திரு. வேதாசலம் அவர்கள் சென்னை பாலசுப்பரமணிய பக்த சபை ஆண்டு விழாவில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும், திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கரைப் பற்றியும் வசை மொழிகளும் கடுமொழிகளும் மொழிந்ததாகவும், அதுபற்றி அதுசமயம் அங்கு வரநேர்ந்த திருவாளர்கள் கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ராமநாதன் ஆகியோர்களுக்கும் திரு. வேதாசலம் அவர்களுக்கும் வாக்குவாதப் போர் நடந்ததாகவும் “திராவிடன்” முதலிய பத்திரிகைகளில் காணப்பட்டதோடு பல நிரூபர்களும் நமக்கு எழுதி வந்தார்கள்.

periyar and maniyammai 670ஆகிலும் திரு. வேதாசலம் அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால் பத்திரிகைகளிலும், நிரூபங்களிலும் கண்டவற்றிற்கு சமாதானம் எழுதுவது என்பது நமக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. ஏனெனில், முதலாவது, இவ்வளவு மோசமாக அவர் பேசியிருப்பாரா என்பது. இரண்டாவது, அப்படியே பேசி இருக்கலாமென்றாலும் அது அவர் மனதாரப் பேசியதாக இருக்காது என்பதும், மற்றபடி ஏதோ சமய சந்தர்ப்பங்கள் இம்மாதிரி பேச வேண்டிய நிலைக்கு அவரை கொண்டு வந்து விட்டிருக்கலாம் என்றும் கருதியதோடு, இதை அனுசரித்து திரு. வேதாசலம் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதை ஆதாரமாக வைத்தே அவ்விஷயங்களை நழுவ விட்டு விடலாம் என்றும் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அது போலவே திரு. வேதாசலம் அவர்களுக்கும் நமக்கும் பொதுவான இரண்டொரு நண்பர்கள், நாம் மேலே நினைத்த இரண்டு விதமாகத்தான் விஷயம் நடந்ததென்றும், அதற்காக திரு. வேதாசலம் அவர்கள்கூட சற்று வருத்தப்பட்டாரென்றும், எப்படி இருந்தாலும் இனி அதைப் பற்றி கிளராமல் அப்படியே விட்டு விடுவது எல்லோருக்கும் நன்மை பயப்பது என்றும் சொன்னார்கள். அதை ஆதாரமாய் வைத்து ஒரு சிறு குறிப்புடன் அவ் விஷயத்தை முடித்து விடலாம் என்றே இருந்தோம்.

ஆனால் அடுத்த ஒன்று, இரண்டு வாரம் திரு. வேதாசலம் அவர்களின் சிஷ்யர்கள் பெயரால் பல துண்டுப் பிரசுரங்கள் திரு. வேதாசலம் அவர்கள் பேசியதாகக் காணப்பட்டவைகளை மறுக்கின்றது போலவும் மற்றும் சில துவேஷங் கொண்ட வார்த்தைகளுடனும் வெளியாக்கப் பட்டன. மற்றும் சிற்சில இடங்களில் அவர் பேசியது போலவே நமது இயக்கத்தை தாக்கியும், விஷமப் பிரசாரங்கள் செய்யப்பட்டும் வந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் நாம் எவ்வித சமாதானமும் சொல்லாமல் ஒளிந்து கொள்ளுவது சரி அல்ல என்று தோன்றியதுடன் நமது நண்பர்கள் பலரும் தூண்டியதுடன் பல நிரூபங்களும் வந்த வண்ணமாய் இருந்தன.

இந்நிலையில் நாம் ஏதாவது சமாதானம் எழுதித் தீர வேண்டியதாகவே ஏற்பட்டு விட்டது. ஆனாலும் எழுத மனமும் இசையவில்லை, கையும் ஓடவில்லை.

ஏனெனில் நமக்கு அவரது பெயரைக் கேட்க நேரிட்ட சமயம் முதலே அவரிடம் (காரணம் சொல்ல முடியாது) ஒருவித விஸ்வாசம் ஏற்பட்டதுடன், நமது நண்பர்களிடம் அவரைப் பற்றி பேச நேர்ந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் நமது உணர்ச்சிகளுக்கும், கொள்கைகளுக்கும் அவர் ஒரு உற்ற துணைவராயும் பின்பலமாகவும் இருக்கின்றார் என்பதாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதுமாகவே இருந்து வந்ததால், இச்சமயம் யாராவது மத்தியில் அவரது மனதை விஷப்படுத்தி இருக்கலாமோ என்கின்ற எண்ணம் தோன்றியதனால்தான் மறுபடியும் ஒருமுறை “திரு. வேதாசலம் அவர்களின் சமாதானம் வரவில்லை; ஆதலால் அடுத்த வாரம் எழுதப்படும்” என்று எழுதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

