ps krishnan copyஆளுமைகள்: பி.எஸ்.கிருஷ்ணன்

“இந்திய மக்கள் தொகையில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவர்.” – டாக்டர் அம்பேத்கர், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 1942.   1932 டிசம்பர் மாதத்தில் கேரள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த, வசதியும் வாய்ப்பும், சமூகப் படிநிலையில் உயர்ந்த இடமும் பெற்றிருந்த ஒரு சிறுவன், தன் பத்தாவது வயதில் வாசித்த செய்தி அது. 

மின்சாரம் தாக்கியது போல் அந்த வரி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்று தான் நாட்டில் நிலவிய தீண்டாமைக் கொடுமையையும் சாதிய பேதங்களையும் வெறுப்பவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ளத் தொடங்கினான் அவன். அவ்வாறு அவனைச் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியவை அண்ணல் அம்பேத்கரின் அந்த சொற்கள். அச்சொற்களுக்கான இந்தியச் சாதியமைப்புப் பின்னணி குறித்த நேர்மையான விளக்கமளித்த அவனுடைய தந்தையின் சொற்களும்தான்.

தன் குடும்பம், தன் சமூக நிலை, வசதி வாய்ப்புகள், தனக்குக் கிடைத்த கல்வி என எல்லாவற்றையும் தான் வெறுத்த சாதி அமைப்புக்கு எதிராக, அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்திய அந்தச் சிறுவன்தான், கடந்த 2019 நவம்பரில் நம்மை விட்டு மறைந்த இந்திய அரசின் மேனாள் செயலாளர், ஆட்சியர் திரு.பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

தனது பத்து வயது முதல்,  87வது வயதில் மறைவது வரை அவர் சமூக நீதிக்காக நடத்தியது ஒரு அறப்போரே. தன் சிறு வயது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, உணவளித்து, குடும்பக் கட்டுப்பாடுகளை உடைக்க வைத்ததிலும் சரி, கோயிலில் தனக்கு மட்டும் கையிலும், நண்பனுக்கு கையில் தர மறுக்கவும் பட்ட பிரசாதத்தை தானும் மறுத்ததிலும் சரி, சிறு வயது முதலே அவர் சாதிக்கு எதிராக எடுத்த போராட்டங்கள் அவருடைய அறப் பாதையை உருவாக்கின.

இளம் ஆட்சியர்..

தன் கல்வி முடித்து அவர் தேர்ந்தெடுத்தது இந்திய ஆட்சியப் பணியைத் தான். 1957ல், 25 வயது இளம் அதிகாரியாக அவர் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், தாட்டிசேர்லா கிராமத்திற்குச் சென்றார்.

அப்போது நாடு சுதந்திரம் பெற்ற புதிது,  சனாதன மனுதர்மக் கோட்பாடுகள் அகலாமல் நிறைந்திருந்த, அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் அப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்த சூழலில் அதுவரையிலும் அதற்குப் பிறகும்,  எந்த அரசு அதிகாரியும் எடுக்கத்துணியாத ஒரு முன்னெடுப்பை, அவர் எடுத்தார்.

ஆம். பல்வேறு கொட்டில்களில் அடைபட்ட மிருகங்கள் போல பல்வேறு குடியிருப்புகளில் பல்வேறு சாதி மனிதர்கள் வாழ்ந்து வந்த சூழலில். அவர் தலித் பஸ்தி எனச் சொல்லப்பட்ட தாட்டிசேர்லா சேரியில் தன் முகாமை அமைத்தார். களத்திலிருந்தபடி மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண விழைந்தார்.

அது மட்டுமல்ல. தன் வேலைக்கு இடையூறாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் செயல்படுவோரைத் தடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அடையாளம் காட்டச் சொல்லி, உடனுக்குடன் அவற்றை மீட்டு உரிமங்கள் வழங்கினார்.

அன்றாடம் மக்களிடம் குறைகேட்கும் ஜமாபந்தி கூட்டம், அதுவும் சேரிகளில் முகாம் அமைத்து உடனுக்குடன் நடவடிக்கை போன்ற செயல்பாடுகளால் சாதி இந்துக்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை எல்லா தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் உள்ளானார்.

பி.எஸ்.கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவர் அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக உள்வாங்கி, அதில் அண்ணலால் உறுதிசெய்யப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளைத் தெளிந்து, எந்த மாநிலத்தில் எவர் ஆட்சியிலும், சட்டப்படி அவற்றை வழங்கும் வகையிலேயே தன் செயல்பாட்டை அமைத்துக் கொண்டார்.

