தோழர் அமாநுல்லா ஆப்கானிஸ்தான் அரசராயிருந்த காலத்தில் அந்நாட்டு மக்களிடை இருந்து வந்த மூடபழக்க வழக்கங்களை அகற்றி நாட்டை முன்னேற்ற முயன்றார். அது முல்லாக்களுக்கும் வைதீகர்களுக்கும் பிடியாததால் அவர்கள் சதி செய்து அவரை நாட்டைவிட்டு ஓடும்படி செய்தார்கள். அதன்பின் தண்ணீர்க்காரன்மகன் பாட்சா சாக்கோ சில நாள் அரசைக் கைப்பற்றி அட்டகாசம் செய்தான். பிறகு அவனை தொலைத்து விட்டு மீண்டும் தோழர் அமாநுல்லாவை அமீர் ஆக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு ஜெனரல் நாதர்கான் பாட்சா சாக்கோவின் மீது படை எடுத்து சென்று வெற்றி பெற்றதும், அதன் பின் மாஜி அமீரை அழையாமல் தாமே ஆப்கானிஸ்தான் அரசராக முடி சூடிக்கொண்டதும் பத்திரிகை வாசகர்கள் எல்லாருக்கும் ஞாபகமிருக்கலாம்.

அப்படியிருக்க சென்ற 8-ந் தேதி மாலை 2-45மணிக்கு நாதர்ஷா தமது அரண்மனை அந்தப்புரத்திலிருந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு ஆப்கன் மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.King Amanullah Khanஇந்தக் கொலையைப் பற்றி “ராய்ட்டா” பிரதிநிதி அமாநுல்லாவைக் கண்டு பேசியதில் அவர் கூறியதாவது:-

என் சீர்திருத்த முறைகளை கைக்கொண்டு, நான் ஆப்கானிஸ்தானத்துக்கு திரும்ப வேண்டும் என்று ஆப்கன் ஜனங்கள் விரும்பினால் நான் திரும்பிச் சென்று எனது முழுபலத்துடனும் தேசத்துக்கு தொண்டு செய்ய தயாராக இருக்கிறேன்.

ஆப்கானிஸ்தானத்தில் நாதர்ஷாவின் ஆட்சி மிகவும் கண்டிக்கத்தக்கது - அது பயங்கர ஆட்சியாயிருந்தது, அவர் பற்பல சமூகங்களைச் சேர்ந்த அறிவாளிகள் பலரை படுகொலை செய்திருக்கிறார். எனவே, நாதர்ஷா ஒழிந்ததற்காக நான் சிறிது சந்தோஷமடையாமலிருக்க முடியாது. ஆயினும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவராயிருப்பதால் அவர் மரணம் எனக்கு பூரண சந்தோஷத்தை அளிக்க முடியாது.

நாதர்ஷா அவருடைய ஜனங்களுக்கு மாத்திரமல்ல, ஆப்கானிஸ்தானுக்கு பக்கத்திலுள்ள நாடுகளுக்கும் மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியவராக இருந்தார் என்று கூறினாராம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 12.11.1933)

Pin It