சென்னைக் கடற்கரையில், மானிடக் கடல். 5 லக்ஷத்திற்குக் குறையாது. அத்தனை பேரும் தென் இந்திய கிருஸ்தவர்கள். அலை ஓசையைத் தவிர வேறு ஓசையே இல்லை. உயர்ந்த மேடை மீது ஒலி பெருக்கி. ஆயிரம் பேருக்கு ஒரு ஒலி பெருக்கிக் குழாய் வீதம் அத்தனை குழாய்கள். பால் போன்ற நிலவு. மேடைமீது ஏசுநாதார்! இக்காலத்து சீடர்களைப் போல கோட், நெக் டை, சூட், பூட்ஸ் கோலத்தில் அல்ல. படத்தில் பார்க்கிறோமே, அந்த சாதாரண உடையில் தலை மயிர் ‘கிராப்’ அல்ல, இன்றைய கிருஸ்துவர்களைப் போல்!
ஏசுநாதர் பேசுகிறார்:-
“நான் பிறந்து வளர்ந்து பேரும் புகழும் பெற்ற நாடுகளில் என்னைப் புறக்கணித்து விட்டார்கள். என்னைப் பின்பற்றும் அத்தனை பேரும். என் உபதேசம் செவிடன் காதுக்குள், சென்ற சங்கீதமாகி விட்டது. யார் யாரைக் கொல்வது, யார் எந்த நாட்டைக் கைப்பற்றுவது, எந்தக் கட்சி எந்தக் கட்சியைத் தாக்குவது, எந்த ஆயுதத்தால் எதிரியை விரைவில் கொல்லலாம், அணுக்குண்டால் அழித்தால் எத்தனை மணி நேரத்தில் அழிக்கலாம், எந்த நாட்டில் குடியேறினால் எளிதாகச் சுரண்டலாம், சுலபத்தில் பெருஞ்செல்வம் திரட்டும் குறுக்குப் பாதை எது - ஆகிய சுயநலமான அக்கிரமங்களிலேயே நீந்திக் கொண்டிருக்கின்றனர். இனி மேல் அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே என் பெயரை ஞாபகப்படுத்திக் கொள்கின்றனர்.
ஆகையால் உலக உத்தமரான புத்தர் பிறந்த இந்த நாட்டில்தான் என்னுடைய அன்பு மதம் நன்றாகப் பரவும், என்று கருதியிருந்தேன். இதைக் கருதியே பாதிரிமார்களை இங்கனுப்பி இந்த 200 ஆண்டுகளாக என் மதத்தில் பலரைச் சேர்க்கச் சொன்னேன்!
பலன் என்ன என்பதைப் பார்க்கலாமென்ற ஆசையால் நேற்றுக் காலைதான் விமானத்தின் மூலம் வந்தேன். உங்களில் பலரைக் கண்டேன். தனித் தனியாகப் பேசினேன்! பல அதிசயங்களை உணர்ந்தேன்!
அடாடா! என்ன கொடுமை! எவ்வளவு அக்கிரமம்! உங்களுக்குள்ளே பல ஜாதிகளாமே! உடையார், நாடார், பிள்ளை, முதலியார் போன்ற ஜாதிப் பட்டங்கள் கூட உண்டாமே!
தஞ்சாவூர் மாவட்ட ரோமன் கத்தோலிக்க குருமார்களில் ஒருவர் 24-2-48 இல் ஒரு கிராமத்தில் பேசுகையில் இந்த மாதிரிப் பேசினாராமே:-
"ஆதித் திராவிட கிருஸ்துவர்கள் திராவிட கழகத்தில் சேர்ந்து கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு எல்லா ஜாதிகளும் ஒன்று என்று கூறுகிறார்கள். இது கூடாது. ஈரோட்டு ராமசாமி பேச்சைக் கேட்காதீர்கள். கோவிலில் மேல் ஜாதியும் கீழ் ஜாதியும் அவரவர் இடத்தில்தான் உட்கார வேண்டும்.”
பரம ஏழைகளாயிருந்தாலும் குறிப்பிட்ட ரூபாய் கொடுத்தால்தான் இறப்புக்கும், பிறப்புக்கும் கோயிலில் மணி அடிக்கிறார்களாம்! உபதேசம் தெரியாவிட்டால் சாமியார் 10-15 ரூபாய் கேட்கிறாராம், திருமணத்தின்போது!
அது மட்டுமா! கத்தோலிக்க கிருஸ்துவர்களில் பலர் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்கிறார்களாம். ராகுகாலம், சகுனம், நல்ல நாள் எல்லாம் பார்க்கிறார்களாம்! ஆபாசம்! ஆபாசம்! !
அந்தந்த ஜாதி கிருஸ்தவர் அந்தந்த ஜாதியில்தான் திருமணம் செய்து கொள்வார்களாம்! நாடார் கிருஸ்தவர், ஹிந்து நாடார் வீட்டில் திருமணம் செய்வாரே ஒழிய கிருஸ்துவ பிள்ளை அல்லது உடையார் வீட்டில் திருமணம் செய்யவே மாட்டாராமே! அதாவது என்னைவிட, என் மதத்தைவிட, ஜாதிதான் அவரவர்களுக்கு முக்கியமாம்! இதற்குத்தானா நீங்கள் என் மதத்தைப் பின்பற்றினீர்கள்?
“ஏசின் ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ தோழி? அவர்க்கு அங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா!”
என்று புரட்சிக் கவிஞர் உங்களைக் கண்டு எள்ளி நகையாடச் செய்து விட்டீர்கள்! ஆகையால் உங்களைக் காண நான் வெட்கப் படுகிறேன். என் அன்பு நெறியைப் பாழாக்கி விட்டீர்கள், நீங்கள்! எனவே, நீங்கள் உங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்! ஜாதிச் சேற்றில் மூழ்குங்கள்! மூட நம்பிக்கை குப்பையில் புரளுங்கள்! வேற்றுமையை வளர்த்துப் பாழாகுங்கள்!
ஆனால் ஒன்று, என் பெயரை மட்டும் கூறாதீர்கள்! என்னை இப்படி அவமானப் படுத்தாதீர்கள்! என் சமரச நெறியை இப்படிச் சித்திரவதை செய்யாதீர்கள். உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு!”
இப்படிப் பேசினார், ஏசுநாதர். கட்டித் தழுவ ஆசை கொண்டு கையை நீட்டியபடியே எழுந்தேன்! கனவு என்பதைக் கண்டு ஏமாந்தேன்!
இது மட்டும் உண்மையாகவே நிகழுமானால்? நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது!
(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)
நன்றி: வாலாசா வல்லவன்