சென்னையில் இம்மாதம் 20, 21-ந் தேதிகளில் நடைபெற்ற பிராமணரல்லாத 9-வது மகாநாட்டு நடவடிக்கைகளைப்பற்றி, “சுதேசமித்திரன்”, “ஸ்வராஜ்யா” முதலிய பிராமணப் பத்திரிகைகள் ஆத்திரம் பொறுக்காமல் வயிறு வயிறாய் அடித்துக்கொண்டு ஓலமிடுகின்றன. அவற்றில் சுதேசமித்திரன் பத்திரிகை “வசவு மகாநாடென்று” தலையங் கமிட்டு அடியிற்கண்ட ஒப்பாரியைச் சொல்லிக்கொண்டு அழுகின்றது. அவற்றில் முக்கிய மான சிலவற்றைக் கீழே குறிப்பிட்டு அதற்குச் சமாதானம் எழுதுவோம்.

1. “இந்த மகாநாட்டிற்கு ஜனங்கள் அதிகமாக வரவில்லையேயென்று ஸ்ரீமான். டாக்டர். சி. நடேசமுதலியார் சொன்னதால், இம்மகாநாட்டிற்கு பிராமணரல்லாதார் ஆதரவு இல்லை”யென்பது.

2. “சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாகத் திட்டினார்கள்” என்பது.

3. “இந்த மாகாணத்திலும் பம்பாய் மாகாணத்திலும் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரப் பதவியிலிருக்கின்றது, ஜனங்களுக்கு இவர்களால் என்ன செய்யப்பட்டிருக்கிறது” என்பது.

4. “பம்பாய் மாகாணத்தில் மதுவிலக்கு விஷயமாய் ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒரு லக்ஷியத்தை அந்த கவர்ன்மெண்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்தியா கவர்ன்மெண்டார் அதை நிராகரித்துவிட்டனர். அதன் மேல் பம்பாய் மந்திரி ராஜிநாமாச் செய்தாரா?” என்பது.

5. “தென்னாப்பிரிக்கா இந்தியரிடம் அநுதாபம் கூறி ஓர் தீர்மானம் செய்யப்பட்டது. அதை அமுலுக்குக் கொண்டுவர கவர்னர் ஜெனரலோ, அரசர் பெருமானோ நிராகரித்துவிட்டால், கனம் பனகால் இராஜா, கனம் யாதவர் தங்கள் கவர்ன்மெண்டின் மூலமாக இராஜப்பிரதிநிதிக்கு வலியுறுத்த ஏற்பாடு செய்வார்களா?” என்பது.

6. “பிராமணர்களைத் திட்டினால் மாத்திரம், கவர்ன்மெண்டார் சுயஆட்சி அதிகாரம் கொடுத்துவிட மாட்டார்கள், வருடமொருமுறை தீர்மானம் செய்தாலும் கொடுத்துவிட மாட்டார்கள், உடனே சுயராஜ்யம் பெற வேறு என்ன செய்வார்கள்? எனவே, ஜனங்கள் மெச்ச சுயராஜ்ய அதிகாரம் கேட்டுவிட்டு; அதிகாரவர்க்கம் மெச்ச அவர்களுக்குத் துணை நிற்பார்கள்.” என்பது.

ஸ்வராஜ்யா பத்திரிக்கையின் மாரடிப்பு

சுதேசமித்திரன் சொன்னதில் சிலதையே சொல்லி, இப்பத்திரிகை அடித்துக்கொண்டதோடு, “தொழிலாளருக்கு என்ன செய்தார்கள்?” “ஒடுக்கப் பட்டவருக்கு என்ன செய்தார்கள்?” “வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு என்ன செய்தார்கள்?” “யாராவது சிறைக்குப் போனார்களா?” “ஜில்லா, தாலூக்கா சபைகளில் அக்கூட்டத்தினரைச் சேர்ந்தோரே அதிகம். ஸ்தல சுய ஆட்சி இலாகா அந்தக் கட்சித் தலைவர் கையிலேயே இருக்கின்றது; அதனால் ஜனங்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?” என்று கேட்கிறது.

“மகாநாட்டுக்கு ஜனங்கள் அதிகமாய் வரவில்லையென்று ஸ்ரீமான் டாக்டர் நடேச முதலியாரே சொன்னதால், இம்மகாநாட்டுக்குப் பிராமணரல்லாதார் ஆதரவில்லையென்பது விளங்குகிறதென்று” இரண்டு பத்திரிகைகளும் கேட்கிறது.

