இந்த ஜோஸ்யர்களைப் போலப் பித்தலாட்டக்காரர்களை நான் பார்த்ததே யில்லையப்பா! எந்த ஜோஸ்யராவது நடக்கப் போவதைச் சரியாகச் சொல்லிக் கேட்டிக்கிறாயா?” என்றேன், எதிரில் வந்து நின்ற என் நண்பர் சொக்கனிடம்.

kuthoosi gurusamy 268“நடந்து போனதை மட்டும் என்ன, சரியாய்ச் சொல்லிக் கிழிக்கிறார்ளோ? எல்லாம் பார்த்தாச்சப்பா! ஒரு தடவை என் அப்பா என் தங்கைக்குத் திருமணம் செய்வதற்காக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போனார். சுமார் 6 மணி நேரம் பார்த்து விட்டு ரொம்ப சந்தோஷத்தோடு 10 ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

‘என்ன சொன்னார் ஜோசியர்’ என்று கேட்டேன். அடுத்த மூன்று மாதத்திற்குள் கலியாணம் நிச்சயம் ஆகியே தீருமென்றும், புருஷன் ரொம்ப நெருங்கிய சொந்தமாயிருப்பானென்றும், ஒரு லட்ச ரூபாய்க்குக் குறையாத சொத்துள்ளவனென்றும், நல்ல படிப்பாளி யென்றும் சொன்னார்!’ என்றார் என் தகப்பனார். இதைக் கேட்டுக் கொண்டே வந்த என் தாயார், ‘அது சரி! அவள் ஜாதகத்தைத்தான் தஞ்சாவூருக்கு அனுப்பி யிருக்கிறோமே. நகல் இல்லையென்று கூட சொல்லிகிட்டு யிருந்தியளே! என்று கேட்டாள். அப்பா திடுக்கிட்டுப் போய் ஜாதகம் இருந்த மேஜை டிராயரைத் திறந்து பார்த்தார். அங்கு வேறு ஜாதகமே இல்லை. தன் கையிலிருந்த ஜாதகத்தின் (ஓலையில் எழுதப்பட்டது) பின்புறத்தைப் பார்த்தார். ‘சுந்தரி’ என்று எழுதியிருந்தது. தூள் தூளாகக் கிழித்தெறிந்தார்.”

“ஏன் அதைக் கிழித்தெறிய வேண்டும்?”

“ஏனா? அது என் மற்றொரு தங்கையின் ஜாதகம். அவளுக்கும் சுந்தரிக்கும் ஒரே வயசுதான் வித்தியாசம். இளம் வயதில் விதவையான அந்தத் தங்கை இறந்துபோய் இரண்டு வருஷமாகி விட்டது. தவறுதலாக அவள் ஜாதகத்தை எடுத்துப் போய் காட்டி விட்டார். அந்தக் குரு (சோதி)டனுக்கோ உயிரோடிருப்பவர் ஜாதகமா செத்துப் போனவர் ஜாதகமா என்பதைகூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் ஜோசியத்தின் லட்சணம்! எப்படி யிருக்கிறது?” என்றான் என் நண்பன்.

“யாரப்பா அந்தச் சோதிட நிபுணர்?”

“அவர்தான் உலகப் புகழ் நேர ஜோஸ்யர்.”

“ஓஹோ! அவரா? பலே பேர்வழி ஆச்சே! ஒரு லட்ச ரூபாய்க்கு சம்பாதித்து விட்டாராமே! அவர் நேற்று என்ன சொன்னார் தெரியுமா? “அட்டமாதிபனும் குசனுமே கூடி ஆறு பனிரெண்டு இடத்திருக்கில், துட்டர் ஆயுதத்தால் மரணம்.” அதாவது “எட்டுக்குடையவனும் செட்டுக்குடைய செட்டியாகிய செவ்வாயும் கூடி 6, 12 இடங்களிலிருந்தால் துஷ்டர் ஆயுதத்தால் மரணம் சம்பவிக்கும்” என்று சொன்னார்.

“யாருக்கு மரணம் சம்பவிக்கும்? எனக்கா, உங்களுக்கா?” என்று கேட்டேன்.

"உனக்கு எல்லாம் கிண்டல்தானப்பா? சோதிடத்தைப் பழிக்காதே! சொன்னால் சொன்னபடி நடக்கும்” என்றார்.

“அப்படியானால் நேரு சோதிடரே! எத்தனையோ நிபுணர்கள் இருக்கிறீர்களே, உங்களைப் போன்றவர்கள்? எந்தப் பாவியாவது நம்ப காந்தியார் மரணத்தை முன் கூட்டியே ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?” என்று கேட்டேன்.

ஹஹ்ஹா! என்று சிரித்தார்!

"என்ன ஓய், சிரிக்கிறீர்? என் வயிறு எரிகிறது, நீர் இளிக்கிறீரே! . . . ஓஹோ! ஹிந்து மகா சபைத் தலைவரல்லவா நீர்? உம் பிள்ளைதான் ராஷ்ட்ரீய சேவா சங்கமாச்சே! செத்துப் போனதற்கு இனிப்பு வழங்கிய கிராதகக் கூட்டத்தைச் சேர்ந்தவராச்சே!” என்றேன், எதிர்பாராத ஆத்திரமடைந்தவனாய்!

