குடிமகனின் மொழியில் உயர்நீதி வழங்குவதே சிறந்ததொரு மக்களாட்சி ஆகும். இந்தியாவின் மிகப் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழன்னை அரியணை ஏறிட இன்றளவும் தடை நீடித்தே வருகிறது. தாய்மொழி மறுப்பின் காரணமாக “சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது” எனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆங்கிலம் ஒரு மொழியாக உருவாக்கம் பெறுவதற்கு முன்னரே தமிழில் திருக்குறள், நாலடியார் போன்ற அனேக நீதி, அறநூல்கள் உருவாகியதோடு மட்டுமின்றி பழந்தமிழகத்தில் நீதிமுறையானது சிறப்பாகவும், எளிய முறையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 348 (2) பிரிவானது “குடியரசுத் தலைவரின் அனுமதியை முன்னராகப் பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரு மொழியை அல்லது இந்தியை - அந்த மாநிலத்தில் தனது தலைமைப் பீடத்தை வைத்துக் கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அந்த மாநிலத்தின் ஆளுநர் வழங்கலாம்” என்று தெளிவாகக் கூறுகிறது.
ஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு 7 ஆனது “ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவு ஆகியவற்றிற்காக ஆங்கில மொழியுடன், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்லது இந்தி ஆகியவற்றிற்கு மாநில ஆளுநர் அங்கீகாரம் வழங்கலாம்” என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
இந்த சூழலில் கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதியமைச்சகம், உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சனை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருதுவதாகவும் கூறி தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்குவது குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டது.
கடந்த 05.06.1969 அன்று உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லி உயர்நீதிமன்றத்திலும், இந்தி மொழி வழக்கு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே விதிகளின்படியே தமிழ்மொழிக்கும் அலுவலக மொழியாக அனுமதி கோரப்பட்டும் தொடர்ந்து இன்றுவரை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகளாய்த் தற்பெருமை பேசும் தமிழக அரசியலாளர்களோ இந்நற்காரியத்தைச் செய்ய இன்றுவரை தவறிவிட்டனர் என்பதே உண்மை.
கி.பி. 10ம் நூற்றாண்டில் உருவாகிய ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தி மொழியை ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிந்து சமவெளியில் கிடைத்துள்ள சான்றுகளின்படி கி.மு. 16ம் நூற்றாண்டுகளிலேயே “தொல்காப்பியம்” என்ற இலக்கண நூல் உருவாக்கிய நாலாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி பிராந்திய மொழி என்றும், அதற்கு உயர்நீதிமன்ற மொழியாகும் தகுதியில்லை என்றும் இழிவுபடுத்தி வருகிறது. அதற்குப் பிறகும் கடிதம் மட்டுமே அனுப்பிக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் “பெருமையுடன்” அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் 93 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே பள்ளிக் கல்வி பயில்கின்றனர் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், 90 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே சட்டக்கல்வி பயில்கின்றனர் என்று டாக்டர்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரும் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழை அலுவல் மொழியாக்கிட போதிய அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு வரும் சூழலில், 1970 ஆம் ஆண்டிலேயே மருத்துவமும், பொறியியலும் இலங்கை சிங்கள அரசால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களுக்குப் புரியாத மொழியில் வாதிடும் போது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பொருத்த மட்டில் அது ஒருவகையான மனித உரிமை மீறல் ஆகும். இயற்கை நீதியையும் சமூக நீதியையும், மனித உரிமைகளையும் நிலைப்படுத்துவதில், தனித்து இயங்கும் சர்வ வல்லமை படைத்த நீதிமன்றங்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் தாய்மொழிக்கு, நீதிமன்றங்களில் தொடரும் அனுமதி மறுப்பின் காரணமாக மேற்கூறப்பட்டவைகள் கேள்விக்குறியாகி உள்ளன.
