடைமை இயக்கம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை. பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஜார் அரசன் வீழ்ந்ததைப் பற்றித் தான் பாரதியார் கூறியிருக்கிறார். 
 
          சரி! ஐயமுள்ள விஷயத்ததைப் பற்றி விவாதிக்க வேண்டாம். சோவியத் ஆட்சி அமைந்த பின், சுரண்டலாளர்களுக்கு எதிராக லெனின் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காக, பாரதியார் தெளிவாகத் தெரிவித்து உள்ள கருத்துகளை அலசிப் பார்க்கலாம்.
 
          பாரதியார் தன்னுடைய 'தொழிலாளர் பெருமை' கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கூர்மை அடையும் முரண்பாடுகளை விளக்கி விட்டு இந்தியாவில் இது போன்று முரண்பாடுகள் கூர்மை அடைய விடக் கூடாது என்றும் ஆரம்பத்திலேயே கவனித்து கிளர்ச்சிகள் நிகழா வண்ணம் வர்க்க சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது வர்க்க சமரசம் ஏற்பட வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமே ஒழிய தொழிலாளர் விடுதலை அடைவது அவருடைய நோக்கம் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே முதலளித்துவவாதிகள் வேண்டுமானால் பாரதியாரைக் கொண்டாடிக் கொள்ளலாமே ஒழிய, பொதுவுடைமைவாதிகள் நிச்சயமாக பாரதியாரை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
          பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை எற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரை நிராகரிக்க வேண்டியது இல்லையே என நினைப்பவர்கள் அவருடைய செல்வம்(1), செல்வம் (2) என்ற கட்டுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். சோஷலிச அரசை அமைத்த பிறகு அதை எதிர்த்துக் கலகம் செய்த உள்நாட்டு வெளிநாட்டுச் சுரண்டலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகைள அறிந்து கொதித்துப் போகிறார். சிலர் சோவியத் அரசைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் அப்படி எழுதி இருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அவருடைய சொற்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுரண்டலாளர்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் அன்பினால் மட்டுமே அவர்கள் மனதை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தாங்கள் தாக்கப்படும்போது எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக லெனின் கூறுவதைச் சுட்டிக் காட்டி விட்டு "லெனின் வழி சரியான வழியில்லை" என்றும் இது போன்று சுரண்டலாளர்களைப் பலாத்காரமாகத் தண்டிப்பவர்கள் பரம மூடர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு 'லெனின் வழி சரியான வழி இல்லை' என்று நேரடியாகவும் 'லெனின் பரம மூடர்' என்று மறைமுகமாகவும் கூறியுள்ள பாரதியாரை முதலாளித்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொள்ளலாம். பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை நிராகரிக்ககாமல் இருப்பது கொடும் குற்றமாகும்.
 
          சரி! பாரதியாரின் பொதுவுடைமை எதிர்ப்பு இத்துடன் நின்று விடவில்லை. பொதுவுடைமையின் மூலம் மானுட விடுதலை கிடைக்காது (!?) என்று தெளிவாகப் புரிந்து கொண்ட பாரதியார், மானுட விடுதலைக்காக அளித்துள்ள தீர்வைப் பார்த்தால், இப்படிப்பட்ட மகானுபவரை உலகம் இது வரை கண்டதில்லை என்றும் இனியும் காண முடியாது என்றும் நிச்சயமாகத் தோன்றும். அவருடைய தீர்வு என்ன தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும் உழைக்கும் மக்களும் சுரண்டல்வாதிகளும் அவ்வூரிலுள்ள கோயிலின் முன் ஒன்று கூடி எதிரெதிரில் நின்று கொள்ள வேண்டும். சுரண்டலாளர்கள் தங்கள் உடைமைகள் யாவும் தவறான வழிகளிலேயே பெறப்பட்டு இருந்தாலும், அவற்றைப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதை உழைக்கும் மக்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். (வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும்; தவறான வழியில் பெறப்பட்ட உடைமைகளையும் பிடுங்கக் கூடாது என்று பாரதியார் தெளிவாகக் கூறுகிறார்) அதன் பின் உழைக்கும் மக்கள் கடமை தவறாமல் சுரண்டும் வர்க்கத்தினருக்காக உழைக்க வேண்டும். சுரண்டல் வர்க்கத்தினரோ உழைக்கும் வர்க்கத்தினரை விட்டால் வேலை செய்வதற்கு ஆட்களில்லை என்பதால் அவர்களுடைய கஷ்டங்களை நினைத்து நெஞ்சு உருகுவதாகவும் இனிமேல் அப்படி கஷ்டப்பட விட மாட்டோம் என்றும் தெரிவிப்பார்கள். பின் அவரவர்கள் தங்கள் தொழில்களைச் செவ்¨வாயகச் செய்ய வேண்டும் என ஒப்புக் கொண்டு அப்படி ஒரு பட்டயம் எழுதி அதைக் கோயிலில் அடித்து வைத்து விட வேண்டும். இது தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பாரதியார் தரும் தீர்வு. இது பெரும் நகைப்புக்கு உரியது என்பது ஒரு புறம் இருந்தாலும், பழைய வர்ணாசிரம முறையில் இருந்து இம்மியளவும் மாற்றமில்லாதது என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு வர்ணாசிரம தர்மத்திற்காக ஏங்கும் ஒருவர் சாதிய விடுதலையை முன்னெடுப்பவர் என்று எப்படி நினைப்பது?
 
          பொதுவுடைமை கருத்துகள் வலுப்பெற்றால், தங்கள் இன நலன்களுக்கு முடிவு வந்து விடுமோ என்ற அச்சமும், பார்ப்பன ஆதிக்கப் படிப்பு தளர்ந்து விடக் கூடாது என்ற வெறியும் கொண்ட பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஊடுருவி உள்ளதால் தான் பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட பாரதியார் பொதுவுடைமைவாதியாகவும் மானுட விடுதலைப் போராளியாகவும் உண்மைக்கு மாறாகச் சித்தரிக்கப்படுகிறார். பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்புத் தோழர்கள் உண்மையை உணர வேண்டும். பொதுவுடைமை இயக்கங்களில் இருந்து பார்ப்பனர்களைக் களையெடுத்தால் ஒழிய அவ்வியக்கங்கள் தவறான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது  என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
- இராமியா

Comments

39 comments

39
Rajendran
பாரதியாரை நிராகரிக்காத பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள களைகள் என்ற கருத்து சரி தான். ஆனால் பாரதியாரின் கயமைகளை விளக்கும் பார்ப்பனர்களும் (உதாரணமாக ம.க.இ.க. வைச் சேர்ந்த மருதையன்) இருக்கிறார்கள். அவர்களை ஏன் களை எடுக்க வேண்டும்?
vijay
பொதூடைமை இயக்கம் என்று பொதுபடையாக சொல்ல முடியாது. சி.பி.எம் (பூனூலிஸ்ட்) கள் தான் பாரதியாரை தூக்கிபிடிக்கிறார்கள்.. அவர்களின் த.மு.எ.க.ச சும், பாரதி புத்தகாலயமும் தான் தூக்கி பிடிக்கிறார்கள்.... அவர்களை போலிகள் என்று அடையாளபடுத்துங்கள்.... ம.க.இ.க போன்ற கம்யுனிச அமைப்புகள் பாரதியை அம்பலபடுத்தியே வந்துள்ளன....
vijay
பாரதி நிச்சயமாக பிப்ரவரி புரட்சியை தான் பாராட்டியுள்ளார்.... லெனின் பற்றி குறிப்பிடும்போது வன்முறை பாதை தவறு என கண்டிக்கிறார்..... ஆனால் அவரின் பாஞ்சாலி சபதத்தில் அதே வன்முறையை தூக்கிபிடிக்கிறார்....
saruma
உண்மைதான். மிக்க மகிழ்ச்சி. பல உண்மைகளை வெளிக்கொண்ரவேண்டியிருக்கிறது. பல மாயைகளை உடைக்க வேண்டியிருக்கிறது.
kiruba
இந்த மாதிரியான பாரதியாரைப் பற்றிய கொடுமையானக் கட்டுரையைப் படித்ததில்லை . கட்டுரை ஆசிரியருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
THOORAN
பொதுவுடைமை கருத்துகள் வலுப்பெற்றால், தங்கள் இன நலன்களுக்கு முடிவு வந்து விடுமோ என்ற அச்சமும், பார்ப்பன ஆதிக்கப் படிப்பு தளர்ந்து விடக் கூடாது என்ற வெறியும் கொண்ட பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஊடுருவி உள்ளதால் தான் பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட பாரதியார் பொதுவுடைமைவாதியாகவும் மானுட விடுதலைப் போராளியாகவும் உண்மைக்கு மாறாகச் சித்தரிக்கப்படுகிறார்.
||பாரதி பொதுவுடமை வாதியும் அல்ல
ஓகோ வென போற்ற தேவையும் அல்ல
அவன் ஒரு விதமான போதைவாதி என்பது மட்டும்
நிச்சயம்||
மேலும் தகவலுக்கு:-
மதிமாறன் எழுதிய பாரதி பற்றிய நூல்
இராமியா
பாரதியாரைப் பற்றி விமர்சிக்கும் பார்ப்பனர்கள் இருப்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாரதிய‌ாரை விமர்சிப்பதினால் மட்டும் பார்ப்பனர்கள், பார்ப்பனச் சார்பு இல்லாதவர்கள் ஆகிவிட முடியாது. ஒரு அமைப்போ அல்லது தனி மனிதரோ பார்ப்பனச் சார்பு உடையவரா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்க்கும் உரைகல் இது தான்.

