தஞ்சை மாவட்டத்தில் கீரனூர் அருகில் பாலூர் எனும் நகரம். அங்கு 1883ஆம் ஆண்டில் இசை வேளாளர் குடும்பத்தில் ஏழ்மை நிலையில் கிருட்டிண சாமி-சின்னம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவ்வூராரால், இந்தக் குடும்பத்தைப் பரவை நாச்சியார் குடும்பம் என அறியப்பட்டனர். கிருட்டிணசாமிக்கு இரண்டு சகோதரிகள். அக்கால வழக்கப்படியும், அவர் கள் குல மரபுப் படியும் பெண் வாரிசுகளைப் ‘பொட்டு’க் கட்டி தாசிகளாக்கப்படுவது வழக்கம். அடுத்த தலை முறைக்கும் பெண் வாரிசு தேவைப்பட்டது. ஆனால் கிருட்டிணசாமியின் சகோதரிகளுக்குக் குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால், தமையனின் மகளைத் தத்து எடுத்து ‘பொட்டு’க் கட்டித் தாசியாக்க எண்ணி சகோத ரனைக் கேட்ட போது, அவர் மறுத்துவிட்டார். எனவே அவரை வீட்டை விட்டே விலக்கி வைத்தனர்.

moovalur ramamiruthamகிருட்டிணசாமியும் தனது மனைவி மகளுடன் வறுமையில் வாடினார். இந்த நிலையில், அவர் ஊரை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையின் பிடியில் சிக்கிய சின்னம்மாள் தனது தாய் வீட்டுக்கே சென்று வாழ்ந்து வந்தாள்.

ஆண்டுகள் ஐந்து ஆகின. காலப்போக்கில் சின்னம் மாளின் தாயாரும் இறந்துவிடவே சின்னம்மாள் நிலைமை இன்னும் சிக்கலாகிப் போனது. சென்னையிலிருந்து சின்னம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கிருட்டிண சாமி எழுதியுள்ளார், தாம் ஒரு வீட்டில் வேலை செய்வ தாகவும், அங்கு ஏதும் சம்பளம் இல்லை என்றும் மூன்று வேளை உணவு மட்டும் கிடைப்பதாகவும் சொல்லி யிருந்தார். அதைக்கண்ட சின்னம்மாள் தானும் அங்கு வருவதாகக் கடிதம் எழுதினார். ஆனால் சென்னைக் குப் போகப் பணம் வேண்டுமே! என்னசெய்வது?

சின்னம்மாள் தனது ஐந்து வயதான குழந்தையை ஆச்சிக்கண்ணு எனும் தாசியிடம் ஒரு பத்து ரூபாய்க் கும், பழைய புடவைக்குமாக, தமது மனதைக் கல் லாக்கிக் கொண்டு விற்றுவிட்டாள். அவளது எண்ண மெல்லாம் தம் குழந்தையாவது வயிறாரச் சாப்பிட்டு வசதியாக வாழட்டுமே என்பது மட்டும்தான்.

ஆச்சிக்கண்ணு என்ற தாசிப்பெண் அக்குழந்தைக்கு ஆடல், பாடல், நடனம், தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தாள். குழந்தையும் ஆர்வ மிகுதியால் வேறு சிந்தனையின்றி அனைத் தையும் கற்றுக்கொண்டாள்.

பின்னர் அந்தக் குழந்தைக்கு ‘தண்டியம்’ பிடிக்கும் சடங்கு நிறைவேற்றப்பட்டது. குழந்தைக்குப் பொருள் புரியா வயதில் தண்டியம் பிடித்து, காலில் சலங்கை கட்டப்பட்டது.

குழந்தை, பருவப்பெண்ணாக வளர்ந்தாள். வயதோ பதினேழு ஆனது. கோயிலில் ‘பொட்டு’க் கட்டும் முயற் சியும் செய்யப்பட்டது. வளர்ப்புத் தாயான தாசி ஆச்சிக் கண்ணும் பஞ்சாயத்தாரிடம் விண்ணப்பம் கொடுக்க, கோயில் பணியாளர்களும் ஏனைய கோயில் தாசி களிடமும் முறைப்படி தெரிவித்தனர். கோயில் தாசிகள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆச்சிக்கண்ணு வின் வளர்ப்பு மகள் என்பதால் பொட்டுக்கட்ட அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். அந்தப் பருவப் பெண்ணும் பெரிய கொடுமையில் இருந்து தப்பித்தார்.

