தான் இக்கூட்டத்திற்கு வரக்கூடுமென்றாவது, இதில் பேச சந்தர்ப்பம் கிடைக்குமென்றாவது ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லையென்றும், திறப்பு விழாவிற்கு வந்தவனை திடீரென்று அழைத்ததிற்காகவும், இங்கு பேசும்படி கட்டளையிட்டதற்காகவும், அழைத்தவர்களுக்கும், அக்ராசனாதிபதிக்கும், வந்தனம் செய்வதாகவும், இக்கூட்டத்திலுள்ள பிரமுகர்களெல்லாம் பழைய ஆப்த நண்பர்களென்றும், இவர்களில் அநேகம் பேர் நெருங்கிய பந்துக்களைப் போன்றவர்களென்றும், ராஜீய அபிப்பிராயங்காரணமாக இங்குள்ள அத்தனை பேரையும் நாலைந்து வருட காலமாக தீண்டாதவர் போல் நினைத்து, தான் ஒதுங்கியிருந்ததாகவும், இப்பிரிவினை ஏற்படுவதற்கு முன் கோயமுத்தூருக்கு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு சிநேகிதர் வீட்டிலும் நாலு நாள், ஐந்து நாள் தங்கி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், கொஞ்சக் காலமாக இவ்வூருக்கு வந்தால் பிராமணன் ஹோட்டலுக்காவது போய்ச் சாப்பிடுவதேயொழிய, இந்த அருமையான சிநேகிதர்கள் வீட்டுக்குப் போகாமல் கூட தான் அவ்வளவு ராஜீய பத்தியமாய் இருந்ததாகவும், இப்பொழுது காங்கிரசில் சுயராஜ்யகட்சி தோன்றியபின், இவ்வளவு நாள் கொடுமையான பத்தியமாயிருந்தது அவசியமில்லாததென்று தோன்றும்படி செய்து விட்டதாகவும், ஜஸ்டிஸ் கக்ஷியின் ஆரம்ப ராஜீய திட்டத்திற்கும் சுயராஜ்யக்கக்ஷியின் தற்கால ராஜீயத் திட்டத்திற்கும், உள்ள பெரிய வித்தியாசமெல்லாம், ஜஸ்டிஸ் கக்ஷி உண்மை பேசுகிறது. சுயராஜ்யக் கக்ஷி ஸ்திரமாய்ப் புரட்டு பேசுகிறது என்பதை தவிர வேறு பிரமாதமான வித்தியாசம் எதுவு மில்லையென்றும், இந்தக்காரணத்தால்தான் காங்கிரஸிற்கும் வரவர மதிப்புக் குறைந்துகொண்டு போவதோடு, மங்கிக் கிடந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் தேசத்தில் செல்வாக்கு இப்பொழுது கொஞ்சம் ஏற்பட்டு வருகின்றதென்றும், இந்த சந்தர்ப்பத்தை ஜஸ்டிஸ் கட்சியார் இழந்து விடாமல், தேசத்திற்கும், பிராமணரல்லாதார் சமூகத்திற்கும் உண்மையாய் உழைக்க முன்வர வேண்டுமென்றும், காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமான கொள்கைகளையும், பிராமணரல்லாதாருக்கு மிகவும் அநுகூலமான திட்டங்களையும் வைத்து, உண்மையாய் வேலை செய்து பிற தியாகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தயாராயிருந்து சிலபேராவது உழைத்து வந்ததின் பலனாகத்தான் காங்கிரஸிற்கு அதிக மதிப்பேற்பட்டதோடு, ஜஸ்டிஸ் கட்சியையும், யாரும் லக்ஷியம் செய்ய அவசியமில்லாததாய்ப் போய்விட்டது என்றும், இப்போது சுயராஜ்யக் கட்சி தோன்றியதின் பலனாய், தேச நன்மைக்கான கொள்கைகளும் போய் நிர்மாணத் திட்டங்களும் பின்பட்டு, உத்தியோக ஆசையும், பிராமணாதிக்கத்திற்கனுகூலமான கொள்கைகளும் காங்கிரஸில் முற்பட்டு நிற்பதற்கு, சுயராஜ்யக் கட்சியார் பிரயத்தனம் செய்வதாலும் காங்கிரசும் அதற்கு இணங்குவதாலும் சுயராஜ்யக் கட்சியைவிட ஜஸ்டிஸ்கட்சி மோசமானதல்லவென்னும் எண்ணம் தேசத்தில் உதிக்க ஆரம்பித்துவிட்டதென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு இந்த எண்ணம் மாத்திரம் போதாதென்றும், இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பொதுஜன அநுகூலமான திட்டம் எதுவும் இல்லை யென்றும், பாமர ஜனங்களிடம் இதற்குச் செல்வாக்கில்லாததற்கு இதுவொரு காரணமென்றும், தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு கதர் முதலிய திட்டம் ஜஸ்டிஸ் கட்சியில் தாண்டவமாட வேண்டுமென்றும், தென்னாடு முழுவதும் இவைகளைப் பரப்பச் சரிவர பிரசாரம் செய்யவேண்டுமென்றும் இவ்வித காரியங்கள் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யாவிட்டால், எதிரிகள் விஷமத்தால் கட்சியே மறைந்து போகுமென்றும், வெறும் உத்தியோகமும், ஆங்கிலப் படிப்பும் பிராமணரல்லாதாருக்கு நன்மை உண்டாக்கிவிடாதென்றும்.

