kuthoosi gurusamy 3003,67,233 ஸ்டர்லிங்! சுமார் 40 லட்ச ரூபாய்! பர்னார்ட்ஷா - உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் - விட்டுப் போயிருக்கின்ற செல்வம்! பணஞ் சேகரிப்பதில் ரொம்ப நிர்த்தாட்சண்யமாயிருப்பாராம், இந்தத் தாவர உணவுப் பேர்வழி!

சிக்கன வாழ்வு நடத்திச் சேகரித்த இந்தத் தொகையை எப்படிச் செலவழிப்பது என்பது பற்றி இவர் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறாராம்.

அதில் என்ன எழுதியிருக்கிறார், தெரியுமா? இப்போதுள்ள 26 இங்கிலீஷ் எழுத்துக்களுக்குப் பதிலாக 40 எழுத்துக்களாக்க வேண்டும் என்றும், அதற்காக இந்தச் சொத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை யென்றும் எழுதியிருக்கிறாராம்!

சுத்தப் பைத்தியக்காரர்! எழுத்துத் திருத்தமாம்! அதற்காக லட்சக் கணக்கான ரூபாயாம்!

தென்னாட்டுப் பணக்காரர்களைப் பாருங்கள்! சினிமா ஸ்டூடியோ! இல்லாவிட்டால் காந்தி ஸ்தூபி! தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டு மென்றால் ஏளனச் சிரிப்பு!

“இவனென்ன, எம். ஏ. பட்டம் பெற்றவனா? தமிழ் வித்வானா? தமிழ் எழுத்தை இவன் திருத்துவதாவது? நாம் ஒப்புக் கொள்வதாவது? அப்படியாவது ஒரு சீனுவாசய்யங்கர் சொன்னாலும் சரி! ஒரு திராவிடக் கிழவன் சொல்வது, நாம் அதைக் கேட்பதா?”

இந்த மாதிரிக் கேட்கிறார்கள், இங்கே!

அய்யங்கார் ஒப்புக்கொண்டால் கூட அதிகப்பிரசங்கிகள் ஒப்புக் கொள்வதாயில்லை!

பிற மொழிகளிலுள்ள புது ஓசைகளைக் குறிப்பதற்காக இங்கிலீஷில் மேலும் சில புது எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டுமென்று பர்னார்ட்ஷா பல ஆண்டுகளாகக் கூறி வந்தார்! ஆனால் இந்தத் தாடிக்காரர் பேச்சை அந்த நாட்டு அதிகப்பிரசங்கிகள் அலட்சியப்படுத்தியே வருகிறார்கள்.

பழமைக்குப் பிசின் போட்டு ஒட்டிக்கொள்வதில் ஹிந்துக்களைவிட இங்கிலீஷ்காரர் அதிகப் பிடிவாதக்காரர்கள்! சிற்சில குருட்டு நம்பிக்கை களில் இந்த நாட்டு வைதீகக் குடுக்கைகளைத் தோற்கடித்து விடுவார்கள்.

எழுத்தில் கை வைத்தால் பூகம்பமே வந்துவிடும் என்று கருதுகிறவர்கள்!

இங்கிலீஷ் எழுத்துக்களில் ழ-ள-ண முதலிய ஓசைகளை உச்சரிக்க முடியாது. தமிழ் என்பதை (டமில்) என்று இங்கிலீஷில் எழுதுவது, ஜப்பான் என்பதை சப்பான் என்று தமிழில் எழுதுவதைவிடக் கேவலம்!  Japan என்று எழுதினால் என்ன மோசம் வந்துவிடுமோ தெரியவில்லை.

காபி என்றெழுதாதபடி cofee என்றோ காஃபி என்றே எழுதினால் தமிழ்மொழி செத்தாபோகும்? பஜ்ஜி - ஜிப்பா இவைகளைப் பச்சி-சிப்பா என்று எழுதி உச்சரித்தால் ஆபாசமாக இல்லையா?

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”

- என்ற சூத்திரத்தைப் படித்தவர்கள்கூட துள்ளிக் குதிக்கிறார்கள், கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் விழுந்த எள் உருண்டையைப் போல!

பின்பக்கம் வளர்ந்த தலை மயிரைக் கத்தரித்து மொட்டையாக்கி, அதை முன் பக்கம் வைத்து, வகிடு எடுத்து வருகின்றவர்கள் கூட, தமிழ் எழுத்தைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்கிறார்களே! மயிரைவிட அலட்சியமாகக் கருதுகிறார்கள், தங்கள் மொழியின் எழுத்துக்களை!

தமிழ் எழுத்துக்களைக் கூட்டியும் குறைத்தும், கிராப் செய்து அழகு படுத்தவேண்டும். உலகமே கிராப் மயமாகி விட்டது!

மகாஷ்விஷ்ணுவும் இந்த அக்கிரமத்தை “சம்ஹாரம்” செய்வதற்காக மற்றொரு அவதாரம் எடுக்காமலிருந்து விட்டார்! பர்னார்ட்ஷா ஒரு புரட்சி எழுத்தாளர். முரட்டுத்தனமான எதார்த்தவாதி. ஆதலால் என்றும் வெகு ஜன விரோதியாகவே இருந்தார்.

எழுத்துத் திருத்தத்துக்கு வேண்டிய பணம்போக மிச்சப் பணத்தைச் சில தர்ம காரியங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறாராம்! இந்தத் தர்ம காரியங்களில் பிராமண போஜனம் உண்டா? என்று கேட்கிறார், ஸ்ரீலஸ்ரீ உஞ்சி விருத்தி உச்சிக்குடுமி சாஸ்திரியார்!

- குத்தூசி குருசாமி (9-5-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It