இன்று “இந்திய தேசீய துறையில் கோயில் நுழைவு பிரசாரத்திற்கும் ஒற்றுமை பிரசாரத்திற்கும்” தான் அதிக விளம்பரங்கள் காணப்படுகின்றன ஏனெனில் தோழர் ராம்சே மாக்டானால்டு அவர்களின் வகுப்புப் பிரச்சினை தீர்ப்புக்காக வென்று தோழர் காந்தியவர்களால் செய்யப்பட்ட பட்டினியின் பிரசாரம் பொது ஜனங்களின் மனதை கவரும் படி செய்து விட்டது. மற்றொரு புறம் வைசிராய் அவர்களின் அடக்குமுறை பெருவாரியான தேசபக்தர்கள் என்பவர்களுக்கு தேசீய வேலை செய்ய இடமில்லாமல் செய்து விட்டதால் எப்படியாவது ஒரு புதியத் துறையைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆகவே இவ்விரண்டின் பயன்களால் கோவில் நுழைவும் ஒற்றுமை மகநாடும் உச்சஸ்தானம் பெற்று விட்டன.

இக்காரியங்கள் இரண்டும் இன்று தேசீயத்திற்காகவே செய்யப் படுவதாய் கூறப்பட்டும், அந்தப்படி மக்களை நம்பும் படியும் செய்திருந்தா லும் நாம் அதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் தேசீயம் என்பதின் தத்துவம் எப்படி இருந்த போதிலும் இன்றையதினம் தேசீயத்திற்காக வென்று இவ்வளவு பாடுபடுகின்றவர்கள் தோழர் ராம்சே மாக்டனால்ட் தீர்ப்புக்கு முன் இவ்விஷயங்களில் இவ்வளவு பாடுபட்டிருந்தால் அதற்கு ஏதாவது ஓர் அர்த்தமுண்டு என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் வட்ட மேஜை மகா நாட்டில் “எல்லா வகுப்புகளுக்கும் நாங்கள் தான் பிரதிநிதிகள், எதைப் பற்றியும் பேச எங்களுக்குத் தான் உரிமை உண்டு. மற்றவர்களெல்லாம் சரியான பிரதிநிதிகள் அல்ல, சுயராஜ்யம் கொடுத்து விட்டால் வகுப்புத் தகராறுகள் எல்லாம் தானே தீர்ந்து விடும், வகுப்புத் தகராறுக்கெல்லாம் சர்க்காரரே காரணம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு எங்கள் உயிர் போனாலும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்க மாட்டோம்” என்பதாக வெல்லாம் சொல்லிய பின் சர்க்காரே பிரவேசித்து வகுப்புத் தகராறு விஷயத்தில் தங்கள் தீர்ப்புகளை ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து அந்த வகுப்பு மக்களை தங்கள் சுவாதீனம் செய்து கொண்ட பிறகு இப்போது அவர்களை தங்கள் பக்கம் இழுக்கக் கருதி சர்க்கார் கொடுத்ததைவிட தாங்கள் அதிகமாய் கொடுப்பதாகச் சொல்லுவது போல் பேசி சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டு கோவில் நுழைவைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் பேசினால் இதில் நாணையம் இருப்பதாய் யார்தான் நம்புவார்கள்.