அதனால் சட்டரீதியான நடவடிக்கைகள் அவர்மீது எடுக்க இயலாது. எனவே துறை ரீதியான சிக்கல்கள் உருவாக்கப்பட்டது. ஆனால், அவர் அது குறித்து கவலை ஏதும் பட்டதாகத் தெரியவில்லை.  தன்னைப் போன்று சிந்திக்கக்கூடிய நண்பர்கள், பின்புலமாக நல்ல குடும்ப அமைப்பு ஆகியவை அவருக்கு தொடர் ஊக்கமாக இருந்தன.

நல்வாழ்வுத் துறை செயலாளர்..

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்த மண்டல் அறிக்கைச் சட்டம் 1990, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் தடைச் சட்டம் 1993, பௌத்த மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் ஆகிய அனைத்து சட்ட வடிவமைப்புகளிலும் பி.எஸ்.கிருஷ்ணனின் பங்கு மிகப் பெரியது.

அவர் அச்சட்டங்களை வடிவமைத்தலில் மட்டுமல்லாது அவை  நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை தன் உழைப்பையும் ஈடுபாட்டையும் செலுத்தி வந்துள்ளார்.

அவர் ஒன்றிய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலாளராக பொறுபேற்றுக்கொண்ட ஜனவரி 2, 1990 முதல் மண்டல் அறிக்கையின் இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து, அதுவரை அந்த அறிக்கையைக் கிடப்பில் போடக் காரணமாக இருந்த பத்தாண்டு கால எதிர்ப்புகள், கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்து, எல்லாத் தடைகளையும் உடைத்து, மே 1 ல் மத்திய அமைச்சரவைக்கு ஒரு குறிப்பைக் கொடுத்தார்.

அதன் அடிப்படையிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மாபெரும் முடிவை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எடுத்ததாக அவரே முனைவர் வே.வசந்திதேவியுடனான நேர்காணலில் தெரிவிக்கிறார்.

மண்டல் அறிக்கை, பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டமானதைத் தொடர்ந்து இந்துத்துவ ஆற்றல்களால் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி  கலைக்கப்படும் சூழல் எதிர்பார்த்தபடியே உருவானது.

அதை உணர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவை, நிறைவைக் கணக்கிடாமல் ஆண்டுத் தொடக்கத்தில் கொண்டாட முன்னதாகவே திட்டமிட்டார். அதுவரை கலாச்சாரத் துறையிடமிருந்த அப்பொறுப்பை,  தன்னுடைய நல்வாழ்வுத்துறையிடம் ஒப்படைக்கச் செய்தார்.

அதற்காக ஆயிரக்கணக்கில் அறிஞர்களை அமர்த்தி அம்பேத்கருடைய புத்தகங்களை வெளியிடவும், அவர் குறித்த பல நூல்கள் வெளிவரவும் திட்டங்களை வகுத்திருக்கிறார். புரட்சியாளருக்கு இந்திய அரசின் மிகப் பெரிய விருதான ‘பாரத் ரத்னா” விருது வழங்க ஆவண செய்தார். அண்ணலின் உருவப்படம் பாராளுமன்ற அறையில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் முன்னெடுப்பால் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்ட அண்ணலின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், இந்திய அரசியல் வெளியில் தலித் இயக்கங்கள் மீண்டும் புத்துயிர் பெற துணை நின்றன என்றால் மிகையில்லை.

அந்திமக் காலம் வரை தொடர்ந்த போராட்டம்...

மிக அண்மையாக, 2019 ஜனவரியில், தன் 87வது வயதிலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடுச் சட்டம், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களை உள்ளடக்காதது குறித்து தன் எதிர்ப்பை அவர் பதிவு செய்துள்ளார்.

2018ல் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் அமைச்சர் திரு.தவார் சந்த் கெலாட் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அரசு எதிர்மனு தாக்கல் செய்து அச்சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கையில், அந்த மனிதரின், சமத்துவத்திற்கான உள்ளார்ந்த நோக்கமும், அதை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் அவருடைய உழைப்பும் தெரியும்.

