சித்திரபுத்திரனுக்குப் பழய பாடம் படிக்க நேர்ந்து விட்டது. இது இஷ்டமில்லாத காரியமானாலும் அது இன்றியமையாததாய் போய் விட்டது! கர்மபலன் யாரை விட்டது?

இந்திய சட்ட சபைத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம். நாட்டுக்கோ, நகரத்துக்கோ, ஏழைப் பாட்டாளி மக்களுக்கோ இதனால் ஏதாவது பயன் உண்டா என்று பார்ப்போமானால் தேர்தல்களுடையவும், தேர்தல் முடிவுகளுடையவும் பயன் கடைசியாக "பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயைப் பிடித்துக் கட்டுங்கள்" என்கின்ற மாதிரிக்குத் தான் அதாவது நன்மை ஏற்படா விட்டாலும் கெடுதியாவது இல்லாமல் இருந்தால் போதும் என்று பிறார்த்திக்க வேண்டிய அளவில்தான் வந்து முடியப் போகின்றதே ஒழிய வேறில்லை என்பது உறுதி.

காங்கிரசும், சுயராஜ்ஜியக் கிளர்ச்சியும், சீர்திருத்த முயற்சியும் ஆதியில் நம் நாட்டில் எப்படி ஏற்பட்டது என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வக்கீல்கள் தங்களது தொழில்களை விருத்தி செய்து கொள்ளு வதற்காகத் தங்களைப்பற்றி விளம்பரம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் பொதுமக்களுக்குத் தங்களைத் தெரியும்படியான மாதிரியில் ஏதாவது கூட்டங்கள் கூட்டுவது, அல்லது கூட்டப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளுவது அல்லது சற்று பொது ஜன உணர்ச்சியுள்ள வழக்குகளில் தங்கள் பெயர்கள் வரப் பார்ப்பது அல்லது பத்திரிகைகளில் ஏதாவது விஷயங்களைப்பற்றி எழுதுவது அல்லது பத்திராதிபர்கள் தயவை விலைக்கு வாங்கி தங்கள் பெயரை அடிக்கடி அவற்றில் வரும்படியாக செய்வது முதலாகிய காரியங்கள் வக்கீல் தொழில் விருத்திக்கு இன்றியமையாதனவாக இருந்து வந்ததுடன் இன்றும் இருந்து வருவதையும் காணலாம்.periyar meetingதானாகவே நல்ல வரும்படி வரக்கூடியவர்கள் சிலர் இப்படிப்பட்ட காரியங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதையும் பார்க்கின்றோம் என்றாலும், பெரும்பான்மையான வக்கீல்கள் இந்த முறையை அனுசரிக்கின்றார்கள் என்று சொல்வது மிகையாகாது. நமக்குத் தெரிய பல பெற்றோர்கள் தங்கள் குமாரர்களான வக்கீல்களுக்கு இதை உபதேசம் செய்வதையும் பார்த்திருக்கிறோம்.

இந்த உண்மையில் இருந்து இன்றைய எப்படிப்பட்ட வக்கீல், பொது நல ஊழியர், தேசியவாதி ஆகியவர்களும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த முயற்சியில் இருந்துதான் பெரிதும் அரசியல் விஷயங்களும், சீர்திருத்த விஷயங்களும் புறப்பட்டனவே ஒழிய வேறில்லை.

இதன் பயனாக அரசியல் காரியங்களில் அரசாங்கத்தோடு கலந்து கொள்வதற்கு வக்கீல்களுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்திருக் கின்றன. அவற்றுள் சிலதான் ஸ்தல ஸ்தாபனங்கள், சட்டசபைகள், அரசாங்க உத்தியோகங்கள், மந்திரி பதவிகள் முதலியனவாகும். அரசியல் முயற்சிகளுக்கு இன்று ஏதாவது நாட்டில் உணர்ச்சி இருந்து வருகின்றது என்று சொல்லப்படுமானால், அது மேல் கண்டவைகளான தேர்தல்கள், உத்தியோகங்கள், பதவிகள், பெரும் பண வருவாய்கள் ஆகியவைகள் காரணமாகத்தானே ஒழிய பரோபகாரத்திற்காகவே மனிதன் வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் காரணத்தால் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லலாம். இப்படிப்பட்ட பதவிகளில் ஒன்றுதான் இப்போது நடைபெறும் இந்திய சட்டசபைத் தேர்தல் கோஷமாகும்.