periyar anna ki veeramaniஇதை இந்து சமூகம் செய்யும் இந்து மதப் பிரசாரம் என்று சொல்லாமல் பொது நல நன்மையான காரியம் என்று எப்படி சொல்ல முடியும்? ஏனெனில் தோழர் ராம்சே மாக்டனால்டின் தீர்ப்பானது தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதியின் மூலம் தனிப் பிரதிநிதித்து வம் கொடுத்ததானது அவர்களை (தாழ்த்தப்பட்ட மக்களை) நாளடைவில் இந்து சமூக அடிமை வாழ்விலிருந்து பிரித்து பொது சமூக வாழ்வில் ஒரு அளவு சுதந்திரர்களாக ஆக்கி விடுகிறது. அதாவது மக மதியர்களுக்கு சுமார் 20 வருஷங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட தனித் தொகுதியானது எப்படி மகமதிய சமூகத்தை இந்து சமூகத்திலிருந்து நிரந்தரமாய் பிரிந்து விட்டதோ அதுபோலவே இந்த தாழ்த்தப்பட்ட சமூகமும் தனித் தொகுதி பெற்றால் கண்டிப்பாய் அது இந்து சமூகத்திலிருந்து பிரிந்தே போய்விட்டதாகத்தான் முடியும். ஆனால் மகமதிய சமூகம் தனித் தொகுதி பெற்ற பின்புதான் அது தன் காலிலேயே நிற்கக் கூடிய ஒரு பலத்தையும் சௌகரியத்தையும் பெற்றது என்பது எவராலும் மறுக்க முடியாததாகும். அது போலவே தாழ்த்தப்பட்ட சமூகமும் தனித் தொகுதி பெற்று விட்டால் அடுத்த 10 வருஷ காலத்திற்குள் அது மற்ற எவருடைய உதவியையும் தயவையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நிற்கக் கூடிய பலத்தையும் சௌகரியத்தையும் பெற்று விடும் என்பதில் சிறிதும் சந்தேகிக்க இடமில்லை.

இவ்விரு சமூகமும் அதாவது மகமதிய சமூகமும், தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகமும் சமூகவாழ்வில் சுதந்திரம் பெற்று மற்றவர்களுடைய தயவும், பிச்சையும் அவசியமில்லாமல் தங்கள் தங்கள் கால்களிலேயே நிற்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டால் இந்து சமூகம் என்பதானது இன்று சொல்லிக் கொள்வது போல இந்தியாவில் “ஒரு பெரிய பலம் பொருந்திய சமூகம்” என்பதாகச் சொல்லிக் கொள்ள இடமில்லாமல் போவதோடு மகமதிய சமூகமும் தாழ்த்தப்பட்ட சமூகமும் அதனதன் சமூகக் கொள்கையின் பயனாகக் கலந்து கொள்ள ஒன்றுக் கொன்று அன்னியோன்னியம் ஏற்பட்டு விட நேரும் போது இந்து சமூகம் சிறுபான்மை சமூகம் என்று சொல்லும் படியான நிலைமைக்கும் பரிகசிக்கத் தக்க நிலைமைக்கும் வந்து விடும். அதோடு மாத்திரமல்லாமல் இந்து சமூகத்தில் இருக்கின்ற காரணத்தில் இன்னும் எந்தெந்த உள் சமூகங்கள் சமூக வாழ்வில் சுதந்திரமும் சமத்து வமும் அற்று இழிவுபடுத்தப் படுகின்றனவோ அவையெல்லாம் இப்படியே வெளிக் கிளம்பவும் நேரிட்டு விடும். அப்போது இந்து சமூகம் என்பது தானாகவே அழுவாரற்ற பிணமாய் ஒழிந்து விடும். இந்தக் காரணங்களா லேயே மக்களுக்கு சமூக வாழ்வில் சமத்துவமும், சுதந்திரமும் இல்லா விட்டாலுங்கூட இந்து சமூகம் மேன்மையாய் இருந்து ஆதிக்கம் செலுத்து வதை மாத்திரம் விட்டு விடக் கூடாது என்கின்ற இந்து சமூகத் தலைவர்கள் என்பவர்களின் எண்ணமே இந்த ஒற்றுமை மகாநாடுகளுக்கும், கோவில் நுழைவுக்கும் அஸ்திவாரமாய் இருந்து வருகின்றது.

தோழர் ராம்சே மாக்டனால்டின் வகுப்புதீர்ப்பு ஒழிந்து தனித் தொகுதி மாறி, பொதுத் தொகுதி நிலை நின்று அரசியலிலும் இந்து சமூகத்திற்கே ஆதிக்கம் வந்து விட்டது என்று ஆனவுடன் “கோவில் நுழைவு சுயராஜ்ஜியம் கிடைத்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும்” “ஒற்றுமை என்பது சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு தானாகவே ஏற்பட்டு விடும்” என்றும் தாராளமாய் சொல்லப்பட்டு விடும். பிறகு ‘பழய குருடி கதவை திரடி’ என்கின்ற நிலைமை ஏற்படுவதில் சந்தேகமிருக்க நியாயமில்லை.

தவிரவும் இந்த கோவில்களுக்கு செல்வாக்குகள் இருந்த காலத்தில் கோவில் நுழைவைப் பற்றி பேசுவது பெருத்த அபவாதமாகவும், மதத் துரோகமாகவும், கலகாஸ்பதமாகவும் இருந்து வந்தது. இன்றை தினம் உலகத்தில் கோவில்களுக்கு மதிப்பு குறைந்து சில தேசங்களில் கோவிலுக்கு போவது முட்டாள் தனம் என்று கருதப்பட்டும் சில தேசங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டும் போனபின்பும் நமது நாட்டிலும் கோவில்களின் புரட்டுகள் வெளியாகி அவற்றின் மதிப்பு குறைந்து அதன் பேரால் உயர் நிலையில் இருப்பவர்களுடையவும், வயிற்றுப் பிழைப்பு மதக் காரர்களுடையவும் யோக்கியதை வெளியாகி அவர்கள் மக்களால் வெறுக்கப்பட ஆரம்பித்த பிறகே தான் இப்போது கோவில் நுழைவு இவ்வளவு முக்கியஸ்தானம் பெற்று விட்டது.

கோவில் நுழைவு வெற்றி பெற்றால் இந்து சமூகம் சிறிது பலப்படும் என்றும் இன்னும் கொஞ்சகாலத்திற்காவது அதற்கு அழிவு வராமல் காப்பாற்றலாம் என்றுமே இப்போது கோவில் நுழைவுக்காரர்கள் கருதி வேலை செய்கிறார்களே யொழிய “சர்வ சமரச கடவுளின்” தரிசனத்தையும் அருளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்பதாக ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டதற்காக அல்ல என்பதை சிறிது யோசனை உள்ளவர்களும் உணர்ந்து விடக் கூடும். அன்றியும் பகுத்தறிவையும் சம சுதந்திர நோக்கத் தையும் கொண்டு இப்போது கோவில் நுழைவுக்கு ஆதரவு தேட எவரும் வரவில்லை யென்பதும் கோவில் நுழைவு பிரசாரத்தின் உபன்யாசங்களையும் எடுத்துக் காட்டும் ஆதாரங்களையும் பார்த்தால் நன்றாய்விளங்கும் மற்றெதற்கென்றால் “மதத்தில் மத சாஸ்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவை ஆட்சேபிக்க இடமில்லை” என்றுதான் சொல்லப் படுகின்றது. ஆகவே மதத்தில் மதசாஸ்திரத்தில் ஆட்சேபனை இருந்தால் அவர்கள் கதி என்ன ஆவது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தையும் மத சாஸ்திரத்தையும் பற்றி பேசி அடைகின்ற ஆதரவு நாணையமான தென்றோ, நிலைக்கக் கூடியதென்றோ நாம் ஒருக்காலும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் “இந்து மதத்தில்” ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பது சுலபத்தில் முடிவு கட்டக் கூடிய காரியமல்ல. ஏனெனில் இந்து மதம் என்று ஒரு மத முண்டா? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சாஸ்திரமோ ஆதாரமோ உண்டா என்பது போன்ற விஷயங்களும் விவகாரங்களும் யாவரும் அறிந்ததே யாகும். ஆனால் ஒரு சிலரின் நன்மைக்கு ஏற்ற விதமாக மாத்திரம் சௌகரியத் துக்கு தக்கபடி சமயத்திற்குத் தகுந்தபடி ஆதாரங்கள் தேடலாம், வியாக்கி யானங்கள் செய்து கொள்ளலாம் என்கின்ற சௌகரியம் மாத்திரம் இந்து மதம் என்னும் பேரால் இருந்து வருகின்றது. இந்த சௌகரியமும் சந்தர்ப்பமும் தீர்ந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் ஆதாரம் கிடைக்கக் கூடும். எப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் செய்யலாம். ஆதலால் இந்த ஆதரவைக் கொண்டு கோயிலுக்குள் நுழைய விடுவது என்பது ஆபத்தானது என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் இருத்தல் வேண்டும்.