“ஏனப்பா ஆத்திரப்படுகிறாய்? அவர் ப்ராப்தம் அவர் கொலையுண்டு மாண்டார். நீயும் நானும் என்ன செய்ய முடியும்? சும்மா மிரட்டாதே! நாங்களெல்லாம் பழைய ஆசாமிகள் போன்றவர்கள் என்று நினைக்காதே! இப்போதெல்லாம் எங்கள் முறை மாறியிருக்கிறது, தெரியுமா? ரிக் வேதத்தின்மேல் ரிவால்வரை வைத்துப் பூஜை செய்கிறோம், என்பதை மறந்து விடாதே! அது சரி! மகாத்மா கொல்லப் படவார் என்பது எனக்கா தெரியாது? அவர் ஜாதகமே பேசுகிறதே! சொல்கிறேன், கேள்!  அவருக்கு இப்போது நடப்பது சனி திசையில் சனிபுத்தி. அவர் பிறந்தது சுக்கில வருஷம் புரட்டாசி மாதம் 18 -ந் தேதி, சனி வாரம் துவாதசி திதி, மக நக்ஷத்திரம். (இது உண்மையான தேதி). திசா நாதனாகிய சனியுடன், ஜாதகத்தில் அவயோகம் கொடுக்கும்படியான குரு பகவான் சஞ்சரிக்கிறான். ஜாதகரின் ஜனன காலத்தில் குருவும் சனியும் அங்காரகன் வீட்டில் இருந்தார்கள். அந்த அங்காரகன் இப்போது சிம்மலக்கினத்தில் வக்கரித்து நிற்கிறார். அவயோக கிரகமாகிய குரு பகவான் விருச்சிகத்தில் தற்காலம் சஞ்சரிப்பதனால் கெடுதல் சம்பவம் நிச்சயமாக ஏற்படும். சூன்ய கிரகமாகிய சனி திசை நடப்பதனாலும், ஜாதகத்தில் சனி நின்ற ராசியில் குரு சஞ்சரிப்பதாலும், துர் மரணந்தான் சம்பவிக்க வேண்டும் என்பது.....”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் நண்பன், விட்டான் ஒரு அறை, சோதிடர் கன்னத்தில்! இரண்டு பற்கள் விழுந்தன! இரத்தமும் சொட்டிற்று.

“உமக்கு இந்த நிமிஷம் எந்தத் திசையில் எந்தப் புத்தி அய்யா, சொல்லும் ஜோதியரே!” என்று கேட்டான், என் நண்பன்.

“அவருக்கா? தெற்குத் திசையில் அற்பப் புத்தி! ஏனப்பா, அவரை அடிக்கிறே, பாவம்! ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு நேரு ஜோசியர், ராஜாஜி ஜோசியர் என்று பேர் வைத்துக் கொண்டால் அதற்காகவா இப்படி அறைகிறது?” என்று சமாதனம் சொன்னேன்.

“போதும்! நீ சும்மா இரப்பா! என் ஆத்திரத்தைக் கிளறாதே! இந்த ஆள் அளந்த அளப்பெல்லாம் ஜனவரி 30-ந் தேதிக்கு முன்னால் காணோமே! அயோக்கியப் பிழைப்பு! ஜோசியமாம் ஜோஸ்யம்! இனிமேல் எந்த முட்டாள் பயல் இந்த நாட்டில் இந்தப் பித்தலாட்டப் பிழைப்பை நம்பப் போகிறான்? மகாத்மாவின் மரணத்தையே முன் கூட்டிச் சொல்ல முடியல்லே! இப்போ உளறுகிறான்கள்! நீயும் கேட்டுக் கொண்டிருக்கிறாய்!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

“அவன் ஒரு மாதிரி முன் கோபக்காரன்! போனால் போகிறான்! நீர் அடிபட வேண்டிய பிராப்தம்! அழுகாதீர்; குழாயில் வாயைக் கொப்பளியும்! இனிமேலாவது வேறு ஏதாவது ஒரு நல்ல தொழிலாகப் பார்த்துக் கொள்ளும்! போங்காணும், போம்! வீட்டுக்குப் போம்! உம் வீட்டில் அக்காரகன் வந்த குடியேறிவிடப் போகிறான்! காலங் கெட்டுக் கிடக்கிறது! வீடில்லாதவர்கள் பிறருடைய காலி வீட்டில் பலாத்காரமாகக் குடியேறுகிறார்களாம்! நீர் சூரியன் வீட்டையும் சந்திரன் வீட்டையும் பற்றியே பேசிக் கொண்டு உம் வீட்டைக் கோட்டை விட்டுவிடப் போகிறீர்! போங்காணும்!” என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தேன்.

நீங்களும் யாராவது அவரைக் கண்டால் ஆறுதல் சொல்லுங்கள்! உயரமான சிவந்த ஆள்; உச்சிக் குடுமி! பகலில் வீட்டிலிருப்பார்; இரவில் இந்து மகா சபையிலிருப்பார். வெளியே வரும்போது கதர் வேஷ்டி கட்டிக் கொண்டு வருவார்; காந்திக் குல்லாகூடப் போட்டிருப்பார். கண்டால் புத்தி சொல்லுங்கள்! பாவம்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்