பதில்

‘ஸ்வராஜ்யா’ வாவது, “சுதேசமித்திரனா”வது இன்னும் எந்த பிராமண பத்திரிக்கையாவது அந்த மகாநாட்டிற்கு இத்தனை பெயர்கள் தான் வந்தார்களென்று எழுதவேயில்லை. யாரார் வந்தார்களென்று அவர்கள் பெயராவது எழுதவே இல்லை. இவ்வளவு அல்ப புத்தி தம்மிடம் இருப்பதை மறந்து விட்டு, மரியாதைக்காக பெருந்தன்மையோடு நமது கூட்டத்திற்கு வர வேண்டிய ஜனங்கள் வரவில்லையேயென்று ஸ்ரீமான். நடேச முதலியார் சொன்னால், அந்த வார்த்தையை முன்னூற் பிடித்துக்கொண்டு, பிராமண ரல்லாதார் மகாநாட்டுக்குக் கூட்டம் வரவேயில்லை; அது சரியான பிரதிநிதித் துவமல்லவென்று சொல்லுவது, எவ்வளவு சின்னத்தனம். 21-ந்தேதி ஜஸ்டிஸ் பத்திரிக்கையில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் முக்கியமானவர்களென்று சொல்லி சுமார் 150 கனவான்களுடையவும், சீமாட்டிகளுடையவும், பெயரைக் குறிப்பிட்டு விக்டோரியா பப்ளிக் ஹால் பிடிக்காமல், திரளான பிரதிநிதிகள் வந்தார்களென்று எழுதியிருக்கிறது. அதில் ஏறக்குறைய, சட்டசபை மெம்பர்கள், மந்திரிகள், ஜமீன்தாரர்கள், மகாராஜாக்கள், தாலூகா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இவைகளின் தலைவர்கள், அங்கத்தினர்கள், ஜட்ஜ், திவான்முதலிய வேலைகள் பார்த்து இளைப்பாறும் கனவான்கள், பெரிய மிராஸ்தாரர்கள், பிரபல வர்த்தகர்கள், கிறிஸ்தவ கனவான்கள், மகமதிய கன வான்கள், தாழ்ந்த வகுப்பாரென்று கூறப் படும் வகுப்பைச் சேர்ந்த கனவான் கள், சர்வ கலாசாலை அதிகாரிகள், வைதீக ஒத்துழையாமையைச் சேர்ந்தவர்கள், சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர்கள், முதலிய கனவான்களாகவே சுமார் 150 பேரும், மற்றும் தொழிலாளிகள், ஏழைக் குடியானவர்கள், நடுத்தர வகுப்பார்கள் ஆகிய அனைவருமாய் மகாநாட்டின் ஸ்தலம் எவ்வளவு இடம் கொள்ளுமோ அவ்வளவும் நிறைந்து, மேற்கொண்டும் வெளியில் இடம் பிடிக்காமல் கூட்டமாகவும் ஜனங்களிருக்க, அவற்றை இம்மாதிரி தங்கள் பத்திரிக்கையில் திரித்துக்கூறி விஷமப்பிரசாரம் செய்திருக்கிறது.

இவற்றை நாம் ஓர் கேள்வி கேட்கிறோம். அதாவது தேசத்துக்கே பொதுவானதென்றும், மிகுந்த செல்வாக்குடையதென்றும், யாரோ சிலர் தவிர, மற்றும் எல்லோராலும் ஆதரிக்கப்படுகிறதென்றும் சொல்லுகிறதும், 33 கோடி ஜனங்களுக்கு பிரதிநிதி சபையாயிருக்கிற காங்கிரஸ் மகாசபையின் பேரால், தமிழ்நாட்டில் 2 கோடி ஜனங்களுக்கு மேலாக பிரதிநிதி ஸ்தானம் பெற்றதும், பிராமணர்களால் தமிழ்நாடு காந்தியெனக் கொண்டாடத்தக்கவருமான, திரு.வி. கலியாணசுந்தர முதலியார் தலைமையில் நடந்ததுமான, காஞ்சீபுரம் மகாநாட்டுக்கு எத்தனை பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்? அதற்கு முன் நடந்த திருவண்ணாமலை, மகாநாட்டுக்கு எத்தனை பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்? இதன் கணக்கைப் போட்டு 2 1/2 கோடி ஜனங்களுக்கு வீதாசாரம் பிரித்துப் பார்த்து, பிராமணரல்லாதார் மகாநாட்டுக்கும் வந்திருந்த ஜனங்களை கணக் கெண்ணி வீதாச்சாரம் பிரித்துப் பார்த்திருந்தால், தேசத்தில் எதற்கு யோக்கியதை வளர்ந்து கொண்டு வருகின்றதென்பது நன்றாய் தெரியவரும்.

