Budha
இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யும் நோக்கத்திலும் இந்தியாவிற்கோர் அரசியல் சட்டத்தை வரைவதற்காகவும், லண்டனில் வட்டமேசை மாநாடு கூட்டப் பெற்றது. அம்பேத்கர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் ஆகிய இருவரும் தீண்டத்தகாத ஒடுக்கப்பட்ட மக்களின் படிநிகராளியராக அழைக்கப்பட்டனர். வரலாற்றில் முதன் முறையாகத் தாழ்த்தப்பட்டோர் இருவர், இந்திய அரசியலமைப்பைத் தீர்மானிக்கும் மாநாடு ஒன்றில் கருத்தறிவிக்குமாறு அழைக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 அன்று வட்டமேசை மாநாடு தொடங்கியது.

வட்டமேசை மாநாட்டில் முதன்முதலாக அம்பேத்கர் தமது உரையில், "இந்தியப் பெருநிலத்தில் வாழ்வோரில் அய்ந்திலொரு பகுதி மக்களின் சார்பாகப் பேச விரும்புகிறேன். இங்கிலாந்தினதும் பிரான்சினதும் மக்கள் தொகையைவிட, மிகுதியான தொகையைக் கொண்ட மக்களின் சார்பாளன் நான். இந்தியாவிலுள்ள தீண்டத்தகாதோர் என்னும் ஒடுக்கப்பட்டோரின் படிநிகராளி நான். தீண்டத்தகாதோர் இந்துக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள், வேறுபட்ட குடிமக்கள். பொது வாழ்விலிருந்து புறக்கணிக்கப்பட்ட மக்களினப் பிரிவினர். சமத்துவ வாய்ப்புகள் யாவும் மறுக்கப்பட்டவர்கள். அடிப்படைக் குடியுரிமைகள்கூட வழங்கப் பெறாதவர்கள்'' என்றார்.

7.9.1931 அன்று வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டாட்சி அமைப்புக்குழு, சிறுபான்மையர் குழு ஆகியவற்றில் நிறைவேற்ற வேண்டியவை பற்றி ஆய்வதே இம்மாநாட்டின் முகாமை நோக்கமாகும். வட்டமேசை மாநாடு நடந்து கொண்டிருக்கையில் 5.11.1932 அன்று இங்கிலாந்தின் மன்னர், மாநாட்டுப் பேராளர்கள் அனைவருக்கும் வரவேற்பு விருந்தொன்று அளிக்க விரும்பினார். சிலர் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னர், அம்பேத்கரை பேசுமாறு கேட்டுக் கொண்டார். அம்பேத்கர் நெஞ்சமுருக நிலைமைகளை விளக்கினார். துன்பமயமான தன் சொந்த மக்களின் வரலாற்றையும், இழிவு - ஏழ்மை நிலையினையும் அனைவர் தம் உணர்வில் உறைக்குமாறு எடுத்துரைத்தார். தனித் தொகுதி முறையே ஒடுக்கப்பட்டோருக்கு உரிய காப்புரிமைப் பட்டயம் எனக்கோரிய அம்பேத்கர், இறுதிக் கோரிக்கையாக ஒடுக்கப்பட்டோர் பெயர் மாற்றம் பெற வேண்டுமெனக் கூறினார். தங்களைச் ‘சாதி இந்து அல்லாதார்', ‘இந்து எதிர்ப்பாளர்', ‘இந்து மத வழிபாட்டு எதிர்ப்பாளர்' என்றே அழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

28.9.1932 அன்று நடைபெற்ற ஒடுக்கப்பட்டோரின் கூட்டமொன்றில் அம்பேத்கர் பேசும்போது, "இந்து கோவிலுக்குள் போக முடிவதால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு விடாது. நாம் நம்முடைய அரசியல் அதிகாரங்களை நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவதற்கான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார். 1933இல் ஆலயப் பிரவேசம் குறித்து தாணா மாவட்டத்தில் கசாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது, "கடவுளை வழிபடுவதைவிட உணவிற்காக உழைப்பது மேலானது. கடவுளை நம்பி வாழ்வதைப் பயில வேண்டாம். உங்கள் தோள் வலிமையால் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.