எல்லா வகுப்பு மக்களிடையேயும் மிகக் குறைந்த அறிவுத் திறன் முதல் மிக அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்கள் உள்ளது போல பார்ப்பனர்களிலும் உண்டு. ஆனால் கல்வி வேலை வாய்ப்பு சமூக பொருளாதார நடவடிக்கைகள் என்று வரும் போது பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்கின்றனர். இது ஒடுக்கப்பட்ட வகுப்பிலுள்ள திறமைசாலிகள் கீழ்நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேரிடுவதானது மனித வளத்தை வீணாக்குகிறது. இதை விடக் கொடுமை என்னவென்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்வதால் நிர்வாகம் சீர்கெட்டு நாட்டு முனனேற்றம் பாதிக்கப்படுகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இந்த தேசத் துரோகச் செயலைத் தடுத்து நிறுத்தி பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடாமல் தடுத்து அப்படிப்பட்ட வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டு அதனால் காலியாகும் உயர் நிலை வேலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை இடம் பெற வைக்கும் பார்ப்பனர்களும் பார்ப்பன அமைப்புகளும் தான் பார்ப்பன ஆதிக்கச் சார்பு இல்லாதவையாக நினைக்க முடியும். இதைச் செய்யாமல் மழுப்பும் யாரும் பார்ப்பன ஆதிக்கச் சார்பை விட்டவர்களாக நினைக்க முடியாது. மேலும் இந்த உரைகல்லில் சிக்காமல் நழுவிச் செல்லும் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை போகும் துரோகிகளாகத் தான் நினைக்க முடியும்.

