நேற்றுவரை நானும்
ஜன்னல் கம்பிகளின் பின்னிருந்துதான்
ஓடும்மேகங்களைப் பார்த்தேன்
நிலாவையும் வெள்ளியையும் ரசித்தேன்
ஒருதுண்டு மேகத்தையும்
அள்ளியெறிந்தாற்போல
சில வெள்ளிகளையும்
எத்தனை நாளைக்கென்று
ஜன்னல் வழியே ரசிப்பது
அக்கினிக் குண்டத்திலிருந்து
தப்பித்தாற்போலதான்
இந்த வெளியேற்றமும்
ஆரம்பத்தில்
நாட்படாத கோழிக்குஞ்சின் அளவுதான்
சிறகிருந்தது
சிறந்ததையே எண்ணினேன்
சிந்தித்தேன்
சிறந்தவற்றிற்காக உழைத்தேன்
எப்போதும் இன்புற்றிருந்தேன்
பிறரும் இன்புற்றிருக்க விரும்பினேன்
குற்றம்காண முனைவதல்ல என் மனது
எல்லாவற்றிலுமிருக்கும்
நல்ல பக்கங்களை ஏற்று நடந்தேன்
அக்கம் பக்கத்தார்
அண்டியிருந்தோரெலாம்
எனை உற்றுக் கவனிக்கக் கண்டேன்
யாருக்கும் நெஞ்சுபொறுக்கவில்லை
எனக்கு சிறகுமுளைத்ததுகண்டு
இது எம் குலத்திற்காகாத
குணமென்று எச்சரிக்கப்பட்டேன்
கண்டுகொள்ளாது நடப்பதும்
மௌனமாயிருப்பதுமே
எம் குலப்பெருமையென
அறிவுறுத்தப்பட்டேன்
நேரிய என் விழிகள்
இருட்டை நோக்கியதாயிருக்க
பணிக்கப்பட்டேன்
நிமிர்ந்த என் நெஞ்சுக்கும்
தாழ்ப்பாழிட கோரப்பட்டேன்
இத்தனை எல்லைகளை
தாங்காத என்நெஞ்சு குமுறியது
இடமா இல்லை அண்டத்தில்
வேலி தாண்டிய என் வேர்களை
இழுத்துக்கொண்டு பறந்தேன்…
குலத்தையும்
கூடயிருந்தவர்களையும்
விட்டு பறப்பதொன்றும்
சுகமான அநுபவம் கிடையாது
அது சிலுவையை சுமப்பதுபோன்றது
என் சிறகுகளை
வெட்டியெறிய
என் கால்களுக்கு விலங்கிட
எண்ணற்ற முயற்சிகள்
எல்லாம் எதிர்கொண்டேன்!
என் பயணத்தில்
உலகையறிந்தேன்
மனங்களின் பாஷையைக் கற்றேன்
வாழ்வின் போக்கையும்,
அது புகட்டும் போதனைகளையுமறிந்தேன்
இவை கொஞ்சம்தான்
கைம்மண்ணளவு!
இன்னும் நெடுந்தூரம்
பறப்பேன்
அண்டத்தின்
ஐஸ்வரியங்களை அறிவேன்
நதியோரப் பள்ளத்தாக்கில்
பெரும் விருட்சமொன்றின் கிளையில்
தரித்து நிற்கின்றேன்…
களைத்துப்போன என்னைத் தேற்றவும்,
காயம்பட்ட என் சிறகுகளை ஆற்றவும்.
வெளிச்சத்தை நோக்கிய
எனது பயணத்தில்
ஒருநாள்
என் குலத்தை
எனைக் குற்றம்கண்டோரை
சந்திப்பேன்
எங்கள் குலத்தின் பொக்கிஷமென
அந்நாளில் அவர்கள்
எனைப்போற்றவும் கூடும்!!!