இந்து சமூக அமைப்பு ஒடுக்கப்பட்டோர் மீது பொருண்மிய முற்றுகையை இறுக்கிய நிலையில், தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்பதின் அவசியமாய், அம்பேத்கர் பிரமாண்டமான முறையில் கட்டி முடித்த வீட்டிற்கு ‘ராஜகிருகம்' என்று பெயர் சூட்டினார். புத்தர் வாழ்ந்த காலத்தில் பிம்பிசார மன்னனின் தலைநகரமே ராஜகிருகமாகும். புத்தர் இந்த நகரத்தின் எல்லைப் பகுதிகளில் சுற்றிவந்து மக்களுக்கு போதனை செய்வது வழமையாகும். ராஜகிருக பகுதியில் தான் புத்தர் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1935 நவம்பர் 10 இல் ஒடுக்கப்பட்டோர் பேரவை, நாசிக்கில் ஒரு மாநாட்டினை ஏற்பாடு செய்தது. அம்பேத்கர் ஆலயப் பிரவேசம் இனி தேவையில்லை என்று அறிவித்தார். இம்மாநாடு இந்து கடவுளர், இந்து புனித நூல்கள், புனிதத் தலங்கள், புரோகிதம் அனைத்தையும் மறுத்து காலாராம் கோயில் நுழைவைக் கைவிடுவதாக அறிவித்தது. இதனை அறிந்த நாசிக் மக்கள், தங்கள் வீடுகளில் மாட்டியிருந்த இந்து கடவுளர்களின் உருவப் படங்களையும் இந்து மத நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

19.7.1937 அன்று அம்பேத்கர் பம்பாய் மாகாண சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவியேற்கும்பொழுது, ‘பகவத் கீதை'யின் பெயரால் உறுதியேற்க மறுத்துவிட்டார். 1944 நவம்பர் இறுதிவாரம் பட்டியலினக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜ்போஜ், பூனாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அம்பேத்கர் பங்கேற்றார். அப்போது, "வேதங்களின் கருத்துக்களை தூக்கிப் பிடிப்பதையும், பார்ப்பனியத்தை உச்சநிலைக்கு உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்தான் கீதை'' என்று காட்டமாக உரை நிகழ்த்தினார். 1945 இல் அம்பேத்கர் தொடங்கிய மக்கள் கல்விக் கழகம், 1946 சூன் 26 இல் சித்தார்த்தா கல்லூரியை நிறுவியது, கல்லூரிக்கு சித்தார்த்தா என்ற பெயரை வைத்ததன் மூலம் அம்பேத்கரின் பவுத்த ஈடுபாடு வெளிப்பட்டது.

அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையின் தேசியக் கொடிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இந்து மகாசபா உறுப்பினர்கள் பலர் அவரைச் சந்தித்து, தேசியக் கொடி காவி நிறத்தில் அமைய வேண்டுமென்று ஆலோசனை கூறினார்கள். அம்பேத்கர் இந்துத்துவவாதிகளிடம் மறுப்பினை தெரிவித்து, அசோகரின் பவுத்த மார்க்க ஆட்சியினை பிரதிபலிக்கும் வகையில் அசோகச் சக்கரம் அமைந்த மூவர்ணக் கொடியை 1947 சூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபையிடம் அளித்தார்.

அரசியலமைப்பவை 26.11.1949 அன்று இந்திய மக்களின் பேரால் 395 கூறுகளையும் 8 அட்டவணைகளையும் ஏற்றுக் கொண்டது. உடல் நலம் குன்றிய நிலையிலும் அம்பேத்கரைத் தவிர வேறொருவர் இதனைச் செய்திருக்க முடியாது என்று அவையின் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் குறிப்பிட்டார். இத்தருணத்தில் காந்திய சாய்மானம் கொண்டு வெளிவரும் முக்கிய இதழொன்று, அம்பேத்கரை புத்தரின் பிரதமச் சீடர்களில் ஒருவரான ‘உபாலி'யுடன் ஒப்பிட்டு எழுதியது. உபாலி - புத்தர் பரியம் மணம் அடைந்த மூன்று மாதத்திற்குப் பிறகு கூடிய பவுத்த மாநாட்டில், வினைய பிடகத்திற்கு அர்த்தம் சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

25.5.1950 அன்று இலங்கையில் ஏற்பாடாகியிருந்த பவுத்த மாநாட்டில் கலந்து கொள்ள அம்பேத்கர் கொழும்புக்குச் சென்றார். பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தன்னை பவுத்த நிகழ்வுகளில் இணைத்துக் கொள்பவர் என்றும், பவுத்த வழிமுறைகளைப் பின்பற்ற விழைபவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். கொழும்பில் நடந்த பவுத்த இளைஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் கூட்டத்தில் ‘இந்தியாவில் பவுத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்' என்ற தலைப்பில் உரையாற்றிய அம்பேத்கர், இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் பார்ப்பன வேதமதம், பார்ப்பனிய மதம், (இப்போதுள்ள) இந்து மதம் என்ற மூன்று கட்டங்களாக வளர்ந்து வந்துள்ளது என்று கூறினார்.

