பெருவெள்ளம் ஓய்ந்த
அன்றொரு நாள்;
வகிடெடுத்து வாரியிருந்தது
நதி மணல்!

கொடிபடர்ந்த தும்மட்டிக் கொடியும்
தலையசைத்த நாணலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தவித்துக் கிடந்தது!

கிளிஞ்சல்களும் கூழாங்கற்களும்
திட்டுத்திட்டாய் சிதறிக்கிடந்தது
பொங்கிவந்த பெருவெள்ளத்தில்!

தெளிந்த நீரோடையாய்
தெற்கு படித்துறையோரம்
சலசலத்து ஓடுகிறது
பெருநதி இப்போது சிறுநதியாய்!

கோரைப்புற்களிலும்
ஓணாங்கொடிகளிலும்
கண்ணாமூச்சியாடி
துள்ளிக் குதித்து வரும்!

மீசைவெச்ச கெளுத்தியும்
மினுமினுக்கும் கெண்டையும்
அலைஅலையாய் முன்னேறும்
ஆடிவரும் ஆற்றுநீரில்!

மேற்கால படித்துறையில்
அய்யர்வீட்டு மாமியும்
கெழக்காலே படித்துறையில்
கீழைவீட்டு குப்பியும்
துவைத்த துணியெல்லாம்
வெள்ளைக் கொடியாய்
தோரணமாய் பறக்கிறது
நாணல் வளைந்திருக்கும்
ஆற்றங்கரையோரம்!

கரையெல்லாம் செண்பகப்பூ
வளைந்திருக்கும் தென்னைமரம்
நீருக்குப் பூச்சூடி
நித்தம் நித்தம் ஓடிவரும்!

செங்கல் நாரை
கொத்திப் பறக்கும்!
தூக்கணாங்குருவி
ஊஞ்சலாடும்!
அயிரை மீன்கள்
துள்ளி குதிக்கும்!

ஆங்காங்கே மணல்வீடு
அழகழகாய் பூத்திருக்கும்
அந்திப் பொழுது வந்தால்
அத்தனையும் சரிந்திருக்கும்!

இதோ நதிக்கரைப் பயணம்
படித்துறைக்கற்கள்
ஒன்றுமில்லை
ஆற்றுக்குப் போகும்
பாதையுமில்லை!

அள்ளிக்குடிக்க கைகள்
இருக்கு!
துள்ளியோடும் வெள்ளமில்லை!
விளையாட கால்கள் இருக்கு
அலையாடும் நதிகளில்லை!

நதியோடிய இடமெல்லாம்
இன்று நரியோடுகிறது
சுரண்டல் நரியோடுகிறது!

Pin It