திருவண்ணாமலை மகாநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சுமார் 250 கூட இல்லை யென்பது நமது ஞாபகம். அவற்றில் பல ஜில்லாக்களுக்கும், தாலூகாக்களுக்கும், வேறு ஜில்லாக்காரரும், வேறு தாலூக்காக்காரரும் பிரதிநிதிகளாய்க் கூட இருந்தார்கள். சில ஜில்லாக்களுக்கு இரண்டொருவர்தான் வந்திருந்தார்கள். சென்னையிலிருந்து ஒரு கனவான் தனது கட்சிக்கு மெஜாரிட்டி சம்பாதிப்பதற்காக, தனது ஆட்கள் வசம் ரூபாய்களைக் கொடுத்து அனுப்பி, ஆள் சேர்த்துக்கூட, சரியான படி கூட்டம் சேர்க்க முடியாமற்போய்விட்டது.

காஞ்சீபுரத்திலும் மகாநாடு நடந்ததென்று பெயரேயொழிய அங்கும் 250 பிரதிநிதிகள்கூட சேரவேயில்லை. அங்கு வந்திருந்த பிரதிநிதிகளிலேயும், பொது ஜனங்களுக்கு உண்மையான பிரதிநிதிகள் எவ்வளவு பேர்? வரப் போகும் தேர்தல்களில் நின்று ஸ்தானம் சம்பாதிக்க வந்த பிரதிநிதிகள் எவ்வளவு பேர்? தேர்தல்களில் ஏஜண்டு வேலை சம்பாதித்துப் பணமடைய வந்த பிரதிநிதிகள் எவ்வளவு பேர்? ஒரு சமூகத்தாரை ஏமாற்றி தாங்கள் ஆதிக்கம்பெறலாமென்று நினைத்து சூழ்ச்சி செய்ய வந்தவர்கள் எவ்வளவு பேர்? அவர்கள் சொற்படி ஆடவந்தவர்கள் எவ்வளவு பேர்? தங்கள் விளம்பரத்துக்காக வந்தவர்கள் எத்தனைபேர்? என்பதாகக் கணக்குப்போட்டு அவரவர்களையும் கழித்துத்தள்ளி உண்மையாய் தேசத்தின் குறையை எடுத்துச்சொல்லி, அதற்கு வேண்டிய தீர்மானங்களைச் செய்து அந்தப்படி மனப்பூரணமாய், உண்மையாய், உழைக்க வந்தவர்கள் எத்தனை பேர்? என்று கணக்குப்பார்த்தால், பிராமணரல்லாதாரின் மகாநாட்டு யோக்கியதை, காங்கிரஸ் மகாநாட்டைவிட சிறந்ததா இல்லையாவென்பது தெரியும். அதைவிட காஞ்சீபுரம் மகாநாடு கண்ணியமாய் நடந்ததா? சென்னை பிராமணரல்லாதார் மகாநாடு கண்ணியமாய் நடந்ததா? என்று பார்ப்பதற்கு, காஞ்சீபுரம் மகாநாட்டில் நிர்வாகம் செய்த தலைவர்களென்போர் நடந்துகொண்ட யோக்கி யதையையும், சென்னை பிராமணரல்லாதார் மகாநாட்டு நிர்வாகிகள் நடந்து கொண்ட யோக்கியதையையும், “குடி அரசு” “தமிழ்நாடு” “நவசக்தி” முதலிய பத்திரிக்கைகளை படித்துப்பார்த்தால் பொது ஜனங்களுக்குத் தெரிய வரும். அல்லது இந்தப் பிராமணப் பத்திராதிபர்களே, கொஞ்ச நேரமாவது தங்களுடைய ஜாதிப் புத்தியை மறந்து, சத்தியத்தை நினைத்து, நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக்கொண்டார்களானால், அவர்களுக்கும் உண்மை விளங்கும்.

