அதிகாலை மூணு மணி கதவைத் தட்டும் சத்தம். அரைத்தூக்கத்தோடு முனியம்மாள் ‘‘யாரது என்ன வேணும்’’னு கேக்க... ‘‘அண்ணி ணா சகுந்தலா புள்ளைக்கு வயிறு வலிக்குதாம் கத்திட்டே இருக்கு ஒரு சோடா வேணும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தா அண்ணி’’னு சகுந்தலா பக்குவமா கேக்க... ஒரு மனுசன நிம்மதியா தூங்க விடலனாலும் அரைகுறையாச்சும் தூங்க விடமாட்டிங்கலானு புலம்பியபடியே ‘‘கடையாண்டபோ நா வரேன்’’னு சொல்லிட்டு... சாவி கொத்த கையில் எடுத்துக்கிட்டு கையில் ஒரு டார்ச் லைட்ட எடுத்துட்டு விறுவிறுன்னு புறப்பட்டாள் முனியம்மாள்...

கடையாண்ட போய் பார்த்தால் இவ்வளவு நேரத்துக்கே ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் தேனீருக்காகக் காத்திருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘‘தூக்கம் வரல மா ஒரு டீ போட்டு தா மா’’னு கேட்க... சோடாவை சகுந்தலாவிடம்கொடுத்துவிட்டுகடையை முழுமையாகத் திறந்து கடைக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு டீ போட அடுப்பை பற்றவைக்க மணி நான்கு... அப்படியே பால் காஞ்சிட்டு இருக்கும்போதே ‘‘எவ்வளவு நேரம்மா போடுற’’னு ஒரு குரல் கேட்க... ‘‘இதோ ஆச்சி ப்பா..! தரேன்’’னு டீ யைசூடா சுவையா போட்டு நீட்டினாள்... முனியாண்டி குடிப்பதற்குள் எனக்கு ‘‘ஒரு அரை சக்கரை;’’ ‘‘எனக்கு சக்கரை இல்லாமல் காப்பி ஒன்னு,’’ ‘‘லைட் ஆ ஒரு டீ, ஸ்ட்ராங் ஆ ஒரு டீ’’னு ஒருபுறம் ஆர்டர் வர மறுபுறம் அக்கா ‘‘உப்பு ஒரு பாக்கெட் வேணும், மிளகா ரெண்டுரூபாய்க்கு வேணும்’’னு கேட்க யாருக்கு முதலா குடுக்கனு யோசிப்பதற்குள் கடைக்கு வந்தவர்கள் ‘‘எனக்கு சீக்கிரம் கொடுங்க’’னு கேட்க... ‘‘எனக்கு என்ன பத்து கையா இருக்கு இருமா தரேன்’’னு முணுமுணுத்தப்படி டீ யை போட்டு முடித்துவிட்டு கடைக்கு வந்தாள் முனியம்மாள்...

‘‘உப்பு ஒரு பாக்கெட், பச்சை மிளகாய் ரெண்டுரூபாய்க்கு வேற’’ என்று முனியம்மாள் கேட்க..; ‘‘அக்கா பச்சை மிளகாய் அஞ்சி ரூபாய்க்கா கொடுத்திடுங்க’’னு சொல்ல ‘‘காலைலையே இப்படியா’’ என்று சலித்துக்கொண்டே மாற்றிக் கொடுத்தால் அதற்குள் வயதான பாட்டி ஒருவர், ‘‘இந்தாடி புள்ள ஒரு நெருப்பெட்டி குடு டி’’னு சத்தம் போட ஓடி போய் நெருப்பெட்டியை கிழவியிடம் கொடுத்துவிட்டு முதல் ஒரு ரூபாயை பெற்று தன் கல்லாவில் போட்டாள். அதற்குள் முன்பு வந்தவர் ‘‘எவ்வளவு நேரமா நிக்கறது எனக்கு முதல்ல கொடுமா நா போறேன் பின்னாடி வர்றவங்களுக்கு முன்னாடி கொடுத்தா எப்படி’’னு சங்கடப்பட, அதற்குள் பில்லைபோட்டுவைத்தால் கடைக்காரி முனியம்மாள். ‘‘150 ரூபாயா அவ்வளவு இல்ல காலைலயே கடன் வச்சா நல்லா இருக்காது 50 தறேன் 100 கடன் வச்சிக்கோ’’னு சொல்ல... கடன் வச்சா கடை நல்ல இருக்காது. அது காலையில வச்சா என்ன மாலையில வச்சா என்ன என்று பகுத்தறிவாகப் பேசினாள் கடைக்காரி...

இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் ஓடிக்கொண்டு இருக்க பள்ளிக்கூடம் திறக்கும் நேரம் ஆனது. ஊரின் கதாநாயகர்கள் கூட்டம் கூட்டமாக சட்டைப்பையில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய் என விதவிதமா கொண்டு வந்தார்கள்... முனியம்மாவின் முகத்தில் எதோ ஒரு பயம். என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் அந்த நிகழ்வுகள் அரங்கேறின... ‘‘என்னடா வேணும்’’னு கேட்க... ‘‘ஒருத்தன் எனக்குப் ஓரியோ பிஸ்கட் எனக்கு டைகர் கிரீம் பிஸ்கட் எனக்கு நிப்பெட் வேணும்’’னு மாத்தி மாத்தி கேட்க... ‘‘முதலில் யாரு எவ்வளவு வச்சி இருக்கிங்கனு சொல்லுங்கஅப்புறம் தரேன்’’னு பார்த்தா யார் கைலையும் பெரிய பணம் இல்லை. ஒன்னு, ரெண்டு, அஞ்சுனுதான் இருந்துச்சி. பொறுமையா ‘‘இந்த காசுக்கு இதுலா வராது போய் பெரிய நோட்டு காசா வாங்கிட்டு வாங்க அப்போ அதுலா தரேன் இப்போ சாக்லேட் வாங்கிக்கோங்க’’ னு கொடுத்து அனுப்புறதுக்குள்ள அவள் உயிர் அவள் கையில் இல்லை; தனியா ஒருத்தன் எதையோ யோசித்துக்கொண்டு இருப்பதை பார்த்த முனியம்மாள் ‘‘உனக்கு என்னடா வேணும் தம்பி’’னு கேட்க... ‘‘அக்கா எனக்கு அது வேணும்’’னு தன் வலது கையை நீட்டினான் குட்டி பையன், என்ன காட்டுகிறான் என்று திரும்பி பார்த்தல் முனியம்மாள். அவன் காட்டியதை அவளால் கொடுக்க முடியவில்லை அவனை எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு புரிவில்லை, அவன் காட்டியது பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் ஸ்டேப்ரீ. ஒரு வழியா ‘‘அது விக்கிறதுக்கு இல்ல’’ன்னு கடைக்காரி சொல்ல... ‘‘விக்கறதுக்கு இல்லனா எதுக்கு கடைல வச்சி இருக்கீங்க’’னு குட்டி பையன் திருப்பி கேட்க.. பேச முடியாமல் கோபமாக ‘‘என்ன மிட்டாய் வேணும்’’னு கேட்க... ‘‘பப்ளிக்காம் வேணும்’’ சொன்னான் அந்த பையன்; ‘‘முடிஞ்சது டா’’னு பெருமூச்சி விட்டப்படி சமைக்கத் துவங்கினாள். எப்படியோ சமைத்து முடித்து அவள் சோற்றில் கை வைக்கும்போது நேரம் காலை பத்து மணி. முதல் வாய் சோற்றை வைத்தாள்.

‘‘அக்கா பெட்ரோல் வேணும்’’னு ஒரு வண்டி சத்தம் கேட்க ‘‘இந்த வீட்டுல ஒருவாய் சோறு கூட ஒழுங்கா சாப்பிட முடியாது’’ என்றபடி பெட்ரோலை ஊற்றிக் கொடுத்தாள்.வண்டிக்காரன் பெட்ரோலைப் பெற்றுக்கொண்டு அதற்கானப் பணத்தைக் கொடுத்துவிட்டு சிட்டாய்ப் பறந்தான். மீண்டும் கையைக் கழுவிக்கொண்டு சோற்றில் கையை வைத்தாள். இரண்டு மூன்று வாய் சோற்றை சாப்பிடுவதற்குள் அடுத்த ஆள் கடைக்கு வந்ததால் அவளால் முழுமையாகச் சாப்பிட முடியவில்லை... அரை வயத்தோடு மீண்டும் கடைக்கு சென்றாள் முனியம்மாள்...

நேரம் ஒன்னு... ரெண்டுமூணு எனமணி கடந்தது... மணி அஞ்சுஆனது. கடையில் கூட்டம் அதிகமானது, அதே நேரம் தோசை மாவு ஆட்டுவதற்காக பலர் வரிசையாகக் காத்து இருந்தனர். எதைமுதலில் செய்வது என்று புரியாமல் காத்திருந்த வேலையில் தன்னுடைய கணவர் விவசாயத்தில் இருந்து வந்ததும் மகிழ்ச்சி அடைந்தாள்; கணவர் அரிசியை அரைத்து மாவாக கொடுக்க இவளோ கடையில் மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொடுத்து வந்தாள். கல்லூரிக்குச்சென்று இருந்த மகன் வருவதைக்கண்டு கூடுதல் மகிழ்ச்சி அடைந்தாள் கடைக்காரி முனியம்மாள். ஆனால் மகனோ எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று ஊர் சுத்தக் கிளம்பினான். எப்போது நம் குடும்ப கஷ்டம் புரியுமோ என்றப்படிவருந்திக்கொண்டே விற்பனை செய்துகொண்டு இருந்தாள். நேரம் இரவு பத்தைக் கடந்தது...

காலையில் டீ போடுவதற்காகப் பதமாகப் பாலைக்காய்ச்சி வைத்துவிட்டு இரவு உணவை சமைக்கத் துவங்கினாள்; இரவு உணவை பதினொரு மணிக்கு குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு, அடுத்தநாள் விடியலை நோக்கி உறங்கச் சென்றாள்கடைக்காரி முனியம்மாள்..!

(விரைவில் வெளிவரவிருக்கும் ‘தினக்கூலி’ புத்தகத்திலிருந்து)

Pin It