இந்தத் தேர்தல் இப்போது வந்தவுடன் உலகத்தை வெறுத்த "துறவிகள்", "சந்யாசிகள்" எல்லாம் வெளியில் வந்து விட்டார்கள்.

"சட்டசபை மாய்கை" என்றும் "அது ஒன்றுக்கும் உதவாதது" என்றும் "போதிய அதிகாரமும் பொருப்பாக்ஷியும் ஏற்பட்டா லொழிய அதனால் யாதொரு பயனும் இல்லை" என்றும் இன்னும் பலவாராகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது "காங்கிரசின் கௌரவமும், தேசத்தின் சுயமரியாதையும் காந்தியாரின் பெருமையும்" அதில்தான் (அதாவது இந்திய சட்டசபைத் தேர்தலில்தான்) இருக்கின்றது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஜஸ்டிஸ் கக்ஷி என்னும் ஜனநாயகக் கக்ஷியார் தங்களுடையதுதான் என்று சொல்லிக் கொள்ளும் கக்ஷியும், தங்களுடைய கௌரவமும் தாங்கள் தான் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் என்பதும் இதில்தான் அடங்கி இருக்கின்றது என்று சொல்ல வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் இந்த இரண்டு கக்ஷியும் ஜனப்பிரதிநிதி கக்ஷி அல்ல வென்று உண்மையிலேயே கருதும் சிலர் தனிப்பட்ட முறையிலோ, அல்லது ஏதோ ஒரு பெயரைக் கொண்ட கக்ஷி முறையிலோ இந்திய சட்ட சபையின் மூலம் தொண்டாற்றலாம் என்று கருத வேண்டியவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

இவற்றையெல்லாம் குற்றம் சொல்லுவதற்காக சித்திரபுத்திரன் இந்த வியாசம் எழுதவில்லை.

மனிதன் இன்றைய உலக வாழ்வில் மேலும் மேலும் மேன்மையும், பதவியும், பணமும், புகழும் அடையவேண்டும் என்று ஆசைப்படுவது சகஜமேயாகும்.

விவசாயம், வியாபாரம், லேவாதேவி, வக்கீல், வைத்தியம், சம்பள உத்தியோகம் முதலிய தொழில்களில் இருக்கும் நாணையக் குறைவை விட அவற்றால் மற்ற மக்களுக்கு இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் ஏமாற்றங்கள் ஆகியவைகளை விட, அவற்றில் நடைபெறும் போட்டிகளின் யோக்கியதைகள், ஒழுக்கக் குறைவுகள், நாணயக் குறைவுகள் ஆகிய எல்லாவற்றையும் விட, அரசியல் பட்டம், பதவி, உத்தியோகம் முதலியன சம்பாதிப்பதிலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக முயற்சிப்பதிலும் காங்கிரஸ் பக்தனாவதிலும் தேசீயம் பேசுவதிலும், அதிகமான நாணையக் குறைவோ, குற்றமோ இருப்பதாகவோ இவற்றில் ஏற்படும் போட்டிகளில் நடக்கும் ஒழுக்க ஈனம் முதலிய காரியங்கள் அதிகமென்றோ மிகவும் தப்பிதமென்றோ நாம் சொல்ல வரவில்லை. வியாபாரிக்கு உள்ள புரோக்கர்களும், வக்கீல்களுக்கு உள்ள டவுட்டுகள் (புரோக்கர்களும்), மற்றவர்களுக்கு உள்ள கூட்டிவிடுகின்றவர்களும் எவ்வளவு உண்மையானவர்கள் நாணையமுள்ளவர்கள் சுயநலமில்லாதவர்கள் என்று சொல்லக் கூடுமோ அதைவிட தேர்தல் புரோக்கர்கள் எவ்விதத்திலும் மோசமானவர்கள் அல்ல என்றே சொல்லுவோம். ஆனால் முன்னயதைவிட பின்னயதில் மக்கள் சுலபத்தில் ஏமாந்து விடக்கூடும் என்று மாத்திரம் சொல்லலாம் என்றாலும், சக்தி இல்லாதவர்கள் தோற்றுப்போவது எவ்வளவு ஞாயமோ அதுபோல் தான் அறிவில்லாதவர்கள் ஏமாந்து போவதும் நியாயமேயாகும். ஆதலால் அதையும் நாம் குற்றம் சொல்லுவதற்கு இல்லை.