இப்பொழுதாவது அவர்களுக்கு யோக்கியதை இருக்குமானால், பிராமணரல்லாதாரில் எந்தத் தொழிலுக்கு, எந்த வகுப்புக்கு, எந்த நாட்டுக்கு, எந்த அந்தஸ்துக்கு, எந்த ஜில்லாவுக்கு, எந்த தாலூகாவுக்கு பிராமணரல்லாதார் சார்பாக அம்மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வரவில்லையென்பதை எடுத்துக் காட்டட்டும். தேசத்திலும், காங்கிரசிலும், செல்வாக்குள்ளதாய்ச் சொல்லப்படுவதும், காங்கிரசையே தன் சுவாதீனப்படுத்திக்கொண்டதாய்ச் சொல்லப்படுவதும், 33 கோடி ஜனங்களின் ராஜீய நன்மைக்குப் பிரதிநிதித்வமாயிருக்கிறதென்று சொல்வதுமான சுயராஜ்யக் கட்சியின் மகாநாடு கூடுகிற காலத்தில் எத்தனை பிரதிநிதிகள் வருகின்றார்கள்? அதில் எந்தெந்த ஜாதியார், எந்தெந்த வகுப்பார், எந்தெந்த தொழிலாளர், எந்தெந்த வகையில் தேசத்திற்காகத் தியாகம் செய்தவர்கள் அதில் கூடுகிறார்கள்.

முதலாவது, சுயராஜ்யக் கட்சி மாநாடு கூட்டினால் அதன் உண்மைக் கொள்கைகளைப் பற்றி கதவைத் தாழ் போட்டுக்கொள்ளாமல் இவர்களால் பேச முடிகிறதா? மற்றும் 25 கோடி இந்துக்களின் பாரமார்த்தீக சம்பந்தமான, வருணாசிரம தர்ம முதலிய மகாநாடுகள் கூட்டும்போது எத்தனை பேர் வருகிறார்கள்? எந்தெந்த ஜாதியார் வருகிறார்கள்? இவர்களும், ஏதாவது கூடிப் பேசும்போது கதவைத் திறந்து வைத்துப் பேசக்கூடிய யோக்கியதை இருக்கிறதா? இவற்றையெல்லாம் யோசிக்காமல், மானங்கெட்டவன் சொந்தக்காரன் என்கிற தைரியத்தில் கைவசம் பத்திரிகை இருக்கிறது, படிப்பதற்கு ஏமாந்த ஜனங்களிருக்கின்றார்கள், சத்தம் போடுகிறவர்களைச் சுவாதீனப்படுத்திக் கொள்ள பணம் இருக்கிறது என்கிற தைரியத்தின் பேரில் நினைத்தபடியெல்லாம் எழுதியிருக்கிறதே தவிர, வேறு என்ன கடுகளவு யோக்கியம் இருக்கிறது.?

2. “சில பிராமணரல்லாதாரும் அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாய்த் திட்டினார்கள்” என்று எழுதியிருக்கிறது.

பதில்

சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதியுந்தான் பிராமணர்களைத் திட்டுகிறார்களா? அல்லது தேசமே அவர்களைத் திட்டுகிறதாவென்பதை இவர்கள் கவனிக்கவேண்டும். இந்தியாவிற்கே அருந்தனமாய் மதிக்கப்படுபவரும், உலகப்பெரியாருமான மகாத்மா காந்தி, இந்தப் பிராமணர்களைப் பற்றி சொல்லும்போது, இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த அக்கிரமத்தைவிட நமது பிராமணர்கள் செய்தது குறைந்ததல்ல வென்று சொல்லியிருக்கிறார். ஸ்வாமி விவேகாநந்தர், பிராமணர்கள் கக்கின விஷத்தால் தான் இந்தியா கெட்டதென்றும், அவர்கள் விஷத்தைத் திரும்ப அவர்களேதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்தப் பிராமண விஷம் எடுபட்டாலல்லாது, இந்தியாவுக்கு விடுதலையில்லையென்றும், சொல்லியிருக்கிறார். பெரிய தியாகியும் தேசபக்தருமான தேசபந்து தாஸ் அவர்கள் தனக்கு அதிகாரமிருந்தால், பிராமண ஸ்திரீகளையெல்லாம் பிடித்து, தீண்டாதவர்களுக்கு ஒப்புவித்து விடுவேன் என்று தனக்கு அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறார்.