உடனே வேறு ஒரு கொடுமையைச் சந்திக்க நேர்ந்தது. 65 வயது பணக்காரருக்கு அந்த இளம் பெண்ணை மணம் முடிக்கப் பார்த்தனர். கொதித்தெழுந்த அந்தப் பெண் தனக்கு இசை ஆசிரியராக இருந்த சுயம்புபிள்ளை என்பவரைத் திருமணம் செய்ய முடிவு செய்தாள். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் நிகழ்ந்தது. வழுவூர் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி இருவரும் ஒருவரையொருவர் பிரிவதில்லை என்று உறுதிமொழி ஏற்று விளக்கை அணைத்தனர். இதுவே அக்காலத் தில் நடைபெற்ற முழுப் புரட்சித் திருமணமாகும். தாசித் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவே வளர்க் கப்பட்ட பெண், சம்பிரதாயங்களை மீறி ஒருவரை மணந்து கொண்டது அக்காலத்தில் பெரிய புரட்சியாகவே கருதப்பட்டது.

அந்தப் பெண்தான் பிற்காலத்தில் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துத் தாமே தலைமையேற்று பல புரட்சித் திருமணங்களை நடத்தி வைத்து வரலாறு படைத்திட்ட, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

27.03.1933ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த முதலாவது செங்குந்தர் சமூக சீர்திருத்த மாநாட்டில் அம்மையார் தனது புரட்சிகரமான கருத்துகளை எடுத்துக்கூற நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவரின் விறுவிறுப்பான பரப்புரைகளினால் தேவதாசி ஒழிப்பு என்பது சுயமரியாதை இயக்க உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே “பொட்டு அறுக்கும் சங்கங்கள்” பலவற்றை ஏற்படுத்தி, தேவதாசி முறையிலிருந்து பெண்களை விடுவித்து வந்தனர். இராமாமிர்தம் அம்மையார் இவ்வாறு விடுதலை பெற்ற பெண்களிடம் இனிமேல் எதிர்காலத்தில் அத்தகைய தொழிலில் ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழியும் பெற்றார்.

தந்தை பெரியாருடன் இணைந்து பொதுத் தொண்டில் ஈடுபட்ட இராமாமிர்தம் அம்மையார், தம்மிடம் இருந்த ஐந்து வேலி நிலத்தையும் விற்று நலப்பணிகளுக்கே செலவிட்டார்.1938ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘இந்தித் திணிப்பு’ எதிர்ப்புப் போராட்டம் திராவிடர் கழக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். 1938ஆம் ஆண்டு ஆகத்து முதல் தேதி திருச்சியில் தொடங்கி, சென்னை வரை 35 நாள்கள் (இந்தி எதிர்ப்புப் பரப்புரைப்) பேரணி நடத்தப்பட்டது. இதில் 577 மைல்கள் நடந்தது டன் பேரணியில் ஆங் காங்கே சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் பங்கேற்ற ஒரே பெண்மணி 60 வயதைக் கடந்த இராமாமிர்தம் அம்மையார்தான். வழிநெடுகி லும் 87 பொதுக்கூட்டங்களில் கனல் பறக்கப் பேசி யுள்ளார். இவரின் தமிழார்வத்தினைக் கண்டு தமிழ் ஆர்வலர்கள் பலர் வெகுவாகப் பாராட்டினர்.

1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள் பிற் பகலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் மீனாம் பாள் சிவராஜ் தமிழ்க்கொடியை உயர்த்தினார். மறை மலையடிகளின் மகள் நீலாம்பிகையின் தலைமை யில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அதில் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியத் தீர்மானம் ஒன்று உண்டு. “ஈ.வெ.ரா.” என்ற பெயருடன் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயர் (சேர்த்து) வழங்கப்பட வேண்டும் என்பதே அத்தீர்மானமாகும். இன்று நாம் எல்லாம் ஈ.வெ.ரா.வை அன்போடு ‘பெரியார்’ என்று குறிப்பிடு கிறோம் என்றால், அது மூவலூர் இராமாமிர்தம் அம்மை யாரின் பெரும் முயற்சியால்தான் என்பதை யாரும் மறக்க முடியாது.

1917ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இவர் தேவதாசி முறையை எதிர்த்துத் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். ஊர் நடுவே நின்று எரிமலையாக வெடித்துப் பேசி உணர்வுப்பூர்வமாகப் பரப்புரை செய்தார். தேவதாசிப் பெண்களிடம் நேரில் சென்று தங்களது இழிவான வாழ்க்கை முறையிலிருந்து விடுபடும்படி கேட்டுக் கொண்டார்.

