நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது என்பதாக இங்கு ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எல்லா ஜனங்களுக்கும் நாஸ்திகம் என்று சொன்ன உடனேயே அந்த அருத்தம் தான் முதலில் தோன்றுகின்றது.

ஆனால் நாஸ்திகம் என்பதற்குப் பல அருத்தங்கள் சொல்லப்படுகின்றன.periyar womens 600ஒரு மதக்காரனை மற்ற மதக்காரன் நாஸ்திகன் என்று சொல்லுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஒரு மதக்காரனின் ஆதாரத்தை மற்ற மதக்காரனோ அல்லது அதே மதக்காரனோ தர்க்கிப்பதும், விவகரிப்பதும், சந்தேகப்படுவதும், சந்தேகம் தெளிய முயற்சிப்பதும் எல்லாம் நாஸ்திகம் என்று சொல்லப்பட்டு விடுகின்றது.

ஆதாரங்களைப்பற்றி தர்க்கிப்பது முதலியவைகளே நாஸ்திகமாய் விட்டால் கடவுளைப்பற்றிய தர்க்கம் விவகாரம் முதலியவை நாஸ்திகம் என்கின்ற தலைப்பின் கீழ் வருவது பெரிய காரியமாகி விடுமா?

ஆகவே நாஸ்திகம் என்பதும் ஒரு கடிவாளமில்லாத குதிரை என்றே சொல்லி விடலாம்.

நாம் இங்கு நாஸ்திகம் என்பதை ஒரு சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்கின்ற ஒருவர் இருந்துகொண்டு, சிருஷ்டி ஸ்திதி சம்மார, அதாவது ஆக்கல் காத்தல் அழித்தல் என்கின்ற முத்தொழில்களையும் செய்து கொண்டும், உலக இயங்குதலுக்குக் காரண பூதராகவும் கர்த்தராகவும் இருந்து வருகிறார் என்பதை மறுப்பதையே நாஸ்திகம் என்று வைத்துக் கொண்டு பேசுவோம்.

இப்படிப்பட்ட இந்த நாஸ்திகம் என்பது கடவுள் என்கின்ற வார்த்தை என்று உண்டாயிற்றோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமான நாஸ்திகம் என்பது இருந்துகொண்டே வந்திருக்கிறது.

இந்த நாஸ்திகமானது இன்ன ஊர், இன்ன தேசம், இன்ன கண்டம் என்று இல்லாமல், உலகில் கடவுள் உண்டு என்று சொல்லக்கூடிய இடங்களில் எல்லாம் இருந்தே வருகின்றது. அது மாத்திரமல்லாமல் கடவுள் கற்பிக்கப் படுவதற்கு முன் இருந்த நிலையைக்கூட நாஸ்திக நிலை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் மனித ஜீவனைப்பொறுத்த வரையில் கூட கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஊட்டுவிப்பதற்கு முன் நாஸ்திகத்தன்மையில் தான் இருந்து வருகின்றது என்று சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட கடவுளைப்பற்றிய நம்பிக்கை இல்லை என்னும் நாஸ்திகம் இந்தியாவில் வெகுகாலமாகவே இருந்து வருகிறது. அதாவது உலகாயுதம், சாருவாகம், சூனியவாதம், மாயாவாதம், பௌத்தம் முதலாகிய பல பிரிவுகள் மத ரூபமாகவே நாஸ்திகமாய் இருந்து வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டது பற்றியும், இருந்து வருவது பற்றியும் நமக்கு ஆச்சரியமில்லை.

ஏனெனில் இந்துக்கள் கடவுள் தன்மை அவ்வளவு மோசமானதாக கற்பிக்கப்பட்டிருக்கிறது.