இந்திய ரிஷியான ஸர்.பி.ஸி.ரே அவர்கள், இந்தியாவுக்கு சுயராஜ்யம் வேண்டுமானால் பிராமணர்களையெல்லாம், மூட்டையில் போட்டுக்கட்டி, அத்லாந்திக் மகாசமுத்திரத்தில் போட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் புகழுரைகளா? இன்னும் இந்தப் பிராமணர்களால் மதிக்கப்பட்டவர்களும், மதிக்கப்படுகிறவர்களுமான ஸ்ரீமான்கள். டாக்டர். வரதராஜலு நாயுடு, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், வி.சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை, எஸ். இராமநாதன், இராமச்சந்திரச் செட்டியார், சுப்பிரமணிய நாயினார், இராமசாமி ரெட்டியார், இராமநுஜ ரெட்டியார், ஆதிகேசவலு நாயக்கர், சிங்காரவேலு செட்டியார், கந்தசாமி பிள்ளை, சுப்பையா, சாமிநாதஞ் செட்டியார், வெங்கிடகிருஷ்ண பிள்ளை, பவானி சிங், சொக்கலிங்கம்பிள்ளை, வயிசு. ஷண்முகம் செட்டியார், ராயசொக்கலிங்கம் செட்டியார், தியாகராய ஞானியார், சுந்திரம் பிள்ளை, ஹமீத்கான் ஆகிய தேசபக்தர்கள், தேசத்துக்காக ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை, நான்கு தடவை சிறைக்குச் சென்றவர்கள், ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் தேசத்துக்காக ஜெயிலுக்குச் சென்றவர்கள், பீ.ஏ.,எம்.ஏ.,பி.எல் முதலிய பட்டதாரிகள், வைதீக ஒத்துழையாதார், நடுக் கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் தொழிலை விட்டவர்கள், தங்கள் வரும் படியை விட்டவர்கள் என்று சொல்லப்படும் இவர்களும், இன்னும் அநேக பெரியார்களும், இன்னும் சில ஜில்லா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், தாலூகா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், காங்கிரஸ் நிர்வாக மெம்பர்களும், மாகாண காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண ஜில்லா, தாலூக்கா மகாநாட்டுத் தலைவர்களும் எல்லாருந்தான் இந்தப் பிராமணர்களைத் திட்டுகிறார்கள்.

 ஸ்ரீமான். கலியாணசுந்தர முதலியார் போன்ற இரண்டொருவர் (அதுவும் வெளியில் மாத்திரம் சொல்வதில்லையேயொழிய மனதில் அடக்கியடக்கியே இளைத்துப் போகின்றார்களென்று சொல்லலாம்.) தவிர, வேறு யார் இவர்களை வாழ்த்துகின்றார்களென்பது நமக்குத் தெரியவில்லை. இந்த நிலைமையில், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல், ஜஸ்டிஸ் கட்சிக்காரரை மாத்திரம், தங்களை வைகிறார்கள், வைகிறார்களென்று ஓலமிடுவதில் அர்த்தமென்ன?

3. “இந்த மாகாணத்திலும், பம்பாய் மாகாணத்திலும், ஜஸ்டிஸ் கட்சி அதிகாரப் பதவியிலிருக்கிறது; ஜனங்களுக்கு இவர்கள் என்ன நன்மை செய்து விட்டார்களென்று” எழுதியிருக்கிறது.