இந்த ‌உர‌ை‌கல்லில் ‌உரசிப் பார்க்கும் ‌‌ பொழுது பார்ப்பனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அல்லது பார்ப்பனர்கள் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்னர்களால் ஆட்டி வைக்கப்படும் எந்த ஒரு அம‌ை‌ப்பும் சாதிக் ‌கொடுமைகளை உண்ம‌ை‌யில் எதிர்ப்பதாகத் த‌‌ெ‌ரியவி‌ல்ல‌ை‌.
bharathi
பாரதியார் என்ன துரோகம் செய்தார் உங்களுக்கு அவர் வெள்ளையரை எதிர்த்து தவறா ? சாதியை ஒழிக்க வேண்டும் என்றது தவறா ? மரபுகளை உடைத்து தவறா ? பெண் விடுதலையை முன் வைத்தது தவறா ? எது தவறு என்கிறீர்கள் என்று புரியவில்லை.
அவர் பெரியாரை போல பிரிட்டிஷ் அரசுக்கு சால்ற்ற அடிக்க வில்லை. இந்தியாவிற்கு விடுதலை வேண்டாம் என்று சொல்லவில்லை. சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுசரிக்க சொல்லவில்லை. தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. கடவுள் எதிர்ப்புக்குள்ளே எல்லாம் அடங்கி விடும் என்று விரமநிகளையும் கருணாநிதியையும் வளர்த்து விட வில்லை . என்று சொல்ல வருகிறீர்களா.
இராமியா
நண்பர் பாரதி அவர்களே, பாரதியார் பிரிட்டிஷ் அரசின் கீழ் படிந்த வேலையாள் என்று ஒப்புகைச் சீட்டு எழுதிக் கொடுத்ததை அறியமாட்டீர்களா? வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைப்புடன் இருந்தவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார் என்றால் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? பெண் விடுதலையை முன் வைத்தவர் என்று கூறுகிறீர்களே, இக்கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லையா?
bharathi
பெரியார் மகாராணிக்கு கடிதம் எழுதியதை ஒப்புகொள்கிறீர்களா நண்பரே. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நீர் அந்த காலத்தில் வாழ்ந்து பார்த்திருந்தால் தெரியும், உங்களுக்கு என்ன தான் பிரச்னை. சுதந்திர போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன அதை சொல்லுங்கள்.பாரதி வாழ்ந்த காலத்திற்கு செல்லுங்கள் ,அந்த சூழ்நிலைகளை பாருங்கள் .அவர் கம்யூனிஸ்ட் கிடையாது அனால் அவர் தேசியத்தையும், தேச விடுதலையையும் முன் வைத்தார். பெரியார் அந்த காலத்தில் பிரிட்டிஷ் வழங்கிய பதவிகளை அனுபவித்து கொண்டு இருந்தார். சுதேசி கப்பல் ஒட்டிய சமயத்தில் பெரியார் கள்ள பெட்டியில் உட்கார்ந்து கணக்கு பார்த்து கொண்டிருந்தார்.
ஆறுமுகம்
இராமியா: தங்கள் கட்டுரையில் பாரதியின் பங்கு எந்த அளவு இருந்தது என்று எழுதியிரு்நதால் சரியாக இருந்திருக்கும். ஏன் அவரது பங்கு பூச்சியம் என்று கூட கட்டுரையை முடித்திருக்கலாம் அதராம் இருப்பின் அவற்றறை காட்டி. மாறா இக் கட்டுரை முழுவதும் பார்ப்ன எதிர்ப்பு என்ற சாதி எதிர்ப்பு வெறியே அதிகமாக கணப்படுவதால் கட்டுரையே வெறியாக கடித்து குதறுவதுபோல் உள்ளது. சாதி எவ்வளது குற்றமோ அதே அளவு அதன் அடிப்படையில் பிறரை எதிர்பதும் குற்றமே.
இராமியா
நண்பர் பாரதி அவர்களே, அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் தெரியும் என்று கூறுகிறீர்கள். பாரதியார் கருத்தியல் ரீதியாக மானுட விடுதலை உணர்வுக்கு எதிராக இருந்ததைப் பற்றி மட்டும் தான் நான் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் அவரை ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரராகச் சித்தரித்ததால், ஆங்கிலேய அரசுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த விஷயத்தைக் குறிப்பிட நேர்ந்தது. பாரதியார் கம்யூனிஸ்ட் இல்லை என்று பாதி உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளீர்கள். லெனின் வழி சரியான வழி இல்லை என்றும் லெனினைப் பரம மூடர் ‌என்றும் சொன்னதன் மூலம் அவர் பொதுவுடைமைத் தத்துவத்தின் விரோதி என்ற மறுபாதி உண்மையையும் ஒப்புக் கொண்டு இருந்திருக்கலாம். அவர் தேசியத்தையும் தேச விடுதலையையும் முன் வைப்பதன் மூலம் பழைய வர்ணாசிரம முறையைக் கொண்டு வர ஆசைப்பட்டார். வர்ணாசிரம முறை ஆங்கில ஆட்சியை விட மோசமானது அல்லவா?
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே, பாரதியின் பங்கு என்று நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மனு ஸ்மிருதியிலும், சுமை தூக்குபவர்களோ, உடல் ஊனமுற்றவர்களோ செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசனும் வழி விட்டு விலக வேண்டும் என்ற நல்ல கருத்து உள்ளது. ஆனால் மனு ஸ்மிருதியின் முக்கிய நோக்கம் வர்ணாசிரம முறையை நிலைநிறுத்துவதே. ஆகவே அதை நிராகரிக்க வேண்டியுள்ளது. அது போலத் தான் பாரதியாரும். இக்கட்டுரையில் பாரதியாரின் மானுட விடுதலைக்கு எதிராக அவர் எழுதிய கருத்துகளைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். சாதிய ஒடுக்கலினால் பாதிக்கப்பட்டோர் அவ்வொடுக்கலுக்கு எதிராகச் செய்யும் எதுவும் சாதி வெறி ஆகாது. அது சுதந்திர உணர்வே ஆகும். மாறாக இவ்வொடுக்கல் முறை தொடர விரும்புவதும், அதற்கு எதிராக எதுவும் நடந்து விடக் கூடாது என்று நினைப்பதும் தான் சாதி வெறி ஆகும்.
ஆறுமுகம்
இராமியா: எது மானிட விடுதலை என்று யார் வரையறை செய்துள்ளார்கள் ஏன் தங்க்ள கட்டுரையில் கூட மானுட விடுதலை என்றால் என்ன என்று எங்காவது வரையறை செய்துள்ளீர்களா? ஆய்வுகள் செய்வதன் அடிப்படையையும் ஆய்வு முறையையும் தாங்கள் இன்னும் முறைப்படி அறியவில்லை என்று தெரியவருகிறது. கடவுளே வந்து சொன்னால் கூட அதை நான் நம்பாத வரை அது சரியானதாக இருந்தாலும் அது தவறாத முடிவெடுததால் எனது பார்வையில் அது சரியானதே. பிறர் செல்வதை அப்படியே நம்பவேண்டும் அதை பின்பற்ற வேண்டும் என்று யார் கூறமுடியும். அதை பின்பற்றாதாது ஒன்றும் குற்றம் இல்லையே. இந்நிலையில் லெனின் தங்களுக்கு பிடித்தவராக இருந்தால் அதை நீங்கள் ஆதரிப்பதில் தவறில்லை சம்பந்தம் இல்லாம் அவரை பாரதி பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்துவது முற்றிலும் சரியல்ல.கம்னியூஸ்ட்டாக ஒருவன் இருக்க வே ண்டிய அவசியம் இல்லை. ”சாதிய ஒடுக்கலினால் பாதிக்கப்பட்டோர் அவ்வொடுக்கலுக்கு எதிராகச் செய்யும் ”எதுவும்” சாதி வெறி ஆகாது” என்று தங்கள் வெறியை நியாயப்படுத்த வதே வெறிதான். ”ஆனால் மனு ஸ்மிருதியின் முக்கிய நோக்கம் வர்ணாசிரம முறையை நிலைநிறுத்துவதே” என்றால் அதை புறந்தள்ளுவது தானே சரியானதாக இருக்கும். அதற்க்கு விளக்கம் அளித்து ஒதுக்கிதள்ள வேண்டியதை விவாதித்தி அதற்க்கு தொடர்ந்து பரவச்செய்வதேன் ? அதை விடுங்கள், தங்கள் கட்டுரையில் தூக்கிபிடித்துள்ள அம்பேத்கார் தமிழர்களுக்கு என்று என்ன செய்தார்.? அதை பட்டியலிடிருக்க வேண்டாமா? சாதியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் கண்ட படி ஒரு சாதியின்ரை தாக்குவது என்பதும் சாதி யே வெறியே அதல் சமத்துவம் இல்லாத வரை. சமத்துவத்தை ஆதரிப்பவர்கள் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்ப்பார்கள் மாறாக அவர்கள் அந்தகைய கொடும் செயல்களை எதிர்தரப்பினருக்கு செய்வது ம் எதிர்தரப்பினர் இதுவரை செய்து வந்தாக குற்றம் சாட்டுவதும் ஒன்றே தான் என்பதால். ஆனால் தங்கள் கட்டுரையில் சமத்துவத்தை விட விடுதலை என்ற பெயரில் தாங்கள் ஆதிக்கம் செய்ய விரும்புவதாலேயே வெறியை நியாயப்படுத்துகிறீர்கள். இங்கிலாந்து காரரின் சுதந்திரம் பிரான்ஸ்காரின் மூக்கு துவங்கும் இடத்தில் முடிகிறது என்பது ஒரு வழக்கு. தன்னைப்போல் பிறரை நினைக்க வேண்டும்.
bharathi
ஒருவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்வார்கள் அவர் இனிமேல் குற்றம் செய்யமாட்டேன் என்று எழுதி தருவார்கள் .அது சாதாரண நிகழ்வு, அதற்கு பிறகு கூட அவர் அந்நிய சக்திகளுக்கு எதிராக தானே போராடினார். யாருமே காலசக்கரத்தை மாற்றி சுத்த முடியாது. அவர் வர்ணாசிரம் முறையை எதிர்த்தார் என்றால் தலித்துகளுக்கு பூணுல் போட்டது என்ன நிகழ்ச்சி. இதே நீர் போற்றி புகழும் அம்பேத்கர் கம்யூநிசத்தை இம்சை என்று சொன்னார் .அதற்காக ஒரு கட்டுரையே தீட்டினார் வெள்ளைகாரனுக்கு அடிவருடி வேலை செய்தார் அவர் மட்டும் அல்ல அயோத்தி தாசர் மற்றும் பெரியாரும் வெள்ளையர்களின் ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்க்காமல் அவர்களுக்கு அடிவருடும் வேலை செய்தனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய பாரதியை நீர் ஜாதி வெறி கண்ணோட்டத்தில் பார்கிறீர்கள் .அவர் பிறப்பால் பார்பனர் என்பதால் உமக்கு பிடிக்கவில்லை. சரி ஆதிக்க ஜாதியில் பிறந்த அனைவரயும் கொன்று விடலாமா அப்போதாவது உமது ஜாதி வெறி அடங்குமா என்று தெரியவில்லை.
இராமியா
நண்பர் பாரதி அவர்களே, பாரதியார் என்றைக்குமே வர்ணாசிரம தர்மத்திற்கு ஆதரவாகத் தான் இருந்தார். இதில் காலச் சக்கரத்தை மாற்ற முடியாது என்று சொல்வதற்கு எந்த அவசியமும் இல்லை. அம்பேத்கரை யாரும் கம்யூனிஸ்ட் என்றும் கம்யூனிசக் கொள்கையைத் தூக்கிப் பிடித்தவர் என்றும் பிரச்சாரம் செய்யவில்லை. கம்யூனிஸ்டுகள் அவருடைய பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்தது / இருப்பது தான் இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவம் வளராமல் இருப்பதற்குக் காரணம் என்று தான் கூறுகிறோம். அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் இந்திய சமுதாயத்தின் உண்மையான விடுதலைக்காகப் போராடினார்கள். ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்றால் பாரப்பனர்கள் மட்டும் அந்நியர்கள் இல்லையா? ஆங்கிலேயர்களின் வாரிசுகளான ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய மக்களுடன் கலந்து உள்ளனர். அவர்களில் கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரைக்கும் அனைத்து நிலையிலும் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களில் தான் தி‌றமைக் குறைவானவர்களாக இருந்தாலும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளையே செய்வோம் என்று மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே இருக்கிறார்கள். இதை மாற்றி இயற்கை நியதியாக உள்ள அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலை அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் அனைத்து நிலை வேலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் இருக்கும்படியான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் எவரையும் ஒப்புக் கொள்ள முடியும். அதை விடுத்து பூணூலை வேண்டுமானால் மாட்டிக் கொள். உனக்குத் திறமை இருக்கிறது என்பதால் அதை முன்னிட்டுக் கொண்டு உயர்நிலை வேலைகளுக்கு ஆசைப்படாதே என்று நினைப்பதை ஒப்புக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட எண்ணம் நிச்சயமாக சாதி வெறி அல்ல. இதை ஏன் வெறித்தனமாக அனைவரையும் கொன்று போட வேண்டும் என்பதாக நினக்க வேண்டும் என்பது புரியவில்லை.
இராமியா
ஐயா, ஆறுமுகம் அவர்களே, மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் அவர்களிடையே உள்ள குணாம்சத்தின் விகிதமாக இல்லாமல் தாறுமாறாக இருப்பதும் அதனால் சிலர் பயனடைவதும் பலர் பாதிக்கப்படுவதுமான நிலைமை இல்லாமல் இருப்பதும் தான் மானுட விடுதலை. நாம் வாழும் இந்த சமுதாயத்தில் பார்ப்பனராகப் பிறந்த ஒருவர் உயர்நிலைகளை எளிதாக அடைய முடிகிறது. அதே நிலை - சொல்லப் போனால் அதிகமான - அறிவுத் திறன் கொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அந்நிலைகளை அடைய முடிவதில்லை. இது மானுட விடுதலைக்கு எதிரான தன்மை. லெனின் பாரதியாரைப் பின்பற்றவில்லை என்று நான் குறை கூறவில்லை. அவர் லெனினை எதிர்த்ததைப் பற்றியும் குறை கூறவில்லை. ஆனால் அப்படிப்பட்ட பொதுவுடைமைத் தத்துவ எதிரியைப் பொதுவுடைமைக் கருத்தைத் தூக்கிப் ‌பிடித்தவராகச் செய்யப்படும் பிரச்சாரத்தைத் தான் விமர்சிக்கிறேன். சாதிய ஒடுக்கலினால் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதைச் சாதிய வெறி என்று கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்படி என்றால் சாதிய ஒடுக்கலில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.மேலும் சாதியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் கண்டபடி ஒரு சாதியினரை நான் தாக்கவில்லை. அவர்கள் ஆதிக்கம் செய்வது குற்றம் என்று தான் ‌எடுத்துக் காட்டுகிறேன். என்னுடைய வழிமுறைகள் சரி இல்லை என்று நினைப்பவர்கள் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுக்கும் வழிமுறைகளைத் தயவு செய்து சொல்லட்டும்.
பாரதி
வெள்ளை ஆதிகதத்தை ,அடிமையாக இருப்பதை பெருமையாக நினைக்கும் நண்பரிடம் விவாதித்து பயனில்லை. நாடே அடிமை தலையில் இருந்த பொது பதவிக்காக வெள்ளையர்களிடம் உறவாடிய அம்பேத்கர், , அயோத்திதாசர் போன்றோர் எப்படி இன்றைக்கு வழிகாட்ட முடியும் நீங்கள் சொல்லுவதன் படி பார்த்ததால் , ஆரியர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களும் தான் அன்னியர்கள் அதை சொல்ல முடியுமா உங்களால். உங்களுக்கு உண்மயான சமதர்ம சமுகம் வருவதில் விருப்பம் இல்லை. உங்களுக்கு பார்ப்பனர்களை செத்த பாம்பை அடிப்பதில் சுகம்
இராமியா
வெள்ளையர் ஆதிக்கத்தை ரெங்கசாமி ஐயங்கார் போன்ற பார்ப்பனர்கள் தான் பெருமையாக நினைத்தனர். வெள்ளையர் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் ஒரே வழி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வது தான் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அமையவிருக்கும் அரசில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை பற்றி ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நியாயமான விடைகள் கிடைக்கவில்லையே? திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளில் தான் இருப்போம் என்று அடம் பிடிக்கும் பார்ப்பனர்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் தான் நல்ல சமுதாயத்தை அமைக்க முடியும். பார்ப்பனர்களாலும், பார்ப்பனர்களிடம் சோரம் போகிறவர்களாலும் நல்ல சமுதாயத்தை அமைக்க முடியாது. முஸ்லீம்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அவர்கள் திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளில் தான் இருப்போம் என்று பார்ப்பனர்களைப் போல் அடம் பிடிக்கவில்லை. இவற்றை எல்லாம் பார்ப்பனர்களிடம் சொல்லிப் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தங்கள் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள எல்லா விதமான மாய்மாலங்களை யும் செக்ய்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தான் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Bharathi
ரெங்கசாமி அய்யங்கார் ஒரு கோழை அடி வருடி, நாட்டை அந்நியனிடம் காட்டிகொடுத்த துரோகி தான் . அப்படி என்றால் சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காமல் இருந்த அம்பேத்கர், அயோத்தி தாசர், பெரியார் போன்றவர்களை பற்றி எழுதுங்கள். வெள்ளை ஏகாதிபத்தியத்தை புகழ் பாடும் நீங்கள் எப்படி இன்று பன்னாட்டு முதலாளிகளை எதிர்பீர்கள் .
இராமியா
நணபர் பாரதி அவர்களே, வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்ப்பது என்றால் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு அடிபணிவது தானா? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. வர்ணாசிரம முறை வெள்ளையர் ஆட்சியை விட மோசமானது என்று கூறினால் அது வெள்ளையர் ஏகாதிபத்தியத்தைப் புகழ் பாடுவதாக அர்த்தமா? என்ன சொல்ல வருகிறோம் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் வெள்ளையர்களுடன் அப்படி என்ன கூடிக் குலாவி விட்டார்கள்? காங்கிரஸ் இயக்கத்தில் பெரியார் ஆற்றாத பணியா? ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பொழுது கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறியப்பட்டாரே? ஏன்? அதிகாரம் படைத்த, ஊதியம் மிகுந்த, உடலுழைப்பு இல்லாத உயர்நிலை வேலைகளில் எல்லாம் 3% உள்ள பார்ப்பனர்கள் 90%க்கும் மேல் நிரம்பி வழிகிறார்களே! எப்படி முடிகிறது? அவர்கள் அனைவரும் புத்திசாலிகள் என்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே புத்திசாலிகளே இல்லை என்றும் பொய் சொல்லப் போகிறீர்களா? அப்படிச் சொல்வது இயற்கை நியதிக்கு எதிரானதாகும். இப்பொழுதும் உங்களை அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட வகுப்பிலுள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளுக்குச் செல்லும் வழியில் உள்ள உராய்வையும் முட்டுக் கட்டைகளையும் நீக்குவதற்கும், பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலைகளுக்குச் செல்லும் கள்ள வழிகளை மூடுவதற்குமான செயல் திட்டத்துடன் வருகிறீர்களா? அப்படி வரும் யாரையும் ஏற்றுக் கொள்வதில் இம்மியளவும் ஆட்சேபணை இல்லை. ஆறுதல் வார்த்தைகளில் திருப்தி அடைந்து கொண்டு பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிரபார்ப்பதைத் தான் எதிர்க்காமல் இருக்க முடியவில்லை.
bharathi
புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. 'புரட்சி' என்பதன் மூலம் ,வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் .

