“மகமதியர்கள் பெரும்பான்மையாயுள்ள இந்தியாவின் வட எல்லைப் புற மாகாணங்களுக்கு இந்தியாவின் மற்ற பாகங்களைப் போலாவது சீர்திருத்தங்கள் வழங்கப்படவேண்டும்” என்ற ஒரு தீர்மானத்தை இந்தியா சட்டசபையில் ஒரு மகமதிய கனவான் பிரேரேபித்தபோது சுயராஜ்யக்கக்ஷியார் அதை எதிர்த்துத் தோற்கடிப்பதற்கு அநுகூலமாயிருந்தார்களாம். சில மகமதிய கனவான்கள் சுயராஜ்யக்கக்ஷித் தலைவரான பண்டித நேருவை எங்கள் விஷயத்தில் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு சீர்திருத்தமே போதுமானதல்ல, உபயோகப்படக்கூடியதல்ல; ஆதலால் அது உங்க ளுக்கு ஆகாது; அதினால்தான் நாங்கள் ஆnக்ஷபித்தோம் என்று பதில் சொன்னாராம். சுயராஜ்யக்கக்ஷி பிராமணருக்கு மாத்திரம் சீர்திருத்தத்தின் பலனாய் ஏற்பட்ட சட்டசபையும், அதில் ஏற்படும் கமிட்டி அங்கத்தினர் பதவி யும் 4000, 5000 சம்பளமுள்ள சட்டசபை அக்கிராசனம் முதலிய ஸ்தானங்களும் சுயராஜ்யம் பெற உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடியதும் அதற்குப் போதுமானதுமாயிருக்கிறது.

ஆனால், எல்லைப்புற மகமதியர்களுக்கு மாத்திரம் பிரயோஜனமில்லையாம், போறாதாம். இது சிறு குழந்தைகள் ஏதாவது கேட்டால் தொடாதே கடித்துவிடும் என்று சொல்லுவது போலிருக்கிறது. இம்மாதிரி சுயராஜ்யக்கக்ஷியில் எப்படித்தான் உண்மையான மகமதியர்கள் சேருகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் இரண்டொரு ஆசாமிகளைத் தவிர பெரும்பாலும் புத்தியுள்ள மகமதியர்களெல்லாம் சுயராஜ்யக் கக்ஷியினின்றும் விலகி விட்டார்களென்றே சொல்லலாம். அந்த இரண்டொருவர்களைப் பற்றிக்கூட நாம் ஆச்சரியப்படக் காரணமில்லை. ஏனென்றால் பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களின் சூழ்ச்சி அறிந்த சிலர் தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிராமணர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவார்களேயானால் மகமதியரைப்பற்றி நாம் ஆச்சரியப்பட என்ன நியாயமிருக்கிறது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.04.1926)

Pin It