1925ஆம் ஆண்டு மாயவரத்தில் நடந்த மாநாட்டில் தேவதாசிகள் பலரை அழைத்து அவர்கள் கடவுளுக் கென்று கட்டிய ‘பொட்டு’களை அறுத்து எறிந்தார். அந்த மேடையிலேயே திருமணங்கள் நடத்தி வைத்து, பல பெண்களின் வாழ்க்கையில் விடிவெள்ளியாக விளங்கி னார். அவரது தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத் தைப் பாராட்டி, காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதினார். அதில் “ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணே இவ்வாறு தமது சமூகத்தின் இழிநிலையை எதிர்த்துப் போராடத் தலைப்பட்டது என்னை மிகவும் கவர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராமாமிர்தம் அம்மையார் தாம் நடத்திய மேடை நாடகங்களில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான வசனங்களை அமைத்து அரங்கேற்றினார். மூடநம்பிக் கையில் பற்றுடைய சில பிற்போக்குவாதிகள் மேடை ஏறி அம்மையாரின் கூந்தலை அரிந்து எடுத்துவிட்ட னர். ஆனால் இந்நிகழ்ச்சியால் சிறிதும் அஞ்சாத இவர் முன்பைவிட வேகமாக இப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஒருமுறை அம்மையார் அவர்கள் ஒமாம்புலியூரில் ஒரு இசை வேளாளப் பெண்மணி வீட்டில் சிலநாள் தங்க நேர்ந்தது. ஒருநாள் அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சிலரோடு பேசிக் கொண்டிருந்த போது, அந்த வீட்டு அம்மாள் இவருக்கு குடிக்க பால் கொடுத்தார். அதைக்குடிக்க வாயில் ஊற்றியவுடன் நெருப்பு போல சுட்டதால் உடனே அதைத் துப்பி விட்டார். எனினும் உடனே இவருக்கு முகமெல்லாம் வீங்கி, நாக்கு தொங்கி விட்டது. பாலைப் பரிசோதித்த இவரின் நண்பர்கள், பாலில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அப்பெண்ணை அம்மையார் காவல் துறையிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். யாருக்காக இவர் போராடுகிறார் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாத பிற்போக்கு சமுதாயமாக அச்சமூகம் இருந்திருக்கிறது.

இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைத் தாம் சந்தித்தது இருவருக்குமே மிக்க மகிழ்ச்சி என்றும், தாசிப் பெண்களை ‘வனஜாக்ஷி காலேஜ்’ என்ற கல்லூரியில் படிக்க வைக்கவும் முத்துலட்சுமி ரெட்டி உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பாடுபட்டபோது அவருக்காக ஆதரவு திரட்டியவர் இராமாமிர்தம் அம்மையார்.

1929ஆம் ஆண்டு அறநிலையத் துறைச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டு, கோயில்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக வழங் கப்பட்ட நிலங்களை எந்தவித நிபந்தனையுமின்றி அவர்களுக்கே கொடுத்துவிடவும் வழிவகை செய்யப் பட்டது.

இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையி லிருந்து தாம் மீட்ட பெண்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு ஏற்ற வகையில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய ‘அவ்வை இல்லம்’ திகழ்ந்தது. எங் காவது தேவதாசிகள் இருப்பது தெரிந்தால், அவர்களு டன் எப்படியாவது பழகி அவர்களின் வீட்டுக்குச் செல் வார். அங்கு இளம் பெண்களை தேவதாசிகளாக்க முயல்வது தெரிய வந்தால் அப்பெண்களுடன் இரகசிய மாகப் பேசி, பின்னர் அப்பெண்களை இரவில் வீட்டை விட்டு வெளியேறும்படிச் செய்வார். முன்னதாகவே காவல் துறையில் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின்கீழ் புகார் செய்துவிடுவார். அதன்பிறகு அவர்களுக்குத் தகுந்த மாப்பிள்ளை பார்த்துத் திருமணமும் செய்து வைப்பார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டனர். ஒரே மகன் செல்லப்பாவுடன் இறுதி வரை வாழ்ந்தார். இவர் பதவிக்கோ பாராட்டுதலுக்கோ, பொன் பொருளுக்கோ ஒருநாளும் ஆசைப்பட்டது இல்லை. இவரது நினை வைப் போற்றும் விதமாக 1989ஆம் ஆண்டு முதல் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் ரூ.5000/-த்தைத் தமிழக அரசு அறி வித்தது. அதன் பின் அடுத்தடுத்து வந்த அரசுகளால் உதை உயர்த்தி, இன்று ரூ.50,000/-மாக அளிக்கப்படுகிறது.

கலைகளில் தேர்ந்த பயிற்சி, பன்மொழி ஆளுமைத் திறன், தேர்ந்த அறிவு, தெளிந்த சிந்தனை, அநீதியை எதிர்க்கும் ஆவேசம், பெண்ணினத்தை மீட்டு ஆண் களுக்குச் சமமாகச் சமுதாயத்தில் வாழ வைக்க வேண் டும் என்ற அயராத உழைப்பு, தள்ளாத வயதிலும் தளராத நடை, தன்னம்பிக்கை இவற்றின் மொத்த உருவமாக நம்மிடையே வாழ்ந்த இராமாமிர்தம் அம்மையார் 26.06.1962ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்த தூய்மையான மாபெரும் தலைவி யின் தொண்டால், பெண்களின் வாழ்வில் புரட்சி உண்டாக்கிய அந்த மாதரசியை என்றும் நினைவில் கொள்வோமாக!

(- பேராசிரியர் பானுமதி தருமராசன்: “தமிழ் இலெமுரியா”, சூலை 15, 2016)

Pin It