தற்குறிப் பையன் ஒருவன் திடீரென்று தமிழ்ப் புலவராக வேண்டு மென்று ஆசைப்பட்டான். அதுவும் இந்தக் காலத்து பேசிக் (க்ஷயளiஉ) படிப்புப் புலவர் மாதிரியல்ல! அந்தக் காலத்துப் பெரும் புலவர் மாதிரியாக வேண்டுமென்று ஆசை! நிகண்டும், நன்னூலும், தொல்காப்பியமும், திருக்குறளும், நைடதமும், இராமாயணமும், பாரதமும் நெட்டுருப் போட்டுத் தொலைப்பதென்றால் எளிதா? எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?

kuthoosi gurusamy 268ஏதோ சங்க நூல்களில் 10-15 வரி, நன்னூலில் 7-8 சூத்திரம், கம்பராமாயத்தில் 40-50 பாட்டு, குறளில் 10-20 குறள் - இவைகளைப் படித்து பரீட்சை எழுதிவிட்டுப் புலவர் பட்டம் பெற்றுவிடுவது அவ்வளவு பெரிய கஷ்டமல்ல.

ஆனால் வெங்கடசாமி நாட்டார் மாதிரி, மறைமலையடிகள் மாதிரி, திரு. வி. க. மாதிரி - பெரும் புலவர்களாவதென்றால் முடியுமா?

மேற்படித் தற்குறிப் பையனுக்கு மேற்கண்ட பெரும் புலவர்கள் மாதிரி திடீரென்று ஆகிவிட வேண்டுமென்று ஆசை வந்துவிட்டது. என்ன செய்தான் தெரியுமா? கவனித்துப் படியுங்கள்!

ஒரு படி பசும்பால்! முக்கால் படி மலைத்தேன்!

அரைப்படி வெல்லப்பாகு! கால்படி பாதாம் பருப்பு!

-இந்த நான்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் - முச்சந்தியில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது!

அதற்கு! முன்பு போய் கைகூப்பி நின்று கொண்டான்! கீழ்க்காணும் படி பேரம் பேசினான்:-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ் செய்

துங்கக் கரிமுத்துத் தூணியே, நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றுந்தா!”-

என்று உரக்கக் கேட்டான்!

இதைக் கேட்டார், உமாதேவியின் உடம்பு அழுக்கினால் பிறந்த விக்னேஸ்வரர்!

“டேய்! சோம்பேறிப் பயலே! என்னடா சொன்னாய்? பாலுக்கும், தேனுக்கும் பாகுக்கும், பருப்புக்கும் ஈடாக சங்கத் தமிழ் மூன்றையுமே பேரமாகக் கேட்கிறாயாடா? அயோக்கியப் பயலே! என்னையும் எம். எல். ஏ. என்றா நினைத்துக் கொண்டாய்? லஞ்சம் கொடுத்து ஏமாற்றலாமென்றா நினைத்து விட்டாய்? மந்திரிகளுக்கு மாலை போட்டு ஏமாற்றுகிற கயவர் களைப்போல நீயும் ஒரு கயவனடா! இதோ! பிடிசாபம்! உன்னை ஆச்சாரியார் மந்திரி சபையில் ஒரு அடிமை மந்திரியாக்கப் போகிறேன்!”- என்று கூறிக் கொண்டே, கோபக்கனல் வீச, பெருச்சாளிமீது ஏறிக் கொண்டு பழைய பஞ்சாப்மெயில் வேகத்தில் புறப்பட்டார், யானை முகத்துத் தொந்திக் கணபதி!

சங்கத் தமிழ் மூன்றுங் கேட்ட சோம்பேறித் தற்குறி, மகாவிஷ்ணு பன்றிஅவதார மெடுத்துச் செய்ததுபோல, உடனே “அண்டர்கிரவுண்ட்” போய் விட்டான்!

ஆச்சாரியார் மழை வேண்டுமென்று கடவுளைக் கேட்கச் சொல் கிறார்! “கடவுளை வணங்குங்கள்,” என்கிறார்! அவரை ஆணிவேருடன் பிடுங்கச் சொல்கிறார்!

“ஏய் அற்பனே! நீ என்ன எனக்கு கமிஷன் ஏஜெண்டா? தரகனா? என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டாயா? எந்தக் காலத்தில் மழை பெய்ய வேண்டும் என்பது கூடவா எனக்குத் தெரியாது? நீதானா நினைவூட்டவேண்டும்? நான் மறந்து விட்டேன் என்பது உன் நினைப்பா? அட, அசடே! எல்லாம் எனக்குத் தெரியுமடா! அயோக்கியர் ஆட்சியில் மழை பெய்யக் கூடாது என்றுதானே அய்ந்து வருஷமாய் மேகங்களை என் பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறேன்? திடீரென்று என்னைப் புகழ்ந்து பாடிவிட்டு மேகங்களைத் திருடிக்கொண்டு போகப் பார்க்கிறாயா? என்னை ஏமாற்ற நினைக்காத நாடுகளிலெல்லாம் நான் மழை பெய்யச் செய்யவில்லையா? என்னைப் பற்றியே நினைக்காமல் தங்கள் முயற்சியையே நம்பியிருக்கின்ற ஒரே நாட்டில் ஏராளமான மழை பெய்யச் செய்யவில்லையா? என்னைச் சதா அழைத்துத் தொல்லை தருகிறவனை யெல்லாம் நான் மதிப்பதே கிடையாது! யோக்கியமான அரசனோ, தலைவனோ, அமைச்சனோ, புகழ்ச்சிக்காகவோ, மாலைக்காகாவோ ஏமாறமாட்டான்! இது கூடவா உனக்குத் தெரியாது?”-இந்த மாதரித்தான் கேட்பார், கடவுள்!

யோக்கியர்கள் கடவுளிடம் பேரம் பேச மாட்டார்கள்! போகட்டும்! கடவுளைத்தான் கேட்கிறார்களே - இருந்திருந்து மழையை மட்டுந்தானா கேட்க வேண்டும்?

வாரத்தில் ஒரு நாளைக்குத் தண்ணீர் மழை!

ஒரு நாளைக்குப் பச்சரிசி மழை!

ஒரு நாளைக்குப் பசும்பால் மழை!

ஒரு நாளைக்கு நல்லெண்ணெய் மழை!

ஒரு நாளைக்கு உளுந்து மழை!

ஒரு நாளைக்கு 100 -ம் நெம்பர் நூல் மழை!

ஒரு நாளைக்கு ரூபாய் மழை!

-இப்படியாக வாரந்தோறும் மாறி மாறி ஒரு மாதத்துக்குப் பெய்தால் எப்படி யிருக்கும்?

கடவுளைக் கேட்பதில்கூட தரித்திரபுத்தி எதற்காக? தண்ணீர் மழை தரக்கூடிய சர்வ வல்லமையுள்ள கவுளுக்கு ரூபாய் மழையோ, அரிசி மழையோ தருவது ஒன்றும் கஷ்டமில்லையோ!

கடவுள் தரகர் கருப்புக் கண்ணாடியார் மேற்கண்டவைகளையும் சேர்த்து வேண்டுமாறு பொது மக்களிடம் கூறி, ஏமாற்றுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

வந்து -ஏமாத்- றோம்! (அதாவது வந்தே மாதரம்!)

- குத்தூசி குருசாமி (23-04-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It