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை;எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்நிளைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".
Ramea
நண்பர் பாரதி அவர்களே, 3% உள்ள பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் 90% க்கும் மேல் நிரம்பி வழிவது வெளிப்படையான அநீதியாகத் தெரியவே இல்லையா? அதனால் ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகள் கீழ்நிலை வேலைகளைப் பார்க்க நேர்ந்து மனித வளம் வீணாவதும், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர் நிலைகளில் இருந்து கொண்டு நிர்வாகத்தைச் சீரழித்து, அதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் படியான தேசத் துரோகச் செயல்கள் நிகழ்வதையும் தடுக்கும் படியான யோசனையைக் கூறுவதை விட்டு விட்டு, தொடர்பே இல்லாமல் ஏதேதோ பேசி இருக்கிறீர்களே? இதில் இரத்த வெறியும், தனி மனிதர்கள் மீது வஞ்சம் தீர்ப்பதும், துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் எங்கே வந்தன? திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைக்குச் செல்வதற்கான கள்ள வழிகளும் திறமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைக்குச் செல்ல முடியாத படியான உராய்வுகளும் முட்டுக் கட்டைகளும் உள்ள இந்திய சமூகத்தில் அவற்றை மாற்றுவதற்கான வழி முறைகளை முதலில் செயல்படுத்தினால் அல்லவா சோஷலிசப் புரட்சியை முன்னெடுக்க முடியும்? அதைப் பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்?
Ramea
ஐயா, ஆறுமுகம் அவர்களே, இந்தியாவில் சாதி ஆதிக்கம் படி நிலையில் உள்ளது என்பதை மறுக்கவில்லை. பார்ப்பனர்கள் மற்ற அனைத்து வகுப்பு மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஆதிக்கம் செலுத்துவதும் சுரண்டுவதும் மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மைகளே. இதைக் கையாள்வது எப்படி? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தள்ளி வைத்தால் வாய் குறுகிய சீசாவில் உள்ள கடலையை எடுத்த குரங்கு அதற்குள் மாட்டிக் கொண்ட கதையாக முடிந்து விடும். இரு வகுப்பாரையும் சண்டை மூட்டி விட்டு பார்ப்பனர்கள் நன்றாகக் குளிர்காய்வர்கள். அப்படித்தான் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாறாக 90%க்கும் அதிகமான செல்வங்களைச் சுருட்டிக் கொண்டுள்ள 3% மக்கள் தொகையாக உள்ள பார்ப்பனர்களிடம் இருந்து, அவர்களுக்கு உரிய பங்கை விட அதிமாக உள்ளதை மீட்டு அவற்றைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிய பங்கை உரிய படி விநியோகம் செய்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளின் கூர்மை மழுங்க ஆரம்பித்து விடும். காலப் போக்கில் முரண்பாடுகள் மறையவும் செய்யும்.
ஆறுமுகம்
மீனா மயில் எழுதிய ஆதிக்கத்தை நேசிக்கும் அடிமைச் சமூகம் என்ற கட்டுரையை