பிறகு சென்ற வாரம் ஒரு சமாதானக் கடிதம் நண்பர் திரு. விஸ்வநாதம்பிள்ளை அவர்கள் மூலமாய் திரு. வேதாசலம் அவர்கள் எழுதி அனுப்பியது கிடைத்தது. அதில் எழுதப் பட்டிருந்தது என்ன என்பது பற்றிக் கூட நாம் கவனிக்க இஷ்டப் படவில்லை. தவிர அவர் எப்படி எழுத வேண்டும் என்றுகூட நாம் நினைத்ததும் கிடையாது. ஏனெனில் ஏதாவது ஒரு வழியில் அச்சம்பவத்தை மறக்க வேண்டும் என்கின்ற கவலையே ஒழிய வேறில்லை. அக்கடிதமானது நண்பர் திரு. விஸ்வநாதப் பிள்ளை அவர்களால் தப்பாய் வினியோகிக்கப்பட்டதால் அது “திராவிடன்” பத்திராதிபரிடம் போகவும், அவர் அதை “மன்னிப்புக் கடிதம்” என்கின்றதாக பெயர் கொடுத்து பிரசுரிக்கவும் நேர்ந்தது நமக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும், அதன் குற்றத்தையும் நாமே ஏற்றுக் கொள்ளுகின்றோம். ஏனெனில் ஒரு விஷயத்தில் நமது நண்பர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான பொறுப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நண்பர்களிடம் பழகுவது எப்போதும் சரியாகவே இருப்பதில்லை. ஆதலால் அக் குற்றத்திற்கு நாம் பொறுப்பாளி ஆவதுடன் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இனிமேலாவது நமது நண்பர்களும் துணைவர்களும் இம்மாதிரி நடந்து கொள்ளாமல் இருப்பதற்காக நாம் விலை கொடுப்பதின் பொருட்டு நம்மையே நாம் தண்டித்துக் கொள்ளக் கருதி “திராவிடன்” பத்திரிகையில் “மறைமலை அடிகள் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்கின்ற வார்த்தை காணப்பட்டதற்காக நாம் நிபந்தனையில்லாமல் திரு வேதாசலம் அவர்களை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அன்றியும், அக்கடிதத்தில் அவ்வளவு கூட இல்லாமல் இன்னமும் எவ்வளவு சாதாரணமாய் எழுதியிருந்தாலும் கூட அதை ஒரு சாக்காகக் கொண்டே அவர் பேசியதைப் பற்றிய விவகாரத்தை நிறுத்தியே யிருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மற்றபடி அபிப்பிராய பேதத்தைப் பற்றிய விஷயத்தில் அவர் எவ்வளவு இணங்கி வருவதாயினும் நாம் நமது கொள்கையிலோ அபிப்பிராயத்திலோ ஒரு சிறிதளவு கூட விட்டுக் கொடுக்கவோ, திரு வேதாசலத்தினுடையவோ அல்லது வேறு யாருடையவோ நட்பைக் கருதியானாலும் கடுகளவு மாற்றிக் கொள்ளவோ நாம் சிறிதும் தயாராயில்லை. ஏனெனில் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களின் உழைப்புகள் பலன் தராததற்கு காரணமே இவ்விட்டுக் கொடுக்கும் தன்மையும் தாக்ஷண்ணியமும் ராஜதந்திரச் செய்கையும்தான் என்பது நமது முடிவு.

இன்று கூட நமது இயக்கத்தின் எதிரிகளும் சில சுயநலக்காரர்களும் “மகாத்மா காந்தி இப்படியா சொன்னார்”, “சுவாமி விவேகாநந்தர் அப்படியா சொன்னார்”, “திருவள்ளுவரை விடவா இவர்கள் புத்திசாலிகள்?”, “பெரிய புராணத்திற்கும் கம்ப ராமாயணத்திற்கும் மேலாகவா இவர்கள் தத்துவம் இருக்கின்றது?” என்கின்றது போன்ற பல சமாதானங்களையும் பாட்டி கதைகளையும் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம்; கேட்கின்றோம். ஆனாலும் இப்படி சொல்லப் படுபவைகள் ஏமாற்ற உபயோகப் படுகின்றனவேயன்றி காரியத்தில் ஏதாவது பலனுண்டா என்று கேட்கின்றோம்.

ஜாக்கிரதையாகவும், ராஜதந்திரமாகவும் பேசியதால் பார்ப்பனர்கள் தயவு சற்று கிடைத்தது. அதனால் பெரியோர்கள் என்றும் பூசிக்கத் தக்கவர்கள் என்றும் சொல்லிக் கொள்ள நேர்ந்தது. அவர்களுக்கு சரித்திரங்களும் படங்களும் உலவுகின்றன. ஆனால் மக்கள் உண்மை அறிந்து கொள்ள முடியாமல் “பெருமாள் பெத்த பெருமாளானது” போல் “மகாத்மா காந்தியும் சுவாமி விவேகாநந்தரும் கூட பார்ப்பனர்களையும் புராணங்களையும் புகழ்ந்து பேசியிருக்கின்றார்கள்; அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று சொல்லி இருக்கின்றார்கள்” என்று இன்றும் பலர் எடுத்துப் பேசி பார்ப்பனர்கள் காலுக்குள் போய் புக இடங் கிடைத்ததல்லாமல் மற்றபடி ஆன காரியம் இன்னதென்பது விளங்கவில்லை.

அது போலவே, சைவ வைணவ புராணங்களிலும் “பறையரிலே நந்தன் திருநாளைப் போவார் ஆனார்; பள்ளரிலே பாணன் திருப்பாணாழ்வார் ஆனார்” என்று சொல்லுவதாலும் நமக்கென்ன பலன் உண்டு என்று கேட்கின்றோம்.

திருநாளைப் போவார் என்று ஒரு கல்லுருவமும் திருப்பாணாழ்வார் என்று ஒரு கல்லுருவமும் செய்து அறுபத்து மூவர் என்கின்ற அறுபத்து மூன்று கல்லுருவங்களோடு சேர்த்தும், பன்னிரண்டாழ்வார் என்கின்ற பன்னிரெண்டு கல்லுருவங்களோடு சேர்த்தும் நட்டு வைத்து அதற்கு பொங்கலும், புளியோதரையும் வைத்து பூசை பண்ணி பார்ப்பான் சாப்பிட்டு விட்டதினாலேயே பறையர் என்பவர்களும், பள்ளர்கள் என்பவர்களும் “ஈன ஜாதிக்காரர்கள்” என்று சொல்லப் படுவதும் மறைந்து போயிற்றா? அல்லது அந்த சாமிகளைச் சேர்ந்த ஆசாமிகளுக்காவது அந்த கல்லுருவத்தைப் பார்க்கவாவது இடம் கிடைக்கின்றதா என்று கேட்கின்றோம்.

இந்த சாக்கை சொல்லிக் கொண்டு புஸ்தகக் கடைக்காரன் புஸ்தகம் அச்சுப் போட்டு பணம் சம்பாதிக்கவும், புராணப் பிரசங்கக்காரர் பிரசங்கம் பண்ணி பணம் சம்பாதிக்கவும், பார்ப்பான் பூசை உற்சவம் செய்து பணம் சம்பாதிக்கவும் உபயோகப் பட்டதேயல்லாமல் மற்றபடி அவைகளால் விளைந்த நன்மை என்னவென்று கேட்கின்றோம்.

முடிவாக திரு. வேதாசலம் அவர்களுக்கும் அவரது குழாத்தினர்களுக்கும் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது நாமும் நமது இயக்கமும் புராணங்களுக்கும், அப்புராணங்களில் காணப்படும் சமயங்களுக்கும் அச்சமயத்தில் காணப்படும் சமய ஆச்சாரிகளுக்கும், அச்சமய ஆச்சாரிகளால் காணப்படும் சாமிகளுக்கும், அச்சாமிகளது பெண்டு பிள்ளைகளுக்கும் வெளிப்படையான விரோதிகள் தான். இதில் ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை என்பதோடு “இதற்கு அப்படி அருத்தம்”, “அதற்கு இப்படி அருத்தம்” என்கின்ற பண்டிதப் புரட்டுகள் ஒன்றும் இனி கூடாது என்றும் கண்டிப்பாய்ச் சொல்லுகின்றோம்.

இதைப் பற்றி எச்சமயவாதியாயினும் எப்பண்டிதராயினும் செய்யும் அறப்போருக்கும் அறிவுப் போருக்கும் தலைகொடுக்க மகிழ்ச்சியுடன் தயாராயிருக்கிறோம்.

அதைவிடுத்து குறுக்கு வழியில் வஞ்சகப் போருக்கும் மூடநம்பிக்கைப் போருக்கும் தலை கொடுப்பதானால் சற்று சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆயினும் வேறு வழியில்லாவிட்டால் அதையும் வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலே தான் இருக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 02.09.1928)

***

திரு. வேதாசலம் அவர்களின் கடிதம்

பல்லாவரம் திரு. வேதாசலம் அவர்கள் திரு.ஈ.வெ. இராமசாமி நாயக்கருக்கு திரு. விஸ்வநாதம் பிள்ளை அவர்கள் மூலம் எழுதிய கடிதம்:-

அன்புள்ள ஐயா,

நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய ஒரு குறிப்பு ‘குடி அரசு’ பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு. விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப் பற்றித் ‘திராவிடன்’, ‘தமிழ் நாடு’ பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்புத் தங்களால் வரையப்பட்டதென அறிகின்றேன். தங்களுக்காவது, தங்கள் இயக்கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை, யாண்டும் சொல்லியதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண்டாம். என்றாலும், கடவுளைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடை யேன்னல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு கூர்ந்து நீக்கிவிடல் வேண்டும். தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்து வரும் நன் முயற்சிகள் இனிது நடைபெறுக.

அன்புள்ள,

சு.வேதாசலம்

24-8-1928

Pin It