kuthoosi gurusamy 263“என்ன கரடியாய்க் கத்தினாலும் தீபாவளி நின்றதாப்பா? ஊரோடு ஒத்துப் போகாமல் நீங்கள் ஏனப்பா இந்த மரிதிரி குறுக்குச் சால் ஓட்டி பெயரைக் கெடுத்துக் கொள்றீங்க?”

“எங்கள் பெயர் எப்படியோ போகட்டும், மாமா! குறுக்குச் சால் ஓட்டா விட்டால் ஆழமாக இருக்காதே? அது கிடக்கட்டும்! நீங்கள் தீபாவளி கொண்டாடியாச்சல்லவா? ரொம்ப சரி! நீங்களெல்லாம் படித்த மனுஷாள்! அதாவது தைக்கப்பட்ட ‘கோட்’ மாதிரி! பலமாக இருக்கும்! சுளுவிலே பிரிக்க முடியாது! ஆனால் அளவு சரியாயில்லாவிட்டாலுங் கூட அதே ‘கோட்டை’ப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா?”

“இப்படி அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசினால் போதுமா? உங்களால் தீபாவளியை நிறுத்த முடிந்ததா? இதற்குப் பதில் சொல்லப்பா!”

"முடியவில்லை. உண்மைதான். ஏதோ என்னைப்போல் சில பேராவது நிறுத்தியிருக்கிறார்கள்! இல்லையா? அதுவே போதும்!”

“உங்கள் கூட்டத்தார் நிறுத்தினால் மட்டும் போதுமா? அடியோடு நிறுத்தினால்தானே உங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாக அர்த்தம்?”

“அப்படியா மாமா? உங்களைப் போன்றவர்கள் உள்ள வரையில் எங்களுக்குச் செல்வாக்கு எப்படியிருக்க முடியும்? திருடர்கள் உள்ள வரையில் திருடர்களிடம் போலீஸ்காரருக்குச் செல்வாக்கு இருக்க முடியுமா? இவ்வளவு போலீஸ்காரர்கள் இருக்கிறார்களே! திருட்டை அடியோடு நிறுத்த முடிஞ்சுதா, மாமா? என் கேள்வியை நீங்கள் தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. திருட்டை அடியோடு ஒழிக்க முடியாததால் திருடுவது நல்லது என்று சொல்வீர்களா? வயது வந்த நம் பெண்களெல்லாம் ஆண்கள் நடுவில் தொழில் முறையில் சதிர் ஆடக் கூடாது என்று டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி எவ்வளவோ பாடுபட்டார்! அவருக்கு வெற்றி கிடைத்ததா? உலகப் புகழ் பெற்ற சதிர் ஆட்டக்கார அடையாறு அம்மாமி அதே முத்துலட்சுமியம்மாளின் வீட்டுக் கெதிரிலேயே இருக்கிறார்களே! மயிலாப்பூர் - தியாகராய நகர் வட்டாரங்களில் வீட்டுக்கு வீடு சதிர் ஆடிக் கொண்டிருக்கிறார்களே! அடுப்பில் அரிசி கொதிக்கும் போதே அம்மாளும் குதித்துக் கொண்டிருக்கிறாள்! இதனால் கோவில் சதிர் ஆடுவதை ஆதரிக்க முடியுமா?”

“திடீரென்று வேறு விஷயங்களுக்குப் போகாதேயப்பா! தீபாவளி கொண்டாடியதனால் என்ன குடி முழுகிப் போகிறது?”

“தலை முழுகுவதனாலே குடி முழுகாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை ஒரு பிரமாதமாகக் கருதுவதும், அதற்கு ஆதாரமாக ஒரு கட்டுக் கதையைக் காட்டுவதும், அந்தக் கதையும் ஆபாசமாயிருப்பதும் உங்கள் அறிவுக்குப் பொருந்துமா? யோசித்துப் பாருங்கள். வெளி நாட்டுக்காரன், அல்லது மற்ற மதத்தான் ஒருவன் “இந்தப் பண்டிகையை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?”

“உங்களிடம் மட்டும் முட்டாள்தனமான பண்டிகைகள் இல்லையா?” -என்று கேட்பேன்.”

“அப்படிக் கேட்டுவிட்டால் போதுமா, மாமா? ‘நீங்கள் நாலாவது கூடப் படிக்கவில்லையே! என்னை ஏன் அதற்குமேல் படிக்கச் சொல்றீங்க?’ என்று சிறுவன் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டால் அவனைப் புத்திசாலி என்று சொல்வீர்களா, மாமா? திருடனைப் பிடித்துக் கொண்ட போலீஸ்காரனை நோக்கி, “நீ மட்டும் யோக்கியனா?” என்று கேட்டுவிட்டால் போதுமா?”

"என்னமோப்பா! உங்கள் கூச்சல் வெறும் காட்டுக் கூச்சல்தானே ஒழிய வேறில்லை. இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றனவே! எந்தக் கட்சியாவது உங்களைப்போல் கண்டதையெல்லாம் கண்டித்துக் கொண்டிருக்கிறதா? நீங்கள் எலெக்ஷனுக்கு நின்றால் ஒரு வோட்டுக் கூடக் கிடைக்காது போங்கள்!”

“ரொம்பச் சரியான பேச்சு மாமா! எலெக்ஷன் வேட்டையாடும் எந்தக் கட்சியினாலும் சொல்ல முடியாத சங்கதிகளைத்தானே நாங்கள் சொல்லி வருகிறோம்? பரவாயில்லை. ஆமாம்! நான் ஒன்று கேட்கிறேன். உலகில் எத்தனையோ உத்தியோகங்கள் இருக்கின்றனவே! எந்த உத்யோகமாவது உங்கள் டாக்டர் உத்யோகத்தைப் போல் இருக்கிறதா? எந்த நோயையும் சதா எதிர்த்துக் கொண்டே, சதா கண்டித்துக் கொண்டே இருக்கிறீர்களே! இந்த அழிவு வேலைதானா உங்களுக்கு? ஏதோ அந்தப் புதுக் காய்ச்சலை உண்டாக்கினோம்; இந்தப் புது வயிற்று வலியைக் கண்டு பிடித்தோம் என்று ஏதாவது ஒரு ‘ஆக்க வேலை’ செய்யக்கூடாதா, மாமா? நீங்கள் என்ன கரடியாய்க் கத்தினாலும் சரி, தலைகீழாக நின்றாலுஞ் சரி, நோய்களையெல்லாம் அடியோடு ஒழிக்கவே முடியாது, இந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது உருப்படியான ஆக்க வேலையைப் பாருங்கள்!”

“என்னடா ஏய்! கிண்டலா செய்கிறே? உங்கள் கூட்டமே பெரிய வாயாடிக் கூட்டமப்பா! சின்னஞ் சிறு வாண்டுகூட நறுக்கு நறுக்குண்ணு பதில் சொல்லுதுடா!”

(மாமா பு.ம. டாக்டர்! மருமகன் சு.ம. மாணவன். இருவரும் பேசியதன் சாரமே, மேலே தீட்டியிருப்பது.)

- குத்தூசி குருசாமி (20-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It