பதில்

இந்த இரண்டு மாகாணத்திலும், உள்ள பிராமணர்கள், இவர்களை எதிர்த்து, இந்த ஸ்தானங்களைப்பிடுங்கிக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொண்டே பிராமணரல்லாத மந்திரிகளை, ஒரு வேலையும் செய்ய வொட்டாமல் தடுப்பதே தங்கள் கொள்கையாக வைத்துக்கொண்டு, அதற்கு ஒரு கட்சியை உண்டாக்கி, தங்கள் பணத்தினாலும், பத்திரிக்கையினாலும், தப்பான வழியில் பாமர ஜனங்களையும் ஏமாற்றி சதா சர்வகாலம், மந்திரிகளோடு தொல்லை கொடுப்பதும், இவர்களுக்குப் பதில் சொல்லுவதிலேயே மந்திரிகளுடைய காலத்தைக் கழிக்க வேண்டி வருவதும், கொஞ்ச நஞ்சம் ஏதாவது வேலை செய்யலாமென்று ஆரம்பித்தால், இந்த இடமே போய்விடுமே. பிறகு அதில் பிராமணர்கள் வந்து உட்கார்ந்து கொண்டு, அடியோடு தங்கள் சமூகத்தை ஒழித்துவிடுவார்களே, இதுசமயம் நல்லது ஒன்று செய்ய முடியாமற் போயினும், கெட்டது செய்யவாவது கொடு மைக்காரர்களுக்கு இடம் கொடுக்காமல் தப்பித்துக் கொண்டால் போதும், என்கிற நிலைமையில், அவர்களிருக்கும்படி இவர்கள் செய்துவிட்டதோடல்லாமல், இவ்வளவையும் தப்பி, தேவஸ்தான மசோதா, கல்வி மசோதா, தொழிலாளருக்கு உபகார மசோதா முதலியதுகளைச்செய்யத்தான் இரண்டொரு நன்மைகளைக்கூட தொலைப்பதற்கு பல சூழ்ச்சிகளும், தந்திரங்களும் செய்து கொண்டு, மந்திரிகள் என்ன செய்தார்களெனக் கேட்பது யோக்கியமாவென்பதை வாசகர்களே கவனிக்கட்டும்.

4. “பம்பாய் மாகாணத்தில் கவர்மெண்டார் ஜஸ்டிஸ் கட்சியாரின் மது விலக்குத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டாலும், இந்தியா கவர்ண்மெண்டார் அதை நிராகரித்து விட்டார்களே; அதன்மேல், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் ராஜீநாமாச் செய்தார்களா?” என்பது.

பதில்

இது எவ்வளவு சுவாதீனம் கெட்ட கேள்வியென்பதை, கொஞ்சமாவது தங்களுக்கு மானம், வெட்கம் இருந்திருக்குமேயானால், நன்றாய் உணர்ந் திருப்பார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை ஏன் ராஜீநாமாச் செய்யவில்லையென்று கேட்கிற சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த இந்தப் பிராமணர்கள் தங்கள் பிரயத் தனத்தால் இந்தியா சட்டசபையில் நிறைவேறின, ஒரு சத்தில்லாத ராஜீய அமைப்புத் தீர்மானத்தை ராஜப்பிரதிநிதி நிராகரித்துவிட்டாரே; அப்பொழுது இவர்கள் ராஜிநாமாச் செய்தார்களா? இவர்களாவது, தங்கள் காரியம் அரசாங்கத்தில் செல்லாவிட்டால், ராஜீநாமாச் செய்து விடுகின்றோமென்று, பாமர ஜனங்களான ஏழை வோட்டர்களிடம், வாக்குத் தத்தம் செய்து, மகாத்மாவின் ஒத்துழையாத் திட்டத்தையும் பாழாக்கிவிட்டு, சட்டசபைக்குச் சென்ற பொய் சத்தியகீர்த்திகள்! அப்படியிருக்க, இவர்களே ராஜீநாமாக் கொடுக்காமல், இன்னமும் தொங்கிக் கொண்டு, போதாக்குறைக்கு சம்பளம் வருகிற உத்தியோகத்தையும் பெற்றுக் கொண்டு, சட்டசபைகளை ஒழுங்காய் நடத்திக் கொடுக்க, அடிமைத்தனத்தையும் பூண்டு கொண்டு, இருப்பதைக் கவனிக்காமல், ஜஸ்டிஸ் கட்சியார் ஏன் ராஜீநாமாக் கொடுக்கவில்லை யென்று கேட்க வந்து விட்டார்கள். இது தான் நிர்வாணமாய் நின்றுகொண்டு எதிரில் நிற்பவனைப் பார்த்து நீயேன் கோவணங் கட்டிக்கொண்டிருக்கிறாய், உனக்கு வேஷ்டியில்லையா? என்று கேட்பது போலிருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்காரர், தங்கள் காரியங்களை ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராஜிநாமாக் கொடுத்துவிட்டு வெளியில் வந்து விடுகிறோமென்று, எங்காவது, எப்போ தாவது, யாரிடத்திலாவது சொல்லியிருக்கிறார்களா? இதை வாசகர்களே நன்றாய்க் கவனிக்க வேண்டும்.

