ஹிட்லரும் அவர் காதலியான ஈவா பிரான் அம்மையாரும் ம்யூனிக் இராணுவ நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் படுவார்களாம்!

“இதென்ன விந்தை? இருவருந்தான் நேச நாட்டு நீதி மன்றத்தை ஏமாற்றிவிட்டு 29-4-1945 லேயே தற்கொலை செய்து கொண்டு விட்டார்களே! இனி விசாரணை செய்து யாரைத் தூக்குப் போடுவது?” என்று சிலர் கேட்கலாம்.

kuthoosi gurusamyசட்டம் எப்படிப் பேசும் என்பதே தெரியாதவர்கள் தான் இப்படிச் சந்தேகிப்பார்கள். நான் மாத்திரம் சட்டப் படிப்பு படித்தா இருக்கிறேன்? என் எதிர் வீட்டு அய்யருடைய மாமன் மகனுக்கு மைத்துனன் பிள்ளைக்கு நெருங்கிய நண்பரான பழக்கடைக்காரனின் சொந்த அண்ணன் மகளுக்கு ஒன்றுவிட்ட தம்பி மகனின் சிற்றப்பனுடன் கூட வந்திருந்த ஹைகோர்ட் “வாட்டர் பாய்”(தண்ணீர் கொடுப்பவன்) கிச்சுப் பயலின் அத்திம்பேர் ஒரு வக்கீலாம்! அவர் எந்த ‘ஃபீசும்’ கேட்காமல் ஒரே சிமிட்டா பொடியை மட்டும் பெற்றுக் கொண்டு என்னிடம் கூறிய சட்ட நுணுக்கத்தைக் கீழே தருகிறேன்:

“ஹிட்லரும் அவளும் இறந்ததை இன்றுவரை யாருமே பார்க்க வில்லையே! அவர்கள் மரணத்திற்கு அகச்சான்று, புறச்சான்று எதுவுமே யில்லையே! ஒருக்கால் பொய் வதந்தியைக் கிளப்பி விட்டு விட்டு வேறெங்கேயாவது மாறுவேடத்துடன் தப்பிப் போயிருந்தால் என்ன செய்வது? அதற்காகத்தான் சட்டப்படி விசாரணை நடத்தியாக வேண்டும்.”

சரி! விசாரண நடப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஹிட்லர் மீதுள்ள குற்றச்சாட்டுகளைப் ப்ராசிக்யூஷன் தரப்பு வக்கீல் கூறிவிட்ட பிறகு, நீதிபதி “நீ குற்றவாளியா? அல்லவா? என்ன சொல்கிறார்?” என்று கேட்க வேண்டுமே! யாரைப் பார்த்துக் கேட்பது? கேட்கத் தான் முடியாது. குற்றம் ருசுவான பிறகு அவரைத் தூக்குப் போட வேண்டுமே, அதற்கென்ன செய்வது?

இந்த மாதிரி சந்தேகங்கள் எழலாம்.

இதற்கு நான் ஒரு யோசனை கூறுகிறேன். ஹிட்லர் மாதிரியும், ஈவா பிரான் மாதிரியும் இரண்டு உருவங்களைச் செய்து அவைகளைத் தூக்கிலிடலாமே! ஒருவரைக் கூப்பிட்டுத்தான் பார்க்கலாம்; வர மாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் வேறென்ன செய்கிறது? நீங்களே சொல்லுங்கள், பார்க்கலாம்.

“விநாயகரே நான் நல்ல தேங்காயும், வெல்லமும், கொழுக்கட்டையும் வைத்திருக்கிறேன்; உமக்காகவே தயார் செய்தேன்; தயவு செய்து வந்து வாங்கிக் கொள்ளும்!” என்று கூப்பிடுகிறோம்! ஒரு தடவை அல்ல, ஆயிரம் தடவை கூப்பிடுகிறோம்! ஒரு வேளை கவனக் குறைவாக இருந்துவிடப் போகிறார் என்று அவருக்குள்ள அத்தனை பெயர்களையும் (அவரென்ன, ஆள் மாறாட்டஞ் செய்யும் கேடியா, என்ன?) சொல்லிக்கூட கூப்பிடுகிறோம்! வர மாட்டே னென்கிறார். அதற்காக சும்மாவா இருந்து விடுகிறோம்? குப்பை மேட்டுப் பக்கம் போய் ஒரு உருண்டை சாணியை எடுத்து வருகிறோம். அதை மிட்டாய்ப் பொட்டணம் மாதிரி செய்து குந்த வைக்கிறோம்! பிறகு அவருக்கு (சாணிக்கு) எதிரில் தேங்காயை உடைத்து வைக்கிறோம்! இதே மாதிரி ஏன் ஹிட்லர் விஷயத்திலும் செய்யக் கூடாது?

இந்த யோசனை பிடிக்காதவர்கள் இதோ வருகிறாரே, சாமா சாஸ்திரிகள், இவரைக் கேட்கலாம்!

சாமா சாஸ்திரிகள் கூறுகிறார்:

 “ஹிட்லருக்குப் பதிலாக ஓர் உருவப் படத்தைச் செய்து அதைத் தூக்குப் போடலாமா என்பதுதானே உங்கள் கேள்வி? உருவமும் வேண்டாம்; கிருவமும் வேண்டாம். எதற்கும் இந்தத் தர்ப்பை இருக்கிறதே, (மூட்டையை அவிழ்த்து எடுக்கிறார்) இது ஒன்றே போதும்! ‘பூதான, கோதான, கன்னிகா தானம் சமர்ப்பியாமி!’ என்று இந்த ஒரு தர்ப்பையை வைத்துக் கொண்டே சொல்கிறோமே! கேட்டதில்லையா? ஆசனம் சமர்ப்பியாமி! என்று சொல்லிவிட்டு “இதைத் துடைக்கடியில் போட்டுக்கறது” என்கிறோமே, ஆசனத்திற்குப் பதிலாக; அதுபோல ஹிட்லருக்குப் பதிலாக ஒரு தர்ப்பையைத் தூக்கில் போடலாமே!" என்கிறார்.

“ஓய்! தர்ப்பையைத் தூக்கில் போடுவதா? நாவை அடக்கிப் பேசும் ஓய்! அணுகுண்டைவிட சக்தி வாய்ந்த துங்காணும் இந்தத் தர்ப்பை! இதைத் தூக்கில் போட இந்த ஈரேழு லோகத்தையும் படைத்த ஈஸ்வரனாலும் முடியாது ஓய்! இதைக் கண்டால் எப்பேர்பட்ட நிபுணரெல்லாம் நடுங்குகிறார்கள் தெரியுமா? இதை வைத்துத் தானே இந்த நாட்டையே கைப்பற்றினோம்? உமக்கென்ன தெரியும்? வெறும் சவுண்டிப் பார்ப்பான் தானே! சரித்திரம் படிச்சிருந்தான்னோ இதெல்லாம் தெரியும்? மன்னாதி மன்னர்களை எல்லாம் மண்டியிடச் செய்திருப்பது இந்தத் தர்ப்பைதான், தெரியுமா ஓய்? 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்றால் அர்த்தமென்ன என்பதாவது உமக்குத் தெரியுமோ?” என்று கோபமாகக் கேட்கிறார், ரிட்டயர்ட் ஜட்ஜ் விஸ்வநாதய்யர்!

- குத்தூசி குருசாமி (05-02-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It