சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, இது மக்கள் பக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை; அந்த நம்பிக்கையில் நாம் குறுக்கிடுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்த விளக்கங்கள் மக்களிடம் தரப்படுவதில்லை. இதுகுறித்து பல புராணக் கதைகள் கூறப்படு கின்றன.

ஒரு கதை, பாற்கடலை தேவர்கள் வாசுகி என்ற விஷம் நிறைந்த பாம்பைக் கயிராகக் கொண்டு கடைந்தார்கள். அப்போது தேவர்கள் கடைந்த விஷம் கடலில் கலந்தது. இதனால் முழு உலகமும் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் தேவர்கள் சிவபெருமானிடம் உதவி கேட்கிறார்கள். சிவபெருமான் ஓடி வந்து அந்த விஷத்தைத் தானே குடித்தார். ஆனால் அந்த விஷத்தைத் தொண்டையில் வைத்துக் கொண்டார். வயிற்றுக்குள் அனுப்பவில்லை. இது நடைபெற்ற காலம் சிவராத்திரி இரவு. அந்த நாள் தான் சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

இது ஒரு கதை. மற்றொரு கதை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற சண்டை நடக்கிறது. சிவபெருமானிடம் பஞ்சாயத்து வருகிறது. சிவபெருமான் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன்னுடைய தலையையும் பாதத்தையும் யார் பார்க்கிறார்களோ அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஒரு போட்டியை வைக்கிறார்.

விஷ்ணு காலடியைப் பார்ப்பதற்காக பூமியைக் குடைந்து கொண்டு உள்ளே போகிறார். பிரம்மா சிவனின் தலை உச்சியை பார்ப்பதற்காக விண்ணை நோக்கிப் போகிறார். இருவராலும் இரண்டையும் காண முடியவில்லை. பிரம்மா உச்சியில் இருந்து கீழே விழும் தாழம்பூ ஒன்றைச் சந்திக்கிறார். அந்த தாழம்பூ சிவபெருமான் தலையிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறது. அந்தத் தாழம்பூவிடம் பிரம்மா ஒரு வேண்டுகோளை வைக்கிறார். நான் சிவபெருமானின் உச்சியைப் பார்த்து விட்டேன் என்று உன்னால் சிவனிடம் பொய் கூற முடியுமா என்று கேட்கிறார். தாழம்பூ அதற்கு ஒப்புக் கொள்கிறது. அதேபோல் சிவபெருமானிடம் கூறுகிறது. சிவபெருமான் தாழம்பூ பொய் கூறுவதை அறிந்து, ஜோதியாக இருந்தவர் அக்னியாக நெருப்பாக மாறி விடுகிறார்.

இதனால் உலகத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சி எட்டுத் திக்குப் பாலகர்களும் அக்னி வடிவத்தில் இருந்து மாறி விடுங்கள், உலகத்தைக் காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் மலையாக மாறி மலையின் உச்சியில் ஜோதியாகத் தெரிந்தார். அந்த நாள் தான் மகா சிவராத்திரி. இன்று மற்றொரு புராணக் கதை கூறுகிறது.

சிவன் பார்வதி மணந்த நாள் தான் மற்றொரு புராணக் கதை கூறுகிறது.

இன்னொரு புராணக் கதை, வில்வ இலைக்கும் சிவராத்திரிக்கும் என்ன தொடர்பு என்று கூறுகிறது.

ஒரு காட்டில் வேட்டைக்காரன் பறவைகளை வேட்டையாடுகிறான். சிங்கம் ஒன்று அவனைத் துரத்துகிறது. ஓடிப் போய் பயந்து அவன் வில்வ மரத்தில் ஏறிக் கொள்கிறான். மரத்தின் அடியில் அவன் எப்போது இறங்குவான் என்று சிங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.

இரவு தூங்கி விட்டால் விழுந்து விடுவோம் என்ற அச்சத்தில் உறங்காமல் மரத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வில்வ இலையையும் வேட்டைக்காரன் பிச்சு கீழே போட்டுக் கொண்டே இருக்கிறான்.

மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த சிவலிங்கத்தின் தலையில் வில்வ இலைகள் விழுகின்றன. ஆனால் சிவலிங்கம் இதைப் பொறுத்துக் கொண்டு பக்தனை மெச்சுகிறது. அந்த நாள் தான் சிவராத்திரி என்று மற்றொரு புராணக் கதை கூறுகிறது.

ஒரு சிவராத்திரிக்கு இத்தனை கதைகள்.

இந்து புராணங்கள் கூறிக் கொண்டிருக்கிறவை நம்பக் கூடியவையாக இருக்கின்றதா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு வலியுறுத்துகிற குடிமக்களுக்கான அடிப்படைக் கடமை கூறுகிறது.

பூமியை விஷத்தில் இருந்து காப்பாற்றினான் சிவபெருமான் என்று சொன்னால், துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டு நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி விட்டன; உலகில் பூமி வெப்பம் ஆகிறது; இதனால் பெரும் ஆபத்தை உலகம் சந்திக்க நேரிடும் என்று உலக நாடுகள் ஒன்று கூடி பூமியை வெப்பத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி என்று மாநாடுகள் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

அறிவியல் உலகம் பூமியின் வெப்பமாவதையும் பூகம்பத்தையும் தடுப்பது எப்படி என்று விவரித்துக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் விஷத்திலிருந்து சிவன் பூமியை காப்பாற்றினான் என்று ஒரு விழாவை நடத்திக் கொண்டு அதற்கு அறநிலையத் துறையும் பக்தர்களும் பெரும் பொருட் செலவில் கலை நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் கண் விழித்தலையும் மந்திரங்களையும் ஓதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது அறிவியலுக்கு உகந்தது தானா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It