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17703:2011-12-06-23-37-58&catid=1404:2011&Itemid=168

என்ற முகவரியில் உள்ளது தயவு செய்து ஆதிக்கம் செய்பவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆறுமுகம்
சொத்துரிமை அதிகம் ஆண்களுக்கே என்று அதிகார பூர்வமாக அறிவித்த இஸ்லாமில் மார்க்சிய ம் இருக்க முடியுமானால் ஏன் பாரதியிட் கம்னியூஸ கொள்கை இல்லை. சாதிகள் இல்லை என்பதே சமத்துவம் தானே. இந்த கட்டுரையை கீற்றில் வாசிக்கவும்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18252
இராமியா
ஐயா, ஆறுமுகம் அவர்களே, இஸ்லாம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதில் மூலதனக் குவிப்புக்கு எதிரான நடைமுறைகள் உள்ளதாக ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார். நான் அதிகம் படிக்காத நிலையில் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி இருப்பதினால், மார்க்சியத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்களை மார்க்சியவாதிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அது போல மார்க்சியத்தை எதிர்த்த பாரதியாரை மார்க்சியவாதி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் வர்ணாசிரம முறையைத் தூக்கிப் பிடிக்கும் அவர் சாதிக் கொடுமைகளுக்கு எதிரானவர் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆறுமுகம்
உங்களுக்கு தெரியவில்லை என்பதாலதான் கீற்று இணையதளத்தில் உள்ள கட்டுரையை வாசிக்க தந்துள்ளேன். மேலும் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தபட்டவர்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை களைய முடியும் என்று வாதித்து விட்டு முற்றபட்வர்களிடம் உள்ள முரண்பாட்டை மட்டும் களைய மனமின்றி வெறுப்பை உமிழ்வதேன் ..?
Ramea
நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் முத்து மோகன் என்பவரது படைப்பைப் பற்றிய விமர்சனங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய ‌வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இரு வகுப்பாருமே உயர் சாதிக் கும்பலினரால் சுரண்டப்படுபவர்கள். இரு வகுப்பாருக்கும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் படி செய்தால் அவர்களிடையே மோதல் அவசியமில்லாமல் போய் விடும். ஆனால் பார்ப்பனர்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு உரிய பங்கை விட மிக மிக.......மிக அதிகமாகச் சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பங்கை மட்டும் பெற்றுத் திருப்தி அடைவதாய் இருந்தால், நீங்கள் கூறுவது போல முரண்பாட்டைக் களைய முடியும் தான். ஆனால் அது நடைமுறை சாத்தியம் அற்றது. இக்கட்டுரையின் பின்னூட்டங்களில் 18௧௨012 நாளிட்ட 7வது இடுகையைப் பாருங்கள். பார்ப்பன ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் பார்ப்பனர்களைக் கண்டறிவதற்கான உரைகல்லைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன். அந்த உரைகல்லில் உரசிப் பார்த்து, பார்ப்பன ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ள ஒரு பார்ப்பனராவது இருக்கிறாரா என்று சொல்லுங்களேன்.
ஆறுமுகம்
3 சதம் உள்ள பார்ப்பனர்கள் 90 சதம் உள்ளதாக வருத்தபடுவது நியாம் தான். ஆனால் 21 சதவீத ஒருக்கீட்டில் 97 சதம் அருந்ததியர்கள் அல்லாதவர்கள் மட்டுமே இடஒதுக்கீடு உள்ளளேயே ஏன் ஏற்படுகிறது. 3 சதவீத உள் இட ஒதுக்கீடு ஏன் கொடுக்க வேண்டடிய நிலை ஏற்பட்டது? அப்படியால் 21 சதவீதத்தில் ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனர்களா? அவர்கள் மீது ஆதிக்க்கம் செலுத்துவது யார் ? அவர்களுக்கு 3 சதம் உள் இடஒருக்கீடு வழங்குவதை ஏன் பிறர் எதிரக்க வேண்டும்.
இராமியா
3% பார்ப்பனர்கள் 90% க்கும் மேல் ஆக்கிரமித்துக் கொள்வது அநியாயம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி திரு.ஆறுமுகம் அவர்களே. இந்த அநியாயத்தை வேரறுத்தாலே, அதனால் கிடக்கும் வாய்ப்புகளின் மூலம் நீங்கள் குறிப்பிடும் அருந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் தானாகவே மறைந்து விடும். அப்படி மறையவில்லை என்றால் அதையும் போராடி ஒழிக்கத் தான் வேண்டும் என்பதில் மறு கருத்து இல்லை.
durai ilamurugu
திரு. இராமியா, பாரதியை மகாகவி என்று ஒப்புக்கொண்டதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலவி வந்த ஒரு மாபெரும் சிக்கலை தீர்த்துவிட்டார். அரைமனதுடன் தான் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் இனி யாரும் பாரதியிடமிருந்து அந்த பட்டத்தை பிடுங்கிக் கொள்ள முடியாது அல்லவா?. நன்றி இராமியா.