துவக்க காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளின் லத்தீன், பிரெஞ்சு மொழிகள் மட்டுமே சட்ட மொழிகளாக இருந்தன. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே இருப்பதால் இந்த மொழிகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்றளவும் சட்டமுதுமொழிகள் லத்தீன் மொழியிலேயே பெருமளவில் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையிலும் லத்தீனும், பிரெஞ்சும் வழக்கு மொழியாக நீடித்து வந்த சூழலில் 1632ம் ஆண்டில், ஆங்கிலம் மட்டுமே இனி சட்ட மொழி என சட்டம் இயற்றப்பட்ட பிறகே ஆங்கிலம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. சொந்த மண்ணிலேயே பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்படாத ஆங்கிலம் இன்று இந்திய மண்ணில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் கோலோச்சுகிறது என்றால் நமது அடிமைத்தனத்தையும், அறியாமையையுமே அது உணர்த்துகிறது. வரலாறு தரும் படிப்பினையை நாம் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.
கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படும் கருவியே மொழி. உணர்வுப் பூர்வமான கருத்துக்களை மட்டுமின்றி, இதர செய்திகளையும் தன் தாய்மொழியில் மட்டுமே தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதற்கு சான்றாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்நீதிமன்றத்தில் தான் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இந்தி அலுவல் மொழியாகிவிட்ட காரணத்தினால் தான் முன் உதாரணமிக்க தீர்ப்புகள் பல வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கும், தீர்ப்புகள் எழுதப்படுவதற்கும் தாய்மொழி பயன்படுத்தப்படும் போது அதன் தரம் தானாகவே மேன்மையுறும் என்பதற்கு அலகாபாத் நீதிமன்ற வரலாறே சான்றாக விளங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி கோரி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இயலாத அல்லது இல்லாத ஒன்றையோ நடைமுறைப்படுத்திடக் கோரி போராடிக் கொண்டிக்கவில்லை. மாறாக, அரசியலமைப்புச் சாசனத்தின் வாயிலாக உத்தரவாதப்படுத்தப்பட்டு, ஏற்கனவே வெளி மாநிலங்களில் அமலில் உள்ள சட்ட உரிமை தான் இங்கேயும் கோரப்படுகிறது.
ஆனால், ஈழப்போரினையொட்டி சரிந்த தனது தமிழினத் தலைவர் பட்டத்தை மீண்டும் தக்கவைக்க, இன்று 'உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' நடத்த முனைந்திருக்கும் கருணாநிதி தலைமையிலான அரசு, உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட என்ன செய்தது? இவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் மூன்றே நாளில் பெற்றார்கள் என்பதையும், மிகக் குறுகிய காலத்தில் சட்டமன்றத்திற்கான புதிய கட்டடத்தை பிரம்மாண்டமாகக் கட்டினார்கள் என்பதையும் பார்த்தால், தமிழ் வளர்ச்சியில் இவர்கள் காட்டும் அக்கறையும் வேகமும் புரியும்.
‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவே, அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்னாவது’ என சிலர் ‘அறிவுப்பூர்வ’மாக கேள்வி எழுப்புகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களுக்கும், அவர்களது தாய்மொழியில் உடனுக்குடன் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவது சாத்தியமாகியிருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது என்கிற அடிப்படை உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
1956ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதே மக்கள் மொழியில் ஆட்சி நடத்துதலே மக்களாட்சியின் உயரிய தத்துவம் என்ற அடிப்படையில்தான். மேலும் தொன்மை, வளமை, பண்பு, பாரம்பரியம் ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதால் இன்று “செம்மொழி” என தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது என்பது “தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும், அவமரியாதையுமாகும்”.
நீதிமன்றங்களானது, நீதிபதிகளுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ மாத்திரம் உரிமையானதல்ல. மாறாக இந்த மண்ணின் மக்களுக்கானது. அம்மக்களுக்குத் தெரிந்த தாய்மொழியில் நீதிமன்றம் நடத்தாமல் அவர்களுக்குப் புரியாத அந்நிய மொழியில் நடத்துவதில் எந்தவித அடிப்படை நியாயமுமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது காலத்தின் கட்டாயமாகும். அதோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது சமூகநீதியை கொண்டு வருவதற்கானதொரு போராட்டமே.
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை (