அடங்கிக் கிடந்த அரசியல் உலகத்திற்கு இரண்டு விஷயங்கள் கிடைத்து விட்டன. ஒன்று மறுபடியும் பெசண்டம்மை ஆதிக்கம். இரண்டு ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது.

இந்த வியாசத்தில் இரண்டாவதான ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தைப் பற்றியே பேசுவோம்.

periyar 350 copyஎதற்காக ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது?

1. ராயல் கமிஷனில் இந்தியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதற்காகவா?

2. அல்லது இது சமயமல்ல என்பதற்காகவா?

3. அல்லது கமிஷன் நியமித்து பரீக்ஷை செய்து சீர்திருத்தம் கொடுப்பது இந்தியருக்கவமானம் என்பதற்காகவா?

4. கமிஷனில் நியமிக்கப்பட்ட கனவான்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அல்ல என்பதற்காகவா?

என்று பார்ப்போமானால் ஒவ்வொரு தலைவர்கள் என்போர்கள் ஒவ்வொருவிதம் சொல்லுகிறார்கள். தலைவர்கள் அறிக்கை என்பதில், வெள்ளைக்காரர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்தியர்களின் யோக்கியதையை ஆராயப் பார்லிமெண்ட் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுயமரியாதைக்கு விரோதமென்றும், ராயல் கமிஷன் என்பதே இப்போது மாத்திரமல்ல எப்போதுமே வேண்டாம் என்றும், இக்கமிஷனில் இந்தியர்களுக்கு இடமளிக்காததால் இந்தியர் கமிஷனை பஹிஷ்கரிக்க வேண்டும் என்றும் எழுதி, ஸ்ரீமதி பெசண்ட் கூட்டத்தாராகிய ஸ்ரீமான்கள் பி. சிவராவ், எம்.எஸ். மாதவராவயன், ஸ்ரீராம் டிலாங்கு, ஜீனராஜதாசர், ஸ்ரீமதி ஜீனராஜ தாசர் ஆகியவர்களும், பார்ப்பனர்க் கூட்டத்தாராகிய ஸ்ரீமான்கள் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார், எ. ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி, எம்.கே. ஆசாரியார், சி.வி. வெங்கிட்டரமண அய்யங்கார், வி.எஸ். ராமசாமி சாஸ்திரி, கே. சீனிவாசய்யங்கார், வி. ராமதாஸ், கே.ஆர். வெங்கிட்டராமய்யங்கார், கி.ஆர். பார்த்தசாரதி அய்யங்கார் ஆகியவர்களும்,

பார்ப்பனரல்லாதார்களில் ஸ்ரீமான்கள் ஷாபி மகமது சாயபு, சாமி வெங்கிடாசலம் செட்டியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, அப்துல் அமீத்கான், சி.எம். முத்துரங்க முதலியார், சி.எஸ். கோவிந்தராஜுலு முதலியார், சாவடி சுப்பிரமணிய பிள்ளை ஆகியவர்களுமேயாவார்கள்.

இதில் கண்ட கனவான்களிடத்தில் யாரிடத்திலாவது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலாவது தமிழ் மக்களுக்கு இவர்களது அரசியல் கொள்கையில் யாருக்காவது நம்பிக்கையுண்டா?

அல்லது கையொப்பம் போட்ட தலைவர்கள் என்பவர்களில் யாருக்காவது அரசியலில் ஒரு குறிப்பிட்ட கொள்கையுண்டா? அல்லது இவர்களில் யாராவது கொஞ்ச நாளைக்காவது மாறுதல் இல்லாமல் ஏதாவது ஒரு கொள்கையைப் பிடித்து நடப்பதுண்டா?

இந்தக் கூட்டத்தில் எத்தனை பேருக்கு அரசியலில் சொந்த புத்தி உண்டு?

எத்தனை பேர் ஜீவனத்திற்காக அரசியலில் இருக்கின்றவர்கள்?

எத்தனை பேர் இனியும் கூலி பொங்கிக் கொண்டு அரசியலில் கலந்திருக்கின்றவர்கள்?

இந்தக் கூட்டத்தாரை நம்பி பஹிஷ்கார இயக்கத்தில் மக்கள் சேருவதென்றால் அவர்கள் எவ்வளவு அறிவிலிகளாக இருக்க வேண்டும்? நாளைய தினம் ஸ்ரீமதி பெசண்டம்மையையாவது, சீனிவாசய்யங்காரையாவது, சாப்ருவையாவது, சிவசாமி அய்யரையாவது கமிஷனில் சேர்த்துக் கொள்ளப்பட்டாய் விட்டது என்கின்ற ஒரு அறிக்கை வெளியானால் இந்த பஹிஷ்கார அறிக்கைக்கு கையெழுத்து போட்டவர்கள் எவ்வளவு மதிப்பு கொடுப்பார்கள்.

சேலம் மகாநாட்டில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு பிரதிநிதித்துவம் உள்ள இந்தியர்களை கமிட்டிகளில் சேர்க்க வேண்டுமென்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டார். ஆகவே, அவருக்கு கமிஷன் நியமிப்பது சம்மதம் என்றும் அதன் ரிப்போர்ட்களை ஒப்புக்கொள்ளத் தயார் என்றும் தானே அருத்தம். நிபந்தனையெல்லாம் ஒரு சரியான இந்தியப் பிரதிநிதியை சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர வேறு ஏதாவது உண்டா? இப்பொழுது பார்லிமெண்டார் ஒரு சரியான பிரதிநிதியின் பெயரை சொல்லு என்று கேட்டால் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு பெயரைச் சொல்லத் தயாராயிருக்கிறாரா? சரியான பிரதிநிதி யார் என்பது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்காவது தெரியுமா என்று கேட்கிறோம். ஸ்ரீமான். சீனிவாசய்யங்காரை நியமித்து விட்டால், ஸ்ரீமான்கள் ஷாபி மகமது, எ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, பார்த்தசாரதி அய்யங்கார், முத்துரங்க முதலியார், கோவிந்த ராஜுலு முதலியார், சி.வி. வெங்கிட்டரமண அய்யங்கார், ராமதாஸ் முதலிய அய்யங்கார் சிஷ்யர்கள் எல்லோருக்கும் திருப்தியாகி கமிஷனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்து விடுவார்களா? இல்லையா? ஸ்ரீமதி பெசண்ட் அம்மையை கமிஷனில் நியமித்து விட்டால் ஸ்ரீமான்கள் திலாங், சிவராவ், ஜீனராஜ தாசர், மாதவராவ், ஸ்ரீராம், ஸ்ரீமதி ஜீனராஜதாசர் முதலியவர் அம்மையார் இஷ்டப்பட்டால் எல்லோருக்கும் திருப்தி ஏற்பட்டு கமிஷனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்து விடுவார்களா? இல்லையா? ஆகவே இப்போது பஹிஷ்காரத்தின் தத்துவம் என்ன என்பதைப் பற்றி வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

இந்திய அரசியலை ஒரு பித்தலாட்டக் கூட்டம் தங்கள் கையில் வைத்துக்கொண்டு பாமர மக்களை களிமண் உருண்டைகளைப் போல் ஆட்டுகின்றது.

நாட்டில் மக்கள் இடையில் நடத்தப்பட வேண்டிய காரியங்கள் எவ்வளவோ பாக்கி இருக்கும்போது அதை சற்றும் கவனியாமல் இம்மாதிரி ஜால வித்தைகளில் தலைவர்கள் என்போர் காலத்தைக் கழிக்கிறார்கள். ஒத்துழையாமையை அழிப்பதற்கு இதே பார்ப்பனர்கள் எவ்வளவு பித்தலாட்டங்களும் சூழ்ச்சிகளும் செய்தார்கள் என்பதை யோக்கியர்கள் அதற்குள் மறந்து இவர்களை நம்பி விடுவார்களா?

சட்டசபையில் போய் முட்டுக்கட்டை போடுவது என்றும், அங்கு ஒத்துழையாமை செய்வது என்றும், சட்டசபை படிச்சிலவையும் கூட வாங்குவதில்லை என்றும், வெள்ளைக்காரர்கள், அதிகாரிகள், வீட்டு விசேஷங்களுக்குக் கூட போவதில்லை என்றும், எந்த தீர்மானத்தையும் எதிர்ப்பதென்றும் எவ்வளவு பேசினார்கள். இந்த புரட்டர்கள் அடங்கின சுயராஜ்யக் கட்சியை இந்த ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடும், கலியாணசுந்தர முதலியாரும் எவ்வளவு ஆதரித்தும் அவர்களுக்கு ஆக்கம் தேடியும் கொடுத்தார்களே. இப்போது அதெல்லாம் என்ன ஆச்சுது “கோழி திருட்டுக் கொடுத்தவன் அழுகிற கூட்டத்தில் கோழி திருடினவனும் சேர்ந்து கொண்டு அழுவது போல்” இப்போது நம்முடன் சேர்ந்து கொண்டு சுயராஜ்யக் கட்சி அயோக்கியக் கட்சி என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்களே ஒழிய கடுகளவாவது தாங்கள் செய்த குற்றத்திற்கு வெட்கப்படுகின்றார்களா? எனவே இக் கூட்டத்தை நம்பி இவர்களைப் பின்பற்றலாமா என்றுதான் கேட்கின்றோம்.

புத்தியுள்ள ஒவ்வொருவருக்குமே ராயல் கமிஷனை என்ன செய்வது என்பது தெரியும். பெரும்பான்மையான மக்களுக்கும் யாரைப் பின்பற்றுவது என்பதும் நன்றாய் தெரிந்து வருகின்றது. ஆகவே பாமர மக்கள் இக் கூட்டத்தை நம்பி ஏமாந்து போகக்கூடாதென்பதை மாத்திரம் இது சமயம் கவலையுடன் எச்சரிக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 20.11.1927)

Pin It