“கள்ளின் வெற்றியே வெற்றி” என்ற தலைப்பின் கீழ் “அரசாங்கத்தார் நடத்திவரும் பொல்லாத கள்ளுக்கடைகளை மூட வழிதேடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு வகுப்புவாரிக்காரரும் ஜஸ்டிஸ் கக்ஷியாரும் இன்னும் சிலரும் தன்னைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லுகிறார்.

ஆனால், கக்ஷியார்கள் இவர்பேரில் சந்தேகப்படுவதற்கு சொல்லும் காரணங்களுக்கு மாத்திரம் பதில் சொல்லுவதில்லை. சந்தடி சாக்கில் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி சொல்லும் போது “நியாயக் கட்சி (=பிராமணரல்லாதார் - ஜஸ்டிஸ் கக்ஷி) என்று பெயர் வைத்துக் கொண்டு சிறு வகுப்பார்களை (=பிராமணர்களை ) அநியாயமாய் (= யோக்கியமான பிராமணர்களின் மேல் அபாண்டமான பழிகளைச் சொல்லி) பசு பலத்தால் (= மிருக பலத்தால்) ஒடுக்கியாள (=அவர்களுக்கு மேலே போக) முயலும் (=வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்கும் ) கக்ஷியாரை (= பிரசாரம் செய்யும் கக்ஷியாரை) நான் ஆதரிப்பதாய் (=பிராமணராகப் பிறந்த நான் ஆதரிப்பதாய்) ஏன் எண்ணுகிறீர்கள்(=பிராமணர்களே பயித்தியக்காரத்தனமாய் ஏன் எண்ணுகிறீர்கள்) என்று எழுதுகிறார்.” இதிலிருந்தே ஸ்ரீமான் ஆச்சாரியாரின் பரிசுத்தத்தன்மையும், பிராமணர்களையும் பிராமணரல்லாதாரையும் சமமாய் நினைக்கும் தன்மையும் வாசகர்கள்தான் உணர வேண்டும்.

அன்றியும் ஸ்ரீமான் ஆச்சாரியார் ஒரே அடியாய் கள்ளையே நிறுத்தி விடப்போவதாகவும் அப்புண்ணிய காரியத்தை வகுப்புவாரிக்காரரும் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் ஜஸ்டிஸ்காரரும் மற்றும் பல பிராமணரல்லாதாரும்) ஆக்ஷபிப்பதாயும், பாமர ஓட்டர்கள் நினைக்கும்படி மிகவும் துக்கப்படுகிறார். ஸ்ரீமான் ஆச்சாரியார் இதுவரை கள்ளை நிறுத்த காரியத்தில் நடக்கக்கூடியதாய் என்ன வழி சொல்லி இருக்கிறார்? சட்ட மறுப்பின் பேரால் சிலபேர், முட்டுக்கட்டையின் பேரால் சிலபேர், சுயராஜ்யத்தின் பேரால் சிலபேர், வெற்றி மேல் வெற்றியின் பேரால் சிலபேர் சட்டசபைக்கு போகப்பார்ப்பதுபோல் கள்ளை ஒழிப்பதன் பேரால் தனக்கு வேண்டிய சிலபேரோ அல்லது தானோ சட்டசபைக்கு போகப் பார்க்கிறார்.

கள்ளை விலக்க சட்டசபை உதவுமானால் மகாத்மா அதை விட்டுவிடுவாரா? அல்லது கள்ளுக்கடை மறியலுக்காக ஜெயிலுக்குப் போய் மூத்திரச் சட்டியில் கஞ்சி வாங்கி குடித்த வர்கள் சட்டசபைக்கு போகப்பயப்படுவார்களா? அல்லது அவர்களுக்கு யோக்கியதை இல்லையா? இதையெல்லாம் பொது ஜனங்கள் யோசிக்க மாட்டார்கள் என்றும் பொது ஜனங்களை சுத்த முட்டாள்கள்தானே என்றும் நினைத்துக் கொண்டதால் இவ்வித தந்திர வழிகளில் தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள துணிந்துவிட்டார் என்றுதான் எண்ண வேண்டி யிருக்கிறது.

கள்ளை நிறுத்த சட்டம் செய்ய சட்டசபைக்கு போகலாம் என்பவர் தீண்டாமை ஒழிக்க சட்டம் செய்ய சட்டசபைக்கு போகலாம் என்று ஏன் சொல்லக்கூடாது? அப்படிச் சொன்னால் ஒரு சமயம் சர்க்காரார் தீண்டாமை ஒழிய சட்டம் செய்ய சுலபத்தில் ஒப்புக் கொள்ளுவார்கள். பிராமண சட்டசபை மெம்பர்கள் ஆக்ஷபனை பலிக்காமல் போய் காரியத்தில் ஒரு சமயம் தீண்டாமை ஒழிந்தாலும் ஒழிந்து போகும். ஆதலால், அதை ஒழிக்க முடியாத இடமாகிய ஜனங்களிடமே சொல்லிக் கொண்டு காலத்தை நடத்தலாம். கள்ளையும் ஒழிக்க முடியாத இடமாகிய சர்க்கார் சட்டசபையிடமே சொல்லிக் கொண்டிருக்கலாம். எப்படியாவது ராஜீய பேச்சு ரதம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம் போலும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1926)

Pin It