மன்னர்களின் அரண்மணைகள் செந்நிறத்தில் ஓங்கி நிற்கும் புதுக்கோட்டையில் அன்று புதிய வெளிச்சம் பற்றிப் பரவியது. அதன் பிரதிபலிப்பில் பிப்ரவரி 18 பொலிவுற்று, வரலாற்றில் தன்னை பதிந்து கொண்டது. ஆம். அன்றுதான் தலித் விடுதலையின் குரலாய் ஓங்கி ஒலிக்கும் ‘தலித் முரசு' இதழின் 11 ஆவது ஆண்டு தொடக்க விழா. சமூக விடுதலையின் வேர்களில்தான் ஒட்டுமொத்த விடியலையும் பெற முடியும் எனும் கருத்துக் கலகத்தையும், இந்துமத ஒழிப்பும் சமத்துவ பவுத்தத்தின் பரப்புதலுமே - ஜனநாயகத்தை உருவாக்கும் என்ற முழக்கத்தோடு, தனது 10 ஆண்டு கால போராட்டக் களத்தில் காயங்கள் பெற்றாலும், களைப்புறாமல் முன்னேறும் போர்வீரனைப் போல, 11 ஆம் ஆண்டில் ‘தலித் முரசு' அடியெடுத்து வைத்தது.

எந்தவிதமான இயக்கப் பின்புலமோ, பொருளாதாரப் பின்னணியோ இன்றி அம்பேத்கர், பெரியார் என்னும் இரு கரைகளுக்கிடையே ஓடும் உயிர்த் தண்ணீராய் விடுதலையைப் பாய்ச்சுகிறது ‘தலித் முரசு'. எந்தவிதமான சமரசமுமின்றி தலித் விடுதலையின் சாத்தியங்களின் கதவுகளை அது திறந்து கொண்டே போகிறது. தன் தடம் புரளாத தன்மையால் ஆர்வலர்களின் ஆதரவினால் பதினோராம் ஆண்டு விழா ஒரு நாள் முழுக்க நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு கருத்தரங்கம், பின்பு ‘ஆறெழில் விழா' என்று அன்றைய நாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. காலை அமர்வின் கருத்தரங்கம் ‘தீண்டாமை ஒழிப்பில் தலித் அல்லாதோரின் பங்கு' என்னும் தலைப்பில் நடைபெற்றது. இப்படி தலித் அல்லாத முற்போக்கு சக்திகளை அழைத்து, அவர்களிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வினைக் கோருதல் என்பது, தமிழகத்திலேயே முதல் முறையாக நடந்தது எனலாம். இதற்கான வடிவத்தைக் கொடுத்த மருத்துவர் என். ஜெயராமன் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் உரையாற்றினார். அவர் உரையில், சாதி தீண்டாமை ஒழிப்பு, கலப்புத் திருமணங்கள், காதல், உயர் கல்வியில் மறுக்கப்பட்ட இடஒதுக்கீடு போன்ற கருத்துகள் தெறித்தன. கருத்தரங்க அமர்வை ‘ஞானாலயா' பா. கிருஷ்ணமூர்த்தி நெறிப்படுத்தினார். ஒவ்வொரு தலைப்பையும் அவர் அணுகும்போது அவரின் பரந்துபட்ட அறிவும், அனுபவமும் நம்மை வியப்பில் ஆழ்த்தின. கருத்தரங்கத் தலைப்புகள் குறித்தும், அந்தத் தலைப்பிலான அடிப்படைக் கேள்விகளை வைத்தும், ‘தலித் முரசு' குழுவினர் விவாதங்களை முன்னெடுக்க, அதற்கு தலித்தல்லாத முற்போக்கு சக்திகள் பதிலளித்துப் பேசினர்.