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்திற்கு அஸ்திவாரமாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். பொருளாதார வித்தியாச தத்துவத்திற்கு ஆதாரமாய் இருப்பது மதமேயாகும். இந்த இரண்டும் இருக்கிற வரை ஒற்றுமைக் குறைவும், தீண்டாமைத் தன்மையும் ஏதாவது ஒரு வேஷத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசமானது. ஏதோ முட்டாள் தனத்தினால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லுவது ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது. மற்றென்னவெனில் அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன்ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத் தனத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற்கே சாஸ்திர ஆதாரங்களும் மதக் கோட்பாடுகளும் ஏற்படுத்தப் பட்டவைகளாகும். அன்றியும் இன்றையத் தினம் நமது நாட்டில் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் செய்யும் கொடுமையின் பயனெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிதும் பொருளாதாரக் கொடுமையை விளைவிப்பதல்லாமல் மற்றபடி “கடவுள் தரிசனமும் மோட்ச சாதனமும்” கிடைக்காமலிருப்பதல்ல. அப்படிப்பட்ட, அதாவது பொருளாதாரத் துறையில் கொடுமை படுத்தப்பட்ட மக்களுக்கு கோவில் களில் உள்ள கடவுள் தரிசனத்தால் என்ன பயன் கிடைக்கக் கூடும்? ஏதோ அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த சிறிது பொருளையும் கோவிலுக்கு கொண்டு போய் கடவுள் தரிசனை என்னும் பேரால் தொலைத்து விட்டு அடிமைத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் பெற நேரிடுவதைத் தவிர வேறு என்ன லாபம் அடையக் கூடும்? ஆகவே இந்த கோவில் நுழைவுப் பிரசாரம் இப்போது கடவுள் பிரசாரத்துக்கும், மத பிரசாரத்துக்கும், சாஸ்திர புராண பிரசாரத்துக்கும்தான் அஸ்திவாரமாகப் பயன்படுகிறது. என்பதே நமது அபிப்பிராயம்.

நம்மைப் பொருத்தவரை நாம் “கோவில் பிரவேசம்” என்பதற்கு அனுகூலமாகத் தான் இருக்கின்றோம். எதற்காக என்றால் உயர்வு தாழ்வு மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை, கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும் அவற்றை அனுபவத்தில் நடத்தவும் நிலைநிறுத்தவும் ஏற்பட்ட பல சூழ்ச்சி ஸ்தாபனங்களில் கோவில் பிரவேசத்தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப் பட்டிருக்கும் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்பதாகத்தான் கருதி இருக்கிறோம். ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில் நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப் பட வேண்டியது அவசியமாகும். ஆனால் அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்காவென்றும் சொல்வதையும் அதன் பேரால் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளை பிரசாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப்ப தையும் கண்டிக்காமல் இருப்பதற்கில்லை. ஒற்றுமை என்னும் விஷயத்திலும் மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமூகத்திற்கு உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. “சுய ராஜ்யம்” என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு விடாது.

