“காந்தி ஜோஸ்யர்”, “அனுமான் சோதிடர்” என்ற பெயர்களைப் போல ‘தற்கொலை ஜோசியர்’ என்பதும் ஒரு பெயரோ என்று சந்தேகிக்க வேண்டாம்.

சோதிடத்திற்கு இப்போது எவ்வளவு செல்வாக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால் சில தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்த்தாலே போதும்.

kuthoosi gurusamyசில சமயங்களில் ஏமாற்று மருந்து விளம்பரங்களைவிட அதிகமாக சோதிட விளம்பரங்கள் வருகின்றன.

காந்தியார் படுகொலைக்குப் பிறகு இந்த நாட்டிலாவது மதம் என்பதே அடியோடு அழிந்து - மறைந்து போகும் என்று எதிர்பார்த்தேன். தொலையக் காணோம்! மதம் தொலையாவிட்டாலும் காந்தியார் கொலையைப் பற்றி முன்கூட்டியே கூற முடியாத சோதிடமாவது தொலைந்தால் போதும் என்று நினைத்தேன். அதுவும் தொலையக் காணோம்!

படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெறப் பார்க்கிறவர்கள் ஆகிய பலர் சோதிடத்தில் ஏமாந்து போகிறார்கள்!

படித்தவர்கள் குறுக்கே போகிற பூனைக்கும், உடம்பில் விழும் பல்லிக்கும் எதிரே வரும் எண்ணெய்க் குடத்திற்கும், இரண்டரை மணி நேர இராகு காலத்திற்கும் பயந்து சாகும்போது, சோதிடத்தில் ஏமாறுவது தானா ஆச்சரியம்? சோதிடன் எதைப் பற்றி சரியாகச் சொன்னாலும் (???) ஒருவன் ஆயுளைப் பற்றிச் சரியாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல முடியுமானால் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் ஒவ்வொரு ஜோசியனுக்கும் மாதம் ஒரு லட்ச ரூபாய்கூடச் சம்பளம் கொடுக்குமே! கம்பெனிகள் மட்டுமா? அடுத்த வருஷம் சாவு நிச்சயம் என்று ஒரு சோதிடன் சொல்லக் கூடுமானால் (அப்படி நிச்சயம் நடக்குமானால்) இந்த வருஷம் ஏழு லட்ச ரூபாய்க்கு ஆயுள் இன்ஸ்யூரன்ஸ் செய்து கொள்ள எத்தனையோ பேர் தயாராயிருப்பார்களே!

ஜப்பான் தீவில் அணுகுண்டு போட்டார்கள், அமெரிக்கர். லட்சக்கணக்கில் மாண்டார்கள். அத்தனை பேருக்குமே அற்பாயுள் ஜாதகமா? வெள்ளத்திலும் நில நடுக்கத்திலும் லட்சக் கணக்கில் சாகிறார்கள்! தொத்து நோய்களில் ஆயிரக் கணக்கில் சாகிறார்கள். போர்க்களத்தில் ஆயிரக் கணக்கில் மடிகிறார்கள். இவர்களில் ஒருவர் இருவருக்குக் கூட ஆயுள் கெட்டியாயிருப்பதில்லையா?

சரி! இவைகளெல்லாம் தொலையட்டும். சோதிடர்களையே எடுத்துக் கொள்வோம்! தங்கள் சொந்த ஆயுள் விஷயம் எப்படி என்பது பற்றி பிரபல ஜோதிடர்களுக்காவது தெரிந்துதானே இருக்க வேண்டும்? அப்படியானால் தங்கள் ஆயுளைப் பெருந் தொகைக்கு இன்ஷ்யூர் செய்து கொண்டால் குடும்பத்துக்காவது ஏராளமான பணம் கிடைக்குமே! ஏன் செய்வதில்லை?

“ஆயுசைப் பற்றி மட்டும் யாரும் சோதிடம் கூற முடியாது”, என்று கூறுவது இதற்காகத்தான். வேறு எதைப் பற்றித்தான் கூற முடியும்?

இந்த நாட்டில்தான் சொத்து பற்றியும் சுற்றத்தில் திருமணம் செய்வது பற்றியும் சோதிடம் கூறுகிறார்கள், ரஷ்யாவில்? அங்குள்ளவர்கள்! ஜாதகங்களிலெல்லாம் சொத்துக்குடைய சுக்கிரன் எப்போதுமே நீசம் அடைந்திருப்பது ஏனோ? கார்ல் மார்க்ஸ் சாபமாயிருக்கலாமோ?

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது. “என் மூக்குப் போனாலும் போகட்டும் எதிரிக்குச் சகுனத் தடையாயிருந்தால் போதும்,” என்று சொல்லிவிட்டு தன் மூக்கை நறுக்கிக் கொண்டான் ஒரு பிரகஸ்பதி என்று கூறுவதுண்டல்லவா? ஆனால் ஜாம்ஷெட்பூரில் நடந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மூக்கை நறுக்கிக் கொண்ட பேர்வழியும் இருந்திருக்கலாமோ என்றுதான் சந்தேகப்படுகிறேன். ஜாம்ஷெட்பூரில் ஒரு சோதிடன் இருந்தானாம். அவன் ஆஸ்பத்திரியில் நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது தன் தந்தையையும் பாட்டனையும் நினைத்துக் கொண்டானாம்! அவர்கள் இருவரும் தங்கள் 38வது வயதில் மரணமடைந்த சங்கதி நினைவுக்கு வந்ததாம். தனக்கும் அப்போது 38வது வயது நடப்பதும், தானும் அந்த வயதில் இறக்க வேண்டும்! என்று தன் ஜாதகம் கூறுவதும் நினைவுக்கு வந்ததாம். உடனே ஆஸ்பத்திரிக் குறுக்குக் கம்பியின் உதவியை நாடினானாம்! தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விட்டானாம்!

உயிர்! போனாலுஞ் சரி! சோதிடம் பொய்யாகலாமா? இதைப் படித்தவுடன் இங்குள்ள எல்லா சோதிடர்களும், தங்கள் ஆயுள் முடிவு நாளை உடனே பத்திரிகைகளுக்குத் தெரியப்படுத்திவிட்டு, அவரவர் அந்தந்தத் தேதியில் தற்கொலை செய்து கொண்டாவது உயிர்விட்டு, தங்கள் சோதிட சாஸ்திரத்தின் பெருமையைக் காப்பாற்றி, சோதிடம் சுத்தப் புரட்டு என்று கூறும் சுயமரியாதைக்காரர்களுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!

- குத்தூசி குருசாமி (23-09-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It