ஆனால் அந்த கையோடு பாரதி மீது சேற்றையும் வாரி பூசியிருக்கிறார். பாரதியிடம் அவர்கண்ட குறைகளை பலவாகச் சொல்லலாம். நாம் அதைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

1. பாரதி பார்ப்பணக் குலத்தில் பிறந்தவர். இதற்கு பாரதி என்ன செய்ய முடியும்? வேறு யார்தான் என்ன செய்ய முடியும்? எந்த ஒரு மனிதனுக்கும் தான் பிறக்கும் சாதியைத் தேர்வு செய்ய முடியாதே! மதத்தை வேண்டுமானாலும் பிறந்து வளர்ந்த பிறகு தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சாதி? அதை மாற்ற யாராலும் மாற்ற முடியாதே! எனவே பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை பழித்தல் சரியன்று. பார்ப்பனக் குலத்தில் பிறந்த காரணத்தால் அவருக்கு சில வாய்ப்புகள் எளிதில் கிட்டியிருக்கலாம். அதற்கும் அப்பொழுது நிலவிய சமூக அமைப்பே அன்றி பாரதியின் தனிப்பட்ட தவறு என்ன இருக்கிறது? பார்ப்பனக் குலத்தில் பிறந்ததை நல்ல வாய்ப்பாக கருதி அதைப் பயன்படுத்தி பெயரையும் புகழையும் தேடிச் சென்றிருந்தால் நாம் பாரதியைக் குறை சொல்வதில் நீதி இருக்கிறது. ஆனால் பாரதியோ இதற்கு நேர் எதிரான பாதையில் சென்றவன். இயன்ற பொழுதில் தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டவன்.பார்ப்பனப் பிறப்பை கைவிட்டவன். இரு பிறவியாளன் என்பதே பார்ப்பனுக்கு உள்ள மரியாதைகளில் தலை சிறந்தது. அதற்கு ஒரு அடையாளமாகவே பூணூல் அணிவிக்கப்படுகிறது. அதையே அறுத்து எறிந்தவன் பாரதி. அது ஒரு நூல்தான் அதை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்பதைக் காட்டுவதற்காகவே தாழ்த்தப்பட்டவரான கனகலிங்கத்திற்கு அதை அணிவித்தவன். அவன் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் பார்ப்பனக் கடமைகளைச் செய்தான் என்பதற்கு சான்று கிடையாது.(
சந்தியாவ ந்தனம்., வேள்வி செய்தால் ........ ........ இவையே பார்ப்பனக் குலத்திற்கும், வர்ணாசிரம் தர்மத்திற்கும் அளவு கோலாகும். இவை எதையும் செய்யாதவன் பாரதி. அப்படிபட்டவனை பார்ப்பனன், வர்ணாசிரம் தர்மத்தை தூக்கிப் பிடித்தவன் என்றெல்லாம் கூறுவது நேர்மையான ஆய்வாளர்களுக்கு ................. ஆனால் பெரியார் வாதிகள் அதை காலம் காலமாய் செய்து வருகிறார்கள். அதையே இராமியாவும் சற்று வேறு மாதிரி செய்திருக்கிறார். நன்று. பெரியார் தெலுங்கு பேசும் .....பஜலிகா.............. கன்னட........ நாயுடு குலத்தில் பிறந்தவர். செல்வந்தர். வணிகர். அதனால் அவர் தமிழரன்று என்று வாதிடுபவர்களுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு? இருசார்பினரும் பிறப்பை வைத்து மட்டுமே மனிதனை எடை போடுகிறார்கள் என்பதால் இதுவும் ஒரு வகை புதிய பார்ப்பனீயமே அன்றி வேறில்லை.

பார்ப்பனக் குலத்தில் பிறந்தாலும் பாரதி பார்ப்பனர்களை போற்றவில்லை. அவர்களிடம் இருந்து எந்த உதவியையும் பெறவில்லை. அவர்களும் பாரதி உயிருடன் இருந்த காலம் வரையிலும் அதற்கு பிறகு சிறிது காலம் வரையிலும் பாரதியை மதிக்கவில்லை. மாறாக மிதித்தவர்கள்.பாரதி ஒரு கவியே அல்ல என்று உரைத்தவர்கள். பாரதியும் அவ்வாறே தன்னுடைய பள்ளுப். பாட்டில் பார்ப்பானை அய்யரென்றே காலமும் போச்சே. வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே. என்று ஆனந்தப்பள்ளு ........... பாடியவன். ....சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறு உண்ணும் பார்ப்பனுக்கு ஒரு நீதி. என்று வசை மாரி பொழிந்தவர். அவரை பார்ப்பனன் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் என்று கூறுவது பொருந்தாத கூற்றாகும். ராஜாராம் மோகன் ராயைப் பற்றிக் கூறுகையில் பாரதி இவ்விதம் எழுதுகிறார். "சிறந்த சமூக சீர்திருத்தவாதியான இவர் இறக்கும் பொழுது அவருடைய மார்பில் பூணூல் தவழ்ந்ததாம். இறைவனுக்கு பார்த்த திரு நாட்டில் சுத்த.. வீரன் ஒருவனைப் பிறப்பிக்க இன்னும் மனம் வரவில்லை. போலும்". இதன் உட்பொருள் இறந்த பிறகும் கூட பூணூல் அணிந்து/ அணிவித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானது அதை தமது கொள்கையை வெளிப்படுத்துகிறது அவர் இறந்த பொழுது அவருடைய மார்பில் பூணூல் இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. அப்படிப்பட்ட கவியை பார்ப்பனக்கவி என்பது சரியன்று. அந்த காலத்தில் பெரியாரையும் திராவிடக்கழகத்தினரையும் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்களை. அய்யர் என்றே அழைப்பர்.பார்ப்பனர்களை எதிர்த்து பேசும் அண்ணா போன்றவர்கள் கூட ஆரியர்கள், ...வடவர்கள்..... மாற்றார்கள் என்றுதான் பேசுவார்கள். ஆனால் பாரதியோ பார்ப்பனன் என்று துணிவாக தன்னுடைய பாடலில் முழங்கினான்.அது அவனுடைய மன உறுதியையும் ஏய்த்து பிழைக்கும் பார்ப்பனர்பால் இருந்த வெறுப்பையும் காட்டுகிறது. அதனால் தீமைகள் பல்லாயிரம் வந்த போதும் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொள்ளவில்லை. மற்ற பார்ப்பனர்களும் அவரைத் தம்முடைய இனமாக அங்கீகரிக்கவில்லை. அவர் இறந்து பலகாலம் சென்று அவருடைய கவிதை மேதமையை உலகம் புகழ ஆரம்பித்த பிறகுதான் அவரை பார்ப்பனர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்".
2. பாரதி ஒரு கவிஞன். எனவே அவனுடைய கவிதைகளில் நால்வகை பகுப்பு முறையை ஆதரித்து, தொடர்ந்து எழுதி இருக்கிறானா என்றுதான் நோக்கவேண்டும். அதை விடுத்து ஞான ரதத்தில் எழுதி இருக்கிறார்.கட்டுரையில் எழுதி இருக்கிறார். பாரதியின் கவிதைகளே விடுதலை வேள்வியில் துணையாய் நின்றவை. அவருடைய ஞான ரதத்தை படித்தவர்கள் எத்தனை பேர்? மேலும் ஞான ரதத்தில் எந்த இடத்தில்நால்வகை பகுப்பு முறையை ஆதரித்துள்ளார் என்று தெளிவுபடுத்தினால் நல்லது.

3. பாரதி பெண்விடுதலையை பற்றி பாடவில்லையாம்.அரைத்த மாவையே அரைத்தவனாம். நெஞ்சறியப் பொய் சொல்கிறார் இராமியா. சொல்புதிது,சுவைபுதிது என்று நவநவமாய் புதிய செய்திகளைத் தமிழுக்குத் தந்தவன். சென்றிடுவீர் எட்டுத்திக்கிலிருந்தும் கலைச் செல்வங்கள் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்று கட்டளையிட்டவனை பார்த்துஅரைத்த மாவையே அரைத்தவன் என்கிறார். பெரியார் சொன்னதை மட்டுமே வைத்துக்கொண்டு காலத்தை போக்கும்பெரியார் வாதிகளைப் பார்த்து இதைச் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும். சொந்த புத்தி வேண்டாம். பெரியார் தந்த புத்தி போதும். என்று முழங்குபவர்கள் அல்லவ?! அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் .அப்படித்தான்....... தெரியும்.