மக்கள் ஏமாந்து போகின்றார்களே என்கின்ற பரிதாபம் யாருக்காவது இருக்குமானால் அப்படிப்பட்டவர்கள் மக்கள் ஏமாறுவதற்கு ஆதாரமாய் இருக்கும் காரியங்களை, முயற்சிகளை தைரியமாய் வெளியாக்க முயற்சிக்கலாம். இதைத் தவிர யாரையும் சொந்தத்தில் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்லுவது நியாயமல்ல என்பதே நமது அபிப்பிராயம்.

அந்த முறையில்தான் தேர்தல் தந்திரங்களைப் பற்றி சில எழுத ஆசைப்படுகின்றோம்.

தேர்தல் முறை இந்நாட்டில் ஏற்படுவதற்கு முன் பட்டம் பதவி உத்தியோகம் முதலியவற்றில் ஆசை உள்ளவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லாமல் அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுவதை மாத்திரமே அனுசரிக்க வேண்டிய போதுமான யோக்கியதாம்சமாய் இருந்து வந்தது. அதற்கு சௌகரியமில்லாதவர்கள் மக்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து காட்டி மக்களிடம் அரசாங்க நிர்வாக முறையில் உள்ள தவறுதல்கள் பலவற்றைத் திரித்தும் பெருக்கியும் தங்கள் இஷ்டத்துக்கு அணுகுணமாய் கற்பித்தும் காட்டி மக்களை ஏமாற்றி அவர்களது நம்பிக்கையைப் பெற்று ஜனப்பிரதிநிதித் துவத்திற்கும் பட்டம், பதவி, அதிகாரம், உத்தியோகம், பெருமை முதலியவற்றில் ஒரு பங்கு கிடைக்கும்படி செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் பிந்திய கூட்டத்தாருக்கு எப்படியாவது மக்களை ஏமாற்றுவதற்கு சாதனம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதில் அதிசயமில்லை.

நம் நாட்டு நிலைமையானது ஒட்டு மொத்த மக்களின் 100க்கு 7 அல்லது 8 பேரே படித்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாய் இருப்ப தாலும், அதிலும் 100க்கு ஒருவர் இருவரே நன்றாய்ப் படிக்கவும், எழுதவும், யோசிக்கவும் உண்மையைக் கண்டுபிடிக்க சௌகரியமும் உள்ளவர் களாய் இருப்பதாலும் இம்மக்களை ஏமாற்ற அதிக கஷ்டமான மார்க்கம் ஏதுமே தேடவேண்டிய அவசியமில்லாமலும் போய்விட்டது. இதானது இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய அனுகூலமாய் ஏற்பட்டு விட்டது.

இந்தக் காரணத்தால் தேர்தல்களில் பிரவேசிக்கின்றவர்கள் தங்கள் சொல்லும், எழுத்தும், கொள்கைகளும் உண்மையும் நாணையமும், யோக்கியப் பொருப்பும், நன்மையும் சிறிது கலந்ததாகவாவது இருக்கின்றதா என்கின்ற கவலையும், பயமும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் நடக்கவும் ஆன காரியங்கள் செய்ய துணிவுள்ளவர்களாகி விட்டார்கள்.

