சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆதியில் ஆடிய ஆட்டங்களும், அவர் பிரபல தேசீயவாதியாக விளங்கிய கதையும், ஹோம் ரூல் கிளர்ச்சிக்காரராக விளங்கிய கதையும், பனக்கால் அரசர் அவர்களால் அடக்கி விடப்பட்ட கதையும் அகில உலகம் அறிந்த விஷயம்.

சர்.சி.பி. சென்னை மயிலாப்பூர் வாசியாக கருதப்பட்ட போதிலும் தஞ்சை ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் மடத்து பழைய ஏஜண்ட் ராமசுவாமி அய்யரின் பௌத்திரர் என்ற முறையில் தஞ்சை ஜில்லாவாசிதான் என்பதை நாம் அறிவோம். இந்தக் கனவான் அரசியல் உலகில் எந்தப் படித்தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது பொது ஜனங்களுக்கு நன்கு தெரியும். இப்பெருமான் காந்தியின் ஒத்துழையாமை முழு வேகமாய் இருந்து சட்டசபைகளுக்கு அபேக்ஷகர்களாக நிற்பதிற்குக் கூட ஆட்கள் கிடைக்காத காலத்தில், பல்லாரி ஜில்லாவின் பிரதிநிதியாக இந்திய சட்டசபைக்குச் சென்று காந்தியை விட வேண்டுமா வேண்டாமா என்ற பிரச்சினை ஓட்டுக்கு விடப்பட்ட காலத்தில், நடுநிலைமை வகித்து உலக மக்களின் முழு கவனத்தையும் பெற்ற ராவ் பகதூர் ஒருவர் தலைமையில் இந்திய அரசியல் நிலையைப் பற்றி பேச முற்பட்டது வெகு பொருத்தமானதென்றே கருதுகிறோம். தலைமை வகித்த ராவ்பகதூர் சுப்பிரமணிய பந்துலு அவர்களோ, பிரசங்கம் செய்த சர்.சி.பி. ராமசாமி ஐயரோ நாட்டிற்குச் செய்துள்ள தொண்டினையும், தோழர் ஜவகர்லால் அவர்கள் செய்துள்ள தொண்டினையும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால், தோழர் ஜவகர் தலைசிறந்து விளங்குவார். தோழர் ஜவகர்லால் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நாட்டில் பரப்புவதாக விஷமப் பிரசாரம் செய்யும் ஐயர், ஜவகர்லால் நேரு அவர்களின் பொதுவுடமைக் கொள்கையைக் கண்டு கொண்ட பீதியின் காரணமாகவே எழுந்த பிதற்றலாகக் கருதுகிறோம்.periyar karunanidhi veeramani 2எனினும் தோழர் ஜவகர், காந்தியின் கீழ் நின்று சமதர்மத் திட்டங்களை, எவ்வளவு உயர்த்தி கூப்பாடு போட்டாலும் செயலளவில் பொது ஜனங்களுக்குப் பயன்படாது என நிச்சயமாக நாம் நன்கு அறிந்தபோதிலும், நிச்சயமாக இந்நாட்டில் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலையை தைரியமாய் வெளிப்படுத்திய காங்கிரஸ்காரர் என்ற முறையில் தோழர் ஜவகர்லால் அவர்களை போற்றுகிறோம். சாதி சமய சங்கடங்கள் அழிக்கப்பட்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் பொருளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய தோழர் ஜவஹர்லால் நேருவை சமஸ்தானாதிபதிகளின் அறியாமையை ஆயுதமாக உபயோகித்து சுகபோகங்களை அனுபவித்து வரும் ஐயர் கூட்டத்தார் வெறுப்பது சகஜமே.

(புரட்சி செய்தி விளக்கம் 22.04.1934)

***

சீர்திருத்தக் காந்தி

சமரஸமே காந்தியாரின் பாலிஸி. காந்தியாரை சர்வாதிகாரியாகக் கொண்டு காங்கிரஸ் பெருமையடித்துக் கொள்கிறது. காந்தியாரின் தலைமையில் காங்கிரஸ் விவசாயிக்கும் ஜமீன்தாருக்கும், தொழிலாளிக்கும், முதலாளிக்கும், ஒடுக்கப்பட்டவனுக்கும், உயர்ஜாதிக்காரனுக்கும் ஒரே சமயத்தில் ஒத்தாசை செய்ய முயல்கிறது. தற்கால பொருளாதார, சமூக ஸ்தாபனங்களை மாற்றியமைக்காது விவசாயிக்கும், தொழிலாளிக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் நீதி செலுத்த முடியுமென்று காந்தியார் கனவு காண்கிறார். ஏன்? அவர் சீர்திருத்தவாதி; சமதர்மியல்ல.

காந்தியாரின் சீர்திருத்தம் பலிக்காது. அவரைப் போல் முயன்ற அநேகர் முடிவில் தோல்வியடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடப்பது உலகத்தில் முடியாத காரியம். காந்தியார் முடியாத காரியத்தை முடிக்க முயன்று காலத்தை வியர்த்தமாக்குகிறார். "எலியையும் பூனையையும்" "ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும், "தவளையையும் பாம்பையும்" ஒரே பொழுதில் ஆதரிக்க முடியாது. முதலாளி, ஜமீன்தார், உயர் ஜாதிக்காரர்களைப் பூரணமாய் ஆமோதிக்கவும் காந்தியாருக்கு முடியவில்லை. அவர்களை எதிர்த்து உழைப்பாளிகளோடு சேர்ந்து கொள்ளவும் காந்தியாருக்குத் துணிச்சல் இல்லை. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார். வாலிபர்களே! சீர்திருத்தக் காந்தியின் மாய வலையிலிருந்து வெளிவந்து சமதர்மத் தொண்டாற்றுங்கள்.

(புரட்சி கட்டுரை 22.04.1934)

Pin It