2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,135 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழியென கூறிய சமற்கிருதமொழி நாட்டின் எல்லா மக்களிடமும் சென்று சேரவேண்டும் என்ற கொள்கை நோக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்ப்பனியத்தினால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கை திட்டம்தான் இது மொழியைக் கொண்டு சேர்ப்பதற்கான திட்டவரையறை மட்டுமே இல்லை. ஏனெனில் சமற்கிருத மொழி சாதாரண வழக்குமொழியாகவெல்லாம் பேசுவதற்கு உகந்த மொழியல்ல.

சமற்கிருத மொழியில் உச்சரிப்பு ஒலிகள் போன்ற அனைத்தும் சுலோகங்கள், வேத மந்திரங்கள் போன்றவைகளாகவே உள்ளன. வேதங்களும் வேத சுலோகங்களும் மனுநூல் போன்றவைகளும் மக்களை சென்று சேர்வது வெறுமனவே மொழியாக மட்டுமல்ல, வேதங்களிலும் மனுநூல்களிலும் சொல்லப்படுகின்ற பாகுபாடுகளை மக்களிடம் தீவிரமாக கொண்டு சேர்க்கின்ற முயற்சியே இப்போதைக்கு தேவபாஷை என்று அவாள் சொல்கின்ற சமற்கிருத திணிப்பின் பிரதான நோக்கம்.

17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் பீடத்தில் வைத்து சமற்கிருதம் போற்றப்பட்டதொரு நிகழ்வை மீண்டும் நிறுவ கடுமையாக முயன்று வருகிறார்கள். கிரேக்கத்தின் கிரீக்மொழியும் - ஜெர்மனியின் டொச்சு மொழியும், கோதிக்மொழியும் சமற்கிருத மொழியோடு எழுத்து, உச்சரிப்பு, ஒலிகளில் ஒத்திருக்கிறது. என்றும், அத்தகைய மொழி பல மொழிகளின் கூட்டுக்கலவையாகவே இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை மொழியியல் அறிஞர்கள் ஆய்வுகள் மூலமாக நிறுவியுள்ளனர். அப்படிப்பட்ட மொழியை நாடு முழுக்க கட்டாயமாகத் திணிக்க வேண்டுமென 1939இல் ஆர்.எஸ்.எஸ்-ன் பிதா மகனான கோல்வாக்கர் தாம் எழுதிய “நமது தேசத்தின் வரைவு” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இதே காலகட்டத்தில் 1938இல் சென்னை லயோலா கல்லூரியில் பேசிய அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, சமற்கிருதத்தை புகுத்தவே இந்தி இப்போதைக்கு புகுத்தப்படுவதாக நிகழ்ச்சி மேடையிலேயே வெளிப்படையாகவே சொன்னார். 1952ஆம் ஆண்டு இப்போதைய பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் மாநாட்டுத் தீர்மானமும் சமற்கிருதத்தை நாடு முழுக்க பரப்ப வேண்டும் என்ற உறுதியேற்றவுடனேயே கலைந்தது.

கல்வித்துறையினூடாக திணிப்பு வேலை

2014ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், CBSE பள்ளிகளிலும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை சமற்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென அவசரமான உத்தரவை வழங்கி, சமற்கிருதத்தை மாணவர்களுக்கு கட்டாயமாகத் திணிக்க முற்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து குருஉத்சவ் என ஆசிரியர் தினத்தை சமற்கிருத பண்பாட்டின்படி தமிழகத்தின் உள்ள மாணவர்களை கொண்டாட வைத்ததும் பள்ளிகளை குறிவைத்த சமற்கிருதம் திணிக்கப்படுவதை வெளிக்காட்டியது. சமீபத்தில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படாமல் மகாகணபதி எனத் தொடங்கும் சமற்கிருத பாடலைப் பாடியதோடு இந்த தவறுக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காத நிலையைப் பார்த்தால், இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் மரபுகளை தவிர்ப்பதற்கான முன்னோட்டம் என்பதையே இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

2014ஆம் ஆண்டு சமற்கிருதத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்களுக்கு 70 கோடியும் CBSE பள்ளிகளுக்கு 320 கோடியும் நிதி ஒதுக்கி கல்வி நிலையங்களுக்குள் சமஸ்கிருத திணிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்.