சேவியர், எஸ்.ஆர்.எம். ராஜா, வழக்கறிஞர் ஜி. ராமலிங்கம், பேரா. திருமூர்த்தி, சண்முக பழனியப்பன், ஆரோக்கிய சாமி, ராஜாமுகமது மற்றும் கவிஞர் முத்துநிலவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பிற்பகல் 2 மணி வரை நீண்ட இந்த கருத்தாடல்கள், சாதி ஒழிப்பில் தலித் அல்லாதாரின் பொறுப்புணர்வையும், அவர்களுடைய புரிதல்களையும் வெளிப்படுத்தின. இத்தகைய சக்திகளை, இந்து பார்ப்பனிய சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக அணியமாக்குவது அவசியம் என்றே நமக்குத் தோன்றியது. கருத்தரங்கிற்கு, அரசின் உயரதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் கடமையினை, எந்த நிலையிலும் தளராது செய்து வருபவர் மருத்துவர் என். ஜெயராமன். அவருடைய பெரும் உழைப்பால் உருவான ‘அபெகா' நூலகத்தின் சார்பில் ‘ஆறெழில் விழா' மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. விசாலமான அவருடைய வீட்டு முற்றத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

‘தலித் முரசி'ன் 11ஆவது ஆண்டு விழா, ‘தலித் முரசு' இதழுக்கு ஆண்டு - வாழ்நாள் கட்டணம் நிதியளிப்பு விழா, ‘அம்பேத்கரின் ஆசான் புத்தர்' நூல் வெளியீட்டு விழா, மருத்துவர் என். ஜெயராமன் நேர்காணல் நூல் வெளியீட்டு விழா, ‘தலித் முரசு' பேட்டிகள் முந்நூல் வெளியீட்டு விழா, அம்பேத்கர் கல்வி பயின்றோர் பாராட்டு விழா என சிறப்பாகக் கொண்டாடப்பட்டது ‘ஆறெழில் விழா'. விழாவிற்கு என். ஜெயராமன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சி. நாகமுத்து வரவேற்றார்.

மு. மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ‘தலித் முரசி'ன் 11 ஆம் ஆண்டு சிறப்பிதழை ‘ஞானாலயா' கிருஷண்மூர்த்தி வெளியிட, ரமணிதேவி பெற்றுக் கொண்டார்.

மருத்துவர் என். ஜெயராமன் நூலை மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட, சேலம் மருத்துவர் மோகன் பெற்றுக் கொண்டார். ‘அம்பேத்கரின் ஆசான் புத்தர்' நூலை, ‘தலித் ஆதார மய்ய' இயக்குனர் ஜான் ஜெயகரன் வெளியிட, சொ.சு. தமிழினியன் பெற்றுக் கொண்டார். ‘தலித் முரசு' இதழ்களில் வெளிவந்த நேர்காணல்களின் முதல் தொகுப்பை அ. மணிமேகலை வெளியிட, கே.எம். செரீப் பெற்றுக் கொண்டார். இரண்டாம் தொகுப்பை மருத்துவர் ஜெயராமன் வெளியிட, மெய்யநாதன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் தொகுப்பை எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் வெளியிட, கே.எஸ்.முத்து பெற்றுக் கொண்டார். ‘பகவான் புத்தர்' எனும் நூலை கவிஞர் தமிழேந்தி வெளியிட, யாழன் ஆதி பெற்றுக் கொண்டார். ‘ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்' நூலை அ. முத்துக்கிருஷ்ணன் வெளியிட, சந்திரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் பேசிய ஜான் ஜெயகரன், ‘பல சோதனைகளைக் கடந்து ‘தலித் முரசு' இதழ் வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டார். ‘தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அயோத்திதாசப் பண்டிதர் ‘தமிழன்' இதழை நடத்தினார். அதற்குப் பிறகு, வரலாற்றில் 11 ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற இதழ் ‘தலித் முரசு' மட்டும்தான்' என்று கே.எஸ். முத்து வாழ்த்திப் பேசினார். கடந்த பத்தாண்டு இதழ்களை பேராசிரியர் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். ‘தலித் முரசு' தலித் பிரச்சனைகளை மட்டுமின்றி, அதன் குரலை உலகளாவிய பிரச்சனைகளிலும் ஒலிக்கச் செய்கிறது. உட்சாதி பிரிவுகளை மேலும் பெரிதாக்காமல், ‘தலித்' என்னும் அடையாளத்தில் ஒருங்கிணைக்க வைக்கிறது' என்று குறிப்பிட்டார்.

