தொடர்புடைய படைப்புகள்

periyar with baby 500தோழர் லெய்லா என்னும் பெயருடையவரும், மேனாட்டுப் பிரபல சோதிட பண்டிதையுமான ஓர் அம்மையார் அவர்கள் சென்னைக்கு வந்து "தமிழ்நாடு" நிருபரிடம் பலவகையான எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறாரென்றும், அவர் சில நாளைக்குமுன் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகள் யாவும் தவறாது நடந்திருக்கின்றனவென்றும் தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அச்சோதிட பண்டிதை இப்பொழுது சென்னையிற் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளில் ஜார்ஜ் மன்னர்பிரான் உடல் நிலையைப் பற்றியது ஒரு செய்தியாகும். அவர், ஜார்ஜ் மன்னர் நோய் நீங்கி உடல் நலம் பெறுவா ரென்றும், இன்னும் சில வருடங்கள் உயிர் வாழ்வாரென்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறி இரண்டு தினங்கள் ஆவதற்குள் மன்னர்பிரான் மரணமடைந்து விட்டார். இதிலிருந்து சோதிடத்தின் உண்மையை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். "காக்கையேறப் பனம்பழம் விழுந்தது" என்னும் (காகதாளி) நியாயம்போல் ஒருவர் கூறினபடியே தற்செயலாய் ஏதோ சில சமயங்களில் வாய்ந்து விடுவதுண்டு. இதனைக் கொண்டே அவ்வாறு கூறியவர்களை தீர்க்கதரிசிகளெனவும், சோதிடவல்லவரெனவும் கூறிப் பெருமைப்படுத்துகின்ற நம்மக்களின் பேதமைத் தன்மையை என்னென்பது? இந்தச் சோதிட விஷயத்தை சில பத்திரிகைகள் மிகப் பிரமாதமாக விளம்பரப்படுத்தியதுடன், அம்மையாரின் படத்தையும் போட்டு விளம்பரப் படுத்தினார்கள். சோதிட எதிர்கால நிகழ்ச்சியின் தத்துவத்தை இவ்வரலாறு எல்லாருக்கும் மிக நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறது. எனவே இனியாவது மக்களுக்குச் சோதிடப் பைத்தியம் விலகும் என்று நம்புகிறேன்.

(குடி அரசு செய்தி விமர்சனம் 26.01.1936)

சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கர்ப்பத் தடையை ப்பற்றி ஆட்சேபித்துப் பேசுகையில் விளைபொருள்கள் எல்லா மக்களுக்கும் சரி சமமாகப் பங்கிட்டுப் பிரித்துக் கொடுப்பதானால் ஜனங்களுக்கு உணவுப் பஞ்சம் இருக்காதென்றும், ஆதலால் கர்ப்பத் தடையோ, கர்ப்ப ஆட்சியோ கூடாதென்றும் எடுத்துச் சொன்னார்.

அடுத்த ஓர் இடத்தில் பேசும்போது செல்வங்களை மக்களுக்கு சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது என்பதை தாம் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது என்று சொன்னார்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் கர்ப்பத் தடையோ, கர்ப்ப ஆட்சியோ அவசியமா இல்லையா? என்று தான் நாம் கேட்கின்றோம்.

(குடி அரசு செய்திக் குறிப்பு 26.01.1936)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.