பெண் விடுதலைப் பற்றி பாரதிக்கு முன்னும் ஏன் பின்னும் கூட (மத நூல்களை விடுங்கள்). தமிழ்நாட்டில் உள்ள சங்கப்பாடல் முதல் வள்ளுவர் வரை யாராவது பெண் விடுதலை குறித்து பாரதியைப் போல் உரத்துப் பாடி இருக்கிறார்களா? சாதம் செய்ய வந்தோம் என்று பாடினார். அதன் மூலம் ஆண்கள் சமையல் செய்யக்கூடாது என்று வகை செய்தார். என்று எழுதுகிறார். இராமியா நெஞ்சறியப் பொய் சொல்கிறார். அதற்கு அடுத்தாற் போல் சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் பாரினில் பெண்கள் பிறந்து வந்தோம். என்று எழுதியிருப்பதை படித்தும் மறைத்துவிட்டார். ஒருவேளை சட்டம் என்றால் மரசட்டம், பட்டம் என்றால் வானில் பறக்கும் பட்டம் என்று எண்ணிவிட்டார் போலும். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை. என்று சொன்னதால் தொட்டிலை பெண்களுக்கு ஒதுக்கி செய்துவிட்டார். என்றால் தொல்லுலகை ஆளும் கை என்பதன் மூலம் உலகத்தையே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டாரென்று சொல்லமுடியுமா?பெண்ணியம் பற்றியகருத்தாக்கத்தின் உச்ச கட்ட உரைகல் கற்பு பற்றியகருத்தாகும். இதிலும் நேர்மையாக இருந்தவர் பாரதியார்.

தொல்காப்பியம் முதல் வள்ளுவம் , கம்பராமாயணம் வரை அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று பிதற்றிக் கொண்டு இருக்க அச்சமும் நாணமும் நாயகட்கு வேண்டுமாம் என்று சீறியவன் பாரதி. கற்பென்று சொல்ல வந்தால் அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம். என்று நீதி செய்தவன். வள்ளுவர் கூட பரத்தையிடம் செல்லாதே என்றுதான் கண்டித்தார். அதற்கு முன்பிருந்த புலவர்கள் பரத்தமையைத் தமிழருக்கான ஒழுக்கமாகவே செய்துவிட்டு போனவர்கள். பாரதிதான் முதலில் கற்பென்றால் அது இருவருக்கும் வேண்டும். என்று சொன்னவன். பின்னர் பெரியாரும் அதை வலியுறுத்தி தனக்கே உரிய பாணியில் சொன்னவர். இத்தகைய பாரதி பெண் விடுதலையைப் பற்றி அரைத்த மாவையே அரைத்தவன் என்கிறார். ஒரு வேளை அவர் படித்த மனு நீதி நூலில் பெண்களுக்கு இத்தகைய உரிமைகள் உண்டு போலும்.

பாரதியார் தனது சீடராக விளக்கிய கனக சுப்புரத்தினத்திற்கு பாரதிதாசன் என்று பெயர் சூட்டியதை அடிமைத்தனம் என்கிறார். சீடன் கேட்டார். குரு அளித்தார். இதில் இராமியாவிற்கு ஏன் குத்தல். சுயமாக சிந்தி நான் சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்று பரப்புரை செய்தவர். பெரியார் அவருக்கே பெரியார் தாசர்களும், பெரியார் அடிமைகளும் பெரியார் .அட்ப்பொடிகளும்.. இருக்கிறார்கள். கண்ணதாசன், கம்பதாசன், சக்திதாசன் என்று ஏராளமான தாசர்கள் உண்டு. இது தமிழனின் தனிக்குணம் அதற்கு பாரதியை ஏன் குறை சொல்ல வேண்டும்? தனக்கு பிடிக்காவிட்டால் பாரதிதாசன் அந்த பெயரை அப்பொழுதே தூக்கி எறிந்திருக்கலாமே? பாரதியப் பற்றி மிக உயர்ந்த கருத்துக் கொண்டு வாழ்ந்தவர் பாரதிதாசன். சிந்தனைச் சிற்பி, செந்தமிழ் தேனி,நீடு துயில் போக்க பாடி வந்த நிலா,படரும் சாதி.படைக்கு ஓர் மருந்து என்று போற்றியவர். அப்படி இருக்க இராமியா ஏன் துடிக்கிறார். செல்லியின். கவிதைகளில் ஈடுபாடு கொண்ட பாரதியார் தனக்கேஷெல்லிதாசன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் என்பதை அவர் அறிவாரோ என்னவோ?

எட்டப்பனை (எட்டையபுரத்து அரசனை) பாடியவர் கட்டபொம்மனைப் பாடவில்லை என்பது இராமியாவின் பெருங்குற்றம். எட்டய புரத்து அரசனைப் பற்றி என்ன பாடிவிட்டார்? தன்னிடம் பணம் இல்லாத போது பணம் தரச் சொல்லி ஒரு சீட்டுக் கவி எழுதி அனுப்பினார். கட்டபொம்மன் அவர் காலத்தில் இருந்திருந்தால் அவனையும் பாடியிருப்பார். மேலும் கட்டபொம்மன் விடுதலை போராட்ட வீரனா அல்லது தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள போரிட்ட அரசனா என்பதே அய்யமாக இருக்கிறது. பார்ப்பனர்களைப்,பற்றித்திட்ட வேண்டுமானால் சோவைத் திட்டலாம் சு. சாமியைத்திட்டலாம் அல்லது நான் ஒரு பாப்பத்திதான் என்று சட்ட அவையில் உரக்க அறிவித்துக்கொண்டவரை,பற்றிதிட்டலாம் ஆனால் ராமியாவிற்கு செத்துப்,போன பாரதிதான் கிடைத்துள்ளான் அய்யோ பாவம்
இராமியா
திரு.இளமுருகு அவர்கள் இக்கட்டுரைக்குப் பின்னூட்டத்தை இடுவதை விட ஒரு தனிக் கட்டுரை எழுதி இருக்கலாம். ஏனெனில் இக்கட்டுரையில் சொல்லப்படாத விஷயங்களை எல்லாம் விமர்சித்து இருக்கிறார். சாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அரிய பெரிய இரகசியத்தை ஒப்புக் கொண்டதற்கு துரை இளமுருகு அவர்களுக்கு நன்றி கூறித் தான் ஆக வேண்டும். நண்பரே! என்னுடைய 18.1.2012 நாளிட்ட பின்னூட்டததைத் தயவு செய்து பார்க்கவும். ஒரு பார்ப்பனர் சாதி அமைப்பையும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் விட்டுக் கொடுப்பவரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான உரைகல்லை அதில் குறிப்பிட்டு இருக்கிறேன். பாரதியாரின் செல்வம் (1) செல்வம் (2) தலைப்பிலுள்ள கட்டுரைகள் அவரவர் வேலைகளை அவரவர்கள் பார்க்க வேண்டும் என்ற பாரதியாரின் உள்ளக் கிடக்கையைத் தெளிவாகவே உணர்த்துகின்றன. பாரதியாரின் கவிதைகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வேன்; மற்றவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை.
durai ilamurugu
தனிக்கட்டுரையாகத்தன் வெளியீட்டேன் ஆனால் கீற்று வெளியிடவில்லை எனவே பின்னூட்டமாக வந்து விட்டது மற்றபடி அவரரவர் வேலையை அவரவரர் செய்ய வெண்டும் என்பதற்கும் பிறப்பினால் உண்டான வேலையைத்தான் செய்யவேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு தானே?
உங்கள் உரைகல் படிப் பார்த்தாலும் 30 கோடி மக்களின் முழுமைக்கும் சம உரிமை என்பது உஅரைகள்படியும் பாரதியை மானுடவிடுதலைக்காரனாகவே காட்டு கிறது .உண்மையை உங்கள் கண்ணாடி வழியாகத்தன் எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதுதான் கொடுமை
இராமியா
அவரவர் வேலைகளை அவரவர் பார்க்க வேண்டும் என்று பாரதியார் கூறியுள்ள இடம் பொருள் காலத்தை உற்று நோக்கினால் பிறப்பினால் என்பது விளங்கும். ஏற்கனவே இருக்கும் அமைப்பில் யார் யார் என்னென்ன வேலை செய்தார்களோ அவர்கள் அவ்வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தான் அவர் கூறுகிறார். 30 கோடி ஜனங்கள் கொண்ட சமூகம் முழுமைக்கும் பொதுவுடைமை என்று கூறியதை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் சாதிக் கொடுமைகளை ஒழிக்க விரும்பினார் என்பது சரியல்ல. வர்ணாசிரமத்தை ஆதரிப்பவர்களில் இரு வகையினர் உண்டு. ஒரு வகையினர் உழைக்கும் சாதியினரை அடித்து அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டால் தான் தங்களுடைய ஆதிக்கம் நிலைக்கும் என்று எண்ணுபவர்கள். வேறு வகையினர் உழைக்கும் மக்களை அன்புடன் நடத்தி வேலை வாங்குவது தான் தங்களுடைய ஆதிக்கம் நிலைப்பதற்கு வழி என்று நினைப்பவர்கள். பாரதியார் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அவ்வளவு தான். அவர் எந்த இடத்திலும் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளையே செய்வதை எதிர்க்கவில்லை. அதே போல் ‌சூத்திரர்களில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளுக்குச் செல்ல முடியாமல் தடுக்கும் முட்டுக் கட்டைகளைக் களைய வேண்டும் என்றும் சொன்னதே இல்லை. அவருடைய எண்ணமெல்லாம் உழைக்கும் மக்களைக் கொடுமைப் படுத்தாமல் இருந்தால் ஆதிக்க வர்க்கம் அதிக சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதாகத் தான் இருந்ததே ஒழிய இருக்கின்ற நிலையைத் தலை கீழாகப் புரட்டிப் போட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக எங்குமே எழுதப்படவில்லை. ஐயா! இளமுருகு அவர்களே! என்னுடைய உரைகல்லில் அதைப் பயன்படுத்துவது கொடுமை என்று சொல்லும் அளவிற்குஎன்ன குற்றம் இருக்கிறது? இதை விட நல்ல உரைகலிருந்தால் அதைக் கூறுங்களேன்.
இராமியா
ஐயா! இளமுருகு அவர்களே! பாரதியாரின் காலத்தில் இட ஒதுக்கீடு ஒரு கெட்டியான கருத்தியலாக உருவாகவில்லை என்பது சரி தான். ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை இல்லாமல் போய்விடவில்லை. மேலும் அப்படிப்பட்ட சிந்தனை தோன்றுவதற்குப் பெரிய புரட்சியாளராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சாதாரண நடுநிலையான சிந்தனையாளராக இருப்பதே போதுமானது. வெள்ளையர்கள் 1840 இலேயே இதை உணர்ந்திருந்தனர். சென்னை வருவாய்க் கழக ஆணை எண்.125 (ப்.ஸ்.ஓ. ணொ.125ஒஃப் 1840)மூலம் - ஒரே சாதியினரை வேலையில் அமர்த்தக் கூடாது என்றும், பலப்பல சாதியினரையும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தினர். பார்ப்பனர்களுடைய கடுமையான எதிர்ப்பினால் இவ்வாணை செயல்பட முடியாமல் போயிற்று. இந்நாட்டிற்குப் புதிதாக வந்த அந்நியர்களுக்கே அனைத்து வகுப்பினரும் அரசு வேலைகளில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் உதிக்குமானால் இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு, அவர் சாதிக் கொடுமைகளை எதிர்ப்பதாக இருக்கும் பட்சத்தில் எப்படி தோன்றாமல் போகிறது? அது போகட்டும். தானாகத்தான் தோன்றவில்லை; அப்படிப்பட்ட கருத்தை மற்றவர்கள் முன்னெடுக்கும் போது அதை ஆதரித்து இருக்கலாம் அல்லவா? சரி! ஆதரிக்கத்தான் இல்லை; எதிர்க்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா? பிராம்மணர் அல்லாதார் அரசதிகாரத்தில் பங்கு கேட்டு நடத்திய போராட்டத்தைப் பாரதியார் எதிர்த்து இருக்கிறார். ஏன்? பார்ப்பனர் அல்லாதார் அரசதிகாரத்தில் இடம் பெற்றால் என்ன குடி முழுகிப் போய் விடும் என்று எதிர்பார்த்தார்?