5. “தென்னாப்பிரிக்கா, இந்தியரிடம் அநுதாபம் காட்டி ஓர் திட்டம் ஏற்பாடு செய்து தீர்மானம் செய்திருக்கிறது, இதை அரசாங்கத்தார் நிராகரித்து விட்டால் கனம் பனகல் இராஜா, கனம் யாதவர் வலியுறுத்த ஏற்பாடு செய்வார்களாவென்று” கேட்கிறது.

பதில்

இந்தியர்கள் கல்பாத்தித் தெருவில் நடக்கக்கூடாதென்று பிராமணர்கள் தடுத்தபோது, சர்க்காரும், சட்டசபையும் அநுகூலமாயிருந்தும், பிராமண மந்திரியான ஸர்.சி.பி.இராமசாமி ஐயர் என்ன சாதித்துவிட்டார்? நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யவில்லையென்றாவது ஜனங்கள் நினைப்பதற்கு யோக்கியமாய் நடந்து கொண்டாரா? பிராமணகக்ஷி மந்திரிக்கு ஓர் சட்டம், பிராமணரல்லாத மந்திரிக்கு ஓர் சட்டம் நமது நாட்டுப் பிராமணர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது போலும். இது கண்ணாடி வீட்டில் குடியிருக்கிறவன், கல்வீட்டின் மேல் கல்லெடுத்துப்போடுவதுபோல் இருக்கிறது.

6. “பிராமணர்களைத் திட்டினால் மாத்திரம், சுயராஜ்யம் கொடுத்து விடமாட்டார்கள்; வருடமொருமுறை தீர்மானம் செய்ததினால் மாத்திரம் சுயராஜ்யம் கொடுத்துவிடமாட்டார்கள்; இதெல்லாம் ஜனங்கள் மெச்சுதலுக்குச் செய்யப்படும் தீர்மானங்கள்தான்; கடைசியாக இவை அதிகாரவர்க்கத்துக்குத் தான் துணையாகும்” என்று எழுதியிருக்கிறது.

பதில்

இது எப்படியோ இருக்கட்டும். இதைவிட இந்தப் பிராமணக் கட்சியாரான சுயராஜ்யக் கட்சியார் என்ன சாதித்து விட்டார்கள்? இரவும், பகலும், தூக்கத்திலும் கனவிலும், பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், அவர்களைப் பற்றிப் பத்திரிக்கைகளில், பொய்யும், புளுகும் எழுதி அயோக்கியப் பிரசாரம் செய்வதும், இதற்குதவியாய், ஆங்காங்கு கீழ் மக்களையும், மான வெட்கமில்லாதவர்களையும் நிரூபர்களாக வைத்துக்கொள்ளுவதும், ஆங்காங்கு வயிற்றுக்கில்லாதவர்களுக்கு ரூபாயைக் கொடுத்து, பிராமணரல்லாதாரை வைவதும், தங்களுக்கு வோட் சேகரித்துக் கொடுக்கும்படி செய்வதும், அதோடு பொது மக்கள் ஏமாறத்தகுந்த இரண்டொரு தீர்மானங்களைப் பற்றி வாயால் பேசுவதுமல்லாமல், வேறென்ன இவர்கள் சாதித்தார்கள்! சாதிக்கிறார்கள்!! சாதிக்கப் போகிறார்கள்!!!

ஸ்வராஜ்யப் பத்திரிகைக்குப் பதில்.

இதல்லாமல், ஸ்வராஜ்யப் பத்திரிகை “தொழிலாளருக்கு என்ன செய்தார்கள்?” ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்?’ ‘வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு என்ன செய்தார்கள்?’ யாராவது சிறைக்குப் போனார்களா?’ ஜில்லா, தாலூகா ஸ்தல ஸ்தாபன சபைகள் ஆதிக்கம் தங்கள் கையிலிருக்கும்போது என்ன நன்மை ஜனங்களுக்குச் செய்து விட்டார்கள்?” என்று கேட்டு அழுகிறது.