தன் நீண்ட பணிக்காலத்தில் தனக்குக் கிடைத்த கள அனுபவங்களின் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட / பழங்குடியின / பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, நிலம், சுகாதாரம், பண்பாடு, அதிகாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளுக்கு செய்யவேண்டியவற்றை ஒரு சிறு வழிகாட்டி அறிக்கையாகத் தயாரித்து அதை அக்கறை கொண்ட அரசியலாளர்களுக்கு அனுப்பி உள்ளார்.

ஆந்திரத்தில் இளம் ஆட்சியாளராகப் பதவியேற்ற தொடக்ககாலம் முதல் இறுதிவரை அவர் அடித்தட்டு மக்கள் மீது வைத்த அன்பை, பேராசிரியர் காஞ்சா அய்லய்யா, அவருடைய நினைவஞ்சலி நிகழ்வில் “கேரவேன்” பத்திரிகையாளரிடம்  நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் தன் சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதை ஒரு கீழான செயலாகக் கருதியதையும், அவருடைய குடும்பமே சாதி அடையாளங்களையும் பற்றையும் விட்டொழித்தவர்களாக வாழ்வதையும் அவருடைய “சமூக நீதிக்கான அறப்போர்” எனும் நூல் வெளிப்படுத்துகிறது.

“உனக்கு நீயே ஒளியாயிரு” எனும் பௌத்த தத்துவம், விவேகானந்தரின் கொள்கைகள், அம்பேத்கரின் நூல்கள், நாராயணகுரு, அய்யங்காளி ஆகியோரின் போராட்டங்கள், காரல் மார்க்சின் பொதுவுடைமைத் தத்துவம் ஆகிய பல்வேறு தத்துவங்களும், சிந்தனைகளும் பி.எஸ்.கிருஷ்ணனின் சிந்தனையையும், வாழ்முறையையும் செயல்பாடுகளையும் வடிவமைத்துள்ளன.

பணியிடத்தில், பணிக்காலத்தில், சட்டத்திற்குட்பட்டு, கொள்கை உறுதி உடைய ஒருவரால் எவ்வளவு வலுவாக அச்சட்டங்களை, அதிகாரங்களை, நிர்வாகத்தை, எளியவனுக்கு ஆதரவாக வளைக்க முடியும் என்பதை பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சாதித்துக் காட்டியுள்ளார். 

தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபூர்வானந்த் அவர்கள் அவருடைய நினைவாகச் சொன்னதைப் போல, “அதிகார அமைப்பிற்குள் பி.எஸ்.கிருஷ்ணனைப் போன்றோர் இருப்பது ஒடுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மக்கள் இயக்கங்களை வலுப்படுத்தும்”.

தன் சொந்த மக்களை முன்னேற்றிவிட, ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன், இந்த அதிகார அமைப்புக்கு வெளியே எடுத்த / எடுக்கும் முன்னெடுப்புகளைத் தன் தலைமேல் விழுந்த பொறுப்பாக பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அமைப்பிற்குள் இருந்து செய்திருக்கிறார்.

இந்தியக் குடிமைப் பணியில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகளை நாம் சந்தித்திருக்கலாம். ஆயினும் சமூக நீதிக்கான தன்னுடைய பேரவாவால், அடித்தட்டு மக்களுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட திரு.பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கிறார். எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

அத்தகையவர் “என்னைப் போன்ற ஒருவர் இதைவிட குறைவாகச் செய்வது முடியாது” என்று மனோன்மனியம் பல்கலையின் மேனாள் துணைவேந்தரான முனைவர் வே.வசந்தி தேவியிடம் தன்னடக்கத்தோடு ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அது புத்தகமாக “A Crusade For Social Justice” என ஆங்கிலத்திலும் “சமூக நீதிக்கான அறப்போர்” என தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு “சவுத் விஷன் புக்ஸ்” நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சாதியம் புரையோடிப்போன கேடுகெட்ட அமைப்பிற்கு எதிராக, ஆரவாரங்களின்றி, எதிர்பார்ப்புகளின்றி, தான் ஒரு உயர்சாதி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அதன் பயனாளியாக இருக்கும் வாய்ப்பை மறுத்து, ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பயணித்து, மானுடத்தை, சமத்துவத்தை நேசிக்கும் ஒருவராக சமர் செய்து ஓய்ந்திருக்கும் அம்மாமனிதர் நன்றியோடு நினைவு கூறத் தக்கவர்.

நன்றி:

  1. “சமூக நீதிக்கான அறப்போர்” – நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’ – முனைவர் வசந்தி தேவி
  2. “The Caravan”  - 30.11.2019

- சாரதா தேவி

Pin It