எப்படி எனில் பல கடவுள்கள்; அதிலும் ஒரு கடவுளாவது முழுவதும் தெய்வீகத் தன்மையுடன் இருந்ததாகச் சொல்ல முடியாமல் மானுஷீகத்தில் இருந்து சிறிது முதிர்ச்சியடைந்து கடவுளாக ஆக்கப்பட்டதாகவும், கடவுளுக்கும் மனிதனுக்கும் முத்தொழில்களில், அதாவது ஆகாரம் நித்திரை புணர்ச்சி ஆகியவைகளில் வித்தியாசமில்லாமலும், சுக துக்கங்களுக்கு அதீதப்பட்டதாக இல்லாமலும், பிறப்பு இறப்புகள் கூட உடையனவாகவும், காமக்குரோதாதி குணங்களுக்கு ஆட்பட்டதாகவும், விருப்பு வெறுப்புக்கு அடிமைப்பட்டதாகவும், பிரார்த்தனை புகழ்ச்சி மன்னிப்பு ஆகியவைகளுக்கு இணங்கியதாகவும், மற்றும் பல மனிதகுணங்களோடு இருக்கும்படியானதாகவும் கற்பிக்கப்பட்ட கடவுள் உள்ள தேசத்தில் நாஸ்திகவாதம் ஏற்படுவது என்பது ஒரு அதிசயமான காரியம் அல்ல.

ஆனால் மேல்நாடுகளில் – கடவுளை மிக ஜாக்கிரதையாக கற்பனை செய்து மிக சுனாயுதமாக அநுபவித்து வரும் நாடுகளில்செல்வத் தன்மையையும் மேல் கீழ்த்தன்மையையும் காப்பதற்கென்றே கடவுளைக் காப்பாற்றி வரும் நாடுகளான மேல்நாடுகளில்எங்கும் இன்று நாஸ்திகவாதம், நாஸ்திகப்பிரசாரம் என்பவைகள் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன என்பதோடு அவை நாளுக்கு நாள் செல்வாக்கும் பெற்று மக்களின் ஆதரவும் ஆமோதிப்பும் பெற்று வருகின்றன. நாஸ்திகவாதத்தைத் தொழிலாளி மக்களோ ஏழை மக்களோ தான் செய்து வருகிறார்கள் என்பதற்கில்லாமல் செல்வவான்கள் கூட்டத்திலேயே மிகவும் மலிந்துகிடக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பகுத்தறிவுச் சங்கமானது மதங்களை அழிக்க முயற்சிப்பதோடு நாஸ்திகத்தையே பெரிதும் பிரசாரம் செய்கின்ற சங்கமாகும். இச்சங்கம் பெரிதும் செல்வவான்களாலும் பெரிய பண்டிதர்களாலும் விஞ்ஞானிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் உள்ளவர்களை சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் விரோதிகள் என்று கூடச் சொல்லலாம்.

மற்றும் உலகத்திலேயே செல்வம் கொழிக்கும் தேசமாகிய அமெரிக்கா தேசத்தில் நாஸ்திகப் பிரசாரமானது வெகுகாலமாகவே பிரக்கியாதியாகவும் ஊக்கமாகவும் செய்யப்பட்டு வருகின்றது.

அவர்கள் தாங்கள் ஏன் நாஸ்திகரானார்கள் என்பதையும், நாஸ்திகத்தை ஏன் பரப்புகின்றோம் என்பதையும், அவர்களது சங்கத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கைகளையும் பற்றித் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உலகமெங்கும் இலவசமாய் அனுப்பி வருகிறார்கள்.

நேயர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அத்துண்டுப் பிரசுரத்தைக் கீழே குறிக்கின்றோம்.

"நாங்கள் நாஸ்திகர்கள் தான் ஏன் என்றால்" என்று ஆரம்பித்து 10காரணங்கள் காட்டி இருக்கிறார்கள். அவையாவன.

1. "கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்குப் போதிய ருஜு இல்லை.

2. அ: உலகுக்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வித அவசியமும் காணப்படவில்லை.

 ஆ: கடவுளால் எவ்வித பிரயோஜனமாவது இருப்பதாக நாங்கள் கருதுவதில்லை.

 இ: கடவுள் இல்லாவிட்டால் இன்றுள்ள நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதும் விளங்கவில்லை.

3. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வ சக்தி, சர்வ வியாபகம் என்பதின் உண்மைப் பொருள் கொண்ட குணங்களையுடையவராக இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமில்லாதவரும், லக்ஷியம் செய்யப்பட வேண்டியவர் அல்லாதவருமேயாவார்.

4. சர்வ சக்தி, சர்வ வியாபகமுள்ள கடவுள் நல்லவராக நன்மையையே செய்பவராக இல்லாவிட்டால் அவர் வணக்கத்திற்கு உரியவராக மாட்டார்.