பதில்

தொழிலாளருக்காக வேலைசெய்த, ஸ்ரீமான்கள். கலியாணசுந்தர முதலியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.சக்கரைச்செட்டியார், சிங்காரவேலு செட்டியார், ஜே.என்.ராமநாதன் இவர்களெல்லாம் பிராமணர்களா? பிராமணரல்லாதவர்களா? இவர்களுக்கு மேல், பிராமணர்கள் என்ன சாதித்திருக்கின்றார்கள்? மேலும்,

இப்பொழுது ஐயராய்ப் போகப்பார்க்கும் ஸ்ரீமான்.கலியாணசுந்தர முதலியாரவர்களே, தொழிலாளர் கலவரத்தின் போது தங்கள் விஷயத்தில் பிராமணர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், ஸர்.பி.தியாகராய செட்டியாருட்பட பிராமணரல்லாத அதிகாரிகளும், மந்திரிகளும், தலைவர்களும் எப்படி நடந்து கொண்டார்களென்பதைப் பற்றிப் பலதடவை சொல்லியிருக்கிறார். இது இரகசியமென்றும் சொன்னதினால், இதைப்பற்றி பூராவும் வெளியிட முடியவில்லை, சுருக்கமாய்ச் சொல்வதானால் பிராமணரல்லாத மந்திரிகளின் பிரயத்தனம் இருந்திராவிட்டால், நாங்களெல்லாம் நாடு கடத்தப்பட்டிருப்போமென்று சொல்லியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஸ்தல ஸ்தாபனங்களில், கூடுமானவரையில் ஸ்தானங்கள் அளித்தது, பிராமண ஸ்தலஸ்தாபன நிர்வாகிகள் காலத்திலா? பிராமணரல்லாத ஸ்தல ஸ்தாபன நிர்வாகிகள் காலத்திலா?

வைக்கம் சத்தியாக்கிரகத்தில் தொண்டு செய்த ஸ்ரீமான்கள். ஈ.வி.இராம சாமி நாயக்கர், எஸ்.இராமநாதன், அய்யாமுத்துக் கவுண்டர் முதலியவர்களெல்லாம் பிராமணர்களா? பிராமணரல்லாதார்களா?

சிறைக்குப்போன ஸ்ரீமான்கள். ஆரியா, தண்டபாணி பிள்ளை, டாக்டர். நாயுடு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, இராமசாமி நாயக்கர் இன்னும் எத்தனையோ எழுத முடியாத கனவான்கள் சிறைக்குப் போனது பிராமணரல்லாதவர்களல்லவா? இன்றையத்தினம் சுயராஜ்யக் கட்சியென்று பேர் வைத்துக் கொண்டு, தாண்டவமாடும் பிராமணர்களில் எத்தனைபேர் இதுகளுக்கு உதவினார்கள் என்பதை இந்தப் பிராமணப்பத்திரிக்கைகள் சொல்லட்டுமே!

ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் ஜனங்களுக்கு என்ன நன்மை என்று கேட்பதாயிருந்தால், ஸ்ரீமான்கள். வி.கிருஷ்ணசாமி ஐயரும், ஸர்.பி.எஸ். சிவசாமி ஐயருமான பிராமணர்கள் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் இருந்து நடத்தினதைவிட, பிராமணரல்லாதார் இருந்து நடத்தினதில் என்ன மோசம் ஏற்பட்டுப்போய்விட்டது? பிராமணர்களிருந்த காலத்தில், பிராமணர்களையே நியமித்துக்கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் இருக்கிற காலத்தில், பிராமணர்களுக்கும் ஒன்றிரண்டு ஸ்தானங்களைக் கொடுத்துவிட்டு, பிராமண ரல்லாதாரில், தீண்டாதார் உட்பட பலரையும் நியமித்துக்கொண்டு வருகிறார்கள். வேறு என்ன செய்யவேண்டும்? வேறு என்னதான் செய்ய அந்த ஸ்தானங்கள் உதவும்? இவைகளையெல்லாம் கவனிக்காமல், தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பதுபோல், பிராமணரல்லாதாரை மூளை இல்லாதவர்களென்று நினைத்துக்கொண்டு, பத்திரிக்கையினாலும், பணத்தினாலும், பிரசாரத்தினாலும் எப்படியாவது ஏமாற்றிவிடலா மென்கிற ஆணுவத்தின் பேரில் செய்கிற விஷமப் பிரசாரம் என்பதை பிராமணரல்லாதார் உணர வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு பிராமணப் பத்திரிக்கைகளையும், பிராமணப் பிரசாரங்களையும், பிராமணரல்லாதார் வெறுக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பிராமணரல்லாதாருடைய முன்னேற்றம் சமீபத்திலிருக்கின்றதென்பதையும் உணர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 27.12.1925)

Pin It