பெரியோர்களே! தோழர்களே!

நான் அடிக்கடி மாணவர்களுக்குச் சொல்லுவேன், “மாணவர்களே! நீங்கள் படிப்பை ஒழுங்காகக் கவனித்து படியுங்கள்; உங்கள் பெற்றோர்கள் கடன் வாங்கி, எப்படியாவது நீங்கள் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்கிற ஆசையால் செலவழித்து, உங்களைப் படிக்கவைக்கிறார்கள்; மற்ற மேல்சாதிக்காரர்களைப் போல பார்ப்பனர்களைப் போல உங்களுக்கு யாதொரு விதமான வசதியும் இல்லை; நீங்களாகவே தான் படித்து முன்னுக்கு வர வேண்டும்; அப்படி இருக்கும்போது நீங்கள் படிப்பைத் தவிர வெளி விஷயங்களில் கலந்து கொள்ளாதீர்கள், அவைகளில் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதலில் உங்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி நன்றாகப் படியுங்கள் என்றெல்லாம் சொல்லுவேன்.

எந்தக் காரியத்திற்கும், அனேகமான நான் மாணவர்களையே அழைக்கமாட்டேன். அவர்களைக் கூப்பிடுவதென்றாலே மிகவும் யோசிப்பேன். ஏனென்றால், அவர்கள் எவ்வளவோ கஷ்டங்களையும் எதிர்ப்பையும் தாண்டிப் படிக்க வேண்டியவர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாமும் புகுந்து அவர்களைக் கெடுப்பது என்றால் என்ன நியாயம் என்று கருதித்தான், மாணவர்களை வெளி விஷயங்களில் கலந்து கொள்ள வேண்டாமென்று கூறுவேன்.

ஆனால், இன்று அவர்களின் படிப்புக்கே ஆபத்து வந்துவிட்டது என்கிறபோது அவர்களின் படிப்பையே ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஒரு இராஜ்யத்துக்கு முதல் மந்திரியும், கல்வி மந்திரியும், வாத்தியார்களும் முயல்கிறார்கள் என்கிறபோது என்ன செய்வது? இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை எதிர்த்து மாணவர்கள் கிளர்ச்சி செய்து தானே ஆகவேண்டும்?

சாதாரணமாக, மாணவர்களைக் கிளர்ச்சிக்கு அல்லது மற்ற காரியங்களுக்குத் தூண்டுவதே தவறு. அவர்கள் உலக அனுபவம் இல்லாதவர்கள்; எதையும் எளிதில் நம்பிவிடுவார்கள்; இளம் உள்ளத்தில் வேகத்தில் எதுவும் செய்துவிடுவார்கள். அவர்களை இந்த முறையில் பழக்கி அவர்களைச் சிலர் கேடு அடையச் செய்யக்கூடாது. அது பஞ்சுக்குப் பக்கத்தில் ‘பெட்ரோல்’ வைத்து நெருப்புப் பற்றவைப்பது போல ஆகும். மாணவர்களை மாணவர்களுடைய காரியத்தின் அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு – அதிலும் அளவுக்கு மீறிப் போகாமல் கட்டோடு இருக்கச் செய்துகொண்டு, மற்றபடி அவர்கள் கலந்து கொள்ளாதிருக்க விட்டுவிட வேண்டும்; இப்படித் தான் செய்யவேண்டும்.

( சென்னையில், 5-12-1952ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 11-12-1952 )

Pin It