உதாரணமாக இன்றைய தினம் துருக்கியும் “சுயராஜ்யம்” பெற்ற நாடு, கிரீஸ் தேசமும் “சுயராஜ்யம்” பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தால் கிரீசில் இருந்த இஸ்லாமியர்கள் பத்து லக்ஷக்கணக் காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள். துருக்கியிலிருந்து கிறிஸ்தவர்கள் பத்து லக்ஷக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால் இதற்கு சமா தானம் “அவர்கள் துரத்தப்பட வில்லை. தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு ஓடி விட்டார்கள்” என்று சொல்லக் கூடும். எப்படி யிருந்தாலும் அபிப்பிராய பேத மேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும் படியாய் ஏற்பட்டு இன்று சாப்பாட்டிற்கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மற்றும் சில “சுயராஜ்ய” நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புராட்டாஸ்டெண்டுகளுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டு பல கொடுமைகள் அடைந்து வருகிறார்கள். இவற்றிற்கெல்லாம் அன்னிய ஆட்சி இருந்து கலகங்களையும் அபிப்பிராய பேதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தென்றே சொல்லி விட முடியாது.

ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானாலும் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக் கும் சமத்துவம் இருக்கும் படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்ய பட்டாலொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்பட கூடியதில்லை என்றே சொல்லுவோம்.

எனவே அதை விட்டு விட்டு ஒற்றுமை மகாநாடுகளுக்கும் கோவில் நுழைவு பிரசாரமும் செய்வது முற்கூறிய படி இந்து மதப் பிரசாரமும் சாஸ்திரப் புராணப் பிரசாரமும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம் மாதிரி பிரசாரங்களால் நாட்டிற்கோ, மனித சமூகத்திற்கோ ஒரு நன்மையையும் செய்து விடமுடியாது. இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள அதிகாரம் பதவி பட்டம் செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில மக்களை திருப்தி செய்யலாம். அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை ஏமாற்றி அடக்கி வைக்கலாம். இவ்வளவு தானே ஒழிய சமூக சமத்துவத்தையோ சமூக ஒற்றுமையையோ பொருளாதார சமத்துவத்தையோ நிலை நிருத்தி விட முடியாது.

அரசாங்கத்தாரும் தங்கள் சுய நலத்தை உத்தேசித்து இந்த தந்திரங்களுக்கு உடந்தையாயிருந்து தங்களது இரட்டைப் பங்குக்கு மோச மில்லாமல் நடந்து கொள்ளலாம். அரசாங்க கொள்கையெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழைத் தொழிலாளிகளும் கிளர்ச்சி செய்யும் போது ‘படித்தக் கூட்டத்தையும் பணக்காரர்களையும் ஆதரிப்பதற்கும் காப்பாற்றுவதற்குமே தாங்கள் இங்கு இருக்க வேண்டியதாய் இருக்கிறது’ என்று சொல்லுவதும், படித்த மக்களும் பணக்காரர்களும் கிளர்ச்சி செய்யும் போது “பாமர மக்களின் நன்மைக்காக தாங்கள் இருக்க வேண்டியதாயிருக்கிறது” என்று சொல்லுவது மான தந்திரங்களை அனுசரித்தே ஆட்சி நடத்த வேண்டியவர்கள் ஆகி விட்டதால் அவர்கள் யாருக்கு எவ்வளவு பங்கு எதில் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதித்து தங்கள் பங்கை பெருக்கிக் கொண்டு வருகிறார்கள்.

எனவே தேசீயமும், ஒற்றுமையும், அரசாங்கமும், சீர்திருத்தமும் பொருளாதாரத்திலும் சமூக வாழ்விலும் சமத்துவமில்லாமல் இழிவு படுத்தப்பட்ட மக்களை அந்நிலையிலேயே நிலை நிறுத்தி மேல் நிலையில் இருந்து வாழக்கருதும் சோம்பேறிகளுடையவும் செல்வவான்களுடையவும் அரசாங்கங்களுடையவும் சூட்சிகளேயாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 20.11.1932)

Pin It