இதோடு மாத்திரமல்லாமல் இந்நாட்டின் பொருளாதாரத் திட்டமும், வாழ்க்கைத் திட்டமும் மக்களுக்கு எவ்வித பொருப்பும் ஜவாப்தாரித்தனமும் ஒழுக்கமும் அற்றதாகி, எப்படியாவது வயிறு வளர்க்க வேண்டியதே மனித ஜீவனின் கடமை என்று இருந்து வருகின்றபடியால் மேற்கூறப் பட்ட கூட்டத்தாருக்கு வெகு எளிதில் கூலிகள் கிடைத்துவிடுகிறார்கள். அவர்கள் மூலமும் மக்களை ஏமாற்றக் கருதி தங்கள் தங்களுக்கு அனுகூலமாக எப்படி வேண்டுமானாலும் உண்மைகளைத் திருத்தியும், அபாண்டங்களைக் கற்பித்தும் அகாரணமாய் வைதும், பேசவும், எழுதவும் கூடிய கூலிகளை நியமிக்க வேண்டியவர்களாவதுடன் இப்படிப்பட்ட பலர் கூலிக்கு அமர வேண்டியவர்களாகவும் ஆகிறார்கள்.

இந்த இரு கூட்டத்தாரும் மக்களின் அறியாமையும், பாமரத் தன்மையையும் நன்றாய் அறிந்து கொண்டதால் தாங்கள் பேசுவதும், எழுதுவதும் 100க்கு 100 பொய்யாகவும் அயோக்கியத்தனமாகவும் ஏமாற்றலாகவும் இருக்கின்றது என்பதை உணர்ந்தும் இப்பவோ பின்னையோ இன்னும் அரை வினாடியிலோ உண்மை வெளியாகிவிடக் கூடியதாய் இருந்தாலும், இதற்கு முன் தாங்கள் பேசியதும், எழுதியதும் அடியோடு பொய்த்துப் போய் பலதரம் மக்களை ஏமாற்றி இருக்கின்றோமே என்பதை உணர்ந்திருந்தாலும், சிறிதும் பயமில்லாமல் தங்கள் காரியங்களை நடத்திச் செல்லுகின்றார்கள்.

இவைகள் எல்லாம் இப்போதைய வாழ்க்கைத் திட்டத்தின்படி குற்றம் என்று சொல்ல நம்மால் முடியவில்லை. ஏனெனில் இந்தப்படி எல்லாம் நடந்தால் தான் இன்று மனிதன் மகாத்மாவாகலாம், பிரபலஸ்தராகலாம், கீர்த்தியும் புகழும் பெறலாம், பட்டம் பதவியும் அடையலாம், அதிகாரம் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம், பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு கழுவலாம் மற்றும் அவற்றிற்கேற்ற தேசாபிமானி, தேசீய வீரர், தேசியப் பத்திராதிபர் ஆகியோர்கள் ஆகலாம் என்கின்ற நிலையில் வாழ்க்கைத் திட்டம் இருந்து வரு கின்றது. இது இன்று நேற்று அல்லாமல் வெகு காலமாகவே இருந்தும் வந்திருக்கின்றது.

ஆதலால் இப்படிப்பட்ட செய்கைகளைக் கண்டு யாவரும் வருந்தக் கூடாது என்றும், யாவரையும் குற்றம் கூறக்கூடாது என்றும் சொல்வதோடு முன் சொல்லியபடி அவைகளையெல்லாம் அப்புரட்டுகளை யெல்லாம் தைரியமாய் வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு யோக்கியமானவனுடையவும், பட்டம் அதிகாரம் பெருமை புகழ் ஆகியவற்றில் ஆசையில்லாத பொது நல ஊழியத்திற்கு உயிர் வாழ்பவர்களுடையவும் கடமை என்று சொல்லிவிட்டு அடுத்த அத்தியாயத்தில் பிரவேசிப்போம். (தொடரலாம்)

('சித்திரபுத்திரன்', பகுத்தறிவு கட்டுரை 26.08.1934)

Pin It