நீங்கள் சில உத்தியோகங்களை அடைந்ததினால் தேசத்தில் என்ன பலன் உண்டாய் விட்டதென்றும், நீங்கள் அதிகமதிகமாய் ஆங்கிலம் படிக்கப்படிக்க, உத்தி யகம் பெறப்பெற, நமது நாடு பிராமணர்களால் எவ்வளவு கஷ்டப்படுகிறதோ, அவ்வளவு கஷ்டம் உங்களாலும் படவேண்டியதாகிவிடுமென்றும், பிராமணரல்லாதார் முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டுமானால், இங்குள்ளவர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும், கிராம ஜனங்களைக் கலகம் செய்துகொள்ளாமலும், கோர்ட்டுக்குப் போகும்போதும் பெரும்பாலும் பிராமண வக்கீல்களிடமும், அதிகாரிகளிடமும் சிக்கித் தங்களுடைய பொருள்களை பீஸாகவும், லஞ்சமாகவும் கொடுத்து பாழாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்றும், ஆங்கிலப் பள்ளிக்கூடம் பரவியதின் காரணமாகவே, கிராமங்களில் குடியானவர்கள் பேரால் இருந்த பூமிகளெல்லாம், இப்போது பிராமண வக்கீல்கள் பேராலும், அதிகாரிகள் பேராலும், லேவாதேவிக்காரர் பேராலும், மாறிக் கொண்டு வருகின்றதென்றும், இதற்கு சாக்ஷி வேண்டுமானால் கவர்ன்மெண்டு செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரைப் பாருங்களென்றும், இவற்றைத் தடுக்காமல் மந்திரி உத்தியோகம் பெறுவதினாலும், பட்டங்கள் பெறுவதினாலும், உங்கள் பிள்ளைகள் சிலருக்கு உத்தியோகங்கள் சம்பாதிப்பதினாலும், உங்கள் கட்சி எந்த விதத்தில் பிராமண சுயராஜ்யக்கட்சியைவிட மேலானதாகி விட்ட தென்றும், இந்த நிலைமையில் ஜஸ்டிஸ் கட்சி இருந்துகொண்டே வருமானால், என் போன்றவர்கள் தொண்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாதென்றும், மகாத்மாவின் நிர்மாணத் திட்டங்களை ஏற்றுக்கொண்டு, காரியத்தில் அதைச் செய்யக் கட்டளையிடுவீர்களானால், அதை நான் சிரமேற்கொண்டு தொண்டு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேனென்றும் சொன்னதோடு, தான் சொன்னவைகளில் ஏதாவது தங்கள் மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கக்கூடியதாயிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமென்றும், தான் தன் மனதில் உண்மையென்றுபட்டதைத்தான் ஒளிக்காமல் சொல்லவேண்டுமென்கிற ஆசையால் சொன்னதேயொழிய, யாருக்கும் வருத்தம் உண்டாக்க வேண்டுமென எண்ணி சொல்லவில்லையெனக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

குறிப்பு:- கோவையில் 16.12.1925 இல் தென்னிந்திய நலஉரிமைச் சங்கக்கிளை அமைப்பு திறப்புவிழா சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925)

Pin It