"பார்ப்பனிய மதக் காலகட்டத்தில்தான், அதற்கு நேர்மாறான பவுத்தம் தோன்றியது. பார்ப்பனியம் ஏற்றத்தாழ்வை நடைமுறைப்படுத்தியது. பவுத்தமோ, பார்ப்பனியத்தை எதிர்த்து சமத்துவ இயக்கமாகக் கிளர்ந்தெழுந்தது'' என்றும் எடுத்துரைத்தார். கொழும்பு நகர மன்றத்தில் ஒரு கூட்ட நிகழ்வைத் தொடங்கி வைத்த அம்பேத்கர், அக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தொல் தமிழர்களை பவுத்தம் தழுவ வேண்டுகோள் விடுத்தார். அம்பேத்கரின் வேண்டுகோளை ஏற்று, தாயகமான தமிழ் நாட்டு வம்சாவளியினரான 450 தொல் தமிழர்கள் பவுத்தர்கள் ஆனார்கள்.

அம்பேத்கர், ‘ராயல் ஆசிய சங்க'த்தின் பம்பாய் கிளை, சூலை 25 அன்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றியபோது, தாம் சிறுவனாக இருந்தது முதலே பவுத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். செப்டம்பர் 1950, 29 அன்று பம்பாய் ஓர்லியில் புத்தர் நினைவகத்தில் உரையாற்றிய அம்பேத்கர், "தீண்டத்தகாத வகுப்பினர் அவர்களுடைய துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்காகப் பவுத்தத்தைத் தழுவ வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

1951 பிப்ரவரி அன்று கல்கத்தா ‘மகா போதி' இதழுக்கு ‘இந்துப் பெண்களின் எழுச்சி யும் வீழ்ச்சியும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார். ‘ஈவ்ஸ் வீக்லி' என்ற இதழில் ‘இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்குப் புத்தரே காரணம்' என்று வெளியான கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து இக்கட்டுரையை எழுதினார். ‘ஈவ்ஸ் வீக்லி'யின் கட்டுரையாளர் தன்னுடைய முடிவுகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டியுள்ள பகுதி, பார்ப்பன பவுத்த பிக்குகளின் இடைச்செருகலேயாகும்; புத்தர் பெண்களை வெறுத்தொதுக்கவில்லை. ஒருபோதும் அவர்களை இகழவும் இல்லை. புத்தருக்கு முன் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்புரிமையான கல்வியைப் பெறவும், சமூக வாழ்வை மேற்கொள்ளும் சிறப்புத் தகுதியை அடையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது, பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையாகும்.

பெண்களும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று ஆக்கியதன் மூலம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு தடைகளையும் புத்தர் ரத்து செய்தார். புத்தர் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமையையும் ஆண்களைப் போலவே குடும்ப வாழ்க்கையினை விட்டுவிட்டு, சமூக வாழ்க்கையை மேற்கொள்ளும் சிறப்புத் தகுதியினைப் பெறும் உரிமையையும் ஏற்படுத்தினார். பெண்களுக்கு மனிதச் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் ஏற்படுத்திய புத்தரின் இச்செயல், இந்தியாவில் பெண்களின் விடுதலைக்கு வழிவகுத்த பெண்ணியப் புரட்சியாகும்.

1951 ஆம் ஆண்டு மே மாதம் டில்லியில் நடைபெற்ற புத்தர் பிறந்த நாள் விழாவில் அம்பேத்கர் உரையாற்றும்போது, இந்து மதத்தைக் கடுமையாகச் சாடினார். இந்துக்களிடம் காணப்படும் வன்முறை, ஒழுக்கக் கேடு மற்றும் அரசு ஊழியர்களிடம் குடிகொண்டிருக்கும், பாரபட்சம், மெத்தனம், லஞ்சம் போன்ற கேடுகளுக்கு இந்து மதத்தின் சீரழிவுகளே காரணம் என்றார். மக்கள் பவுத்தத்தைத் தழுவினால்தான் இந்நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்றார். அம்பேத்கர், 1951 சூலையில் இந்திய பவுத்த சங்கத்தை நிறுவினார்.

அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ராஜ்போஜ், இந்திய ஜப்பானிய பன்னாட்டு சங்கத்தின் துணைத் தலைவராகயிருந்த எம்.ஆர். மூர்த்திக்கு டில்லியில் 1953 பிப்ரவரி மாதத்தில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் உரையாற்றிய அம்பேத்கர், "இன்றைய தலைமுறையினராயினும், வருங்கால வழித்தோன்றல்களாயினும் புத்தர் கொள்கை, காரல் மார்க்ஸ் கொள்கை ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் இனி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்'' எனக் குறிப்பிட்டார்.

1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அம்பேத்கர் மூன்றாவது உலகப் பவுத்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரங்கூனுக்குச் சென்றார். இம்மாநாட்டில், பவுத்தத்தின் குறிக்கோள், அதைப் பரப்ப வேண்டிய பணி ஆகியவை குறித்து சிந்தனையைத் தூண்டும்படி உரையாற்றினார். பவுத்த மார்க்க நிகழ்ச்சிகளின்போது, ஆடம்பரம் செய்வதற்கென்று ஒரு பெருந்தொகை வீணாகச் செலவழிக்கப்படுகிறது. பவுத்த வழிமுறைகளில் பகட்டான ஆரவாரத்திற்கு இடமே இல்லையென்றார். பவுத்த மார்க்கத்தை எதிர்ப்பவர்களைத் தன்னுடன் வாதிட வருமாறு அறைகூவல் விடுத்தார். நேர்மறையாக பவுத்தத்தைப் பாவித்து வாதிடுவதில் எப்படிப்பட்ட மேதாவிகளையும் தன்னால் தோற்கடிக்க முடியும் என்றார்.

பவுத்தத்தைப் பரப்புவதற்கான வழிவகைகளை அமைத்துக் கொண்டபின், இந்தியாவில் பவுத்தத்தைப் பரப்பப் போவதாக அம்மாநாட்டில் அறிவித்தார். இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை உருவாக்கியபோதே, அம்பேத்கர், பவுத்த மொழியான பாலியை ஆய்வு செய்வதற்கான தகவமைப்பை அரசியல் சட்டத்தில் வழிவகை செய்ததையும், புதுடில்லியில் குடியரசுத் தலைவரின் எழிலார்ந்த மாளிகையின் முகப்பில் புத்தரின் பொன்மொழிகளைப் பொறிக்கச் செய்ததையும், தேசியச் சின்னமாக அசோகச் சக்கரம் ஏற்கப்படச் செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

இவையனைத்தும் தன்னுடைய பவுத்த உணர்வின் சொந்த முயற்சியினால் விளைந்த சாதனைகள் என்று குறிப்பிட்ட அம்பேத்கர், தன்னுடைய முயற்சியினால் புத்தரின் பிறந்த நாளை அரசின் நினைவு நாளாக ஆக்கியதையும் சுட்டிக் காட்டினார். இனி, பவுத்தத்தைப் பரப்புவதற்கு தன் வாழ்நாளை ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்தார். "பவுத்தத் தத்துவங்கைளச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய தன்மையில் எளிய மொழிநடையில் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை எழுதி முடித்திட ஓராண்டுக் காலமாகும். இந்நூலை எழுதி முடித்த பிறகு நான் பவுத்த மார்க்கத்தில் சேருவேன்'' என்றார்.

அம்பேத்கர் பம்பாயிலும் அவுரங்காபாத்திலும் தாம் நிறுவிய கல்லூரிகளில் பவுத்த பாடத் திட்டத்தினை ஏற்படுத்தினார். ஆங்கிலம், மராட்டி, இந்தி, குஜராத்தி ஆகிய நான்கு மொழிகளிலும் பாலி மொழி அகராதி தயாரிக்கும் அளப்பரிய வேலையைத் தானே தொடங்கினார். 1955 ஆம் ஆண்டு பிறந்தது! அத்துடனேயே அம்பேத்கர் பவுத்தம் ஏற்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியாயிற்று. பார்ப்பனர்கள் முதலில் புத்தரை கடவுளாக வழிபட வைத்தனர். புத்தரை கடவுளாக ஆக்கியதோடு மட்டுமின்றி, பவுத்தத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் உருவாக்கியிருந்த கடவுளர்களையும் - கடவுளச்சிகளையும் வணங்க வைத்தனர். இதனால் பவுத்தத்தின் அடிப்படைக் கலைந்து பவுத்தம் அழிந்துவிட்டது! பவுத்த வழிமுறைகள் - பகுத்தறிவுக்குட்பட்ட முறைமையில் வகுக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் எண்ணினார்.

1955 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அம்பேத்கர், இந்தியாவில் பவுத்த மார்க்கத்தைப் பரப்புவதற்கெனப் பிரச்சாரகர்களுக்கு, பிக்குகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக - பெங்களூரில் ஒரு பவுத்தப் பயிற்சிப் பள்ளி நிறுவப்படும் என்று அறிவித்தார். பவுத்தப் பயிற்சிப் பள்ளியில் நினைவகங்களும், வகுப்பரங்கு அமைக்கப்படும்; உலகம் முழுவதிலும் உள்ள பவுத்த அறிஞர்களின் பவுத்தப் படைப்புகளை வெளியிட, ஓர் அச்சகமும் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.

-தொடரும்
Pin It