நாம் கூறும் விகிதாசாரப் பங்கீட்டு முறை மட்டுமே நிலைமையைத் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விடும் என்று என்றைக்குமே கூறவில்லை. இது ஆரம்பம் என்று தான் கூறுகிறோம். இது முடியாத பட்சத்தில் மற்றவை பயனற்றுப் போகும் என்றும் கூறுகிறோம்.
durai ilamurugu
ஓரே வரியில் சொல்வது என்றால் பாரதி இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை அது தானே! அதுவும் உங்கள் சிந்த்னையாளன் குழுவின் தொகுப்பு முறைஇடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை அப்போது இட ஒதுக்கிடு ஒரு செய்தியாகவே இருக்கவில்லை பாவம் பாரதி அதற்கு என்ன செய்வான்? உங்கள் தொகுப்பு முறைஇடஒதுக்கீடு இப்பொதிய நிலையை தலைகீழாக புரட்டிப் பொடும் என்பது மாபெரும் பொய்
durai ilamurugu
பிராம்மணர் அல்லாதார் அரசதிகாரத்தில் பங்கு கேட்டு நடத்திய போராட்டத்தைப் பாரதியார் எதிர்த்து இருக்கிறார். ஏன்
இதற்கு சான்றூ? ஒருவேளை தாங்கள் நீதிகட்சியை பாரதியார் எதிர்த்தார் என்பதை வைத்து கூறுகிறிர்கள் என்று எண்ணுகிறேன் நீதிக்கட்சி வெள்ளையர் ஆட்சியை விரும்பியது அடிமையாக் இருப்பதையும் விரும்பியது பார்ப்பன அடிமையாக இருப்பதை விடவும்வெள்ளையர் அடிமையாக இருப்பதுமேல் என்றும் கருதியது . அதனால்தாணே பெரியார் 1947ஐ துக்க நாளக அறிவித்தார்? அத்தகைய நீதிக் கட்சியின் செயல் திட்டத்தை பாரதி போன்ற தீவிர தேசிய வாதிகள் எதிர்த்ததில் ஒன்றும் வியப்பில்லை வெள்ளையானவெளியேறிய பிறகு நமது சண்டைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய குழுவில் அவரும் ஒருவற் அதில் பிழை ஒன்றும் இல்லையே
இராமியா
துரை இளமுருகு அவர்களே! ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்றால் பார்ப்பனர்கள் மட்டும் அந்நியர்கள் இல்லையா? பார்ப்பனர்கள் என்ற அந்நியர்கள் சூத்திரர்களுக்கு எதை அளித்தாலும் கல்வியை அளிக்கக் கூடாது என்ற மண்ணின் மைந்தர்களுக்கு எதிரான கொடூரமான கருத்தியலை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்கள் என்ற அந்நியர்கள் சாதி வேறுபாடு பாரக்காமல் கல்வி அளித்தார்கள். இதிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலேயர்களளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ அதை விட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த பார்ப்பனர்களை விரட்டுவது அதிக முக்கியமானது என்று தோன்றவே இல்லையா? சரி! ஆங்கிலேயர்களை விரட்டிய பின் நம்முடைய சண்டைகளுக்குத் தீர்வு காணலாம் என்று நினைத்ததில் தவறு இல்லை என்று கூறுகிறீர்களே! ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் பார்ப்பன ஆதிக்கம் மேலும் இறுகத்தானே செய்திருக்கிறது? இதற்கு பாரதியார் என்ன செய்வார் என்று கேட்கலாம். ஆங்கிலேயர்க‌ளுக்கு எதிரான போராட்டம் நடக்கும் ‌போது பார்ப்பனர் அல்லதவர்களுக்கு அரசதிகாரத்தில் இடம் கிடைத்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்? நாளை கிடைக்கும் அமிழ்தத்தை விட இன்று கிடைக்கும் தண்ணீரே மேல் அல்லவா? அவருக்கு அப்படி ஏன் தோன்றவில்லை? வ.உ.சி. க்கு அப்படி தோன்றி இருக்கிறதே? சரி! போனதெல்லாம் போகட்டும். இன்று பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்களேன். நாம் அதில் மனதைச் செலுத்தாமல் மற்றவற்றைப் பற்றியே பேசுவது பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை போகும் செயல் அல்லவா?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.