அடுத்து, ‘தலித் முரசு' இதழுக்கு ஆண்டு - வாழ்நாள் கட்டணங்கள் நிதியளிப்பு தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம், 52,300 ரூபாய் ‘தலித் முரசு'க்கு நிதி அளிக்கப்பட்டது. மருத்துவர் ஜெயராமன் ‘தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியனிடம் நிதியை அளித்தார். அதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய புனித பாண்டியன், "நீங்கள் தந்திருக்கிற நிதி, எங்களுக்குப் பெருத்த நம்பிக்கையை அளித்திருக்கிறது. இன்னுமொரு பத்தாண்டுக் காலம் இதழைத் தொய்வின்றி நடத்த முடியும் என்ற நம்பிக்கையை அது அளித்திருக்கிறது. நீங்கள் எங்கள் பணியினை அங்கீகரித்திருக்கிறீர்கள். சாதி ஒழிப்பு என்பது, அரசியல் - பொருளாதார விடுதலையில் மட்டுமில்லை; அதற்கும் மேலாக சமூக மாற்றத்தில்தான் அடங்கியுள்ளது. சமூகத்தில் தலித்துகள் சமமாக மதிக்கப் பெறல் வேண்டும், நாங்களும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது. பெரியார், அம்பேத்கரின் போராட்டங்கள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன'' என்றார்.

விழி.பா. இதயவேந்தன், அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். விழி.பா. இதயவேந்தன், இந்நிகழ்ச்சி தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், ‘தலித் முரசு'க்கு தொடர்ந்து ஆதரவினை தலித் மக்கள் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். அழகிய பெரியவன் பேசும் போது, "ஒரு தலித் வீட்டிலேயே இந்நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. தலித்துகள் தங்கள் குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு, இவ்விழா ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது. இங்கே இரண்டு வெற்றிகளை நான் பார்க்கிறேன். டாக்டர் ஜெயராமன் அவர்களின் வாழ்வியல் வெற்றி; இன்னொன்று ‘தலித் முரசி'ன் வெற்றி. இரண்டு வெற்றிகள் இப்படி அமைகின்றபோதுதான் தலித் விடுதலை சாத்தியமாகின்றது. எத்தனையோ இதழ்கள் வெளிவந்தாலும், தலித் விடுதலைக் கருத்துகளைத் தாங்கி வரும் ‘தலித் முரசு' மிகச் சிறப்பாக தன் கடமையை செய்து வருகிறது. அதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் அவசியமானது. இன்னுமொரு பத்தாண்டுக்கு என்று ஆசிரியர் சொன்னார்கள், வாழ் நாள் முழுக்க ‘தலித் முரசை' நடத்த முடியும் என்ற தன்னம்பிக்கை எங்களுக்கிருக்கிறது' என்றார்.

விழாவிற்கு ஏராளமானோர் புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். புத்தகங்கள் அதிகளவில் விற்றன. நிகழ்ச்சிகளின் ஒவ்வொரு அசைவையும் தன் அனுபவத்தினாலும், ஆழ்ந்த சமூகப் பொறுப்பினாலும் நிறைந்த சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளி நாயகம் ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றார்.

இவ்விழாவில், மதுரை தலித் ஆதார மய்யம் நடத்தும் அம்பேத்கர் கல்வி பயின்றவர்களுக்குப் பாராட்டும் பரிசும் அளிக்கப்பட்டது. இறுதியில் நன்றி கூறிய மருத்துவர் ஜெயக்குமார், "என்னுடைய அப்பா, ஆயிரங்களில்தான் ‘தலித் முரசு' இதழுக்கு தந்தார்; நான் எனது காலத்தில் ‘தலித் முரசு'க்கு லட்சங்களில் தருவேன்'' என்று கூறியது, இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எதிர்கால இளைஞர்களிடமும் பொறுப்புகளை விதைத்திருக்கிறது ‘தலித் முரசு'.

- நம் செய்தியாளர்
Pin It