5. சர்வ சக்திவாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி ஒரு கடவுள் இருக்குமானால், எல்லாம் தோஷமற்றதாகவும், நன்மையையே தரத் தக்கதாகவும், இனிச் செய்ய வேண்டிய காரியங்கள் பாக்கியிருக்கின்றன என்று இல்லாமல் சகலமும் பூரணத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அந்தப்படி இல்லை; ஆதலால் அப்படிப்பட்ட கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளுவதில்லை.

6. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகங்களில் இந்த உலகமே மேலான தென்பதனால் மோக்ஷ உலகக் கதைகள் மெய்யாயிருக்க முடியாது.

7. மனிதனின் உணர்ச்சியும், முயற்சியும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், விடுதலையிலும், முற்போக்கிலும் தூண்டப்பட்டுக் கொண்டே இருப்பதால் கடவுளின் சர்வ சக்திக் கொள்கை விவகாரத்துக்கு உட்பட்டுவிடுவதுடன், அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியும் குறைந்து கொண்டு வருகின்றது.

8. மனிதர்கள் ஆதியில் சிறிதும் அறிவு விளக்கம் பெறாமல் மௌடீகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில், தனக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் கடவுள் சக்தி, கடவுள் செயல் என்று கூறித் திருப்தியடைய ஒரு கடவுளைக் கற்பித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆதிகால மனிதர்களுடைய அபிப்பிராயங்களும், வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொன்றும் தவறுதலானவை என்றும் கூறிவிட்டுக் கடவுளைப்பற்றியும், ஜீவனைப்பற்றியும் மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று சொல்லுவது பொருத்தமானதல்ல.

9. கடவுள் சக்தி என்று கருதப்பட்டு வந்தவைகள் பெரிதும் இன்று விஞ்ஞான சக்தி மூலம் ஆக்கப்பட்டு அவை மனித சக்திக்கு அடக்கப் பட்டு விட்டன. இதனால் அநேக விஷயங்களில் கடவுள் சக்திக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.

10. குற்றம், கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், வன்னெஞ்சம், முரண்பாடு, முதலாகிய அநேக கெட்ட குணங்கள் என்று சொல்லப்படுபவைகள் கடவுள் தன்மையாக இருந்து வருகின்றன.

ஆகவே கடவுளை நாங்கள் நம்புவதோ போற்றுவதோ பிரார்த்திப்பதோ இல்லை.

கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒரு வித கடவுளும் இல்லை.

தாய், தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர்களையும் மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை.

நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக்கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

நரகமென்பது கிடையாது.

நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக் கூடிய, பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.

நம்பிக்கையினால் மன்னிப்பாவது அல்லது மோட்சமாவது ஏற்பட மாட்டாது.

நம்முடைய செய்கைகளுக்கேற்ற பலாபலன்களை நாம் தைரியமாக எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

இயற்கையில் ஏக திருஷ்டியுள்ள உபகாரத் தன்மையாவது அல்லது துவேஷமாவது கிடையாது.

தடுக்கக் கூடியதும், தடுக்கக் கூடாததுமான துன்பங்களிலிருந்து தங்களைத் தாங்களே காப்பற்றிக் கொள்ளப் போராடுவதுதான் ஜீவிய வாழ்க்கையின் தன்மையா யிருக்கின்றது. உலகம் விருத்தியடைய வேண்டியதவசியமானால் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக்க அவசியமாக வேண்டியிருக்கின்றது.

நாம் இறந்தபிறகு "நமது பாக்கி வேலையை"ப் புரிவதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காது.

செய்தால் இப்பொழுதே நாம் செய்ய வேண்டும்; இல்லையானால் எப்பொழுதுமே செய்ய மாட்டோம்.

உண்மை, தயை, அழகு, சுதந்தரம் ஆகியவைகளுக்கும் தெய்வீகத் தன்மை யென்பதற்கும் சம்பந்தம் கிடையாது.

இவைகள் யாவும் மனிதத் தன்மையின் இலக்ஷணங்களாகையால் மனிதர்கள் இவைகளைப் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொண்டேதான் வரவேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் பூமியில் இல்லாமலே நாசமாய்ப் போய் விடுவார்கள்"

என்று லக்ஷக்கணக்காகத் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகித்திருக்கிறார்கள். இதுபோல் இன்னும் பல எழுதிப் பிரசுரித்து வருகிறார்கள்.

(பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜுன் 1935)