‘டேய்! வரதா! இந்தா! கிட்டேவா! இது ஏண்டா இன்னம்? அறுத்தெறி சனியனை! இதாலே எத்தனை தொல்லை நமக்கு!" என்றாள் அண்ணாசாமி அய்யங்கார் மனைவி அம்புஜம், தன் மகன் வரதனின் பூணூலைக் கையில் பிடித்தபடியே.

kuthoosi gurusamy 263“அம்மா! அம்மா! நான் மாட்டேன். அப்பா உதைப்பார்” என்றான் 12 வயதுப் பையன்.

“உதைப்பாரா? அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில் தான் கழுதையே அந்த வேலையை மறந்துடுத்தே! அது கூட அஹிம்சை பேச ஆரம்பிச்சுடுத்தே, காலால் ஆகாத்தனத்தால்! இந்தா, இனிமேல் இது வேண்டாம். இது போட்டதினாலே நீயும் உன் அப்பாவும் உயர்ந்த ஜாதி ஆயிட்டேளோ! நான் பூணூல் போடலையே! அப்படீன்னா, நான் சூத்திர ஜாதியா? சொல், கேட்கிறேன்”

“ஏண்டீ நீ என்கிட்டே இப்படி கோபிச்சுக்கறே! அப்பா ஆபீசிலிருந்து வந்தப்பறம் அவருகிட்டே சொல்லேண்டீ.”

“டேய்! நான் உன் பெண்டாட்டியா? ஏண்டீ போண்டீ என்று கேட்கிறே! அவா கூப்பிடுறாளே! எவ்வளவு மரியாதையா, ‘வாங்கோ, போங்கோ’ண்ணு? அப்படியே நீயும் கூப்பிட்டாலென்ன? நம்ப ஜாதியைப் போலே கெட்டுப் போன ஜாதியே கிடையாதப்பா! எனக்கென்னமோ ரெண்டு மாசமா நம்ப ஜாதியைக் கொஞ்சங் கூட புடிக்கலே. இனிமேல் நம்ப ஜாதிக்கு கேடுகாலம் வரப் போகுதுண்ணு தான் தோண்றது! இவ்வளவு படிச்சிருக்காரே, அவருக்கே இதெல்லாம் தோணலையே! நீ சின்னப்பயல், னோக்கு என்ன தெரியப் போறது? நம்ம பிற்காலம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி அவருக்கு ஏதேனும்..........”

“எவருக்குடீ! என்னடீ! என்னைத் திட்டீண்டிருக்கே? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் அண்ணாசாமி அய்யங்கார்.

“எல்லாம் உங்களுக்குத் தான். நாம் இனிமேல் புத்திசாலித்தனமா நடந்துக்கணும்! பூணூலைப் போட்டுண்டு பெரிய ஜாதிண்ணு சொல்லிண்டு மிரட்டின காலமெல்லாம் இனிமே முடியாது. காலம் வரவர ரொம்பக் கெட்டுப் போயிடுத்து! இதோ படிக்கிறேன், கேளுங்கள்:-

“இவர் அசல் வகுப்பு வெறிபிடித்த ஒன்றரை அணா பஞ்சாங்கம் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். வைத்தி நாதய்யர்களுக்கு இனி தமிழ் நாட்டில் பகல் வேஷம் போட இடமில்லை என்பதை செய்தாக வேண்டும்.”

பாருங்களேன்! மகா தியாகி மதுரை வைத்திநாதய்யரைப் பற்றி எழுதியிருப்பதை! இன்னும் படிக்கிறேன், கேளுங்கள்:-

“தமிழ் மக்கள் இனியாவது வடிகட்டின வகுப்புவாத வரதாச்சாரிகள் நாட்டுத் துரோகிகள் - நேர்மைக்கே புறம்பானவர்கள் என்பதை உணர வேண்டும். எளிமையும் ஏழ்மையும் மிகுந்த வாழ்க்கை நடத்துவதாக சட்டைகூட போடுவதில்லை என்று வேஷம் போட்டு வரும் இந்த ஜகஜ்ஜால புரட்டர்களைத் தமிழ் மக்கள் இனி பொது மேடையிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்.”

கேட்டீர்களா? நம் குலத்துக்கே ஒரு குத்து விளக்கைப் போன்ற ஒரு தியாகியைப் பற்றி எப்படி எழுதுகிறான் பார்த்தீர்களா?”

“ஏண்டீ! அதென்ன ‘விடுதலை’ பேப்பரோ?” என்று கேட்டார் அண்ணாசாமி அய்யங்கார்.

“விடுதலை” பேப்பர் இப்படித் தானிருக்குமோ? அது கூடவா தெரியாமற் போயிடுத்து உங்களுக்கு? இது ஒரு காங்கிரஸ் வாரப் பத்திரிகை. காண்டீபமாம், இதன் பெயர்! காங்கிரஸ் மனுஷாளே நம்மை இப்படித் தாக்க ஆரம்பிச்சால் இனிமேல் நம்ம கதி என்ன ஆவது? அதற்காகத்தான் பூணூலை அறுத்துத் தொலையுங்கோண்ணா, ஏதோ திருமாங்கல்யக் கயிற்றை அறுப்பது மாதிரி பயப்படுறியளே! காலத்துக் கேற்றபடி மாற வேணும் என்கிற புத்தி கூட நமக்கு இல்லையே! நம்ப ராஜகோபாலாச்சாரியாரைப் பாருங்கோ! பூணுலா போட்டிருக்கிறார்? அவர் பெண்ணைக் கூட வேறு ஜாதியிலே கொடுத்திருக்கிறாரே! நாமும் அப்படி யெல்லாம் செய்யணும். செய்தால் என்ன? அதற்காக நம் வேலையை விட்டுடப் போறோமா, என்ன? எந்த வேஷம் போட்டாலும் நம்ம வேலை நடந்தீண்டு தானே இருக்கப் போறது? ராஜாஜீயையே பாருங்களேன்! நம்ம இனத்துக்காக 24 மணி நேரமும் பாடுபடுகிறாரா இல்லையா?”

“பூணூலை மட்டும் கழற்றி விட்டா போதுமாடீ? அவன்கள் அப்போதும் நம்ப மாட்டான்களே!”

“ஆமா, கொஞ்ச காலத்துக்கு நம்பத்தான் மாட்டான்கள்; நாம் நடந்துக்கிற மாதிரியிலே இருக்கு! என்னைப் பாரும்! எதிர்த்த ஆத்து நாடார் சம்சாரம் நன்னா ‘பிரிஞ்ச்’ சேஞ்சிருந்தாள்! இப்பத்தான் சாப்பிட்டுட்டு வர்றேன்! நிறைய நெய் போட்டு என்ன நன்னா சேஞ்சிருந்தா, தெரியுமோ?”

“அடே ! கர்மகாண்டமே மாமிசம் போட்டிருப்பாளே, அதிலே!”

“அதெல்லாமில்லே! அவளைக் கேட்டேனே! அப்படித்தான் போட்டாலென்ன? ஸ்மார்த்தாள் யாகத்திலே மாமிசம் சாப்பிடறாளே! அவா ஆத்திலே நீர் அன்னிக்கு சாப்பிடலையோ?”

(இதற்குள் பையன் வரதன் தன் பூணூலை ஒரு அங்குல நீளத்திற்குத் துண்டு துண்டாக கத்திரித்துக் கொண்டுவந்து தன் தாயிடம் காட்டினான். சிறு பையன்கள் சுறுசுறுப்பு பெரியவர்களுக்கு எப்போதுதான் வருமோ?)

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It