மாணவர்களிடத்தில், சமற்கிருதத்தில் அறிவியல் மருத்துவம், விஞ்ஞானம், போன்றவை பற்றிய பல்வேறு செய்திகள் இருப்பதாக பொய்யுரை பேசுகின்றனா். புஷ்பக விமானம் இன்றைய நவீன விமானத்தை விட உயர்வானது என அறிவியல் மாநாட்டில் பேசி குட்டுப்பட்டதும், இதுவரை நோபல் பரிசு பெற்ற எவருமே சமற்கிருதம் அறியாதவர்கள் தான் என்பதுமே சமற்கிருதத்தில் எவ்வித அறிவியலும் இல்லை என்பதற்கான சான்றாகும். எட்டாம் வகுப்பு தேர்விலேயே மாணவர்களின் திறன் அடிப்படையில் தொழிற்கல்வியை புகுத்தும் குலக்கல்வி முறையிலான திட்டமும், பெண்களுக்கு டி.டி.எச் வழியே வீட்டிலிருந்தபடியே கல்வி என்ற பெண்ணடிமை, கல்வி மறுப்பு, சமூகத்தில் பாலின பாகுபாட்டை தீவிரப்படுத்துதல் என, புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்களும் வேத கால வர்ணப்பாகுபாடுகளையும் கல்வி மறுப்புகளையும் இம்மண்ணில் மீண்டும் நிறுவுவதற்கான முயற்சியாகவே இருக்கிறது. மருத்துவம் படிக்க சமற்கிருதம் அறிந்திருக்க வேண்டுமென்ற நிலையை 1930களிலேயே மாற்றிய நீதிக்கட்சியின் சாதனையை மாற்றி மீண்டும் சமற்கிருதத்தையே தகுதியாக அளவீடு செய்யவே கல்விநிலையங்கள் குறிவைக்கப்படுகிறது.

சமற்கிருதம் வேண்டாமென்பது ஏன்?

  1. எம்மொழித் துணையுமின்றி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட தமிழ்மொழியை நீச மொழி என்கிறது சமற்கிருதம்.
  2. இந்திய மொழி அனைத்திற்கும் மூலமொழி சமற்கிருதமே என்ற பொய்யான ஆய்வு முடிவை சுமந்தபடி புகுத்தப்படுகிறது. இதனால் பிறமொழிகள் மீது ஆதிக்கத்தை நிறுவவே சமற்கிருதம் நுழைக்கப்படுகிறது.
  3. தில்லை கோவிலின் சிற்றம்பலமேடை மீது தமிழ் ஏறத் தகுதியற்றது. என்று சொன்னவர்களின் தாய்மொழியான சமற்கிருதம் தமிழகத்திலே நுழைய தகுதியற்றது.
  4. சமற்கிருத நூலான மனுநூல் மூலமாக இம்மக்களை வர்ணபாகுபாடு கொண்டு பிரித்த மொழியே சமற்கிருதம். நால்வருணங்களை சமூகம் தொடர்நது நினைவில் வைத்துக்கொள்ள ஏற்படுத்தும் நவீன ஏற்பாடு.
  5. வழக்கொழிந்த மொழி வரிசையில் உள்ள மொழி, மிகவும் சொற்பமான மக்களே தாய்மொழியாகக் கொண்ட மொழி, பிற மொழிகளை விட உயர்வானது என்ற ஆதாரமற்ற பொய்களை சுமந்தபடி ஆட்சியதிகாரத்தின் துணையுடன் திணிப்பாக நுழைக்கப்படுவதை ஒரு போதும் சுயமரியாதை மண்ணில் அனுமதிக்க இயலாது.

இதனையெல்லாம் கருத்தில் கொண்ட பெரியார் “சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர்கள் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மை கீழ்சாதி மக்களாக்க முடியும் அவர்கள் பார்ப்பனர்களாகவே இருக்கமுடியும் சமற்கிருத நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு அதை உணர்ந்து தான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக காரியம் ஆற்றுகின்றனர்”

என 15.12.1960இல் வெளியான விடுதலையில் எழுதினார்.

“திணிப்பை உணர்வோம்!

தீரத்துடன் திணிப்பை முறியடிப்போம்!

Pin It